தஞ்சை மாவட்டத் திருக்கண்ணபுரத்தில் 28.04.1923 அன்று இராசகோபால் - மீனாட்சிசுந்தரம் இணையர்க்குப் பிறந்தவர் இரா. செழியன் அவர்கள்.
1939ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பில் தங்கப் பதக்கம் வென்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கணிதத் துறையில் 1944ஆம் ஆண்டு பி.எஸ்சி., ஆனர்சு படிப்பில் முதல் மாணவராகத் தேறினார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு இரா. செழியன் அவர்களும், அவரது அண்ணன் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் அறிஞர் அண்ணா மீது ஈடுபாடு கொண்டு, 1949ஆம் ஆண்டு அவர் தொடங்கிய தி.மு.க.வில் இணைந்தார்கள். அண்ணாவின் நம்பிக்கைக்குரியவராகவும், நெருக்கமானவராகவும் அவர் திகழ்ந்தார். அண்ணா நடத்திய திராவிட நாடு இதழிலும், இரா. நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழிலும் தமிழைப் பற்றியும், பண்டைத் தமிழர் பண்பாடு குறித்தும் செழியன் தொடர்ந்து எழுதினார்.
1962 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திருச்சி பெரம்பலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். பாராளுமன்ற நெறிமுறைகளையும், அரசியலமைப்பின் விதிமுறைகளையும் மதித்துப் போற்றிய செழியன் அவர்கள் அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப் பெற்றார். நடுவண் அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் பல சீரிய மாற்றங்கள் வர இவரது மென்மையான அணுகுமுறை துணை புரிந்தது. பொதுக் கணக்குக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த போது 1973 வரை பாராளுமன்றத்தில் 96 அறிக்கைகளைத் தாக்கல் செய்தார்.
செயப்பிரகாசு நாராயணன் அவர்கள் செழியன் அவர்களை மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாகக் கருதினார். இதனால் 1975--77ஆம் ஆண்டு இந்திய நெருக்கடி நிலையை எதிர்க்க மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களோடு இவரையும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவில் சேர்த்துக்கொண்டார். தில்லிக் காவல்துறை அவரைச் சிறை செய்யப் பிடியாணை பிறப்பித்தபோது செயப்பிரகாசு நாராயணன் அவரைத் தேசியக் குழுவின் தலைவராக்கினார். அந்தக் குழு அரசியலமைப்புச் சட்டத்தையும் மக்கள் குடியுரிமைக் கழகத்தையும் மதிப்பிட அமைக்கப்பட்டதாகும்.
நெருக்கடி நிலை பிறப்பித்தபோது, இவரைக் கைது செய்யக் காவல்துறை விரித்த வலையில் சிக்காமல் நாடாளுமன்றத்திற்குள் சென்று இவர் ஆற்றிய உரை நாடாளுமன்ற வரலாற்றில் மிகச்சிறந்த உரைகளில் ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகிறது.
மேனாள் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் அவர்கள் விருப்பத்தின்பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தில்லி மேலவைக்கு இரா. செழியன் அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்.
2001ஆம் ஆண்டு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிய பிறகு ஆங்கில-தமிழ்ச் செய்தித் தாள்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.
அண்மையில் வெளிவந்த இரா. செழியன் அவர்களின் “Shah Commission Report, Lost and regained” என்ற நூலும், “Parliament for the People”என்ற நூலும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இத்தகைய சிறப்புடைய உலகம் போற்றும் தமிழரான இரா. செழியன் அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டில் "உலகப் பெருந்தமிழர்' விருது வழங்குவதாக இருந்தது. ஆனால், அவர் அப்போது உடல் நலம் குன்றியிருந்ததின் காரணமாக நேரில் வந்து பெறமுடியவில்லை.
அவருடைய 95ஆவது பிறந்த நாள் விழா 28-4-2017 அன்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் திரு. விசுவநாதன் அவர்கள் இவ்விழாவை முன்னின்று நடத்தினார். இவ்விழாவில் கட்சி வேறுபாடில்லாமல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் இரா. செழியன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி உலகப் பெருந்தமிழர் விருதினை அளித்து வாழ்த்தினார். |