தமிழர் உணர்வுகளை டில்லி மதிக்க வேண்டும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:14

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்.
"எமது நாட்டின் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகள் பற்றியும் வருங்காலம் பற்றியும் வெகுவாகச் சிந்தித்துச் செயலாற்றி வந்துள்ளீர்கள். தொடர்ச்சியாகச் சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளீர்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட எமது வடகிழக்கு மாகாண மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க எடுத்த நடவடிக்கைகள் எமது மக்களின் நன்றியறிதல்களையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் வாழ் எமது மக்களின் குறை தீர்க்க நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை நாம் மெச்சுகின்றோம். ஒரு இலட்சத்துககும் மேலான எமது மக்களின் நலன்களைப் பாதுகாக்க, தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் இதுவரையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் எமது மக்களால் வரவேற்கப்பட்டுள்ளன. வாழ்த்தப்பட்டுள்ளன.

எமது வடகிழக்கு மாகாண மக்களும், தமிழக மக்களும் சரித்திர ரீதியான சமூக, கலாச்சார, சமய அடிப்படையிலான நெருக்கமான உறவுகளைக் கொண்டவர்கள், அந்த நெருக்கத்தின் அடிப்படையில் எமது உறவுகள் மேலும் வலுவடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. உங்களைச் சந்தித்து எமது நாடுகளின் பரஸ்பர நன்மைகள், தேவைகள், உறவுகள் பற்றிய ஆராய ஆவலாய் உள்ளேன். போரினால் பாதிக்கப்பட்ட எமது பெண்கள் நலத்திட்டங்கள் பற்றி உங்களுடன் ஆராய விரும்புகின்றேன்.''

வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா எழுதியுள்ள பதில் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:

"அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நான் பெற்ற வெற்றி குறித்து உங்களது பாராட்டுக் கடிதத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் என்ற முறையில் நான் எடுத்துள்ளேன்.

இலங்கை வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் உரிய நீதியை பெறும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் மற்றும் இலங்கை வட-கிழக்கு மாகாண தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னைச் சந்திக்க நீங்கள் விழைவதுக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒரு நாளில் நாம் நிச்சயம் சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''

தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் தொப்புள்கொடி உறவு கொண்டவர்கள். மொழி, இலக்கியம், ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை பொது பழக்க வழக்கங்கள், சமூக மரபுகள் ஆகியவற்றால் மிக நெருக்கமான உறவு கொண்டவர்கள். எனவே, ஒருவருக்கேற்படும் பாதிப்பு மற்றவர்களுக்கும் ஏற்படும். இந்த நிலையில் முதன் முதலாக தமிழக முதலமைச்சரும், வடக்கு மாகாண தமிழ் முதலமைச்சரும் வாழ்த்துக் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டிருப்பதும், சந்தித்துப் பேச விழைவதும் பாராட்டத்தக்கவையாகும். இது மேலும் தொடர்ந்து நெருக்கமான உறவுக்கும், அதன் விளைவாக ஈழத் தமிழர் துயரம் துடைக்கப்படுவதற்கும் வழிவகுக்கவேண்டும்.

இந்திய நாட்டில் மூன்று மொழிகள் பேசும் மக்கள் அண்டைய நாடுகளில் வாழும் தமது தொப்புள் கொடி உறவு கொண்ட மக்களுடன் பிரிக்க முடியாத உறவு கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் வங்காள தேச மக்களுடனும், இந்தியாவில் உள்ள பஞ்சாபி வாழ் மக்கள் பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப் மக்களுடனும், தமிழ் நாட்டு மக்கள் இலங்கையில் உள்ள, ஈழத் தமிழருடனும் பிரிக்க முடியாத உறவு பூண்டுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதியன்று இந்திய பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், பாகிஸ்தான் பஞ்சாப் முதலமைச்சர் சபாஷ்செரீப் ஆகியோர் அமிர்தசரஸ் நகரில் சந்தித்துப் பேசி பின்வருமாறு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

"இரு மாநிலங்களுக்கிடையே உள்ள வணிகம், வேளாண்மை, மக்கள் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 12 முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றுபட்டு இயங்குவது என இரு மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்துள்ளனர். இரு மாநில மக்களுக்கிடையே நிலவும் பொதுவான கலாச்சாரம், சமூக சூழல், மொழி மற்றும் குடும்ப உறவுகள் போன்றவற்றைக் குறித்து ஒற்றுமையுடன் பேசி அணுகுவது'' என அக்கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

இதைப்போலவே மேற்கு வங்கத்திற்கும், வங்காள தேசத்திற்கும் இடையில் நீண்ட காலமாக கங்கை நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சினை நீடித்து வந்தது. அப்போது மேற்கு வங்க இடதுசாரிகளின் கூட்டணியின் முதலமைச்சரான ஜோதிபாசு அவர்கள் வங்கத் தேசத்திற்குச் சென்று அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு கண்டனர். ஆனாலும், வெளிநாடு ஒன்றுடனும் உடன்பாடு செய்துகொள்ளும் அதிகாரம் ஜோதிபாசுவுக்கு இல்லாத காரணத்தினால் அவர் டில்லிக்கு வந்து அப்போதையப் பிரதமர் தேவகவுடா அவர்களைச் சந்தித்து இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். அதன் விளைவாக இந்தியப் பிரதமரும் வங்க தேசப் பிரதமரும் இப்பிரச்சினைக் குறித்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்தியப் பிரதமரும் அண்டை நாடுகளின் பிரதமர்களும் சந்தித்துப் பேசி உடன்பாடுகள் செய்துகொள்வதை நமது அரசியல் சட்டமும், சர்வதேச சட்டங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், இருநாடுகளைச் சேர்ந்த மாநில முதல்வர்கள் அவ்வாறு செய்ய முடியாது. இந்திய அரசின் மூலமே அத்தகைய உடன்பாடுகளைச் செய்ய முடியும்.

ஆனால், பஞ்சாப், வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பாகிஸ் தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தங்கள் மொழி பேசும் முதல்வர் களுடன், பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டபோது, அதை இந்திய அரசு மதித்து ஏற்றுக்கொண்டது. அதைப் போல தமிழக முதல்வரும் இலங்கை வடக்கு மாகாண முதல்வரும் கூடிப் பேசி எடுக்கிற முடிவுகளை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில், இந்தியப் பிரதமர் இலங்கைப் பிரதமருடன் பேசி உடன்பாடு காண வேண்டும்.

இந்தியாவில் உள்ள பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகியவற்றின் அரசுகள் தங்களோடு குருதி உறவுகொண்ட பாகிஸ்தான் பஞ்சாப், வங்காளதேசம், இலங்கையின் வடகிழக்கு மாகாணம் ஆகியவற்றோடு நெருங்கிய உறவு கொள்வதையும், பிரச்சினைகளைப் பேசி தீர்ப்பதையும், இயற்கை வழிபட்ட உறவு என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். மேற்கண்ட மாநில அரசுகளைக் கலந்துகொண்டு அவர்களின் சம்மதத்தின் பேரிலேயே பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளின் அரசுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.

மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழக முதல்வரைக் கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதும் ஈழத் தமிழரின் நலன்களுக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளுக்குத் துணைபோவதும் ஏற்கத்தக்கதல்ல.

ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகிக் கிற அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய பல தீர்மானங்களை இந்திய அரசு கொஞ்சமும் மதிக்கவில்லை. இனியாவது இந்தப் பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வரவேண்டும்.

துயர இருளில் சிக்கித் தவிக்கிற ஈழத் தமிழ் மக்கள் வாழ்வில் விடிவைக் கொண்டுவர தமிழக முதல்வரும் வடக்கு மாகாண முதல்வரும் கூடிப்பேசி எடுக்கிற முடிவுகளை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பமும் எதிர்ப்பார்ப்பும் ஆகும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.