"உன்னுடைய கருத்தை வரிக்கு வரி நான் மறுக்கின்றேன். ஆனல், அந்தக் கருத்தை நீங்கள் வெளியிடுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக எனது உயிரையும் தர ஆயத்தமாக இருக்கிறேன்'' என்றார் வால்டேர். ஓர் உண்மையான சனநாயகத்தில் இத்தகைய ஆரோக்கியமான அணுகுமுறைதான் இருக்க வேண்டும்.ஆனால் நிலவும் சமூக வெளியில் தனக்கு உவப்பாக இல்லாத கருத்தை ஒருவர் வெளியிடுவதை ஒரு சிறிதும் சகித்துக்கொள்ள முடியாத அவல நிலைதான் தமிழகத்தில் நடைமுறையாக உள்ளது. இதன் வெளிப்பாடுதான் 2016 சூன் 4ஆம் நாள் சென்னையில் "இடது' காலண்டிதழ் சார்பாக வெளியிடப்படுவதாக இருந்த மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். என்னும் ஆவணப்படத்திற்குக் காவல்துறையினரால் மிக அவசரமாக விதிக்கப்பட்ட தடையாகும்.
எஸ்.வி. ராஜதுரை எனும் மாமனிதர் தமிழ்ச் சமூகத்திற்கு அளப்பரிய அறிவுக்கொடையை நல்கியவர். ஏறக்குறைய 80க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுநூல்களை வழங்கியவர். அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் அகில உலகும் பெரியாரை அறியும் வண்ணம், அவரைப் பற்றி மிக செறிவான அறிமுகத்தை ஆங்கிலத்தில் அளித்தவர். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராக இருந்து பல்வேறு ஆய்வு தொடர்பான அரும்பணிகளைத் தொய்வின்றி ஆற்றியவர்.
"சென்றிடுவீா எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'' என்னும் தமிழ்க் கவிஞனின் ஆணைக்கு ஏற்ப மார்க்சியம் குறித்து உலகெங்கும் நிலவக்கூடிய பல்வேறு போக்குகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் தனது எழுத்துகளில் பதிவு செய்தவர். பல்வேறு நாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கவிஞர்களின் அழகான கவிதைகளைச் சிறப்பான முறையில் தமிழில் அறிமுகம் செய்தவர்.
காவல்துறை அத்துமீறலை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போரிட்டவர். தூக்குத்தண்டனை பெற்ற பலரையும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அவர்களது உயிரைக் காத்தவர். எங்கெல்லாம் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் இன்றுவரை அவரது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசு அடக்குமுறைக்கு அஞ்சாமல் அவர் எடுத்த முன்னெடுப்புக்கள் சமூக நலனுக்காகப் போராடுபவர்களுக்கு ஆதர்சத்தையும் உத்வேகத்தையும் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
இலக்கிய விமர்சனம், இசை, நவீன ஓவியம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஞானம் மிக்கவர் எஸ்.வி.ஆர். இப்படிப்பட்ட பன்முக ஆளுமை கொண்ட அறிவுஜீவிகள் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளனர்.
எஸ்.வி.ஆர். போன்றவர்களது வாழ்வும் பணியும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் அவர்களது செல்நெறியைத் தீர்மானிக்கப் பெரிதும் வழிகாட்டியாக உள்ளன. தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டிய ஓர் அறிவுஜீவி குறித்த ஆவணப்படத்தை வெளியிடக்கூடாது என்று தடை செய்வது சனநாயக மரபுகளுக்கு எதிரானது மட்டுமல்ல அடிப்படை மனித உரிமைக்கே முரணானதாகும்.
கருத்துக்களைத் தடை செய்வது அந்தக் கருத்துக்களைக் கூறுபவர்களுக்குக் கடும் தண்டனை வழங்குவது போன்றதுதான். வரலாற்றில் இதைப்போன்ற தடைகள் சனநாயக சக்திகளால் தூக்கியெறிப்பட்டுள்ளன. தமிழகத்தில் கருத்துரிமைக்கான வெளி சுருங்கி வருவது ஏற்கத்தக்கதல்ல. அதுமட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்கும் உரியதாகும். எஸ்.வி.ஆர். ஆவணப்படத்திற்கான தடை என்பது ஒரு தொடக்கம் தான். இதை தமிழ்ச் சமூகம் அனுமதித்தால் கருத்துரிமையின் குரல்வளை எதிர்காலத்தில் முழுமையாக நசுக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. - கண. குறிஞ்சி |