தமிழனாகப் பிறக்காதவர் - ஈழத் தமிழருக்குத் துணை நின்றார் ஜார்ஜ் பெர்னாண்டஸ் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019 11:56

1988ஆம் ஆண்டு சூலை 23, 24ஆம் நாட்களில் ஈரோட்டில் பாசிச எதிர்ப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் நானும் மற்றும் பல தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தோம்.

"இம்மாநாட்டில்தான் முதன்முதலாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை நான் சந்தித்தேன்.  தீவிரமான சோசலிஸ்டுத் தலைவரான அவரைப்பற்றி அறிந்திருக்கிறேனேத் தவிர சந்தித்ததில்லை". நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தோம்.
பெரிய தலைவருக்குரிய பந்தா எதுவுமில்லாமல் மிக எளிமையாகக் காட்சி தந்தார். சரியாக வாரப்படாத தலை, கசங்கிய  பைஜாமா-குர்தாவுடன் காட்சி தந்தார். அவரது  துணிகளை அவரே துவைத்துப் போட்டுக் கொள்வது வழக்கம் என பின்னர் அறிந்து கொண்டேன். மேடையில் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். மிகுந்த அன்புடன் அளவளாவினார். அந்த மாநாட்டில் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசிய பேச்சு என் உள்ளத்தைத் தொட்டது. உதட்டளவில்லாமல் உள்ளத்தளவில் எழுந்த உணர்வோடு அவர் பேசினார். ஈழத்தமிழர் போராட்டத்திற்கு அன்று முதல் இறுதிவரை அவர் தொடர்ந்து ஆதரவளித்து வந்தார்.
06-01-1997ஆம் ஆண்டில் பெங்களூரில் ஈழத்தமிழர் ஆதரவு மாநாடு நடைபெற்றது. பெங்களூர் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.
19-01-1997இல் மதுரையில் "தமிழர் எச்சரிக்கை மாநாடு” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டினை தமுக்கம் கலையரங்கில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் நடத்தினோம். இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை அங்கு நடத்திவரும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தவும், அந்தப் படையைத் திரும்பப்பெறுமாறு இந்திய அரசை வற்புறுத்தவும் இந்த மாநாட்டை நாங்கள் நடத்தினோம். மாநாட்டில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆற்றிய உரை உணர்ச்சிகரமாக மட்டுமல்ல அறிவுப்பூர்வமாகவும் அமைந்திருந்தது. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கவேண்டிய இந்திய இராணுவம் அந்நிய நாட்டிற்குக் கூலிப்படையாக அனுப்பப்பட்டதை அவர் மிகக் கடுமையாகச் சாடினார். ஏராளமான சர்வதேச நிகழ்ச்சிகளை எல்லாம் சுட்டிக்காட்டி தலைமையமைச்சர் ராஜீவ் காந்தியின் தவறைக் கண்டித்தார். அவரின் அந்தப் பேச்சு இந்தியாவெங்கும் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது.
02-04-1989இல் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இந்திய அமைதிப்படை நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த கொடிய நிகழ்ச்சி அனைவரையும் திடுக்கிட வைத்தது. வல்வெட்டுத்துறையிலிருந்து முக்கிய பிரமுகரான ஆனந்தராஜ் என்பவர் அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். இந்திய இராணுவத்தின் கொலைவெறித் தாண்டவம் பற்றிய சகல ஆதாரங்களோடும் அவர் வந்திருந்தார். அந்த விவரத்தை டெல்லியில் இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ்  அவர்களுக்குத் தெரிவித்தேன்.  ஆனந்தராஜ் அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைக்கும்படி அவர் கூறினார். அவ்வாறே அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்தேன். ஆனந்தராஜ் கூறிய விவரங்களையும் ஆதாரங்களையும் புகைப்படங்களையும் பெற்றுக் கொண்ட பெர்னாண்டஸ்  அவர்கள் அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். இந்திய இராணுவ அட்டூழியங்கள் பற்றிய இரத்தம் உறைய வைக்கும் படங்களுடனும், அசைக்க முடியாத ஆதாரங்களுடனும் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் அந்த நூல் வெளியிடப்பட்டது.
வியட்நாமில் மைலாய் என்னுமிடத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய அட்டூழியங்களோடு இந்திய இராணுவ அட்டூழியங்களை ஒப்பிடும் வகையில் அந்நூலுக்கு India’s My Lai எனப் பெயரிட்டார். இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இந்த நூல் அனுப்பப்பட்டது.
இராமேசுவரம் மாநாடு
இராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மாநாடு ஒன்று நடத்துவது என திராவிடக் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களும் நானும் கலந்துபேசி முடிவு எடுத்தோம். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை திராவிடர் கழகம் மேற்கொண்டது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் பல தலைவர்களை அழைத்து வரும் பொறுப்பைத் தமிழர் தேசிய இயக்கம் ஏற்றுக்கொண்டது.
மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து மதுரைக்கு வைகை துரித  வந்து சேர்வதாகஅவர் தெரியப்படுத்தியிருந்தார். வரை வரவேற்க மதுரை இரயில்வே நிலையத்தில் நானும் மற்றதோழர்களும் காத்திருந்தோம். வண்டியிலிருந்து இறங்கிய மக்களோடு மக்களாக ஒரு சிறு கைப் பெட்டியைத் தானே தூக்கிய வண்ணம் அவர் இறங்கியதைப் பார்த்து திகைத்துப்போனோம். இரயில்வே அமைச்சராக பதவி வகித்திருந்த அவர் இரண்டாம்  வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கி வந்ததைப் பார்த்தது தான் எங்கள் திகைப்புக்குக் காரணம். மதுரையிலிருந்து கார் மூலம் இராமேசுவரத்திற்குப் பயணமானோம்.வறண்ட இராமநாதபுர மாவட்டத்தின் வழியாக நாங்கள் பயணம் செய்தோம். வறண்டு கிடந்த அப்பகுதியைப்பார்த்து வியப் படைந்த அவர் "இந்த நிலையைப் போக்குவதற்கு  வழியில்லையா?"என்று கேட்டார்.
"வழி இருக்கிறது ஆனால் மனம்தான் இல்லை என்று கூறிவிட்டு மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் வீணாகக் கலக்கும் கேரள பெரியாற்று நீரை அம்மாநிலம்தடுத்து வைத்துக் கொண்டு தர மறுப்பது பற்றிக்கூறினேன். தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையே உள்ள பெரியாறு அணை பிரச்சனைப் பற்றி விவரத்தையும் நூறாண்டு காலத்திற்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் துரிதமான பொருளாதார வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டு பின் தங்கிய மக்கள் பயனடைவார்கள்” என்பதையும் எடுத்துக் கூறினேன்.
"இவ்வளவு முக்கியமான பிரச்சனைகள் குறித்து எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் எடுத்துக் கூறுவதில்லையே” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
இங்ஙனம் பேசியவாறே இராமேசுவரத்தை அடைந்தோம். நண்பர்                             கி. வீரமணி அவர்களும் மற்ற தோழர்களும் அவரை வரவேற்றனர். உடனடியாக மாநாட்டுத் திடலுக்குச் சென்றோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். சிங்களக் கடற்படையினர் அத்துமீறி இராமேசுவர மீனவர்களைத் தொடர்ந்து சுட்டுத் தள்ளுவதைப் பற்றியும், சிறைப்பிடித்துச் செல்வது பற்றியும் மாநாட்டில் பேசியவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இறுதியாகப் பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தப் பிரச்சனை குறித்துத் தான் முழுமையாக அறிந்திருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசுவதாகவும் வாக்குறுதி அளித்துப் பேசினார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுடன் மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன்.  ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து அவ்வப்போது அவருடன் கடிதங்கள் மூலமாகவும் நேரிலும் தொடர்புகொண்டு விளக்கியிருக்கிறேன். அவரும் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது அந்த பிரச்சனை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். ஆனால் என்றுமே மறக்க முடியாமல் அமைந்தது அவர் டெல்லியில் நடத்திய மாநாடேயாகும்.
டில்லி மாநாடு
1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி புதுடில்லியில் "ஈழத்தமிழருக்கு ஆதரவான சர்வதேசமாநாடு” நடைபெற்றது. இம்மாநாட்டில் அமைப்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்து பல முட்டுக்கட்டைகளுக்கு இடையே மிகச் சிறப்பாக இம்மாநாட்டை நடத்தினார்.ஆனால் உண்மையில் இம்மாநாட்டை நடத்துவது என பல மாதங்களுக்கு முன்பே அவர் முடிவு செய்திருந்தார்.
1997ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி புதுச்சேரியில் ஈழ மக்கள் ஆதரவுக்கூட்டமைப்பின் தலைவர் நண்பர் அழகிரி "ஈழ ஆதரவு எழுச்சி மாநாட்டினை” நடத்தினார். இந்த மாநாட்டில் சிறப்புச் சொற் பொழிவாளராகக் கலந்து கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் டில்லியிலும்இதுபோன்ற மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்தார்.ஆனாலும் அவருக் கிருந்த பல்வேறு அலுவல் களின் காரணமாகவும் எதிர்பாராத நிகழ்ச்சிகளின் காரணமாகவும்  உடனடியாக  அந்த மாநாட்டை நடத்த அவரால்  இயலாமல் போயிற்று. என்றாலும் இந்த மாநாட்டைநடத்துவதில் உறுதியாக இருந்தார்.
அதனால் சற்றுத் தாமதமாக டிசம்பர்  15ஆம் தேதியன்று டில்லி இந்திய வணிகத் & தொழில் வளாக அரங்கில் இம்மாநாட்டினை நடத்துவதாக அவர் அறிவித்தார். இதைக் கண்டு இந்திய அரசின் உளவுத்துறை அஞ்சியது. உளவுத்துறையிலிருந்த சில பார்ப்பன அதிகாரிகள் இம்மாநாடு குறித்து முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை மத்திய உள்துறை அமைச்சராக இருந்த "இந்திர ஜித் குப்தா" அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதனை முழுவதுமாக நம்பிய இந்திரஜித் குப்தா பின்வரும் கடிதம் ஒன்றினை ஜார்ஜ் பெர்னாண்டசிற்கு அனுப்பினார்.
"விடுதலைப்புலிகளின் தலைமையின் தூண்டுதலின் பேரில் "ஈழத்தமிழர் ஆதரவு சர்வதேச மாநாடு” என்ற பெயரில் ஒரு மாநாட்டை 14-12-97 அன்று டில்லியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள விடுதலைப் புலி இயக்கத் தலைவர்கள், இந்த மாநாட்டிற்குத் தேவையான நிதியை நெடுமாறன் மூலமாக அனுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  இம்மாநாட்டை நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ வேண்டாம் என்றும், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்”.
 சமதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் இந்த மாநாட்டின் அமைப்புச் செயலாளருமான ஜெயா ஜெயிட்லி நான் தங்கியிருந்த இடத்திற்குத் தொலைப்பேசியில்  தொடர்புகொண்டு உடனே புறப்பட்டு வருமாறு கூறினார். அவ்விதமே சென்று அவரைச் சந்தித்த போது குப்தாவின் கடிதத்தை எனக்குக் காண்பித்தார். "தமிழ்நாட்டில் ஈழஆதரவு மாநாடு நடத்துவதென்றால் தடை போடுகிறார்கள்.  டில்லியிலும் அதே நிலைதானா?” எனச் சோர்ந்து போனேன்.
இருவருமாக பீகாரிலிருந்த பெர்னாண்டஸ் அவர்களுடன் தொடர்புகொண்டோம். "எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். மாநாடு திட்டமிட்டபடி  நடக்கும்” என அவர் எனக்கு உறுதி கூறினார். பிறகு அவர் தெரிவித்த யோசனைப்படி அவர் சார்பில் குப்தா அவர்களுக்கு ஜெயா ஜெயிட்லி பின்வரும் கடிதத்தை  அனுப்பினார்.
"உங்கள் கடிதம் கிடைத்தது. பெர்னாண்டஸ் அவர்கள் ஊரில் இல்லை. அவர் சார்பில் உங்களுக்கு பதில் அளிக்க எனக்கு அதிகாரம் அளித்திருக்கிறார். அதற்கிணங்க இக்கடிதத்தை எழுதுகிறேன். முதலாவதாகவும் முக்கியமாகவும் திட்டவட்டமாகவும் எங்கள் மாநாட்டிற்கும் புலிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. புலிகளிடம் பணம் பெற்று அவர்களின் தூண்டுதலின் பேரில் இம்மாநாடு நடத்தப்படவும் இல்லை. மாநாட்டோடு தொடர்புடையவர்கள் யாருக்கும் அமெரிக்காவிலிருந்தோ, ஆஸ்திரேலியா விலிருந்தோ எத்தகைய நிதி உதவியும் வரவில்லை. இந்தக் குற்றச்  சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானது ஆகும்.
பெங்களூர், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங் களில் ஈழ ஆதரவு மாநாடுகள் இந்த ஆண்டில் நடை பெற்றிருக்கின்றன. அண்மையில் கூட டில்லியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்காக ஒரு மாநாடு நடைபெற்றது என்பதையும் அதில் முன்னாள் வெளியுறவுச் செயலாளர். ஜே.என். தீட்சித், மேஜர்-ஜெனரல் அசோக் மேத்தா உட்பட பலர் பங்கேற்றனர் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். மேலும்,  இம்மாநாட்டில் கலந்துகொள்வதாக இருக்கும் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்புமிக்க நீதிபதிகள், சட்ட அறிஞர்கள் ஆகிய பல வெளிநாட்டவர்களுக்கு இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வசதியாக இந்தியா வருவதற்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது.
நமது தேசிய நலனை மனதில் கொண்டு இந்த மாநாட்டை நடத்தும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். நமது நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியப் பிரச்சனைகள் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது. அந்தப் பிரச்சனை பற்றி விவாதிக்கவே இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது".
மேலேகண்ட கடிதம் உள்துறை அமைச்சர் குப்தா அவர்களுக்கு உடனே அனுப்பப்பட்டது.
அன்று மாலை பெர்னாண்டஸ் டில்லி திரும்பினார். உடனடியாக செய்தியாளர் கூட்டம் கூட்டப்பட்டது. டில்லியிலிருந்த  நூற்றுக்கணக்கானப் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சிக் குழுக்கள் அவர் வீட்டில் கூடிவிட்டனர். மாநாட்டைத் தடுக்க இந்திய அரசு செய்யும் முயற்சியை அவர் மிகக் கடுமையாகக் கண்டனம்  செய்தார். மாநாடு நடைபெறவிருந்த மண்டபத்தையும் கொடுக்கவிடாமல் தடுத்துவிட்டதையும் அவர் கண்டித்தார். தனது வீட்டின் பின்புறம் இருக்கும் புல்வெளியில் மாநாடு நடத்தப் போவதாகவும் அறிவித்தார். மறுநாள் டில்லி பத்திரிகைகள் அனைத்திலும் தொலைக்காட்சிகளிலும் இந்த செய்தியே முதன்மை பெற்றது. பல பத்திரிகைகள் கற்பனையான செய்திகளையும்சேர்த்து வெளியிட்டார்கள்.
ஐரோப்பாவில் தலைமறைவாகவுள்ள விடுதலைப்புலி இயக்கத் தலைவர்கள் சிலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இரகசியமாக இந்தியாவிற்குள் ஊடுருவியிருப்பதாகவும் ஒரு பத்திரிகை எழுதியது. 1000க்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களை அழைத்துக் கொண்டு நான் டில்லி வந்திருப்பதாகவும் அவர்களில் எத்தனை பேர் விடுதலைப் புலிகள் என்று தெரியவில்லை எனவும் இன்னொரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
பெரும்பாலான பத்திரிக்கைகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்படுவார் என்றும், மாநாடு நடைபெறாமல் தடுக்கப்படும் என்றும் ஊகங்களை வெளியிட்டன.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் பெர்னாண்டஸ் அவர்கள் தலைமையில் மாநாட்டை நடத்தும் வேலைகளில் ஈடுபட்டோம். அவர் வீட்டின் பின்புறமிருந்த புல்வெளியில் பெரியதோர் துணிப்பந்தல் இரவோடுஇரவாகப் போடப்பட்டது. மேடை மற்றும் வேலைகள் அனைத்தும் விரைவாகச் செய்து முடிக்கப்பட்டன.
இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் ராஜ சிங்கம் மற்றும் அவரது துணைவியார், டாக்டர் சதானந்தம், பிரான்ஸிலிருந்து கிளிச்-பக் கோரஸ் ஆகியோர்  வந்தனர். அவர்களை விமான நிலையம் சென்று அழைத்து வந்தேன். அதிகாலையில் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பிரதிநிதிகளைஅழைத்து வருவதற்காக  விமான நிலையம்  சென்றிருந்தேன். ஆஸ்திரேலியா பொது மன்னிப்பு சபையைச் சேர்ந்த "மால்கம் ஆர்.கிரேஸி" அவர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. மற்றும் வருவதாகத்  தெரிவித்திருந்த யோகன் மயில்ஸ், இரவிச்சந்திரன்  ஆகிய இருவரையும் சந்திக்க முடிய வில்லை. இவர்கள் தங்கு வதற்கு ஒதுக்கப்பட்டிருந்த விடுதி குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு போயிருக்கக் கூடும் என்று நினைத்து அங்கு சென்று பார்த்தேன். இரவிச்சந்திரன் மட்டும் அங்கிருந்தார். அவர் கூறிய விவரம் என்னை திடுக்கிட வைத்தது. விமான நிலையத்திலேயே யோகன் மயில்சு அவர்களைத் தடுத்து வைத்திருப்பதாக அவர் கூறினார். உடனடியாகபெர்னாண்டஸ் அவர்களுக்குஇதைத் தெரிவித்தேன். அவர் விசாரித்து அறிந்ததின் பேரில் யோகன் மயில்சு ஆஸ்திரேலியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட விவரம் தெரிய வந்தது.
தமிழ்நாட்டிலிருந்து இரயில் மூலம் 1000க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் டில்லி வந்து சேர்ந்தனர்.
காலை 8 மணியளவில் பெர்னாண்டஸ் வீட்டிற்கு நான் சென்றபோது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் காவல் துறையினர் குவிக்கப் பட்டிருந்தனர். பரபரப்பான சூழ்நிலை நிலவியது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது பெர்னாண்டஸ் மற்றும் அவரது கட்சித் தோழர்கள் குழுமி இருந்தார்கள்.
"புல்வெளியில் இருக்கிற புதர்களின் மறைவில் புலிகள் இருக்கிறார்களா என்று போலீஸ் தேடுகிறது. இந்த வேடிக்கையை நீங்களும் பாருங்கள்” என்று பெர்னாண்டஸ் கூறினார்.
புல்வெளியை எட்டிப் பார்த்தேன். அங்கிருந்த மலர்ச்செடிகள்,                         மரங்கள் எல்லாவற்றையும் காவலர்கள் மிகக் கடுமையாகச் சோதித்துக் கொண்டிருந்தார்கள். புலியைத் தேடி வந்தவர்களுக்கு எலிகூட கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் வெறுங்கையுடன் அவர்கள் திரும்பிப் போனார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த தோழர்கள் அவசர அவசரமாக ஓடோடி வந்தார்கள். மாநாட்டைத் தடைசெய்து எல்லோரையும் கைது செய்யும் போது நம்மைவிட்டுவிடப் போகிறார்கள் என்ற பதைப்போடு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
உணர்ச்சிப் பெருக்குடன் மாநாடு தொடங்கியது. தலைமை வகித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது உரையில் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றியும் இந்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் விரிவாகப் பேசினார். "ஜோசப் பரராஜ சிங்கம்" மாநாட்டைத் தொடக்கி வைத்தார். வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவின்பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல தலைவர்களும் பேசினார்கள்.
நான் பேசும் போது பெர்னாண்டஸ் அவர்களுக்கு தமிழர்களின் சார்பில் நன்றி தெரிவித்தேன். விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்று இந்த மாநாட்டை நடத்துவதாக உள்துறை அமைச்சர் சாட்டிய குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்போது "தமிழ்நாட்டிலிருந்து இம்மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அத்தனை தோழர்களும் தங்களது சொந்தச் செலவில் வந்திருப்பதையும் மாநாட்டுப் பந்தலில் விற்கப்பட்ட உணவைக் காசு கொடுத்து வாங்கி உண்டதையும் எடுத்துச் சொன்னேன். அமெரிக்காவிலிருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ பணம் வந்திருந்தால் பல்லாயிரக் கணக்கான பேரை தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு இரயில்கள் மூலம் அழைத்து வந்திருப்பேன். தமிழர்கள் எப்போதும் யாரிடமும் விலை போகாதவர்கள். தன்மானம் மிக்கவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இந்திர ஜித் குப்தா குற்றம் சாட்டியதை வன்மையாகக் கண்டித்தேன். உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இந்த மாநாட்டின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். தமிழீழத்தில் வாழும் மக்களுக்கும் போராடும் புலிகளுக்கும் இந்த மாநாடு நம்பிக்கையையும் ஊட்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டேன்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஆந்திரா, உத்திரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தங்கள் மாநிலங்களிலும்  இத்தகைய மாநாடுகளை நடத்த இருப்பதாக அறிவித்த போது மாநாட்டுப் பிரதிநிதிகள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களைத் தலைவராகவும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை அமைப்பாளராகவும் கொண்ட அகில இந்தியக் குழு ஒன்று இம்மாநாட்டில் அமைக்கப்பட்டது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து இந்தியக் குழு அமைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
பாதுகாப்பு அமைச்சர்
இந்த மாநாடு நடைபெற்ற சில மாதங்களிலேயே பொதுத் தேர்தல் நடைபெற்று தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று  வாஜ்பாய் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பொறுப் பேற்றார். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய தமிழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பதவி எதிலும் இல்லாத போது எவ்வாறு எளிமையுடன் காட்சி தந்தாரோ அவ்வாறே பதவியில் இருந்த போதும் அவர் காட்சி தந்தார். அவருடைய வீட்டிலும் எந்தவிதமான கெடுபிடியும் இல்லை. அவர் வீடு ஒரு திறந்த வீடாகும். எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் தங்குதடையின்றி  வரலாம், போகலாம். அவருடைய படுக்கை அறையைத் தவிர மற்ற எல்லா அறைகளும் அனைவருக்குமாகத் திறந்து விடப்பட்டிருந்தன. அவருடைய சமதா கட்சியைச் சேர்ந்த தோழர்கள், நாடெங்கிலுமிருந்து அவரிடம் மனுக் கொடுக்க வரும் மக்கள் ஆகியோர்அவர் வீட்டில் உள்ள அறைகளில் நிறைந்திருப்பார்கள். டில்லியில் இருக்கும் நாட்களில் அங்கேயே தங்கிக் கொள்வார்கள். இது தவிர திபெத் அகதிகள் சங்கம், பர்மிய அகதிகள் சங்கம் போன்றவற்றின் அலுவலகங்களும் அவரது வீட்டின் ஒரு புறத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இராணுவ அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு இராணுவ வீரர்களின் நலனில் மிகவும் அக்கறை காட்டினார். அவர்களின் நலனுக்காகவும் அவர்களின் குடும்பத்தாரின் நலனுக்காகவும் பல திட்டங்களை வகுத்தார். எல்லா வகையிலும் இந்திய இராணுவம் தன்னிறைவு பெற்றதாக விளங்கும்படி பார்த்துக் கொண்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட முக்கிய தவறு ஒன்றினைத் திருத்தினார். இந்தியாவின் கடல் பகுதியைப் பாதுகாக்க வேண்டிய இந்தியக் கடற்படை அந்தக் கடமையை மட்டும் செய்யாமல் இலங்கைக் கடற்பகுதியையும் பாதுகாக்கும் வேலையைச் செய்தது. இதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடற்படை செல்லக் கூடாது என ஆணைப் பிறப்பித்தார். இதைக் கண்டு பார்ப்பன பத்திரிக்கைகள் ஆத்திரப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகத்தான் பெர்னாண்டஸ் இவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டின. இந்தியக் கடற்படைத் தளபதியாக இருந்து பின்னால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அட்மிரல் விஷ்ணுபகவத் விடுத்துள்ள அறிக்கையில் இதே குற்றச் சாட்டைக் கூறினார். ஆனால் எதைக் கண்டும் பெர்னாண்டஸ் கலங்கவில்லை.
பார்ப்பன பத்திரிக்கைகள்  அவரை எப்படியாவது களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பெரும் முயற்சி செய்தன. அவர் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசின.
"விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான நெடுமாறன் டில்லி செல்லும் போதெல்லாம் பெர்னாண்டஸ் வீட்டில் தான் தங்குகிறார். இந்திய இராணுவ அமைச்சரின் அதிகாரப்பூர்வமான இல்லம் விடுதலைப்புலிகளின் புகலிடம் ஆகிவிட்டது” என்ற ஒரு அப்பட்டமான பொய்யை இந்தப் பத்திரிகைகள் வெளியிட்டன. அவரைச் சந்திப்பதற்காக செல்வதைத் தவிர ஒரு போதும் அவர் வீட்டில் நான் தங்கியதில்லை. ஆனாலும் பார்ப்பனப் பத்திரிக்கைகள் தங்களின் நச்சுப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை.
கன்னட நடிகர் இராசகுமார் கடத்தல்
கன்னட நடிகர் இராசகுமார் வீரப்பனால் கடத்தப்பட்ட போது பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் இனக்கலவரம் மூண்டெழும் சூழ்நிலை உருவாயிற்று. வீரப்பனின் அழைப்பை ஏற்றும் இரு மாநில முதலமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்றும் இராசகுமார் மீட்புப் பணியில் ஈடுபட நான் முடிவு செய்தேன். என்னுடன் குளத்தூர் மணி,  பேரா. கலியாணி, சுகுமார் ஆகியோர் வந்தனர்.              
பிறகு காட்டிற்குள் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை மீட்டு வந்தோம். நாங்கள் தங்கியிருந்த இராம்ராஜ் என்ற நண்பர் வீட்டிற்கு பெர்னாண்டஸ் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு என்னை பாராட்டிய போது நான் நெகிழ்ந்து போனேன். நடிகர் இராசகுமாரிடமும் பேசி அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் சார்பில் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்குக் கூட ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறையில்லை. அமைச்சரவைக் கூட்டத்திலேயோ, நாடாளு மன்றத்திலேயோ அது குறித்துப் பேசுவதில்லை. ஆனால், தமிழனாகப் பிறக்காத ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஈழத்தமிழர் பிரச்சனையில் காட்டிய ஈடுபாடும் அவர் செய்துள்ள உதவிகளும் என்றென்றும் உலகத் தமிழர்களால் நன்றியோடு நினைவுகூரப்படும்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.