நூல் திறனாய்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:10

தகுதி மிகுதிகொள் தண்டமிழ்ப் பெரும்புலவர் நூற்கடல் திருமிகு. தி.வே. கோபாலையர் போன்றோரிடம் செந்தமிழ் பயின்ற புலவர் திரு. பெ. சயராமன் தன் நுண்மாண்நுழைபுலத் திறனால் ஆய்ந்த ஒப்பரிய ஓர் ஒப்பாய்வு நூலைத் தமிழர்கட்குத் தந்துள்ளார். அது, "தக்கயாகப் பரணி யுடன் இரணியவதைப் பரணி - ஓர் ஒப்பாய்வு'' என்பதாம். இந்நூலாசிரி யரின் ஆழ்ந்து அகன்ற பன்னூலறிவை நூலின் வழிப் படமாகப் பார்க்க முடிகிறது.

அல்கா விழுப்பஞ்சேர் ஓல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் முதலாக இனிய நண்பர் த. சரவணத் தமிழன் தன் யாப்புநூல் முடியப் பன்னிரு இலக்கண நூல்களை ஏற்றுப் பரணியின் இலக்கணத்தை உறுதி செய்கிறார்.

கலித்தாழிசைப் பாக்களால் பரணி நூல்கள் யாக்கப் பெற்றவை. சந்தக் குறள் தாழிசை என்று ஒன்று இன்று (பக்.48) என்கிறார்.

இருசீர், முச்சீர் அடிகள் பரணித் தாழிசையில் அமையக்கூடாதெனினும் தக்கயாகப் பரணியில் இருசீரடிகள் வந்த தாழிசைகளை எடுத்துக்காட்டியுள்ளார் (பக்.49).

கம்பரின் இரணியவதைப் படலம் இரணியவதைப் பரணி நூலுக்கு மூலம் என்கிறார்.

12ஆம் நூற்றாண்டு இரணியவதைப் பரணிக் காலம் எனவும்,
நளவெண்பா இயற்றிய ஆசிரியர் புகழேந்தியாரே இரணியவதைப் பரணி ஆசிரியர், எனவும் முடிவு கூறுகிறார்.
இரணியவதைப் பரணி வைதருப்ப நெறியில் யாக்கப்பெற்றது எனவும் தக்கயாகப் பரணி கெளடநெறியில் யாக்கப் பெற்றது எனவும் கூறுகிறார்.

(செறிவு, தெளிவு முதலாகச் சமாதி ஈறாகப் பத்துக்குணங்களும் வாய்ந்தது வைதருப்பம். இப்பத்துக்குணங்களுடன் கூடாது இயலும் கொள்கையுடையது கெளடம்.)

"முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும், பொன்னேபோல் போற்றுவம் என்பதற்குக்'' கம்பர் சொல்லையும் கருத்தையும் இரணியவதைப் படலத்திலிருந்து எடுத்தாண்டதைச் சுட்டியுள்ளார் (பக்.116).
நூலை ஐந்து இயல்களாகப் பிரித்து ஒவ்வொரு இயலிலும் பல உள் தலைப்புகளில் நுட்பமிகு செய்திகளைக் கூறுகிறார்.

தக்கயாகப் பரணி ஆசிரியர் ஒட்டக்கூத்தர் வடமொழி நூலான இசுகாந்தத்தை மூலமாகக் கொண்டார் எனினும் மாணிக்கவாசகர்தம் திருவாசகத்தில் "திருவுந்தியார்'' எனும் பகுதியில் தக்கனது வேள்வியை அழித்த சிவபெருமான் செயலைப் பற்றுக்கோடாக் கொண்டு நூல் செய்தார். தக்கன் வேள்வியை அழிப்பதற்கு யாக்கப்பெற்ற நூல்போல் தோன்றினும் இரண்டாம் இராசராசசோழனையும் தாராசுரத்தில் உள்ள இராசராசேச்சுரமுடையாரையும் போற்றிய நூலாக உள்ளது என்கிறார்.

இரணியவதைப் பரணிக்கு உரையெழுதத் தக்கார் புலவர் திரு.பெ. சயராமனே ஆவார். அவரே உரை எழுதிச் செந்தமிழுக்குச் செப்பரிய சிறந்த தொண்டாற்ற வேண்டும்.

ஆசிரியர் சயராமனின் ஒப்பாய்வு நூலைப் படித்து முடித்ததும் உளநிறைவு ஏற்படுகிறது. அவர் மேற்கொண்ட உழைப்புப் போற்றத் தக்கது. முனைவர் பட்டத்துக்குப் பதிந்துகொண்டு ஒரு சில மாற்றத்துடனே ஒப்படைக்கலாம்.

சில ஒற்றுப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் அடுத்த பதிப்பில் தவிர்த்தல் வேண்டும்.
தமிழ் படிக்கும் மாணாக்கரும், தமிழ் ஆர்வலரும் வாங்கிப் படித்துப் பிறர்க்கும் பரிந்துரைக்க வேண்டும்.
இன்னும் பல நூல்கள் இயற்ற வேண்டும் எனச் சயராமனை வாழ்த்துகிறோம்.

- புலவர் கி.த. பச்சையப்பன்

நூல் கிடைக்குமிடம்

தமிழச்செல்வி பதிப்பகம்
பாவாணர் பாசறை, திரு.வி.க. நகர்,
158, கச்சிராயப்பாளையச் சாலை, கள்ளக்குறிச்சி-606202.
செல்லிடப்பேசி : 9543630756
நூல் விலை : 1-0-0 உருபாய் - பக்கங்கள் : 210

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.