சுமேரியர் பழந்தமிழரே - முனைவர் கீரைத் தமிழன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:05

வேர்களைத் தேடும் நமது பயணம் - நாம் இழந்தவைகள் இத்தனைதானா? அல்ல இன்னும் எத்தனையோ? என்ற ஏக்கத்தையும், பதைபதைப்பையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை! சுமேரியரைக் கடந்து வேறு நாகரிகங்களுக்குள் செல்லலாம் என்றால் உலகின் முதலும் முதன்மையுமான நாகரிகத்தைத் தந்த சுமேரியர்கள் "இன்னும் இன்னும் எங்களை எழுதுங்கள், நாங்கள்தான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழர்'' என்று சொல்வது போல் என் மனக்கண்ணில் வந்து நின்று என்னை எழுதத் தூண்டுகிறது, நான் என்ன செய்ய? சரி உலக நாகரிகங்களுள் சற்றேறக்குறைய முழுமையாக வாசிக்கப்பட்டு வரலாறுகள் அறியப்பட்ட நாகரிகம் என்று சொன்னால் அது சுமேரியர் நாகரிகந்தான்.

வாசித்த வரலாறுகள் அறியப்படாத சிந்துவெளி, எகிப்திய, மயன் நாகரிகங்களுக்கு மத்தியில் கிடைத்திருக்கிற சுமேரிய நாகரிகந்தான் சங்க காலத்திற்கும் முந்தைய தமிழ், தமிழர் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. இதுவரை பண்பாடு, பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்த நாம் இங்கு அவர்களின் மொழி வழியாகவும் அவர்கள் தமிழர்தான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. மாந்தகுலம் நாகரிகம் பெற்ற போது அவன் முதலில் நாவையசைத்துப் பேசியது உறவுப் பெயர்களாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு சுமேரியர்கள் நாவையசைத்துப் பேசிய உறவுப் பெயர்களை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன், நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

சுமேரியர்களின் ஆப்பு வடிவ எழுத்துகளைப் பென்சில்வேனியா பல்கலைக் கழகச் சுமேரு ஆய்வியல் துறை படித்துத், தொகுத்து அச்சொற்களுக்குப் பொருளறிந்து வகைப்படுத்தி ePSD அகராதியாக வெளியிட்டுள்ளது. மிக அரிதான இந்த முயற்சி தமிழர்களுக்கு கிடைத்திருக்கிற நல்வாய்ப்பு என்றே கருத வேண்டும். இதன் மின் முகவரியை உங்களுக்கு இங்கே தந்திருக்கிறேன். முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள்.
<">http://psd.museum.upenn.edu/epsd/nepsd-frame.html>)
நம்மைப் பெற்றவளை நாம் அம்மா என்கிறோம். அம்மாவின் அம்மாவை அம்மாயி என்றழைக்கிறோம். சுமேரியர்களும் தாயை எப்படி அழைத்துள்ளார்கள் பாருங்கள்.

ama
ama / CHAMBER/wr. e2-M1; ama5; a2-m "chamber: cell : women's quarters" Akk. mustaku

மற்றொரு பொருள்
ama (MOTHER) wr. ama "mother" Akk. ummu
என்பதாகும். அதே போல்
அம்மாவின் அம்மாவை அம்மாயி அல்லது ஆயா என்போம். இவர்களும் இதே பொருளில் அம்மா ஆயா என்று அழைத்துள்ளனர்;

ama'aya
ama'aya /GRANDMOTHER/ wr. ama-a-a"grandmother" amagal
amagal /GRANDMOTHER/ wr. ama-gal"grandmother; a priestess"

அம்மாவின் அக்காவைப் பெரிய அம்மா என்றழைக்கிறோம். இவர்களோ அம்மா'கள் என்று அழைத்துள்ளனர்.
சுமேரிய நாகரிகத்தைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிற மலேசியாவைச் சேர்ந்த முனைவர் லோகநாதன் சுமேரிய நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று நிறுவ எண்ணற்ற ஆய்வுகளை எழுதிக் குவித்துள்ளார். கள் என்றால் பெரிய என்று இதற்கு விளக்கம் அளிப்பார். அம்மா + கள் என்கிறபோது பெரிய அம்மா என்று விளக்கம் அளிப்பார் இவர்.
தமிழர்கள் கிராமங்களில் அப்பாவை அய்யா என்று அழைக்கிறோம். அதேபோல் சுமேரியர்களும் அய்யா என்று அழைத்துள்ளனர். அதேபோல் நாம் துக்க மேலீட்டால் அழும்போது அய்யோ என்றுதான் அழுவோம். அதேபோல் சுமேரியர்களும் அழுவதற்கு அய்யோ என்று சுட்டியுள்ளனர்.

aya
aya /CRY/ wr.a; u3 "a cry of woe; to cry. groan" Akk.ahulap; nagu
aya /FATHER wr.a-a;aya2; a-ia"father" Akk.abu

இன்று அப்பாவின் அப்பாவை அய்யா என்று அழைக்கிறோம். ஆனால் இவர்கள்தான் மிகச் சரியாக அய்யாவின் அய்யா என்ற பொருளில் அய்யய்யா என்று சுட்டியுள்ளனர். இவ்வழக்கம் இன்று மருவி அய்யா என்ற பொருளில் நிற்கிறது.

ayya
ayaya/GRANDFATHER/wr.ayayax(/A.A.A./):A"grandfather"

மேலும் தமுஷிட் கனவு என்னும் காப்பியத்தில் 192ஆவது வரியைப் பார்ப்போம். இவ்வரியின் தமிழாக்கம் இதுதான். உது. மூருமு மான்ங் ஆயே முச்சான் ஜீமான் உது என் மருமான் நீயே! ஞானே உன் மச்சான் மான் என்பதாகும். இதில் முச்சான் > மச்சான் என்றும் மூருமு என்பது மருமான் என்றாகிப் பின் மாமன் என்றும் பின் இதுவே மற்றொரு வகையில் திரிந்து மைத்துனன் மைத்துனி என்றும் மாறியுள்ளது என்கிறார் திரு. லோகநாதன்.
சுமேரியாவில் சூரபாக்கம் என்ற நகரம் இருந்துள்ளது. இந்நகரத் தெய்வத்திற்கு எழுதப்பட்ட சங்கீதப்பாடல் தொகுப்பொன்று கிடைத்துள்ளது. சூரபாக்கின் நெறி என்ற இந்நூலில் 282 வரிகள் உள்ளன. இந்நூல் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழியாய்வு செய்துள்ள நிலையில் முனைவர் லோகநாதன் அவர்கள் இப்பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் என்று நிறுவியுள்ளதன் பாங்கு மிகப் பொருத்தமானதும் வியப்பிற்குரியதாகவும் உள்ளதைப் பாருங்கள்.

சான்றாக இச்சங்கீதத்தின் 177வது வரியைப் படித்தால் நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள். 177வது வரி இதுதான். ses-gal a-a na-nam nin-gal ama na-nam என்பதாகும். இதில் முதல் சொல்லை செஸ் என்று படிக்கக்கூடாது. இதை சேய் என்றுதான் படிக்க வேண்டும் என்று மொழியியலாளர் குறிப்பிடுகின்றனர். சேய் என்றால் பிள்ளை என்பது பொருளாகும். கள் என்றால் பெரிய என்று பொருள். (கணம், நிறை) அப்படியெனில் பெரிய மகன் என்றாகும். அடுத்து நின் என்றால் பெண் என்பது பொருள். நின் + கள் என்கிறபோது பெரிய மகள் என்பதாகும். நன்னா, என்றால் நன்மை என்பதாகும். இப்போது இதன் பொருள் விளங்குகிறதா? அம்மா, அப்பா இல்லாத குடும்பத்தில் மூத்த அண்ணனோ, அக்காவோ அக்குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவாக இருந்து அவர்களை வழி நடத்துவது நமது கலாச்சாரத்தின் பண்பாடல்லவா?

இந்தத் தமிழ்ப் பண்பாட்டைதான் இந்த சுமேரிய சங்கீதம் இப்படி பாடியுள்ளது. இந்த சுமேரிய வரிகளுக்குத்தான் ஆங்கிலத்தில் இப்படி மொழி பெயர்ப்பும் செய்துள்ளார்கள். The elder brothers and sisters were almost father and mother to the younger ones. இப்போது நீங்களும் சிந்திப்பீர்கள் என்றே நம்புகிறேன். சான்றுக்கு ஒரு வரியை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளேன். இதை முழுமையாக படிக்க வேண்டுமா? இந்த மின் முகவரிக்குச் சென்று படித்துப் பாருங்கள். உண்மைகள் விளங்கும். அய்யா திரு. லோகநாதன் அவர்களுக்கும் நமது நன்றிகளையும் பாராட்டுகளையும் வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்வோம். இதோ இந்த முகவரி.
https://sites.google.com/site/sumerutamiltex/suruppak-s.neri.

லோகநாதன் என்கிற தனி மனிதரின் உழைப்பை போகிற போக்கில் ஒற்றை வரிகளிற் சொல்லிவிட்டுச் சென்றால் நாம் நன்றி மறந்தவராவோம். அவரின் உழைப்பை அவர் வார்த்தையிலேயே கேளுங்கள், நீங்களே புரிந்து கொள்வீர்கள். "சுமேருத் தமிழ் ஆய்வினை என்னால் விடமுடியவில்லை. என்றாவது ஒரு நாள் தமிழ் உலகம் தன் வேர்கள் அங்குதான் உண்டு என்று அரிய வரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றேன். அந்த மொழி தொல்தமிழ் முதற்சங்கத் தமிழ் என்பதோடு செங்கிருதமே அதன் திரிபு என்பதொடு ஆக வேத மொழியும் அதுவே என்பது.

ஆழமான பல தத்துவ சிந்தனைகளையும் கொண்டுள்ள நூற்கள் பல நிறைந்த ஓர் ஞான கருவூலமாக எனக்குப் படுகின்றது. "ஏண் உடு அன்னா'' எனும் அம்மையாரே முன் மூன்றாம் ஆயிரமாண்டின் மிக ஆழமான தத்துவஞானி என்று போற்றப்படுகின்றார். அவர் பாடிய "ஈனன்னை சீர்பியம' எனும் நூல் "நின் மெய் சர்வ உள் தெள்ளிய'' என்று பராசக்தியைப் போற்றுவதாகவே தொடங்குகின்றது என்று கூறியுள்ளதன் வழி என்றைக்காவது ஒரு நாள் தமிழர்களாகிய நாம் நமது அருமைகளையும், பெருமைகளையும் புரிந்து கொள்வோம். அந்நாளும் விரைவில் வரும் என்று நம்புவோம்.

சிந்துவெளி நாகரிகத்தை முறையாக ஆய்வு செய்த ஈராஸ் பாதிரியார், டாக்டர் அண்டர், வல்லி, எச். ஆர். ஆல்ஸ் போன்ற தொல்லியல் அறிஞர்கள் உலக நாகரிகங்களை ஆய்வு செய்த பேரறிஞர்கள். இந்நாகரிகங்கள் எல்லாம் பழந்தமிழர் நாகரிகங்களே என்று இவர்கள் சொல்லிச் சென்று ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்த பிறகும் நமது இந்த வரலாற்றை நாம் நம் தமிழர்களுக்கும் சொல்லித் தரவில்லை. உலக மக்களுக்கும் உணர்த்தவில்லை. சுமேரியர் தமிழரே, அவர்கள் பேசிய மொழி தமிழே. சுமேரிய, மெசொபெட்டோமியா. ஆப்கானிஸ்தானம், பலூசிஸ்தானம் ஆகிய நாடுகளில் தமிழ் மொழியுடன் சம்பந்தப்பட்ட பிராகி என்னும் மொழி தோன்றியது என்று இவர்கள் கூறியதை இனியாவது உலகிற்கு உணர்த்துவோமா?

சிந்து நதிக் கரையிலிருந்து சென்ற தமிழ் மக்கள் என்ற சுமேரியர் வாழ்ந்த நகரங்களில் ஒன்றான ஊர் என்ற நகரில் நிலா, சூரியன், வழிபாட்டுச் சின்னங்கள், புதைபொருள் ஆய்வுகளில் கிடைத்தன என்று எல். உல்லி, எச்.ஆர்.ஆல்ஸ் என்போரும் கூறியுள்ளனர்.

"சுமேரிய மொழியில் பல திராவிடச் சொற்கள் உள்ளன. ஆரிய மொழி பரவும் முன்னரே மத்திய ஈரோப்பாவின் இடப் பெயர்கள், ஆறுகளின் பெயர்கள், திராவிடப் பெயர்களாகவே இருந்தன'' என்பார் கிளிமண்ட் ஸ்கோனர் என்ற செர்மானியர். மேலும் யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆற்றோரங்களில் ஆதியில் குடியேறியவர்கள் என்று அறியப்பட்ட சுமேரியரை ஒத்த மக்கள் இந்தியாவில் அன்றி வேறெங்கும் இல்லை என்ற இவரது கூற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிற புறத்திணை ஒழுகலாறுகள் இச் சமூகத்திலும் காணப்படுகின்றன என்று ஆர்.எச்.ஹால் என்ற அறிஞர் குறிப் பிடுகிறார். ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல், போரில் இறந்தவர்களுக்கு நடுகல் எடுத்து வணங்குதல் போன்ற பண்பாடுகள் சுமேரியர்களிடமும் காணப்பட்டது என்கிறார் ஆர்.எச்.ஆல் இதோ அவர் கூறியது. "மட்கலன் என்னும் சுமேரிய மன்னன் கள்வர் ஓட்டிச் சென்ற பசுக்களை மீட்டுப், பகை வென்று அவன் வாழ்ந்து மடிந்தபோது, அவன் நினைவாக நடுகல் எழுப்பிய சித்திரம், முத்திரைச் சான்றுகளாக சுமேரியாவிலும், அதே முத்திரைகள் சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் செய்யப்பட்ட ஆய்வுகளிலும் கிடைத்துள்ளன'' என்கிறார்.

கி.மு. 5000 முதல் 3000 வரை நிலவிய சுமேரியாவின் கீஷ், சூசா ஆகிய நகரத் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ள பொருட்கள் தமிழகத்தில் கிடைத்துள்ள தொல்லியல் பொருட்களோடு மிக நெருக்கமாக இருக்கின்றன என்கிறார் இராமச்சந்திர தீட்சிதர்.

1. ஈமக்கலன்கள் மண்ணாலானவை. 2. நீள் சதுரப் பானை ஈமக் கலன்கள், 3. தமிழகத்தில் இன்றும் காணப்படும் பரிசல்கள். 4 கீஷ் நகரில் கிடைத்துள்ள சிந்துவெளி முத்திரை போன்ற அதே வகை எழுத்தும், காளை உருவமும் கொண்ட முத்திரை. 5. கார்னியன் மணிகள், 6 சங்கு வளையல்கள், 7. நிம்ராத் ஊர் நகர இடிபாடுகளில் கிடைத்துள்ள இந்திய தேக்கு தேவதாரு மரங்கள் போன்றவை தமிழகத்தோடு நெருக்கமானவை என்பதால் இவைகளை எல்லாம் நம்கருத்தில் கொண்டால் நிறைய உண்மைகளை உலகிற்கு உணர்த்த முடியும்.

சுமேரிய நாகரிகம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. உலக நாகரிகங்களுள் ஓரளவு வாசிக்கப்பட்டு வரலாறு அறியப்பட்ட நாகரிகம் இது. இந்நாகரிகத்தை ஆய்வு செய்தவர்கள் எல்லாம் ஐரோப்பியர்களாகவும், வேற்றுப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் முற்றிலுமாய் இந்த உண் மையை உலகத்திற்கு அறிவிக்க இயலாமல் கிடக்கிறது. இவ்வாய்வுகளை நாம் நமது மொழி, பண்பாடு, கலைகள், கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், எழுத்து கள் போன்றவைகளைக் கொண்டு முறையாக ஆய்வு செய்தோமானால் சுமேரி யர் தொல் தமிழர்கள்தான் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்த முடியும்.

நன்றி : இனிய நந்தவனம், மே. 2016

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.