"தேசம்" வடசொல்லே" - புலவர் சு. முருகேசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:17

தமிழ் மொழியில் வழங்கி வரும் சொற்களை நான்கு வகையாகப் பகுத்துள்ளார் தொல்காப்பியர். "தொல்காப்பிய எச்சவியல் நூற்பா 397--இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுளீட்டச் சொல்லே.''

இவற்றில் இயற்சொல்லாவது தமிழ்ச் சொல் ஒலிமாற்றமின்றி, எழுத்து மாற்றமின்றி, பொருள் மாற்றமின்றி இயல்பாய் வழங்கி வருவதாகும்.

திரிசொல்லானது ஒரு பொருள் குறித்து வரும் பல சொல்லும் பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லுமென இருவகைப்படும். திரிவாவது உருபுத்திரிதலும் முழுவதுந்திரிதலுமென இருவகையான திரிவாகும். காட்டு = கிளி இயற்சொல், கிள்ளை திரிசொல்.

திசைச் சொல்லாவது செந்தமிழ் சார்ந்த நிலப்பகுதியில் வழங்கிவரும் சொற்களாகும் இன்றைய வட்டார வழக்கினை ஒத்த சொற்களாகும். இயற்சொல் எல்லா விடத்தும் பொருள் விளங்க வழங்கி வருவதாகும். வட்டார வழக்கென்பது ஒரு பகுதியில் வழங்கும் சொல்லிற்கு மற்ற பகுதியில் அதன் பொருள் புரியாது. சென்னையில் பேமானி, கேப்மாறி - என்பர். அந்தச் சொல் மற்ற இடங்களில் வழக்கிலில்லை. அதற்கு என்ன பொருள் என்றும் மற்ற பகுதியினருக்குத் தெரியாது. இதுதான் திசைச் சொல்லாகும்.

வடசொல்லாவது வடமொழிச் சொல்லாகும் தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதம் மட்டுமே தமிழகத்தில் நுழைந்த மொழியாகும். அது தமிழகத்திற்கு வடக்கிலிருந்து வந்த மொழியாதலால் அதை வட சொல் என்றார் தொல்காப்பியர்.

இந்த நான்கு வகைச் சொற்களில் இயற்சொல்லாவது செந்தமிழ் நிலத்திலும், கொடுந்தமிழ் நிலத்திலும் தம் பொருள் மாறாமல் வருவதாகும். எடுத்துக்காட்டு – நிலம். நீர், காற்று போன்றன. திசைச் சொல்லாவது ஒரு பகுதியில் வழங்கியும் மறுபகுதியில் வழங்காததுமாகும். எடுத்துக்காட்டு – தென்பாண்டி நாட்டார் பசுவையும் எருமையையும் பெற்றமென்பர். திரிசொல்வது இருவகை நிலத்திலும், இயற்சொல்லிலிருந்து திரிந்து வழங்குவதாகும். எடுத்துக்காட்டு – கிளி இயற்சொல், கிள்ளை - திரிசொல். மயில் இயற்சொல்;. மஞ்ஞை திரிசொல். இம் மூன்று வகைச் சொற்களும் தமிழ்ச் சொற்களாகும்். வட சொல் என்பது வேற்றுமொழிச் சொல்லாகும்.

வேற்றுமொழிச் சொல்லான வடசொல் ஒலிவடிவிலும், எழுத்துவடிவிலும் மாறுபட்டிருப்பதால் அதை தமிழில் கையாளும்போது தமிழின் ஒலி வடிவம் மாறாமல் கையாள வேண்டுமென்பதற்காக தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். "எச்சவியல் - நூற்பா 401- வட சொற்கிளவி வடவெழுத்தொரீஇ-எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே.''

வடசொல்லைத் தமிழில் பயிலும்போது வடசொல்லிற்கே உரிய எழுத்தை நீக்கி விட்டு அவ்விடத்தில் இருமொழிக்கும் பொதுவான எழுத்தைச் சேர்த்து வழங்கவேண்டும். தேஷ்--தேஷ்ம் இதுவடசொல். இச்சொல்லில் உள்ள ஷ வடவெழுத்தாகும். இதை நீக்கி விட்டு அதற்கு மாற்றாக இரு மொழிக்கும் பொதுவான உயிரெழுத்தான எகரத்தைச் சேர்த்து தேஎம் என்றெழுதவேண்டும், சொல்லவேண்டுமென்கிறார் தொல்காப்பியர். இச்சொல் வழக்கில் தேசம் என்றாகியது. இது தொல்காப்பிய நூற்பாவிற்கு சேனாவரையர் கூறிய உரை விளக்கம்.

மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள், தமிழுக்கு கிடைத்த 20-ம் நூற்றாண்டின் தொல்காப்பியர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தென்மொழி அருளியார் பாவாணர் வழிநின்று மொழியாய்வு செய்து வரும் நல்ல சொல்லாய்வறிஞர்தான். இவ்விருவரும் "தேசம்' என்னும்சொல் தமிழ்ச்சொல் என்று நிறுவ முயன்றிருக்கின்றனர். முரண்படுகின்றனர்.

பாவாணர் ஆய்வின் முடிவு:

தேயம், திகைதல், முடிதல். திகை – முடிவு, எல்லை – திசை, திகை, திசை – தேசம் = ஒரு திசையில் உள்ள நாடு. தேசம் - - தேயம் = நாடு, இடம் - -இடப்பொருளுருபு, திசா (வடசொல்), திகை – திக் (வடசொல்).

வடமொழியில் திசா என்னும் சொல்லுக்கு திச் என்பதை மூலமாக காட்டுவர். திச்-காட்டு (G.K. deikumni (to show)), இந்தியில் திக்கா என்னும் சொல் காட்டுதலைக் குறிக்கிறது. நோக்கு – தேக்கு (தன்வினை). திக்கா (பிறவினை). இதற்கு மூலமான சூரசேனியச் சொல் கிரேக்க நாடு சென்று வேதமொழிக்கு வந்திருக்கலாம். வடமொழியில் உள்ள திக் என்னும் வடிவே திச் என்றும் திரிந்திருக்கலாம். அங்ஙனமாயின் தென்சொல்லும் வடசொல்லும் வெவ்வேறு வழியில் தோன்றியனவாகும். (திருக்குறள் மரபுரை -745) பாவாணர் இதில் வந்திருக்கலாம், திரிந்திருக்கலாம், அவ்வாறாயின் என்று ஐயவும்மையிட்டு கூறுகிறாரேயன்றி முடிந்த முடிவாக கூறவில்லை. இது போன்றே வடமொழி வரலாற்றிலும் வடசொல்லும், தமிழ்ச்சொல்லும் வெவ்வேறு வகையில் தோன்றியிருப்ப தாகத் தெரிகின்றது என்று கூறுகின்றாரேயன்றி உறுதிபடக் கூறவில்லை.

அருளியார் ஆய்வின் முடிவு:

தூய் - - பிரிதற் கருத்துவேர் (பிரிவு) துண் - - துண்+இ = துணி, நீக்கு, வெட்டு, துய் + வு = துய்வு - = தூ – தூவு, தூவுதல், துவறு – தூற்று + தல் = தூற்றுதல், பதரையும், கூலமணியையும் வேறுபிரித்தற்கு காற்றிடை இறைத்து தூவுதல். தூற்றாதே தூறவிடல் (நாலடியார் – 74.4), தேய்தல் - குறைவுறுதல், தேம்புதல் -- குறைவுறுதல், தேம்புதல் - மெலிதல் (புறநானூறு – 164-2)

திசை- பக்கம், திசைப்பெயர் – திசைவகைக்குரிய பெயர் – திசைநான்கு – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசை நான்கு என முதலில் வகுத்த தமிழர்கள் பின்னர் நுண்நுணுக்கமாக எட்டெனப்பகுத்து வழங்கினர்.

திசை - இருநான்கு எட்டு திசைகள் - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு (புறநானூறு 41-4). திசை இருநான்கும் அதிர்ந்திடும் (சிலப்பதிகாரம் 20 - 4).

தேயம் - இடம், கண்(இடம்) அந்தணர் திறத்தும், சான்றோர் தேயத்தும் அந்தமில் சிறப்பின் பிறர் திறத்தினும் (தொல்காப்பியம் கற்பியல் நூற்பா 5:15-16)

இதன் பொருள்: பார்ப்பார் கண்ணும் சான்றோர் கண்ணும் மிக்க சிறப்புடைய பிறராகிய அவரவரிடத்தும் (இங்கு ஏழாம் வேற்றுமை உருபாக வருகிறது)

பெற்ற தேயத்து பெருமையின் நிலையி (தொல்காப்பியர் பொருளதிகாரம் கற்பியல் நூற்பா 5: 6--7) உரை: வரைந்து பெற்ற வழி தலைவனைப் பெருமையின்கண் (இதுவும் ஏழாம் வேற்றுமை உருபாக வந்துள்ளது).

தேயம் திசை, அத்திசையின் தொலைதூரத்திலுள்ள நாடு (ஊர்) இன்னவகையாக கருத்து விரிவாக்கம் பெற்ற இந்தத்தேயம் = நாடு என்னும் பொதுப்பொருளையும் தெளிவாக எய்தியது.

நாம்தாம் வடபாற்பகுதி மொழிகள் பலவற்றிற்கும் சமஸ்கிருதத்திற்கும் நம் தேயத்தையே வழங்கியுள்ளோம்.
பாவாணர்தம் ஆய்வின் முடிவில் வந்திருக்கலாம், திரிந்திருக்கலாம், அங்ஙனமாயின், தோன்றியிருப்பதாக தெரிகிறதென்று ஐயவும்மையிட்டு முடிக்கின்றாரேயன்றி முடிந்த முடிவாகக் கூறவில்லை.

அருளியார் நாம்தாம் வடபால் மொழிகட்கும் சமற்கிருதத்துக்கும் நம் தேசத்தையே வழங்கினோம் என்கிறார்.
பாவாணர் இருமொழியிலும் தனித்தனியாகப் பிறந்த சொல்லாக இருக்கலாம் என்று சொல்கிறார்.

பாவாணர் தேசமென்றால் நாடு என்று கூறாமல் ஒரு திசையில் உள்ள நாடு என்று கூறுகிறார். அருளியார் தொலைதூரத்திலுள்ள நாடு என்கிறார். வேறொரு திசையிலும், தொலைதூரத்திலும் உள்ளதுதான் தேசம் என்றால் நாம் இருக்கும் இடம் தேசம் இல்லையென்றாகிறது.

இவ்விருவர் கூற்றும் ஒரு வகையில் சரியானதே. எவ்வகையெனில் தமிழ்நிலத்தின் எந்த ஒரு பகுதியும் தேசம் என்று வழங்கிவரவில்லை.

தமிழ்வரலாறு பக்கம் 38-ல் காட்டப்படும் குறுந்தொகை – 11, ஐங்குறுறூறு -321, அகம் - 31: 14--15, அகம்: 211--7-8 பாடல்களில் வரும் தேயம் என்னும் சொல் மொழி வேறாகிய தேயம் என குறிப்பிடுவதோடு ்வேங்கடத்தும்பர் மொழி பெயர்தேயம்' என்பது வடுகர்நாட்டையே என்பது தெளிவுறு தேற்றம் என்கிறார். எனவே தமிழ்நாட்டைக்குறித்து வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.
திசை திக்கு என்னும் சொற்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையை குறிக்கும் சொற்களல்ல. தென்திசை என்றால் திருச்சிக்கு மதுரை தெற்குதான், மதுரைக்கு குமரி தெற்குதான். வடதிசை என்றால் திருச்சிக்கு சென்னை வடக்குத்தான் சென்னைக்கு வேங்கடம் வடக்குதான். திசையும் திக்கும் ஒரு எல்லையற்ற பகுதிகளை குறிக்கும் சொற்களாகும். தேசம் ஒரு எல்லைக்குட்பட்ட ஒரு இடத்தை குறிக்கும் சொல்லாகும்.

தேசம் தமிழ்ச்சொல் என்று ஆய்வு செய்த இவ்விருவரும் அச்சொல் தமிழ் நிலம் குறித்து வழங்கியதற்கான சான்று எதையும் காட்டவில்லை. தேசம் தமிழ்ச்சொல்லாக இருந்தால் இத்தமிழ் நிலத்தையோ, தமிழ் நிலத்தின் எந்த ஒரு பகுதியையோ குறித்து வழங்கி வந்திருக்க வேண்டும். அதற்கான சான்றாவணங்கள் வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகியனவாகும்.

வரலாற்றைக் காண்போம்

கடல் கொண்ட தமிழ் நிலத்தில் ஏழ்தெங்குநாடு ஏழ்மதுரைநாடு ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணக்காரைநாடு, ஏழ்பனைநாடு என்று நாற்பத்தி ஒன்பது நாடுகள் இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஒன்றேனும் தேசமென்றிருந்ததாகக் கூறவில்லை.

தமிழ் வழங்குமித்தமிழ் நிலம் செந்தமிழ் பேசும் பகுதியாகவும் கொடுந்தமிழ் பேசும் பகுதியாகவும் இருந்ததென்று ஒரு பழம் பாடல் கூறுகிறது. பாடல் வருமாறு.

தென்பாண்டி குட்டம்குடம் கற்கா வேண்பூமி
பன்றி அருவா அதன்வடக்கு – நன்றாய
சீதம் மலரடு புனநாடு செந்தமிழ்சேர்
ஏதழில் பன்னிரு நாட்டெண்

செந்தமிழிலிருந்து சற்றுத் திரிந்து வழங்கிய பகுதியைக் கொடுந்தமிழ் நாடுகளென்று குறித்ததேயன்றி தேசமென்று குறிக்கவில்லை.

நாடு என்னும் சொல் இச்செந்தமிழ் நிலத்தில் வழக்கேறி வழங்கி வருவதை வரலாற்று வழியில் காண்போம். வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய மன்னரர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது.

இம்மூவேந்தர்களும், தங்கள் நாடுகளை பல ஆள்நிலப் பகுதிகளாக இன்றைய மாவட்டம், வட்டங்களைப் போல பிரித்து அவற்றிற்கும் நாடுகளென்றே பெயரிட்டு வழங்கி வந்தனர். சோழ நாட்டில் பல ஊர்களைக் கொண்டது நாடு, பல நாடுகளைக் கொண்டது வளநாடு, பல வளநாடுகளைக் கொண்டது மண்டலம் என்று வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. அவை வருமாறு :

சோழ நாட்டில் மங்கலநாடு, மருகல் நாடு, மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு போன்ற நாடுகளும் அருண்மொழித் தேவவளநாடு, பாண்டிய குலோசினி வளநாடு போன்ற வளநாடுகளும் இருந்ததாகக் கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.

பாண்டிய நாட்டில் மேல்நாடு, சிறுகுடி நாடு, வெள்ளுர் நாடு, மல்லாக்கோட்டை நாடு பாகநேரிநாடு, போன்ற நாடுகளும்.

சேரநாட்டில் கொங்குமண்டலத்தில் பூந்துறை நாடு, காங்கேய நாடு, ஆரை நாடு, திருவானைக்குடி நாடு என மேலும் பல நாடுகளும் உள்ளன.

கல்வெட்டில் நாடுகள் :

சோழர் கல்வெட்டு முதற்பராந்தகச் சோழன் கி.பி. (907--957) ஆனைமலை நரசிங்கப்பெருமாள் சபையோர் சாசனம் -- சோழ நாட்டுப் புறங்கரம்பை நாட்டு மருதூர்.

தென்னவன் மூவேந்தவேளான் சாசனம் 995- பொய்கைநாடு, இராசேந்திரசிங்க வளநாடு, தியாவல்லி வளநாடு, திரிபுவன முழுதுடைய வளநாடு, திருவாலி நாடு, நித்தவினோத வளநாடு, இராசராசக்கிணறு மன்னன் இராசராசன் (885-1014) வேங்கைநாடு, இராசிபுரத்து நகரத்தார் சாசனம் மன்னன் இராசராசன் வேங்கை நாடு, குடமலை நாடு, சாமுண்டப்பை நிபந்தம் மன்னன் முதலாம் இரசேந்திரன் (1012--1044) பங்கள நாடு, வகைமுகைநாடு, இந்த கல்வெட்டில் மன்னனின் வெற்றிச்சிறப்பைக் கூறுமிடத்தில் வங்காள தேசம் ஆரியதேசம் வென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ் நிலத்திற்குப் புறத்தே உள்ள நாடுகள் தேசமென்று வழங்கப்பட்டதால் தன்னாட்டுப் பகுதியை நாடு என்று குறிப்பிடும் கல்வெட்டு பிறநாட்டை அவர்கள் வழங்கியபடியே தேசமென்று குறிப்பிடுகிறது. இதிலிருந்து தேசம் பிறமொழிச் சொல், பிறநாடுகளைக் குறித்து வழங்கிய சொல் என்பது தெளிவாகிறது.

மணிமங்கலம் சபையோர் சாசனம் மன்னன் இரண்டாம் இராசேந்திரன் (1052--64) செயங்கொண்ட சோழபுரத்து மாகனூர் நாடு.
வில்லவராயன் சாசனம் மன்னன் முதற் குலோத்துங்கன் (1070) கல்வெட்டு உள்ள இடம் திருவானைக்காவல் பாண்டிய குலாசினி வளநாடு, தென்கவிர்நாடு, மணிமங்கலம் கோவில் சாசனம் மன்னன் மூன்றாம் இராசராசன் (1216) குலோத்துங்க சோழ வளநாடு, குன்றத்தூர் நாடு.

பாண்டியநாட்டுக் கல்வெட்டு

புதுக்கோட்டைச் சீமைக்கல்வெட்டு குலசேகரப்பாண்யன் (119-9-1216) திருமயம் தாலுகா மலைக் கோவில் விருதராசபயங்கரவளநாடு கானநாடு இரயிலேசுசாசனம் தென்காசி மன்னன் மாறவன்மன் சுந்தரபாண்டியன் (1219) துரும நாடு, கானநாடு,

பாண்டியர் கல்வெட்டு

பெரம்பலூர் மாவட்டம் -- நகரம் மதனகோபாலசாமி கோயில் மன்னன் சடாவர்மன் சுந்தரபாண்டியன் (1258) வெம்பார் நாடு, கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் கோயில் சுவர் மன்னன் வீரபாண்டியன் 13ஆம் நூற்றாண்டு – கிழங்கநாடு, திருநெல்வேலி மாவட்டம் - மேலநத்தம் -அக்கினீசுவரமுடையார் கோயில் பிற்காலப்பாண்டியர் – துரோதைய வளநாடு. அதே கோயில் மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1223) கீழ்வெம்பா நாடு, வல்லபன் கோட்டை – ஐயனார் கோயில் - - மன்னன் சடையன் மாறன் 10 ஆம் நூற்றாண்டு – களக்குடிநாடு.

செப்பேட்டில் நாடுகள்

சோழர் செப்பேடுகள் முதலாம் பராந்தகனின் உதயேந்திரம் செப்பேடு மேலடையாறுநாடு, வேளஞ்சேரிச் செப்பேடு, திருத்தணிநாடு, சுந்தரச்சோழனின் அன்பில் செப்பேடு திருவழுந்தூர் நாடு, இராசகேசரிவர்மனின் திருச்செங்கோட்டுச் செப்பேடு – கன்னநாடு இராசராசனின் ஆனைமங்கலச் செப்பேடு – சத்திரியசிகாமணிவளநாடு, நித்தவினோதவளநாடு, போன்ற நாடுகளும் கரந்தைச் செப்பேடு அம்பர்நாடு, பாம்பூர்நாடு, வெண்ணாடு திரைமூர்நாடு போன்ற நாடுகளுளையும், இந்தச் செப்பேடு இரசேந்திரசோழன் கங்கை நோக்கி படையெடுத்துச் சென்றபோது ஆரியதேசம், மத்திய தேசம், இலாடதேசம், வங்கதேசம் ஆகியவற்றை வென்று கங்கை நீரைக் கொண்டு வந்தான் என்று குறித்துள்ளது.

இந்தச் செய்தி கல்வெட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு தரும் கருத்தே இங்கும் உறுதியாகிறது. தேசம் தமிழில்லை. தமிழ்நிலம் குறித்து வழங்கவுமில்லை.

வீரபாண்டிச் செப்பேடு மாரியம்மன் கோயில் வழிபாட்டிற்கான கொடைபற்றியது. மன்னன் மதுரை விசுவநாத நாயக்கன் (1529) பிறதலை வளநாட்டில் சேர நாட்டு எல்லைக்குள் வருசை நாட்டு மத்தியில் புல்ல நல்லூரான வளநாட்டில் குடியிருக்கிற காமாட்சியம்மன் பக்தராகியயாகச் சத்திரிய தெலுங்க தேசாதிபதிகள் வமிசத்தார்கள் தலைமை புல்லன்செட்டி. புல்லன்செட்டி மாரியம்மன் கோவிலுக்குக் கொடையளிக்கிறார். புல்லன்செட்டி குடியிருக்கும் தமிழ் நிலப்பகுதியைக் குறிப்பிடும். செப்பேடு பிறதல வளநாடு, செர நாடு, வருசை நாடு, புல்ல நல்லூர் வளநாடு என்று குறிப்பிடுகிறது. புல்லன்செட்டியின் முன்னோர்கள் வாழ்ந்த இடம் தெலுங்கு மொழி பேசப்படும் தேசமாகும். இதுவும் இராசேந்திரசோழன் செப்பேட்டுக் குறிப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நிலத்திற்குப் புறத்தேயுள்ள தெலுங்கு நாட்டைத் தேசமென்று குறிப்பிடுகிறது.

முசிறிச் செப்பேடு கோயில் பூசகர் தேவரடியார்க்குக்காணி வழங்கிய பட்டையம் மன்னன் மதுரை முத்துவீர சொக்கநாத நாயக்கன் (கி.பி.1710) வெற்றிச்சிறப்பைக் குறிக்கிறது. இதில் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் என்று அவனின் வெற்றிச்சிறப்பு குறிப்பிடப்படுகிறது. இதில் வரும் நாடு, இராச வளநாடு, ஆமூர் நாடு குறிக்கப்படுகிறது.

நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் "கள்ளர் சரித்திரம்' என்னும் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் கள்ளர் நாடுகள் பற்றிப் பதிவாகியுள்ள செப்பேடு ஒன்றை ஆவணமாகக் காட்டியுள்ளார். அந்தச் செப்பேட்டிலுள்ள நாடுகள் வருமாறு : தந்திநாடு, மனைப்பள்ளிநாடு, ஆய்வூநாடு, அஞ்சமுகநாடு, எரிமங்கலநாடு, மேலத்துவாகுடிநாடு, கீழத்துவாகுடிநாடு, கொற்கை நாடு, போன்ற நாடுகள்.

- தொடரும்

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.