தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழ இனப்படுகொலை 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி 18/5/16 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் முனைவர் ம. நடராசன், தஞ்சை. அ. இராமமூர்த்தி, பேரா. திருமாறன், சி. முருகேசன், வைத்தியநாதன், மரு. பாரதிசெல்வன், ஜான். கென்னடி, வீரசிங்கம், கும்பலிங்கம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இலண்டனிலிருந்து திரு. நடராஜா அமர்நாத் கலந்து கொண்டார். சரியாக மாலை 6 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தீபங்கள் ஏற்றி அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.
சென்னை
சென்னையில் மே 17 இயக்கத்தின் சார்பில் 29-5-16 அன்று கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
பிரான்சு
பிரான்சு பாரிஸில் கடும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சியுடன் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை மிக பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
பிற்பகல் 2.30 மணியளவில் பேரணி புறப்பட்டது. பேரணியில் குர்திஸ்தான் மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
பேரணி சென்ற வழியில் குர்திஸ்தான் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பேரணி தொடர்ந்துசென்றது.
முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் - தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றன.
முதலில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் மகேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் மகளை இழந்த தந்தை ஒருவர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.சுரேஸ் அவர்கள் உரை ஆற்றினார்.
தமிழருக்கான பாராளுமன்றக் குழுவைச் சேர்ந்த திருமதி மரியா ஜார்ஜ், ஐரோப்பிய குர்திஸ்தான் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி. பெரியான், பிரான்சு தமிழீழ ஆதரவு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. மிரெலி ஐரோப்பிய ஆப்பிரிக்க பெண்கள் அமைப்பின் தலைவர் திருமதி. டாமேரி மெளரிசியஸ் தமிழ் அமைப்பு சார்பாக ரெங்கசாமி ஆகியோர் தமது உரைகளில் எமது போராட்டங்களுக்கு தமது ஆதரவை உணர்வு பொங்கத் தெரிவித்தனர். தமிழ்ச்சோலை தலைமைப் பணிமனை உறுப்பினர் அகிலன், தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் விவியன் சுபாஸ்கரன், தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை உறுப்பினர் தென்னவள் ஆகியோரும் பேசினர்.
செவ்ரோன் மாணவிகளின் எழுச்சி நடனங்களும் அனைவரையும் கவர்ந்திருந்தன.
நிறைவாக "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்' பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
மெளரிசியஸ்
அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் தோழமை அமைப்புக்களான மெளரிசியஸ் தமிழக்கோயில்களின் கூட்டமைப்பு, மெளரிசியஸ் தமிழ் அமைப்பு என்பன இணைந்து முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின உச்ச அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளன.
மெளரிசியஸ் றோசில் பகுதியில் அமைந்துள்ள தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் முன்பாக 18-5-2016 புதன்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மெளரிசியஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் பல அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகளும் உரைநிகழ்த்தியிருந்தனர்.
தமிழினப் படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை அவசியம்,ஐக்கிய நாடுகள் சபையில் தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும்-
தமிழீழத் தேசியக்கொடி வெகுவிரைவில் ஐ.நாவில் பறக்கும். அந்த நாட்கள் வெகுதூரத்தில் இல்லை - தமிழ் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்பவற்றிற்கு மகிந்த ராஜபக்சவும் ஆதரவாளர்களும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்தப்படவேண்டும்-
தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். என்பவற்றை வலியுறுத்தியதாக அனைவரின் உரைகளும் இடம்பெற்றிருந்தன. |