தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை! - பாவேந்தர் பாரதிதாசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 15:51

வாணிகம் தம் முகவரியை
வரைகின்ற பலகையில்
ஆங்கிலமா வேண்டும்?
வானுயர்ந்த செந்தமிழால்
வரைக என அன்னவர்க்குச்
சொல்ல வேண்டும்!

ஆணி விற்போன் முதலாக
அணிவிற்போன் ஈறாக
அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல்
நந்தமிழின் நலங்காக்கும்
செய்கை யாமோ?
உணவுதரு விடுதிதனைக்
"கிளப்'என வேண்டும் போலும்
உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு "சில்குஷாப்'
எனும் பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும்
மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை!
தணிப்பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை
தமிழ்நாட்டின் உப்பைத் தின்
றீரன்றோ கணக்காயத்
தந்தை மாரே!
தமிழ்நாட்டின் தமிழர்களின்
தன்னுணர்வு நாட்டுவதைத்
தவிர்ப்பீ ராயின்
உமிழாதோ, வருத்தாதோ
உம்மையே உம் மருமை
உள்ளச் சான்றே?
அமுதூட்ட நஞ்சூட்டி
அகமகிழும் தாயுண்டோ
அருமைச் சேய்க்கே?
கல்லூரித் தலைவரை நான்
கேட்கிறேன் கனிதமிழின்
பேரைச் சொன்னால்
சொல்லூறிப் போகாதோ
வாயூறிப் போகாதோ
தாய் தமிழ்க்கு

வல்லூறாய் வாய்த்தீரோ
வளம் செய்யும் எண்ணமினி
நீர் பிறந்த
நல்லூரின் நன் மணியாய்
அல்லாது நடந்திடுமோ?
நவில்வீ ரின்றே!

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.