'தேசம்' வடசொல்லே - புலவர் சு. முருகேசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:40

பாண்டியர் செப்பேடு, பல்லவர் செப்பேடு:

சீவரமங்கலச் செப்பேடு – மன்னன் - பராந்தக நெடுஞ்சடையன், கி.பி. 785 அதியமானின் தகடூர் நாட்டை வென்ற செய்தி - தகடூர் நாடு.

வீரபாண்டியனின் சிவகாசிச் செப்பேடு பிராமணனுக்கு நிலதானம் -- வெள்ளத்தாயநாடு, புரத்தாயநாடு – மேல்வேம்புநாடு

சின்னமனூர் செப்பேடு – கோயில் நிலதானம் மன்னன் பரமேசுவரன் - - அண்டநாடு – கீழவேம்புநாடு.
திருப்புவனம் பெரிய செப்பேடு – மன்னன் சுந்தரபாண்டியன் (கி.பி.214) இராசகெம்பீரவளநாடு, பல்லவர் செப்பேடு
ஆந்திரமாநிலம் உனகுரவபாளையம் செப்பேடு – மன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் கி.பி.687 - முக்காவல்நாடு

தண்டந்தோட்டச்செப்பேடு மன்னன் - சோழநாட்டு தென்கரை நரையூர் நாடு.

வேலூர் பாளையம் செப்பேடு மன்னன் மூன்றாம் நந்திவர்மன் ஞாயிறு அந்நாட்டுத் திருக்காட்டுப்பள்ளி, பஞ்சவரம் நாடு.

புதுவைபாகூர் செப்பேடு மன்னன் நிருபதுங்கவர்மன் - அருவாநாடு – வாங்கூர் நாடு

விசயநகரமன்னர் வழி மன்னன் திருமலை, கூனியூர் செப்பேடுகள் திருவரங்கச் செப்பேடு – ராசகெம்பீரவளநாடு
காருகுடிச்செப்பேடு – செயங்கொண்ட சோழவளநாடு, சேதுபதிச் செப்பேடு – அஞ்சுகோட்டை நாடு, திருச்சிநாடு, நாலுகோட்டை நாடு, தென்னிலைநாடு, தேர்போகிநாடு, முத்துநாடு.

அருங்குளச்செப்பேடு – அப்பனூர் நாடு

அரந்தாங்கித் தொண்டைமான் செப்பேடு – பொன்னம்பலநாடு, பனங்கயநாடு,
களக்குடிச் செப்பேடு – திருமிழலைநாடு

புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடு – களத்தூர் செப்பேடு தேர்போகிநாடு.

சேரநாட்டுச் செப்பேடு : திருவனந்தபுரம் செப்பேடு – வேணாடு, முடாலநாடு, பொழில்நாடு போன்ற நாடுகளையும்.

தஞ்சை கள்ளர் மகாசங்கத்தின் அமைச்சர் திரு.நடராசப்பிள்ளை மூலம் கிடைத்த ஆவணம் - காசாநாடு, கீழவேங்கைநாடு, கோனூர்நாடு, பின்னையூர்நாடு, தென்னமநாடு போன்ற பல்வேறு ஆவணங்களின் திரட்டென்பதால் வந்த நாடுகளே பல இடங்களில் மீண்டும் வந்துள்ளன. அதை உறுதிப்பாடாக எடுத்துக் கொள்ளவும்.

சங்க இலக்கியத்தில் நாடும் தேசமும்

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென்கீழ்க்கணக்கு என மூன்று வகையாகும்.

இவற்றில் முந்தைய நூற்களை மேற்கணக்கென்பர். பிந்தைய நூற்களை கீழ்க்கணக்கென்பர். மேற்கண்ட இலக்கியங்களில் நாடு என்னும் சொல் அறுநூற்றி எண்பதிடங்களில் பயின்றுவருகிறது. சில இடங்களில் ஓய்மாநாடு, பரம்புநாடு, மலையமான்நாடு என மன்னர்கள் ஆண்ட நாட்டைக் குறித்து வருகிறது. மற்ற இடங்களில் பொதுவாக பெருங்கல்நாடன், நீர்நாடன், அகன்றலை நாடன், மலைநாடு, நல்நாடு எனப் பயின்று வருகிறது.

"தேஎம்' என்னும் சொல் பத்துப்பாட்டில் பதினைந்திடங்களிலும் எட்டுத்தொகையில் நாற்பத்திநான்கிடங்களிலும், பதினெண் கீழ்க்கணக்கில் மூன்றிடங்களிலுமாக அறுபத்தியிரண்டிடங்களில் பயின்று வருகிறது.

இவற்றில் முப்பதிடங்களில் திசை, திக்கு, வழி, இடம் என்று இடப்பொருளில் வருகிறது. மூன்றிடங்களில் தேயம் என்று இடையினயகரம் பெற்று அழிவு, கலக்கம் என்னும் பொருளில் வருகிறது.

தேஎம் என்னும் சொல் நாடு என்னும் பொருளில் முப்பத்தியிரண்டிடங்களில் பயின்று வருகிறது. இவற்றில் ஆறிடங்களில் தன்னாட்சி செல்லாத. வேறு பல அகன்ற இடத்தையுடைய, பணிந்தவருள்ள தேசமென்று வருகிறது. ஒன்பதிடங்களில் பகைவர் தேசமென்றும், ஆறிடங்களில் முன்பின் அறியாத தேசமென்றும் பதினைந்திடங்களில் மொழி வேறாகிய தேசமென்றும் ஓரிடத்தில் வடுகர்தேசமென்றும் வருகிறதேயன்றி தமிழ் நிலத்தையோ தமிழ் நிலத்தின் எந்த ஒரு பகுதியையோ தேசமென்று குறித்து வரவில்லையே? வடுகர் தேசமென்று வந்திருக்கும்போது தமிழர் தேசம் என்றோ தமிழ்த்தேசமென்றோ குறித்து வரவில்லையே தமிழ்த்தேசியம் என்போர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அகநானூறு பாடல்-349 இல் நன்னனது நாட்டிலுள்ள எழில்மலை என்று அவனது ஆட்சிப் பகுதியை நாடு என்று குறிப்பிடுகிறது. தலைவன் சென்றுள்ள இடத்தைக் குறிப்பிடும்போது சொல்பெயர். தேஎம் என்று குறிப்பிடுவதை நோக்குக.

திருக்குறள் கல்வி 397 யாதானும் நாடாம்-- ஊழியல் பத்து குறட்பாக்களிலும் நாடு வருகிறது. பொருள் செயல்வகை 753ம் குறளில் தேயம் இடப்பொருளில் வருகிறது. சிலப்பதிகாரம்-- கொடுங்கருநாடர், முத்தொள்ளாயிரம் -- வியன்தமிழ்நாடு, காவிரிநீர்நாடு, குடநாடு, புறநானுறு- - வாடாயாணர்நாடு, ஒல்லையூர் நாடு. மேலும் பல சங்க இலக்கி யத்தில்- அகநாடு, இடைகழிநாடு, ஏறுமாநாடு, கோனாடு, மலையநாடு, மழவர்நாடு, மாறாக்க நாடு முக்காவனநாடு என்று வருகின்றன.

தேவாரத்தில் நாடு: மருகல் நாடு, கொண்டல் நாடு, குறுகைநாடு, நாங்கூர்நாடு, நறையூர்நாடு, மிழலைநாடு, வெண்ணிநாடு, பொன்னூர்நாடு, புரிசைநாடு, வெள்ளூர்நாடு

விளத்தூர் நாடு, பெரியபுராணத்தில் நாடு – மேன்மழநாடு, மேற்காநாடு, கோனாடு என்று வந்துள்ளன.

சங்க காலந்தொட்டு மன்னராட்சி காலந்தொடர்ந்து மக்களாட்சிக் காலமான இன்று வரை தமிழ்நிலமோ, தமிழ்நிலத்தின் எந்தவொரு பகுதியோ தேசமென்று குறித்து வழங்கப்படவில்லையென்பதை மேற்கண்ட வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகிய சான்றுகள் நிறுவுகின்றன.

எக்காலத்திலும் இந்தத்தமிழ் நிலங்குறித்து வழங்காத ஒரு சொல் எப்படித் தமிழ்ச்சொல்லாக இருக்க முடியும்? எனவே தேசம் தமிழ்ச்சொல்லில்லை. தேஷ் என்னும் வடசொல் தமிழர்களால் திரிக்கப்பட்ட வடமொழித்திரிசொல் தான் தேசம்.

தேயம், தேசம் பற்றிய பாவாணர் கருத்திற்கு மேற்கோளாக சங்க இலக்கியங்களைக் காட்டுகின்றனர். அவை பற்றி ஆய்வோம்.

(குறுந்தொகை 11 – 5-8) குல்லைக்கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட்டும்பர் மொழிபெயர் தேஎத்தராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. - இதன் பொருள் : கஞ்சங்குல்லை மலர் மாலையை அணிந்து வடுகருடைய போர்க்களத்தையுடையதும் வலிய வேலங்காட்டினையுடைய நல்ல நாட்டுக்கு மேலிடத்தும் மொழிவேராகிய தேயத்தில் தலைவர் உள்ளாராயினும் அங்கே சென்று அவரைக் கூடுவோம் நெஞ்சே! தலைவனைப் பிரிந்த தலைவி தம் ஆற்றாமையை தம் நெஞ்சோடு கூறியது.

(ஐங்குநூறு 321 : 4-5) மொழி பெயர் பன்மலையிறப்பினும் ஒழிதல் செல்லா தொண்டொடிகுணனே. இதன் பொருள் : வேற்றுமொழி பேசும் மக்கள் வாழும் மலை பலவுடைய நாடுகளையும் கடந்து செல்லினும் ஒள்ளிய தொடியை உடையாளின் காதல் கெழுமிய குணம் நினைவின்கண் தோன்றி வருத்துகிறது – தலைவி தலைவனுடன் உடன்போக்கு சென்றதை ஆற்றாத நற்றாய் கூறியது.
(அகம் 31 : 14-:15) தமிழ் கெழு மூவர்காக்கும் மொழி பெயர் தேயத்த பன்மலையிறந்தே. - இதன் பொருள் : தமிழ் மூவேந்தர் காக்கும் நாட்டிற்கப்பால் மொழி வேறுபட்ட தேயத்திலுள்ள பல மலைகளைக் கடந்து நங்காதலர் சென்றார் என்று சொல்லுவாரில்லை. தலைவனைப் பிரிந்த தலைவி தலைவன் நம்மை வந்தடைவான் என்று நெஞ்சோடு கிளத்தியது.

(அகம் 211 : 7-8) பனிபடுசோலை வேங்கடத்தும்பர் மொழிபெயர் தேயத்தராயினும் நல்குவர். இதன் பொருள் : குளிர்ந்த சோலைகளையுடைய வேங்கடமலைக்கப்பால் வேறுமொழி வழங்கும் தேயத்தை என் காதலர் நாம் அழும்படியாகப் பிரிந்து சென்றார். தலைவனின் பிரிவாற்றாமையை தலைவி தோழிக்குக் கூறியது.

இப்பாடல்களில் நாடு என்னும் பொருளில் வரும் தேயம் என்னும் சொல் தமிழ் நாட்டிற்குப்புறத்தேயுள்ள நாடுகளைக் குறித்து வருகிறதேயன்றி தமிழ் நிலத்தைக் குறித்து வழங்கவில்லை. பாவாணரும், மொழிபெயர்தேயமென்றது வடுக நாட்டையே என்பது தெளிவுறுதேற்றம் என்றார். தெலுங்கென்னும் வடுகு முதற்காலத்தில் தமிழினின்றும் மிக வேறுபட்டிருக்க முடியாதென்கிறார். வேறுபட்டதால் தேசமென்றானதை ஒப்புக் கொள்கிறார். இதன் மூலம் தேசமென்னும் சொல் தமிழ் நிலங்குறித்து வழங்கவில்லை என்பது உறுதியாகிறது.

தேயம், தேசியம் தமிழ்ச் சொற்களென்பதற்கு முனைவர் க.அரசேந்திரனின் மேற்கோள் காட்டப்படுகிறது. அவர் காட்டும் அகநானூறு பாடல் 383 : 4 நாடும் தேயமும் நனிபல இறந்த. இதன் பொருள் : மகளைப் பிரிந்த தாய் தன்னைப் பாதுகாத்து வளர்த்த என்னைப் பிரிந்து அவனோடு செல்லத்துணிந்து நாடுந்தேயமும் மிகப் பலவற்றைக் கடந்த சிறிய இரக்கமில்லாதவள் என்று தாய் கூறுகிறாள். இதில் நாடும் தேயமுமென்றது தமிழ் நிலத்துள்ள நாடும் புறத்தேயுள்ள பிறதேசமும் என்பதை நனிபல என்ற சொல் தெளிவுபடுத்துகிறதேயன்றி தமிழ் நாட்டில் உள்ள தேசமென்று சுட்டவில்லை.

திருமூலர் 2071 தேயத்துள்ளே எங்கும் தேடித்திரிவர்கள் இந்தப் பாடலில் உடம்பையே தான் வாழும் நாடாய்க் கொண்டவன் இறைவன். அவனைத் தேடி வெளியிடமெங்கும் அலைய வேண்டாம் என்றார் திருமூலர். இங்கு தேசமென்றது இடப்பொருளில் வெளியிடமென்றார். நாடு என்று கூறவில்லை.

திருமூலர் இறைவன் வாழுமிடமான நம் உடம்பை நாடு என்று குறிப்பிடுகின்றார். அதை விட்டு அவரைத் தேடி அலையும் பிற இடங்களை தேயம் என்கிறார். மேலும் திருமூலர் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முந்தியவர். அவர் பாடல்களில் சோதி, மூர்த்தி, சந்திப்பு என்று பலவட சொற்கள் உள்ளன. அந்த வரிசையில் தேயமுமொன்று தான்.

இதுகாறுங்கூறிய வற்றால் தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் கையாள்வதற்குக் காட்டிய இலக்கணமறிந்தோம். மொழியாய்வாளர்கள் தேசம் தமிழ்ச்சொல்லென்று நிறுவமுயன்று முரண்படுவதையறிந்தோம். ஒருவர் தேசமென்னும் சொல் தமிழிலும், வடமொழியிலும் தனித்தனியாகத் தோன்றிய சொல் என்கிறார். ஒருவர் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற சொல் என்று கூறி முரண்படுவதையறிந்தோம். தேசம் தமிழ் நிலத்தில் எக்காலத்திலும் நாடு என்னும் பொருளில் வழங்கி வரவில்லை, நாடு என்னும் சொல்லால்தான் குறித்து வழங்கப்பட்டு வருகின்றது என்பதற்கான ஆவணங்களாக வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம் ஆகியவற்றை சான்று காட்டியுள்ளோம். சங்க இலக்கியங்களில் பயின்று வரும் தேயம் என்னும் சொல் திசை, திக்கு, வழி, இடம் என்னும் பொருளிலும், முன்பின் அறியாத மொழிவேராகிய பிற நாடுகளையுமே குறித்து வருகிறதென்றும் இத்தமிழ் நிலங்குறித்து வழங்கப்படவில்லையென்பதை நிறுவியுள்ளோம். தேசமும், தேசியமும் தமிழ்ச்சொல்களென்போர் மேற்கண்ட சான்றாவணங்களில் ஒன்றையேனும் காட்டிட வேண்டும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.