ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் மொழியையும், பண்பாட்டையும் அழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த இனம் சிறிது சிறிதாக மறைந்தே போகும்.
தொல்காப்பியர் காலத்தில் தொடங்கி நமது தமிழை அழிக்க வடமொழி இடைவிடாமல் முயன்று வந்திருக்கிறது. சங்க நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகக்குறைவு. சங்க காலத்தையொட்டி தொடர்ந்த காலக் கட்டத்தில் தமிழில் கலக்கப்பட்ட வடமொழி சொற்களின் தொகை நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே வந்து மணிப்பிரவாள நடையாக மாறி 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழில் நூற்றுக்கு 70 சதவிகிதத்திற்கு மேல் வடசொற்கள் கலந்து செந்தமிழின் சிறப்பைச் சிதைத்துவிட்டன.
தமிழோடு வடமொழி கலப்பு ஏற்பட்டதின் விளைவாகத்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் திரிந்து போயின. தமிழும் அவ்வாறே உருமாற்றப்பட்டிருக்கும்.
இந்த சீர்கேட்டிலிருந்து தமிழைக் காப்பாற்ற மறைமலையடிகள் முனைந்தார். வடமொழி கலப்பற்ற தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார். பிறமொழிகளின் சொற்களைக் கலந்து தமிழில் எழுதுவதும் பேசுவதும் தமிழரின் தன்மானத்திற்கே இழுக்கு. என்பதைச் சுட்டிக்காட்டினார். அவருடைய இடைவிடாத முயற்சியின் விளைவாக தனித்தமிழ் இயக்கம் அருகுபோல் வேரூன்றி ஆலமரம் போல் தழைத்தது.
தமிழ், தமிழினம், தமிழ்நாடு குறித்த அவரது சொற்பொழிவுகளும், நூல்களும் நாடெங்கும் தமிழ் உணர்வு பெருக வழிவகுத்தன. 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழுக்கும் தமிழருக்கும் சிறந்ததொரு வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார்.
தமிழ் நூல் ஆய்வு முறைக்கும் செந்தமிழ் உரைநடைக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நெறியின் தந்தையாக அவர் திகழ்ந்தார்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
1918ஆம் ஆண்டு குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி ஆகும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட அவர் காரணமாக இருந்தார்.
1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழறிஞர்களின் கூட்டத்திற்கு தலைமையேற்று திருவள்ளுவர் ஆண்டு குறித்து திட்டவட்டமாக அறிவித்தார். கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் திருவள்ளுவர் என அவர் கூறியதை தமிழ் உலகம் தடையின்றி ஏற்றுக்கொண்டது.
1937ஆம் ஆண்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் தலைமையில் தமிழறிஞர்களும், தலைவர்களும் ஒன்றுபட்டு நின்று போராடி இந்தி ஆதிக்கத்தை விரட்டியடித்தனர்.
20ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடுகள், விழாக்கள் முதலியன யாவும் மறைமலையடிகளை தலைமையாகக் கொண்டே நடத்தப்பட்டன.
வடமொழியின் மரணப்பிடியிலிருந்து தமிழை மீட்டு நம்மிடம் ஒப்படைத்துவிட்டு அவர் மறைந்தார். ஆனால், இன்று ஆங்கில மயக்கத்தில் நாம் ஆழ்ந்து தாய்மொழியாம் தமிழைப் புறக்கணித்து நிற்கிறோம். ஆங்கில வல்லாண்மையின் விளைவாக நமது குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக பாரதி கூறியதைப் போல தமிழ் இனி மெல்லச் சாகும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழ் பயிற்சிமொழியாக இல்லை. ஆட்சிமொழியாக இல்லை. நீதிமன்ற மொழியாக இல்லை. வழிபாட்டு மொழியாக இல்லை. ஆங்கிலேயர் வெளியேறினாலும் ஆங்கிலம் அரசோச்சுகிறது. கோயில்களில் வடமொழி ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலை தொடருமானால் அடுத்த நூற்றாண்டுக்குள் தமிழ் அழிந்து போகும். சீரிளமைத் திறன் குன்றாத தமிழைக் காக்க வேண்டு மானால் இன்னுமொரு ஆயிரம் மறைமலையடிகள் நமக்குத் தேவை.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இந்த உண்மையை தெரிவித்து ஆங்கில வல்லாண்மைக்கு எதிராகவும் வடமொழித் திணிப்புக்கு எதிராகவும். அனைவரையும் திரட்ட மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா மாநாடு தஞ்சையில் சூலை 15, 16, 17 நாட்களில் கூடுகிறது.
வெள்ளம் போல் தமிழர்களே திரளுவீர்! காவிரிக் கரையில் கூடுவோம்! புலிக்கொடி பறந்த மண்ணில் வீரவேங்கைகளாக அணிவகுப்போம்! தமிழைக் காப்போம்! |