கேடாக முடிந்த நட்பு மீண்டும் கூடியது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:26

2014ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரசைக் குற்றம் சாட்டி "கூடா நட்பு கேடு தரும்'' என்று கூறி காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும் மத்திய அரசிலிருந்தும் தி.மு.க. விலகியது.

இரண்டாண்டுகள் கழிவதற்குள் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூடா நட்பு மீண்டும் கூடிய நட்பாக மாறிவிட்டது.

இந்த இரண்டாண்டு காலத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கொள்கையில் அணு அளவுகூட மாற்றம் ஏற்படவில்லை. ஏற்படுவதற்கான அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலங்கையில் ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான போர்க் குற்றவாளிகள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அவர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இக்கருத்தை மக்கள் ஏற்பது ஒரு புறம் இருக்கட்டும். கூட்டணிக் கட்சியான காங்கிரசை இந்த இரு கோரிக்கைகளையும் ஏற்குமாறு செய்ய தி.மு.க. முதலில் முயற்சி செய்யட்டும். அம்முயற்சியில் தி.மு.க. வெற்றி பெறுமா?

முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக் கட்டப்படும் என கேரள மாநில மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது.

அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

நீதி என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை கேரள மாநிலம் மதிக்க மறுக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநிலத்தில் ஒரு நிலையையும் தமிழ்நாட்டில் மற்றொரு நிலையையும் எடுத்துள்ளது. ஆனால், இக்கட்சியின் அகில இந்தியத் தலைமை இந்தப் பிரச்சினையில் மவுனம் சாதிக்கிறது.

உச்சநீதி மன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு இறுதியானத் தீர்ப்பாகும். அதை எந்த மாநிலமாக இருந்தாலும் ஏற்க வேண்டியது அரசியல் சட்டப்பூர்வமான கடமையாகும். ஏற்க மறுப்பது அரசியல் சட்டத்தையே மீறுவதாகும். அக்கட்சியின் அகில இந்தியத் தலைமை இப்பிரச்சினையில் தலையிட்டு கேரள மாநிலத் தலைமையைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் கூறாதது மட்டுமல்ல. அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அக்கட்சியின் சில தலைவர்களும் அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்வது அக்கட்சியின் நலனுக்கு உதவும். ஆனால், தமிழக விவசாயிகளுக்கு நீதிவழங்கி உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதியாத கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் அடாதப் போக்கிற்கு துணை நிற்பதாகும். தமிழகத்தை வஞ்சிப்பதாகும்.

காவிரிப் பிரச்சினையிலும் இதே தந்திரத்தைத்தான் அகில இந்தியக் கட்சிகள் கடைப்பிடிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அக்கட்சிகளின் கிளைகள் தமிழ்நாட்டிற்கு ஆதரவாகவும். கருநாடக மாநிலத்தில் உள்ள அக்கட்சிகளின் கிளைகள் தமிழ்நாட்டிற்கு எதிராகவும் நிலை எடுத்துள்ளன.

நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்புகளையும் இறுதியாக உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பினையும் கருநாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்க மறுக்கின்றன. மத்திய அரசின் அனுமதி இல்லாமலும் தமிழக அரசின் ஒப்புதலின்றியும் காவிரியில் மேகதாது அணை கட்டும் முயற்சியில் கருநாடகம் ஈடுபட்டுள்ளது. இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமைகள் இப்பிரச்சினையில் ஊமைகளாக மாறிவிட்டன.

பெரியாறு, காவிரி போன்ற ஆற்றுப் பிரச்சினைகளில் நமக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அகில இந்திய கட்சிகளின் தலைமைகள் கேரள, கர்நாடக கிளைகளின் அநீதியான போக்கைக் கண்டித்திருந்தாலாவது நமது உள்ளங்களுக்கு சிறு ஆறுதல் கிடைத்திருக்கும்.

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்ய வந்த பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு வர வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியின் அரசு முன்வரவில்லை. மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தமிழகம் தட்டிக்கொண்டிருக்கிறது.
தமிழகம் தொடர்ந்து இவ்வாறு வஞ்சிக்கப்படுமானால் அதன் விளைவுகள் வேறுவிதமாக மாறுமே என்ற அச்சம் யாருக்கும் வரவில்லை. தமிழகத்தின் உயிர்நாடியான பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும். நமக்குரிய நீர் கிடைக்க அகில இந்திய தலைமைகளோ அல்லது மத்திய அரசுகளோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தேசிய ஒருமைப்பாடு எனப் பேசுவது தமிழக மக்களை ஏமாற்ற முயல்வதாகும்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியைத் தோற்கடிக்க காங்கிரசும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் கைகோர்த்திருக்கின்றன. மத்திய காங்கிரஸ் ஆட்சியின் அமெரிக்க ஆதரவுப் போக்கினையும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவானப் போக்கினையும் கண்டிக்கும் வகையில்தான் அக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் கொடுத்த ஆதரவை இடதுசாரிக்கட்சிகள் திரும்பப்பெற்றன. காங்கிரஸ் கட்சியின் போக்கில் எள்ளளவு கூட எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆனாலும், காங்கிரசோடு கைகோர்த்து நிற்க இடதுசாரிகள் தயங்கவில்லை.

கூடாநட்பு கேடு தரும் என்று சொல்லி கூட்டணிக் கட்சிமீது குற்றம் சாட்டுவதும், பழிசுமத்துவதும், பிறகு அதே கட்சியுடன் கைகோர்த்து நட்புறவு கொள்ளுவதும், இன்றைய நடைமுறை அரசியல் ஆகிவிட்டன. பதவிகளைக் கைப்பற்றுவதற்காகக் கொள்கைகளைத் தூக்கியெறிந்துவிட்டு யாருடன் வேண்டுமானாலும் கூட்டுச் சேருவது என்ற பச்சைச் சந்தர்ப்பவாத போக்கு பரவிவிட்டது.

ஒரே நேரத்தில் பல்வேறுபட்ட கொள்கைகளையுடைய கட்சிகளுடன் கூட்டுசேர பேரம் பேசுவதும் எந்தக் கட்சியுடன் பேரம் படிகிறதோ அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் குதிக்கும் வெட்கங்கெட்ட நடவடிக்கைகளை பார்த்து மக்கள் அருவெறுக்கிறார்கள்.

தங்களுடன் கூட்டணி வைக்க மறுக்கும் கட்சிகளை உடைப்பதும். அவற்றிலிருந்து சிலரை பணம்/பதவி ஆசை காட்டி இழுப்பதும் பகிரங்கமாக நடைபெறுகின்றன. எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. நேற்றுவரை ஒரு கட்சியிலிருந்து இலட்சிய முழக்கம் செய்த ஒருவர் அதற்கு நேர்மாறான கொள்கைகொண்ட மற்றொரு கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்கு அரசியல் ஞானமுழுக்கு அளிக்கப்பட்டுப் புனிதராக்கப்படுகிறார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நேற்றுவரை அவர் போற்றிப் புகழ்ந்த தலைவரை இழித்துப் பேசுவதும், நேற்றுவரைப் பழித்துப் பேசப்பட்டத் தலைவருக்குப் புகழ்மாலைச் சூட்டுவதும் பாதம் பணிந்து நிற்பதும் கண்டு மக்கள் நகைக்கிறார்கள்.

பொது வாழ்க்கையின் நற்பண்புகள் சிதைக்கப்படுகின்றன. சனநாயக நெறிமுறைகள் புதைக்கப்படுகின்றன. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பது மறக்கடிக்கப்பட்டு, மக்களை ஆட்டு மந்தைகளாக கருதியும், காசை வீசியெறிந்து விலைக்கு வாங்கும் சரக்காகக் கருதும் போக்கு மலிந்துவிட்டது. கட்சிகளுக்குள் சனநாயகம் சாகடிக்கப்பட்டு வாரிசுரிமைகள் நிலை நாட்டப்பட்டு சர்வாதிகாரத்திற்கான பாதை கட்டமைக்கப்படுகிறது.

தமிழக அரசியலில் மட்டுமல்ல சகல துறைகளிலும் சீரழிவைப் பரப்பியவர்கள், சனநாயக வேரை அரித்தவர்கள், மேலிருந்து கீழ்வரை ஊழலைப் பரப்பியவர்கள் ஆகியோரை மீண்டும் ஆட்சிபீடம் ஏறவிடாமல் தடுப்பது மக்கள் கடமையாகும்.

எந்தக் கட்சி வெற்றிபெறுவது என்பதைவிட, சனநாயகம் பாதுகாக்கப் படுவதும் தமிழக அரசியல் தூய்மைப்படுத்தப்படுவதும் முக்கியமானவையாகும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.