பேராசிரியர் பத்மானந்தன் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:38

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

என வள்ளுவப் பேராசான் வடித்த இலக்கிய வரிகளுக்கு இலக்கணமாக கடந்த 60 ஆண்டு காலத்தில் உள்ளன்போடும் அகத்தின் மலர்ச்சியோடும் நட்புறவு கொண்டிருந்த  எனது இனிய நண்பர் பேராசிரியர் இரா. பத்மானந்தன் 26-7-2017 அன்று காலமான செய்தியை அறிந்தபோது துயரத்தால் துடித்துப்போனேன்.

1957ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருவரும் ஒரே வகுப்பு மாணவர்களாக இருந்த காலம் தொட்டு எங்களின் நட்பு வளர்பிறைபோல
வளர்ந்துகொண்டேயிருந்தது. ஒருபோதும் அது தேய்பிறையானது இல்லை.

இன்னார் இனியர் என்று இல்லாது அனைவரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் பேசி மகிழ்வித்த பண்பாளர். பல்கலைக் கழக மாணவர் விடுதியின் பொதுச்செயலாளராக  இருந்த போது நான் மேற்கொண்ட செயல்கள் அனைத்திற்கும் தோள்கொடுத்துத் துணை நிற்பதைத் தனது கடமையாகக் கொண்டவர்.

பிற்காலத்தில் அவர் கல்வித் துறையிலும் நான் அரசியற் துறையிலும் செயல்பட்டோம். அப்போதும் எங்கள் நட்பு தொடர்ந்தது. மயிலாடுதுறை செல்லும்போதெல்லாம்  அவரது இல்லத்தில் தங்குவேன். அவரும் அவரது துணைவியாரும் அகமும் முகமும் மலர விருந்தோம்பி மகிழ்விப்பார்கள். எங்களைப் போலவே, எங்களின் இரு  குடும்பத்தினரும் மிக நெருக்கமாக உறவு பூண்டிருந்தனர்.

அரசியலில் எனது வெற்றிகளைக் கண்டு மகிழ்ந்து பாராட்டியவர், தோல்விகளை நான் சந்திக்க நேர்ந்த போது தேற்றியவர். தனக்கென எதுவும் அவருக்கு இருந்ததில்லை. என்  வழி எதுவோ அதுவே அவரது வழி. மனந்திறந்து பேசுவதற்கு எனக்குக் கிடைத்த நண்பர் அவர். எங்கள் இருவரின் வாழ்க்கையில் நேரும் இன்ப துன்பங்களை மனம் விட்டுப்  பரிமாறிக்கொள்வோம். நேரில் சந்திக்க முடியாத நாட்களில் அலைப்பேசியின் வாயிலாக அடிக்கடி இருவரும் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வோம். ஊடகங்களில் என்னைப்  பற்றிய செய்திகளோ அல்லது நேர்காணல்களோ அல்லது கட்டுரைகளோ வெளியாகுமானால் அவரிடமிருந்துதான் முதலில் பாராட்டு கிடைக்கும். அவர் மறைவதற்கு சில  நாட்களுக்கு முன் தொலைப்பேசியில் பேசும்போதுகூட "எப்போது மயிலாடுதுறை வரப்போகிறீர்கள், பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன?'' என ஆதங்கப்பட்டார். ஆனால்,  விரைவிலேயே அவரது உயிரற்ற உடலுக்கு மலர் வளையம் வைக்க அவரது இல்லத்துக்குச் செல்ல நேருமென நான் கனவிலும் கூடக் கருதியதில்லை.

அவரின் மறைவுச் செய்தி கிடைத்தபோது நம்பமுடியாத அதிர்ச்சியுடன் நானும் எனது துணைவியாரும் சென்னையிலிருந்து விரைந்து மயிலாடுதுறை சென்று நள்ளிரவில்  கண்ணாடிப் பேழையில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அவரையும், கதறிக்கொண்டிருந்த அவரது துணைவியார் மற்றும் குடும்பத்தினரையும் கண்டபோது அணை உடைத்த  வெள்ளமென எங்கள் துயரம் பெருக்கெடுத்தோடியது.

60 ஆண்டு காலத்திற்கு மேலாக உயிரனைய நண்பராக, அன்பினை அள்ளி அள்ளிச் சொரிந்த உற்ற தோழராக விளங்கிய பேராசிரியர் பத்மானந்தன் அவர்களின் மறைவு  என்றும் அழியாத துயரத்தினை உள்ளத்தில் பதித்துவிட்டது.

 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.