கெழுதகை நண்பர் நா. அருணாசலம் அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பாகும். இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. தமிழும் தமிழரும் தொய்வடைந்த காலக்கட்டங்களில் உணர்வும் ஊக்கமும் நிறைந்த தமிழர் ஒருவர் தோன்றி அந்தத் தொய்வை அகற்றித் தமிழையும் தமிழரையும் நிமிரச் செய்வர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகள் தோன்றி வடமொழி என்னும் முதலை வாயில் சிக்கிய தமிழை மீட்டார். தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.
ஆங்கிலம் என்னும் திமிங்கிலத்தின் பிடியில் தமிழும் தமிழர்களும் சிக்கித் தவித்த போது தமிழ்ச் சான்றோர் பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழையும் தமிழரையும் மீட்க இடைவிடாமல் போராடிய பெருமை நண்பர். நா. அருணாசலம் அவர்களுக்கு உண்டு.
தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப் பயிற்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நூற்றொரு தமிழறிஞர்கள் சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்த முன் வந்தார்கள் என்றால் அதன் பின்னணியில் நின்று இதற்கான திட்டத்தைத் தீட்டிச் செயல்பட்டவர் நா. அருணாசலம் ஆவார். இதன் விளைவாக அன்றையத் தமிழக அரசு இறங்கி வந்து நீதிநாயகம் மோகன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைக்கவும் அது அளித்த பரிந்துரைகளை ஏற்றுச் செயல்பட வேண்டிய கட்டாயத்தையும் நா. அருணாசலம் தலைமையில் தமிழ்ச் சான்றோர் பேரவை ஏற்படுத்திற்று. இதற்கெனத் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டுமென அந்த ஆணையம் அளித்த பரிந்துரையை அன்றைய தமிழக முதல்வர் ஏற்கவில்லை. மாறாக அரசாணை ஒன்றைப் பிறப்பித்தார். ஆனால் ஆங்கில வழிப் பள்ளிச் சங்கத்தினர் வழக்குத் தொடுத்து அதைச் செல்லாதது ஆக்கினர். அந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தின் கிடப்பில் கிடக்கிறது.
சான்றோர் பேரவையின் சார்பில் தமிழகப் பெரு விழாக்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டன. விழாக்களில் தமிழ்ச் சான்றோர்களுக்குப் பொற்கிழிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விழாவிலும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்கு இடமளிக்கப்பட்டு அது குறித்து அறிஞர் பெருமக்களும் அரசியல் தலைவர்களும் பேசினார்கள். சுருங்கக் கூறின் தமிழர்களுக்கு உணர்வையும் எழுச்சியையும் இந்த விழாக்கள் ஊட்டின என்று சொன்னால் மிகையாகாது.
உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த மொழியினர் தங்கள் மொழியில் இசை கேட்டு மகிழ்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் தமிழிசை இல்லை. இதைக் கண்டு மனம் பொறாத செட்டிநாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசை இயக்கம் கண்டார். தமிழறிஞர்கள் பலரும் அவருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றனர். தமிழிசை இயக்கம் வேகமாகப் பரவிற்று. ஆனால் இடைக் காலத்தில் அதற்கொரு தொய்வு ஏற்பட்ட போது தந்தை பெரியார் தமிழிசை மன்றம் என்ற பெயரில் தமிழிசையைப் பரப்ப முனைந்து நின்றார் நண்பர் . நா. அருணாசலம். குறிப்பாகப் பாமர மக்களும் தமிழிசையை இரசிக்கும் வகையில் நாட்டுப்புறப் பாடல்களை முன்னிறுத்தி இசை விழாக்களை அவர் நடத்திய பாங்கு தமிழ் கூறும் நல்லுலகால் நன்றியோடு பாராட்டப்பட்டது.
சமய மறுமலர்ச்சிக் காலத்தில் சிதம்பரம் கோயிலில் நந்தனார் செய்த புரட்சி மாபெரும் சமுதாயப் புரட்சியாகும். பிற்காலத்திய ஆலய நுழைவுப் போராட்டங்களுக்கு அது முன்னோடியான போராட்டமாகும். அந்த நந்தன் பெயரில் ஓர் இதழினைப் பெரும் இழப்புகளுக்கு இடையே அவர் தொடர்ந்து நடத்தினார். அந்த இதழ் தமிழ் இளைஞர்களின் கையேடாகத் திகழ்ந்தது.
26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது அனைவருமே அதிர்ச்சியடைந்தோம். ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கு விடுவிக்கப்பட்ட அறைகூவலாகக் கருதி அதை ஏற்றுக் கொண்டோம். 26 தமிழர்கள் உயிர்க் காப்புக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டது. நந்தன் இதழின் ஆண்டு விழாவின் போது சென்னையில் கூடியிருந்த கூட்டத்தினரின் நடுவில் துண்டு விரித்து நிதி திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்தது. அது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட வழக்கு ஆவணங்களைத் தனது நகலத்தில் நகல் செய்து அவர் தந்து உதவினார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நடத்தும் பணியில் எங்களுக்கு தோள் கொடுத்துத் துணை நின்றார்.
சான்றோர் பேரவை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் மூலமாக ஆற்றிய பெரும் தொண்டினை யாரையும் எதிர்பார்க்காமல் தனது சொந்தச் செலவில் அவர் செய்தார் என்பது பாராட்டத்தக்க உண்மையாகும். மேலும் வறுமையில் வாடிய தமிழறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கும் ஏழை மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கும் அள்ளி வழங்கிய கரங்கள் அவருடையன. பிறர் அறியாமல் இவற்றை அவர் செய்தார் என்பது முக்கிய மானது. குறிப்பாக அவரிடம் உதவி கேட்டு வரும் ஈழத் தமிழர்களுக்குப் பரிவுடன் உதவிய பெருமை அவருக்கு உண்டு. அவர் உழைத்துத் திரட்டிய பொருளின் பெரும் பகுதியைத் தமிழுக்காகத் தமிழர்களுக்காக அவர் செலவிட்டார்.
"நீரற்ற குளம், நெடிய வயல், உவர் நிலம் ஆகிய எவ்விடத்தும் சென்று மழையைப் பொழியும் இயல்பு மேகத்துக்கு உண்டு. அவ்வாறே இன்னார் இனியவர் என எண்ணிப் பாராமல் எல்லோருக்கும் அள்ளி வழங்குவது பேகன் போன்ற வள்ளல்களின் இயல்பாகும்'' என புறநானூற்றுப் பாடல் நமக்குக் கூறுகிறது.
அறுகுளத் துகுத்தும் அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர் நிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே. (புறநானூறு 142)
இந்தப் பாடலுக்கு ஏற்ற நாயகராக அன்று பேகன் திகழ்ந்தான். இன்று நண்பர் நா. அருணாசலம் திகழ்ந்தார். வரையாது வழங்கிய கரங்கள் ஓய்ந்துவிட்டன. தமிழ் தழைக்க வாழ்ந்த மாமனிதர் மறைந்துவிட்டார். அருணாசலம் என்ற அந்த ஆலமரத்தின் குளிர் நிழலில் அடைக்கலம் புகுந்திருந்த புலமைப் பறவைகள், தமிழிசைக் குயில்கள் சோர்வென்பதே இல்லாமல் தொண்டாற்றிய தமிழ்த்தேனீக்கள் ஆலமரம் சாய்ந்த நிலையில் கதறுகின்றன. கண்ணீர் வடிக்கின்றன. தன்னலமற்றுத் தமிழ்த்தொண்டு புரிந்த தகைமையாளரான நண்பர் நா. அருணாசலம் தமிழர் நெஞ்சங்களில் என்றும் அழியாமல் நிறைந்திருப்பார். |