திருவள்ளுவரின் நெஞ்சம் - (மா. அர்த்தனாரி)
மனிதர்களின் அறிவுப் புதையலைத் திறந்து வைக்கும் சக்தி வாய்ந்த "மந்திரக்கோல்' திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் என்றால் அது மிகையாகாது. அத்தகைய பெருமையையும், சிறப்பையும் பெற்ற திருக்குறளுக்கு அன்றிலிருந்து இன்று வரை பல தமிழறிஞர்கள் பல உரைகளை தந்து கொண்டே உள்ளனர். அதில், புதிதாக ஏதோ உரை எழுதிவிடலாம் என்று எண்ணாமல் எளிதாக, புரியும்படியாக தெளிவாக உழைக்கும் வர்க்கத்தினர் வாசிப்பதற்கு ஏற்றாற்போல் நல்ல தமிழில், பொருள் விளங்க உரை எழுதியிருக்கும் அய்யா அர்த்தனாரி அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவராகிறார்.
எல்லா அதிகாரங்களிலும் உள்ள குறள்களின் முக்கியத்துவங்களை நன்கு ஆராய்ந்து, அந்தந்த குறள்களின் மூலம் சிறு சிறு கேள்விகள் கேட்டு, பொருள் விளங்க, எளிய நடையில் பதிலை அளித்திருப்பது மிக அருமை. பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல கடைக்கோடி கிராமத்துத் தாய்மார்கள்கூட இந்த நூலை எளிதில் வாசித்து புரிந்து கொள்ள முடியும் என்பதை நூலாசிரியர் காட்டியிருக்கிறார்.
தமிழின் பெருமையை திருக்குறள் மூலம் நாம் நன்கு அறிவோம். ஆனால் ஒவ்வொரு குறளின் உள்ளே சென்று ஆய்ந்து, அறிந்து புரிந்து செயல்படவேண்டுமென்றால் இது போன்ற புத்தகங்கள்தான் நமக்குத் தேவைப்படுகின்றன.
"உலக மறை' என்று போற்றக்கூடிய திருக்குறளை மக்களுக்கு நன்கு தெளிவுபெற உணர்த்தி எல்லா தலைமுறையினரையும் ஈர்க்கும்படியும் செய்த நூலாசிரியர் அய்யா பா. அர்த்தனாரி அவர்களின் தமிழார்வத்தொண்டுக்கு நமது பாராட்டு.
- தமித்தலட்சுமி
திருவள்ளுவரின் நெஞ்சம் ஆசிரியர் பெயர் : மா. அர்த்தனாரி கிடைக்குமிடம் : நட்புறவுப் பண்ணை, நங்கவள்ளி - 636 454, சேலம் மாவட்டம். விலை ரூ. 175/-
மனித மாண்பு - (பழனி-மகிழ்நன்)
வள்ளுவரின் அறக் கோட்பாட்டையும், வள்ளலாரின் கழிவிரக்கச் சிந்தனையையும் போற்று பவராக - தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த நூலின் ஆசிரியர் 22 தலைப்புகளில் மனித வாழ்க்கையையும், அவர்களின் வாழ்வியல் நலத்தையும் கொண்ட அடிப்படை கருத்துக்களை மிக அழகாக, தெளிவாக சிந்தித்து வாசகர்களுக்கு கொடுத்திருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.
"அன்பு, அறம், தொண்டு' . இவை மூன்றுமே மனிதத்தை அடையாளப்படுத்துகின்றது என்றும், "உண்மையான, ஒழுக்கமான, தொண்டுள்ளம் கொண்ட தூய்மையான நல்ல தலைவர்கள்தான் நல்ல தொண்டர்களை உருவாக்கிக் கட்சியை வளர்க்க முடியும். என்றும் "நேர்மையான, உயரிய நோக்கம் கொண்ட அரசுதான் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முடியும் என்றும் முக்கியமான கருத்துக்களை சரியான நேரத்தில் உரைத்திருக்கிறார்.
"மதமும் மனித வாழ்க்கையும்' என்ற தலைப்பில் "மதம் என்பது மக்களின் ஒற்றுமைக்கும், உயர்விற்கும், அன்பிற்கும், சகோதரத்துவத் திற்கும் அமைதி- இன்பத்திற்கும் உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர மக்களைப் பிரிப்பதாகவும், பிரித்துப் பகைப்பதாகவும் இருக்கக்கூடாது'' என்று, "மக்களுக்காகத்தான் மதமே தவிர மதத்திற்காக மக்கள் அல்ல', என்பதை தனது பார்வையாக அடிக்கோடிட்டிருக்கிறார்.
"நாம் வாழப் பிறந்தவர்கள்' என்ற தலைப்பில் சாதனை படைத்த பல முக்கியத் தலைவர்களையும், அவர்களின் எளிமையையும் நம் கண் முன்னே கொண்டு வந்து - இந்தத் தலைமுறையினரை அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஊக்குவிக்கிறார் நூலாசிரியர்.
இது போன்று பல்வேறு சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகமாகவும், மனிதனின் நல்ல சிந்தனைகளும், நல்ல குணங்களும் அவரவர் வாழ்க்கையை அவரவர் துறைகளில் மேம்படுத்தும் வகையில் - "இன்று நமக்கு வழிகாட்டுகிறவர்கள் தேவையில்லை, வாழ்ந்து காட்டுகிறவர்களே தேவை'' - என்ற சிறப்பான பல கருத்துக்களுடனும் இந்த நூல் அழகுற அமைந்திருப்பதைப் பாராட்டுகிறோம்.
- தமித்தலட்சுமி
மனித மாண்பு - ஆசிரியர் பெயர் : பழனி - மகிழ்நன். தென்றல் நிலையம், 12பி மேல சன்னதி, சிதம்பரம்-608 001. விலை ரூ. 175/- |