விடுதலைப் புலிகளுக்காக வணிக கப்பல் இயக்கிய கேப்டன் பிறைசூடி சென்னையில் காலமானார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2019 12:05

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக சோழன் என்ற வணிகக் கப்பலை இயக்கிய கேப்டன் கனகசபை பிறைசூடி சென்னையில் கடந்த  சனவரி 2ஆம் தேதி காலமானார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த இலங்கை யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைக்கு அருகில் திக்கம் என்ற ஊரில் 1942இல் பிறந்தவர் பிறைசூடி. பிரபாகரனின்  நெருங்கிய நண்பரான  அவர், புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டது முதல் இறுதிப் போர் நடந்த 2009 வரை முழுமையான பங்களிப்பை அளித்தவர்.
இங்கிலாந்து கப்பல் படையில் பணியாற்றிய அவருக்கு, கப்பல் கட்டும் தொழிலிலும் பயிற்சி இருந்தது. கடல்வழி தாக்குதலில் புலிகள் பெற்ற வெற்றிகளுக்கு பிறைசூடியின் உழைப்பே காரணம்.
பிறைசூடி பற்றி கவிஞர் காசி ஆனந்தனிடம் கேட்டபோது, "தொடக்க காலம் முதலே பிரபாகரனோடு இணைந்து பணியாற்றியவர் பிறைசூடி. இநதிய விடுதலைப் போராட்டத்தில் வ.உ. சிதம்பரனார், சுதேசி கப்பலை இயக்கியதுபோல தமிழீழ விடுதலைப்  போராட்டத்தில் சோழன் வணிகக் கப்பலை இயக்கியவர் பிறைசூடி” என்றார்.
2009 இறுதிப்  போருக்குப் பிறகு குடும்பத்துடன் சென்னையில் குடியேறிய பிறைசூடி, உடல் நலக்குறைவால் கடந்த 2ஆம் தேதி காலமானார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
தலைவர்கள் அஞ்சலி
மறைந்த பிறைசூடியின் உடலுக்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் புலிக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக, தலைவர் திருமாவளவன், கவிஞர் காசிஆனந்தன், திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் பிறைசூடியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த பிறைசூடிக்கு "மாமனிதர்" என்ற கவுரவம் அளிக்கப்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.