இலங்கையில் நடைபெற்ற போருக்கு முன்பும் பின்புமாக காணாமல் போனவர்கள் குறித்த சட்டத்தில் குடியரசுத் தலைவர் சிறீசேனா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இலங்கையில் நிலையான அமைதி நிலவுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் 21-7-17 அன்று தெரிவித்துள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்ட பிறகே அதற்கு சிறீசேனா ஒப்புதல் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை 1980ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டு காலத்தில் இலங்கையில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காணாமல் போயிருக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளது. இதில் பெரும்பாலோனோர் தமிழர்கள் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
இதுவரை காணாமல் போனவர்கள் குறித்து 1994ஆம் ஆண்டிலிருந்து 4 விசாரணை ஆணையங்களை சிங்கள அரசு அமைத்தது. ஆனால் அத்தனையும் கண் துடைப்பு ஆணையங்களாக மாறிப்போயின. கடந்த சூன் மாதத்தில் யாழ்ப்பாணத்திற்கு சிறீசேனா வருகை தந்தபோது, இராணுவம் கைது செய்து பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரிடம் முறையிட்டனர். அவர்களுக்கு சரியான பதில் கூறாமல் அவர் நழுவினார்.
22-7-17 அன்று நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரதமர் இரணில் விக்கிரமசிங்கா 2018ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் தயாராகிவிடும் என அறிவித்தார். இச்சட்டத்தின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் கூறினார். 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் குடியரசுத் தலைவர் பொறுப்பேற்ற சிறீசேனா அவர்கள் கடந்த இரண்டரை ஆண்டு காலமாகக் காணாமல் போனவர்கள் பிரச்சினை குறித்தோ புதிய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தோ வாய்திறக்காமல் அமைதி காத்தவர் இப்போது திடீரென்று மேற்கண்டவாறு பேசுவதற்கு மனமாற்றம் காரணமென்று யாராவது கருதினால் அவர்கள் ஏமாந்து போவார்கள். ஐ.நா. மனித உரிமை மற்றும் சனநாயக உரிமைப் பாதுகாப்புச் சிறப்புத் தூதுவர் பென் எமர்சன், அமெரிக்காவின் அரசியல் துறைத் துணைச் செயலாளர் - நாயகமான ஜெப்ரி பெல்ட்மேன் ஆகியோரின் இலங்கை வருகையே இதற்குக் காரணமாகும்.
சூலை 15ஆம் தேதி அன்று பென் எமர்சன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத் திட்டத்துடனும், சூலை 19ஆம் தேதி ஜெப்ரி பெல்ட்மேன் 3 நாட்கள்சு ற்றுப்பயணத்திட்டத்துடனும் இலங்கை வந்தனர். ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் எந்த அளவிற்கு இலங்கை அரசு செயற்பட்டுள்ளது என்பதை ஆராய்வதற்காக பென் எமர்சனும், புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கும் பணி எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கிறது என்பதை நேரிடையாக அறிந்துகொள்வதற்கு ஜெப்ரி பெல்ட்மேனும் இலங்கை வந்தடைந்தனர். இவர்களின் வருகையின் விளைவாகத்தான் குடியரசுத் தலைவர் சிறீசேனாவும் பிரதமர் இரணில் விக்ரமசிங்காவும் மேலே கண்ட அவசர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இந்த அறிவிப்புகளைக் கண்டு பென் எமர்சன், ஜெப்ரி பெல்ட்மேன் ஆகியோர் ஏமாறவில்லை. ஐந்து நாள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு "ஜெனீவா தீர்மானத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வேலை அடியோடு தடைப்பட்டுக்கிடக்கிறது'' என பென் எமர்சன் பகிரங்கமாகக் கண்டித்ததோடு பின்வருமாறும் தெரிவித்தார்.
"கொடிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றுச் சட்டம் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்த இலங்கை அரசு அதன்படி நடந்துகொள்ளவில்லை. 1979ஆம் ஆண்டு அவசரகால நடவடிக்கையாக பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதிலும் தமிழர்களுக்கு எதிராக மட்டுமே இச்சட்டத்தை சிங்கள அரசு பயன்படுத்தியுள்ளது. சிங்கள அதிகார வர்க்கத்தின் சித்திரவதைக் கொடுமைகளை இச்சட்டத்தின்கீழ் தமிழர்கள் அனுபவிக்க நேர்ந்தது. காவல் துறையிலும், இராணுவத்திலும் சிங்களரே இருந்த காரணத்தினால் இன வெறியுடன் தமிழர்களை பல்வேறு மிருகத்தனமான கொடுமைகளுக்கு ஆளாக்கினார்கள்.'' இவ்வாறு பலவேறு கொடுமைகளுக்கு ஆளானவர்களைச் சந்தித்து அவர்களிடம் நேரடியாகக் கண்டறிந்த உண்மைகளை எமர்சன் பகிரங்கப்படுத்தினார். மேலும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மருத்துவ ஆதாரங்களும் உண்டு என்று கூறினார்.
"இலங்கையில் சித்திரவதை என்பது நடைமுறை என்றாகிவிட்டது. சிங்கள அரசோ, அதிகாரிகளோ இதை ஒருபோதும் மறுக்கவில்லை. அந்நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பின் ஒரு அங்கமாக சித்திரவதைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகத்திலேயே மிகமோசமான அளவில் சித்திரவதைகள் நடைபெறும் நாடாக இலங்கை விளங்குகிறது. புதிய ஆட்சியிலும் இது தொடர்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது'' என அவர் கூறிய உண்மைகள் அதிர்ச்சிகரமானவையாகும்.
"ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானங்களை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு அதை மதியாமல் நடக்குமானால் அதன் விளைவாக மனித உரிமை ஆணையம் மற்றும் ஐ.நா. பாதுகாப்புக் குழு ஆகியவற்றால் கண்டனம் செய்யப்படும் நிலை உருவாகும்'' என்றும் எமர்சன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணைச் செயலாளரான பெல்ட்மேன், பிரதமர் இரணில், வளர்ச்சித் துறை அமைச்சர் இரத்தினவிநாயகா, வெளியுறவுத் துறை அமைச்சர் இரவி கருணாநாயகே, கிழக்கு மாநில ஆளுநர் ரோகித, கிழக்கு மாநில முதல்வர் நசீர் அகமது ஆகியோரைச் சந்தித்து புதிய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து உரையாடினார். மேலும் மாகாண சபைக்கான தேர்தல்கள் குறித்தும், புதிய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு இவ்வளவு தாமதம் ஏற்பட்டதற்குரிய காரணங்களையும் அவர் கேட்டறிந்தார். சிங்கள அரசு தரப்பில் கூறிய சமாதானங்கள் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. சர்வதேச சட்டங்கள், நடைமுறைகள், மரபுகள் ஆகிய எதனையும் மதியாத போக்கில் இலங்கை நடந்துகொள்வது புதிதல்ல. வழக்கமாக அது தொடரும் பாதையாகும்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் போர் முடிந்தவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியது. அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் நியமித்த சட்ட வல்லுநர் குழுவும் இதே கோரிக்கையை பரிந்துரைத்தது. 2010ஆம் ஆண்டில் சனவரியில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறியது. ஜெர்மன் மக்கள் தீர்ப்பாயமும் இதை வலியுறுத்தியது.
ஆனால், இலங்கை அரசு உள்நாட்டு விசாரணையைத் தொடங்காத காரணத்தினால் ஐ.நா. விசாரணைக் குழுவை பான்-கீ-மூன் அமைத்தார். இக்குழுவை இலங்கைக்குள் நுழைவதற்கே அனுமதிதர இலங்கை அதிபராக இருந்த இராசபக்சே மறுத்தார். நல்லிணக்க ஆணைக்குழு என்ற பெயரால் தனக்குத்தானே ஒரு குழுவை அவர் நியமித்துக்கொண்டார்.
2012ஆம் ஆண்டு உள்நாட்டு விசாரணை, நல்லிணக்க ஆணையக்குழு பரிந்துரை ஆகியவற்றைச் செயற்படுத்துவது குறித்த ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்தது. இதையும் ஏற்றுக்கொள்வதற்கு இராசபக்சே மறுத்தார்.
2013ஆம் ஆண்டில் மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த திருமதி. நவநீதம் பிள்ளை வற்புறுத்தினார்.
2014ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றுகூடி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தன. 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா இவ்வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இத்தீர்மானம் அமைந்திருந்ததால் அதை ஆதரிக்க முடியவில்லை என இந்திய அரசு அறிவித்தது.
அதற்குப் பின்னர் மனித உரிமை ஆணையம் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானங்களை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டது. போர் குற்றங்களை விசாரணை செய்து தண்டிக்கும் பொறுப்பை இலங்கை அரசே மேற்கொள்ளட்டும் என இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றச்செய்தது. அதாவது சர்வதேச நீதிவிசாரணையிலிருந்து இலங்கை அரசை இந்தியா காப்பாற்றியது.
ஆனால் 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானங்களில் எதையும் இலங்கை அரசு மதிக்கவில்லை, செயற்படுத்தவில்லை. அவ்வப்போது ஐ.நா.வை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இராசபட்சேயாக இருந்தாலும், சிறீசேனாவாக இருந்தாலும் மிகக்கொடுமையான போர்க் குற்றங்களைப் புரிந்த தங்கள் நாட்டு இராணுவத்தையும், காவல்துறையையும் விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றுவதில் இருவரும் ஒன்றுதான். தொடர்ந்து உலகை ஏமாற்றும் நடவடிக்கைகளில் சிங்கள இனவெறி அரசுகள் ஈடுபடுகின்றன. உலகமும் ஏமாறுகிறது. இந்திய அரசும் ஏமாறுகிறது.
ஐ.நா. மனித உரிமை மற்றும் சனநாயக உரிமைப் பாதுகாப்புச் சிறப்புத் தூதுவர் பென் எமர்சன், அமெரிக்காவின் அரசியல் துறைச் செயலாளர் நாயகமான ஜெப்ரி பெல்ட்மேன் ஆகியோர் இலங்கைக்கு நேரில் வருகை தந்து உண்மைகளைக் கண்டறிந்து இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவேதான் இவர்களை ஏமாற்றும் வகையிலும் இந்தியா உள்பட உலக நாடுகளைத் திசை திருப்புவதற்காகவும், குடியரசுத் தலைவர் சிறிசேனாவும், பிரதமர் இரணில் விக்ரமசிங்கேவும் அவசர அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதன்படி இவர்கள் ஒருபோதும் செயற்படப்போவதில்லை. ஏமாற்றும் நாடகம் தொடர்கிறது. எத்தனை காலம்தான் இது தொடரப்போகிறது?
இந்தியா உட்பட உலக நாடுகள் எத்தனை காலம்தான் ஏமாறப்போகின்றன? சீனாவின் பிடிக்குள் போய்விட்ட இலங்கையை மீட்பதே முக்கியம். சிங்கள இனவெறி கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பாற்றுவதைவிட இலங்கையின் நட்பே பெரிது என இந்தியா கருதுமானால் கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடித்துவிடலாம் என கருதியவனின் கதிதான் நேரும்.
நன்றி: தினமணி 2-8-17 |