திருப்பு முனையான தேர்தல் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 03 ஜூன் 2016 15:51

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஆறுமுனைப் போட்டி ஏற்பட்டது. அது அதிமுகவுக்கு நல் வாய்ப்பைத் தந்தது. தமிழகக் கட்சிகளில் அதிகமான மற்றும் நிலையான வாக்கு வங்கியையுடைய கட்சி அதிமுக. எனவே, எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிளவுப்பட்ட நிலையும், கடைசி நேரத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மக்களை ஈர்த்ததும் அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

தமிழக அரசியல் வரலாற்றில் காமராசருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு தொடர்ந்து இரண்டாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றுள்ளார். மேலும், 6ஆவது தடவையாக முதலமைச்சரான பெருமையும் அவரைச்சாரும்.

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த வரலாறு - இம்முறையும் தொடர்ந்து தாமே ஆட்சியை கைப்பற்றலாம் என திமுக நம்பியது.

தேமுதிக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் திமுக தலைமை நடத்திய பேச்சுவார்த்தைகள் பயன் தரவில்லை. காங்கிரஸ் மட்டுமே கூட்டணியில் சேர முன் வந்தது. காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி எதிர்விளைவுகளை ஏற்படுத்திற்று. காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளில் 33ஐ அதிமுக கைப்பற்றுவது சுலபமாயிற்று. 2009இல் நடைபெற்ற ஈழத் தமிழர் படுகொலைக்கு காரணமான கட்சி காங்கிரஸ் என்பதையும் அதற்குத் துணை நின்றது திமுக என்பதையும் தமிழக மக்கள் மறக்கவில்லை.

ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணம் திமுக தொண்டர்களைத் தட்டியெழுப்பப் பயன்பட்டது. ஆனால், மக்களிடம் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. ஸ்டாலின் அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது இவ்வாறு மக்களைத் தேடிவராமல் இப்போது வந்ததை மக்கள் ஏற்கவில்லை.

திமுக ஆட்சி காலத்தில் தவறுகள் நடந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் கூறியது வரவேற்கத் தக்கது. ஆனால் இதை கழகத்தின் தலைவர் கருணாநிதி சொல்லியிருக்கவேண்டும். ஈழத் தமிழர் படுகொலை, 2ஜி ஊழல்கள் போன்ற பெரும் ஊழல்கள், குடும்ப ஆட்சி முறை நிலைநிறுத்தும் முயற்சி போன்றவைகளுக்குப் பொறுப்பாளியான கருணாநிதி மன்னிப்புக் கேட்டிருந்தால் அது சரியாக இருந்திருக்கும்.
மறுபடியும் திமுக ஆட்சி வருமானால், குடும்ப ஆட்சி முறை நிரந்தரமாக நிலைநிறுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் மக்களிடம் இருந்தது. அதை உறுதி செய்வதைப் போல தேர்தல் பிரச்சாரத்தில் 2ஜி ஊழல் வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் கனிமொழி, ராஜா, தயாநிதி மாறன் ஆகியோர் கருணாநிதியுடனும் தனியாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இது மக்களிடையே எதிர்விளைவை ஏற்படுத்தியது.

இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது அணியின் தேவை மக்களால் நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆறு கட்சிகள் கூடி அமைத்த மூன்றாவது அணி மொத்தத்தில் 14% வாக்குகளைக் கொண்டிருந்தும் அதில் பாதி அளவுக்குக் கூட வாக்குகளை இத்தேர்தலில் பெறவில்லை. மக்களின் எதிர்ப்பார்ப்பையும் மூன்றாவது அணி நிறைவேற்றவில்லை. இந்த அணியின் நம்பகத்தன்மை குறித்து மக்களுக்கு ஐயம் ஏற்பட்டது.

2011 தேர்தலில் 29 இடங்களில் வெற்றிபெற்று 12% வாக்குகளைப் பெற்ற தேமுதிக இப்போது போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி 2.4% வாக்குகளை மட்டுமே பெற்றது. மூன்றாவது அணியைச் சேர்ந்த மற்றக் கட்சிகள் ஒவ்வொன்றும் இத்தேர்தலில் 1% வாக்குக்கும் குறைவாகப் பெற்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னால் இரு கழகங்களுக்கும் மாற்றாக உருவாகும் வாய்ப்பை தமிழக மக்கள் அளித்தனர். அதை முற்றிலுமாக தே.மு.தி.க. இழந்துவிட்டது. மூன்றாவது அணியில் சேர்ந்த அத்தனை கட்சிகளும் குறைவான வாக்குகளைப் பெற்றதன் விளைவாக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

மாற்று அணி அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. சமரசங்களும், சந்தர்ப்பவாதங்களும் திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. தங்களுக்கும் சொந்தம் என்பதை மூன்றாவது அணி வெளிப்படுத்தியது. மூன்றாவது அணியைச் சேர்ந்த தலைவர்கள் சிலரின் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் விரும்பாத விளைவுகளை ஏற்படுத்திவிட்டன.

இந்தத் தேர்தலில் பல்வேறு அணிகளின் சார்பிலும், தனித்தனியாகவும் போட்டியிட்ட சாதிக் கட்சிகள் அனைத்தையும் மக்கள் அடியோடு தோற்கடித்திருக்கிறார்கள் என்பது ஆரோக்கியமான அரசியல் அறிகுறியாகும். இந்தப் போக்கு வளரவேண்டும். அப்போதுதான் சாதி மோதல்களும், கெளரவ படுகொலைகளும் அடியோடு ஒழியும்.

234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக, பா.ம.க, ம.ந.கூ., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை மாற்று அணியாக மக்கள் கருதவில்லை. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் சரியான மாற்று இல்லாத காரணத்தினால் திமுக கூட்டணிக்குக் கிடைத்தது. இதன் காரணமாக திமுக அணி 98 இடங்களைப் பிடித்தது. அதிமுகவின் வெற்றி விகிதம் மிகக் குறைவானது. முன் எப்போதையும்விட திமுக வலிமையான எதிர்க்கட்சியாக வந்துள்ளது.

மக்கள் அளித்தத் தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் மதித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக, ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் சட்டமன்ற ஜனநாயக நெறிமுறைகளையும், மரபுகளையும் மதிக்கவேண்டும். சட்டமன்ற விதிமுறைகளுக்குட்பட்டு மக்கள் பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் கண்ணியமாகவும், கருத்துச் செறிவுள்ளதாகவும் நடத்தப்படவேண்டும்.

எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதி மக்கள் அளித்தத் தீர்ப்பை மதித்து சட்டமன்றத்திற்குள் சென்று தனது கடமையாற்றவேண்டும். இதுவரை சட்டமன்றத்திற்குச் செல்லாமல் இருந்ததைப் போல இருக்கக்கூடாது.

ஒரு பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு திமுகவை மீண்டும் மக்கள் கைதூக்கிவிட்டுள்ளனர். அதை மனதில் கொண்டு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாக செயல்படவேண்டும். எதிரிக்கட்சியாக செயல்படக் கூடாது. தவறினால் மீண்டும் மக்களின் புறக்கணிப்புக்கு ஆளாக நேரிடும்.

மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்து இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வைத்துள்ளனர் என்பதை மறந்துவிடாமல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அணுக முடியாத முதல்வர் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டு மக்கள் முதல்வர் என்னும் நற்பெயருக்கு உரியவராக ஜெயலலிதா திகழவேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றிருக்கக் கூடியவர்கள் மக்களே தங்களுக்கு எஜமானார்கள் என்ற உணர்வுடன் செயல்படவேண்டும். பதவி நாற்காலியில் அமர்ந்த பிறகு தங்களை எஜமானர்களாகவும் மக்களை அடிமைகளாகவும் கருதும் போக்கு சனநாயகத்திற்கு எதிரானப் போக்காகும். இத்தகையப் போக்குகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் பொதுவான பிரச்சனைகளான மதுவிலக்கு, காவிரி, பெரியாறு பிரச்சனைகள், தமிழக மீனவர் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சனையில் கடந்த காலத்தில் எப்படி இருந்தாலும் இந்தத் தேர்தலுக்கு இரு கழகங்களும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் ஏறக்குறைய பலப் பிரச்சனைகளில் ஒரு மனதான கருத்தை வெளிப்படுத்தியுள்ளன. எனவே, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து நின்று இப்பிரச்சனைகளில் நிரந்தரமான தீர்வுகாண மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதுவரை இக்கட்சிகள் எதிர்மறையான நிலைகள் எடுத்தக் காரணத்தினால் மத்திய அரசு நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறைக் காட்டவில்லை.
தமிழ்நாட்டில் பயிற்சி மொழி, ஆட்சிமொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழியாகத் தமிழை ஆக்கவேண்டும் என்பதற்கான சட்டத்தை ஆளுங்கட்சி முன்மொழிந்து எதிர்க்கட்சி வழிமொழிய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால் தமிழ் அரியணை ஏறும், தமிழக மக்கள் வாழ்த்துவார்கள்.

நன்றி : தினமணி 26-5-2016

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.