ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாம் மற்றும் ஆசியாவின் சிங்கப்பூர் ஆகிய இரண்டு துறைமுகங்களுக்கு இணையாகத் தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மிகப் பெரிய சர்வதேச சரக்குப் பெட்டகத் துறைமுகமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 60 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களின் கனவுத் திட்டமாக குளச்சல் வணிகத் துறைமுகத் திட்டம் இருந்து வருகிறது. இந்த கனவு எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கிழக்குக் கடற்கரையில் விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி முதலிய பெரிய துறைமுகங்கள் இருந்தாலும் சர்வதேச வணிகப் பெட்டகக் கப்பல்கள் செல்லும் வழியிலிருந்து விலகியும் தொலைவிலும் அமைந்திருக்கின்றன. எனவே, அராபிய, ஆப்பிரிக்க மற்றும் மேற்கு நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குப் பெட்டகங்களையும் கிழக்கே ஜப்பான், சீனா வரை உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குப் பெட்டகங்களையும் கொழும்பு அல்லது சிங்கப்பூருக்கு அனுப்பி அங்கிருந்து பெரிய கப்பல்களில் ஏற்றி அனுப்ப வேண்டியிருக்கிறது. அதாவது இந்தியாவிலிருந்து கிழக்கு அல்லது மேற்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குப் பெட்டகங்களில் 48% கொழும்பு வழியாகவும், 22% சிங்கப்பூர் வழியாகவும், 10% கிளாங் வழியாகவும் அனுப்பப்படுகின்றன. ஆக இந்திய ஏற்றுமதியில் 80% சரக்குப் பெட்டகங்கள் வெளிநாட்டுத் துறைமுகங்களின் வழியாகவே அனுப்பப்படுகின்றன. அவ்வாறே இறக்குமதியும் நடைபெறுகிறது.
இதற்குக் காரணம் சர்வதேச கப்பல்கள் செல்லும் முக்கியக் கடல் வழிப் பாதையான இந்து மாக்கடல் பாதையிலிருந்து இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் மிக விலகி உள்ளன. எனவே இலங்கையில் உள்ள கொழும்புத் துறைமுகம் இந்தக் கடல் வழிப் பாதையில் அமைந்திருப்பதால் சர்வதேசக் கப்பல்கள் கொழும்பைத் தொட்டுச் செல்கின்றன. போதாக் குறைக்கு இலங்கை தென்கோடியில் உள்ள ஹம்பந்தோட்டாவில் சீனா புதியதொரு பெரும் துறைமுகத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதன் விளைவாக இந்தியத் துறைமுகங்கள் தங்களது முக்கியத்துவத்தையும் வருமானத்தையும் முற்றிலுமாக இழக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் குளச்சல் இயற்கையான துறைமுகமாகும். சென்னை, தூத்துக்குடி போன்றவை செயற்கையாக அமைக்கப்பட்ட துறைமுகங்களாகும். இத்துறைமுகங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் கடலுக்கடியில் சேரும் மண்ணை அகழ்ந்து அப்புறப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், குளச்சல் துறைமுகம் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் உள்ளது. மிகப் பெரிய தாய்க் கப்பல்கள் கூட இத்துறைமுகத்திற்கு வந்து செல்ல முடியும். இங்கு சர்வதேச சரக்குத் துறைமுகம் அமைக்கப்பட்டால் 2020ஆண்டு வரை ஆண்டு தோறும் 7 இலட்சம் சரக்குப் பெட்டகங்களையும், 2025ஆம் ஆண்டில் 28 இலட்சம் சரக்குப் பெட்டகங்களையும், 2030ஆம் ஆண்டில் 39 இலட்சம் சரக்குப் பெட்டகங்களையும் ஏற்றி இறக்க முடியும்.
சர்வதேச கடல் வழிப்பாதையான இந்துமாக்கடல் வழிப்பாதையிலிருந்து 4 கடல் மைல்களுக்கு அருகே குளச்சல் துறைமுகம் அமையவிருக்கிறது. எனவே சர்வதேசக் கப்பல்கள் தாராளமாக இங்கு வந்து செல்ல முடியும்.
தூத்துக்குடி துறைமுகக் கழகத்தினால், அமைக்கப்பட்ட பன்னாட்டு குழுமம் ஒன்று இத்திட்டம் குறித்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டு அதனுடைய அறிக்கையும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுவிட்டது. மூன்று கட்டங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. முதற் கட்டத்தில் 6,628 கோடி ரூபாய்களும், இரண்டாம் கட்டத்தில் 6 ஆயிரம் கோடி ரூபாய்களும், மூன்றாம் கட்டத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்களும் ஆக மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாய்களும் ஒதுக்கப்படும். 3 ஆண்டுகளுக்குள் இப்பணி நிறைவேற்றப்படும்.
சரக்குப் பெட்டகங்களை எளிதாக கையாளும் வகையில் நவீன தொழில் நுட்பங்களுடன் இத்துறைமுகம் அமைக்கப்படும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளச்சல் துறைமுகத்திலிருந்து கன்னியாகுமரி- திருவனந்தபுரம் வரை அகல இரயில்பாதை 8 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. அதற்கருகே இரணியல் இரயில் நிலையம் அமைந்துள்ளது. 65 கிலோ மீட்டர் தூரத்தில் திருவனந்தபுரத்தில் விமான நிலையம் உள்ளது. மேற்குக் கடற்கரைச் சாலை குளச்சல் வழியாக செல்லுகிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை குமரிமுனைவரையிலும், காஷ்மீர்-குமரி தேசிய நெடுஞ்சாலையும் அமைந்துள்ளன. இச்சாலைகளிலிருந்து குளச்சல் வரை இணைப்புச் சாலையும் உள்ளது.
இத்திட்டத்தால் தென் தமிழகத்தில் மதுரை வரை உள்ள அனைத்து மாவட்டங்களும் பயன்பெறும். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். உள்நாட்டு சரக்குகள் கையாள்வதற்கு ஏற்றுமதி யாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் பயனளிப்பதில் இத்துறைமுகம் பெரும் பங்கு வகிக்கும். இங்கிருந்து கொழும்பிற்கு சரக்குகளை அனுப்பவும் கொழும்பில் இறக்கப்படும் சரக்குகளை இங்கு சிறிய கப்பல்கள் மூலம் கொண்டுவருவதற்கும் ஆண்டிற்கு செலவாகும் ரூ.6,000/- கோடி மிச்சமாகும்.
பெரும் தொழிற்சாலைகளோ அவற்றின் துணைத் தொழிற்சாலைகளோ இல்லாத தென்மாவட்டங்களில் குறிப்பாக குமரி மாவட்டத்தில் தொழில் வளம் பெருக இத்திட்டம் பெரிதும் உதவும். தென்மாவட்டங்கள் தொழில் மயமாகும். படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி பிற மாவட்டங்களுக்குச் செல்லும் நிலைமை தலைகீழாக மாறிவிடும். பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு பெருமளவில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் தென் மாவட்ட மக்களுக்குக் கிடைக்கும்.
ஏற்கனவே குளச்சல் துறைமுகத் திட்டத்தை ஏற்று மேம்படுத்த ஒப்புதல் தெரிவித்து தமிழக அரசு மத்திய அரசிற்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளது. மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் இதன் அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதற்கு பிரதமர் மோடி இசைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் இத்திட்டத்தின் பல்நோக்கு குறிக்கோள்களையும் விளையும் பயன்களையும் புரிந்துகொள்ளாத சிலர் எதிர்ப்புக் காட்டிவருவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் இத்திட்டத்தை நிறைவேற்ற இயலாவிட்டால் தனது பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியாகவேண்டும் என்பதில் அவருக்குள்ள உறுதி பாராட்டத்தக்கதாகும்.
அதே வேளையில் அண்டை மாநிலமான கேரளம் நம்மை முந்திக் கொண்டு செயல்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குளச்சலிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கேரள எல்லைக்குள் அமைந்திருக்கும் விளிஞ்ஞம் என்னும் இடத்தில் சர்வதேசப் பெட்டக முனையத் துறைமுகத்தை அமைப்பதற்கு கேரளம் வேகமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக இருந்த போதுதான் விளிஞ்ஞம் திட்டத்திற்கு அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தின் குளச்சல் துறைமுகத் திட்டத்திற்குப் போட்டியாக விளிஞ்ஞம் திட்டத்தை கேரளம் நிறைவேற்ற முயல்கிறது என்பதை எண்ணிப் பார்க்காமல் செயல்பட்டதின் விளைவே இது ஆகும்.
விளிஞ்ஞத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பெரு முதலாளி அதானி நிறுவனத்திடம் இத்திட்டப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதை அது கண்டித்தது. ஆனால், மத்திய துறைமுகத் துறை அமைச்சரான நிதின் கட்கரி கேரளம் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முன்வராவிட்டால் தமிழகத்தில் உள்ள குளச்சல் துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். உடனடியாக கேரள காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த உம்மன்சாண்டி உடனடியாக செயலில் இறங்கி எதிர்க்கட்சிகளிடம் பேசி சரி செய்து அவசரம் அவசரமாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் விரைவுகாட்டினார். இதன் விளைவாக அதானி நிறுவனம் இத்துறைமுக திட்டப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியை எதிர்ப்பார்க்காமல் தனியார் உதவியுடன் இத்துறைமுகத்தை அமைக்கும் பணியில் கேரளம் விரைவு காட்டுகிறது.
1998, 2000, 2010ஆம் பத்தாம் ஆண்டுகளில் குளச்சல் துறைமுகத் திட்டத்தை அமைப்பதற்காக இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட குழுக்கள் அளித்த ஆய்வறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது ஏன்? குளச்சல் துறைமுகம் அமைந்தால் கொழும்புத் துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழக்கும். வருமானத்தில் பெரும் சரிவு ஏற்படும். எனவே இலங்கை அரசு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகத்தான் குளச்சல் துறைமுகத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஏற்கெனவே குளச்சலில் திட்டமிடப்பட்டிருந்த இடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் தள்ளி துறைமுகத்தை அமைக்க முயற்சி நடப்பதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்களில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தாங்கள் இடம் பெயரவேண்டிய நிலை உருவாகும். மீனவர்களின் தொழில் பாதிக்கப்படும் எனக் கருதும் அம்மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும். ஏற்கனவே 100 ஏக்கர் அரசு நிலம் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 500 ஏக்கர் வரை கடலுக்குள்ளேயே நிலத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது எனவே மக்கள் இடம்பெயரவேண்டிய அவசியம் இருக்காது. மீனவர்களுக்கு தனியாக மீன்பிடித் துறைமுகம் ஒன்றும் அருகிலேயே அமைக்கப்பட இருக்கிறது. எனவே மக்கள் அச்சப்படவேண்டியதில்லை என்பதை மத்திய அரசு மக்களுக்கு விளக்கி உறுதி அளிக்க வேண்டும்.
விளிஞ்ஞம் துறைமுகத்தை நிறைவேற்றுவதில் கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுவதைப்போல, குளச்சல் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்ற தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். குளச்சல் துறைமுகத் திட்டத்திற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்து மத்திய அரசிற்கு அதை தெரிவித்துவிட்ட நிலையில் தமிழக அரசோடு அனைத்துக் கட்சிகளும் இணைந்து நின்று இத்திட்டப் பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 60 ஆண்டு கால தமிழர் கனவை நிறைவேற்ற தமிழர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். "தினமணி' - 25-06-2016 |