நெஞ்சிற்கினிய நண்பர் தஞ்சையார் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 10:47

thanjayaar 1இனிய நண்பர் தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் மாணவர் தலைவராக முதன்முதலாக எனக்கு அறிமுகமாகி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் உருண்டோடிவிட்டது.

அந்த நாளிலிருந்து அவர் மறைந்த நாள் வரை என் உள்ளத்தில் இன்னமும் பசுமையாகப் படிந்திருக்கிற எத்தனையோ நினைவுகளை அசைப்போட்டுப் பார்க்கிறேன்.

 முறுக்கு மீசையுடன் சட்டக் கல்லூரி மாணவராக அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். எதற்கும் யாருக்கும் அஞ்சாத துணிவும், பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தன. தமிழ்நாட்டின் அரசியலை தலைகீழாகப் புரட்டிப்போட்ட 1965ஆம் ஆண்டு மாணவர்களின் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்குப் பிறகு மாணவர்களில் பெரும்பாலோர் காங்கிரசுக் கட்சிக்கு முற்றிலும் எதிர்நிலை எடுத்திருந்த கட்டத்தில் பெருந்தலைவர் காமராசரின் அணியில் மாணவர்களைத் திரட்டும் பணியில் தஞ்சையார் ஈடுபட்டிருந்தார். “தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழு” என்னும் அமைப்பினை உருவாக்கி அவர் ஆற்றிய பணி வேறு யாராலும் ஆற்ற முடியாத ஒன்றாகும். கள்ளிச் செடிகளும், முட்புதர்களும் மண்டிக்கிடந்த கரடுமுரடான நிலத்தை வெட்டித் திருத்திப் பண்படுத்தி விளைநிலமாக ஆக்குவது போன்ற பணியினை தன் தலைமேல் ஏற்றிக்கொண்டு அவர் ஆற்றிய பணியின் விளைவாக மாணவர் உலகில் மறுமலர்ச்சிப் பூத்தது. காமராசரின் அணியில் மாணவர்கள் படைபடையாய் சேர்ந்தனர். அந்த மாணவர் படையின் தானைத் தளபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் தஞ்சையார் ஆவார்.

 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் அன்று பெருந்தலைவரின் வீட்டில் கூடிய தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக்குழுவின் தலைவராக தஞ்சையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றிலிருந்து மாவட்டந்தோறும் சென்று மாணவர்களைத் திரட்டும் பணியில் அயராது ஈடுபட்டு வெற்றியும் பெற்றார். பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. மதுரை மாவட்ட மாணவர் மாநாட்டினை அவர்களுக்குத் துணையாக நின்று நடத்தும் பொறுப்பினை நான் ஏற்றிருந்தேன். 03-03-1968ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் கலையரங்கில் திரண்டிருந்த மாணவர்களின் பெருங் கூட்டத்தைக் கண்டு தலைவர் காமராசர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். “மதுரையில் எனக்கு ஒளி தெரிகிறது” என நம்பிக்கையோடு குறிப்பிட்டார்.

  1968ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசு மாநாடு ஐதராபாத் நகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேச தான் விரும்புவதாக தலைவர் காமராசரிடம் தஞ்சையார் கூறியபோது அவரும் அதை அனுமதித்தார். அவர் தனது உரையில் “இந்தித் திணப்புத் தொடருமேயானால், காங்கிரசுக் கட்சியின் வரைபடத்திலிருந்து தமிழ்நாட்டை முற்றிலுமாக அழித்துவிட நேரும்” என எச்சரிக்கை செய்தார். மாநாட்டில் அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று. இதைக் கண்டு ஆத்திரமடைந்த இந்தி ஆதரவாளர்கள் இராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென தலைவர் காமராசரிடம் முறையிட்டனர். “இராமமூர்த்தி ஒரு மாணவர். தமிழக மாணவர்களின் மனஉணர்வுகளையே அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்” என தலைவர் காமராசர் கூறிய பதில் மேடையிலிருந்த பல வடநாட்டுத் தலைவர்களையும் சிந்திக்க வைத்தது.

தஞ்சையார் இத்துடன் நிற்கவில்லை. மாணவர் குழு ஒன்றுக்குத் தலைமை தாங்கி தில்லிக்குச் சென்று தலைமையமைச்சர் இந்திராகாந்தி முதல் பல தலைவர்கள் வரை அனைவரையும் சந்தித்து தமிழக மாணவர்களின் உணர்வுகளை எடுத்துரைத்தார். துணை தலைமையமைச்சரான மொரார்ஜி தேசாய் தன்னைச் சந்தித்த மாணவர் குழுவை மிகக் கடுமையாகக் கண்டித்தார். இந்திக்கு எதிரானவர்கள் நாட்டின் எதிரிகள் என்றெல்லாம் சாடினார். துணிவுக்குப் பேர் போன தஞ்சையார் அவர்கள் சிறிதும் அஞ்சாமல் அவருக்குத் தக்க பதிலடி கொடுத்தார்.

அகில இந்திய காங்கிரசுக் குழுவின் கூட்டம் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தலைமையில் தில்லியில் நடைபெற்ற போது காங்கிரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 11பேர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது. சோசலிச சிந்தனைப் படைத்த இளைய தலைவர்கள் பலர் இளம் துருக்கியர் என பத்திரிகையாளர்களால் குறிப்பிடப்பட்டனர். அவர்களின் தலைவராக விளங்கிய சந்திரசேகர் செயற்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், மேலிடத் தலைவர்கள் பலர் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனாலும் அவர் போட்டியிலிருந்து விலகவில்லை. அப்போது அகில இந்திய காங்கிரசுக் குழுவின் உறுப்பினராக இருந்த தஞ்சையார், தமிழகத்தைச் சேர்ந்த சில அகில இந்திய காங்கிரசுக் குழு உறுப்பினர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு சந்திரசேகருக்கு வாக்களிக்கச் செய்தார். இதன் விளைவாக சந்திரசேகர் வெற்றி பெற்றார். பின்னர் பெருந்தலைவரை அணுகி இந்த விவரத்தை தஞ்சையார் தெரிவித்த போது அவர் புன்முறுவலுடன் “சந்திரசேகரும் செயற்குழு உறுப்பினராக வேண்டியவர்தானே” என்று கூறியதின் மூலம் தஞ்சையாரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மாணவப் பருவத்திலேயே சோசலிசத்தின் மீது தஞ்சையாருக்கு ஆழமான பிடிப்பு இருந்தது. மாணவர் அமைப்பின் சார்பில் திருவரங்கத்தில் மாணவர்கள் சோசலிச கருத்தரங்கு என்ற பெயரில் சிறப்பான மாநாடு ஒன்றினை நடத்தினார். காங்கிரசுக் கட்சியில் அப்போதிருந்த சோசலிச சிந்தனைப் படைத்த வி.கே. கிருட்டிண மேனன், கே.டி. மாளவியா, சந்திரசேகர், மோகன்தாரியா, அசோக் மேத்தா, வி.கே.ஆர்.வி. ராவ் போன்ற தலைவர்களையெல்லாம் தலைவர் காமராசரின் அனுமதியைப் பெற்று அழைத்துப் பேச வைத்தார்.

1969ஆம் ஆண்டில் திமுக ஆட்சி என்மீது தொடுத்த பொய் வழக்கு ஒன்றில் பிணையில் வெளிவர மறுத்ததற்காக 6 மாத காலம் நான் சிறையிருக்க நேர்ந்தது. சிறையிலிருந்து விடுதலைப் பெற்று வரும்போது தமிழகமெங்கும் பாராட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன. அந்தவேளையில் காங்கிரசுக் கட்சி பிளவுபடும் நிலை உருவாகிக் கொண்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரசின் இளைஞர் அணி தலைவராக இருந்த குமரி அனந்தன், மாணவர் அணியின் தலைவரான தஞ்சையார் மற்றும் என்னை பெருந்தலைவர் அழைத்து தமிழ்நாடு முழுவதிலும் நடைபெறும் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டு காங்கிரசில் நிலவும் நிலைமை குறித்து விளக்கிக் கூறுமாறு ஆணையிட்டார். அதற்கிணங்க தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற கூட்டங்களில் நாங்கள் மூவரும் கலந்துகொண்டோம். செல்லும் வழியில் எங்களின் வாகனத்திற்கு எரி எண்ணெய் ஊற்ற வேண்டியிருந்தால், அரசுக்குச் சொந்தமான எரி எண்ணெய் நிலையங்களிலேயே நிறுத்தி எரி எண்ணெய் வாங்க வேண்டுமென்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை பார்த்தோம். அப்போது அந்நிய நாட்டின் நிறுவனங்களின் எரி எண்ணெய் நிலையங்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. சோசலிச கருத்தோட்டத்தில் அவர் எவ்வளவு அழுத்தமாக இருந்தார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

1969ஆம் ஆண்டில் காங்கிரசுக் கட்சி பிளவுபட நேர்ந்தபோது தஞ்சையார் இந்திராகாந்தி அவர்களுக்கு ஆதரவான நிலை எடுத்தார். ஆனாலும் தலைவர் காமராசர் மீது அவர் கொண்டிருந்த மதிப்பினை மாற்றிக்கொள்ளவில்லை. காமராசர் அணியில் நானும், இந்திரா அணியில் அவருமாக பிரிந்த நிலையில்கூட எங்களின் நட்புக்கு எவ்விதப் பங்கமும் நேரவில்லை. பிற்காலத்தில் இரு காங்கிரசும் இணைந்தபோது இருவரும் முன்பு போலவே ஒன்றாகப் பணியாற்றினோம்.

1979ஆம் ஆண்டில் திமுகவுடன் காங்கிரசுக் கூட்டுச் சேர்ந்தபோது அதைக் கண்டித்து காங்கிரசுக் கட்சியைவிட்டு நானும், தோழர்களும் விலக நேர்ந்தபோது அவர் எனக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றார்.

இலங்கையில் மன்னாரில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு நடைபெற்ற போது, எங்கள் இயக்கத்தின் சார்பில் அம் மாநாட்டில் தஞ்சையார் கலந்துகொண்டு உரையாற்றினார். ஆனால், அக்கால கட்டத்தில் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரம் மூண்டது. பத்திரிகைகளின் மூலம் அச்செய்தியை அறிந்த நான் மிகுந்த பதைப்புக்குள்ளானேன். இலங்கைச் சென்றிருந்த தஞ்சையாரைப் பற்றிய எவ்விதச் செய்தியும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், நல்லவேளையாக அவர் அங்கிருந்து தப்பி தமிழகத்திற்குப் பத்திரமாக வந்து சேர்ந்தார்.

1983ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர்களுக்கெதிரான பெரும் இனக்கலவரம் இராணுவ உதவியுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டது. 3000த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைக் கண்டிக்கும் வகையில் மதுரையிலிருந்து இராமேசுவரம் வரை நடைப் பயணமாகச் சென்று பிறகு அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கை சென்று ஈழத் தமிழர்களுடன் இணைந்து போராடுவது என முடிவெடுத்து “தமிழர் தியாகப் பயணம்” என்ற பெயரில் 5000 தொண்டர்களுடன் சென்றேன். தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் நடுவிலும் பெரும் மனக்கிளர்ச்சியைத் தோற்றுவித்த இந்தப் பயணத்தை வழி நடத்தியதிலும், அதன் வெற்றியிலும் தஞ்சையாருக்குப் பெரும் பங்கு இருந்தது.

தமிழகத்திற்குத் திறந்துவிட அணைகளில் போதுமான நீரில்லை என கர்நாடக அரசு தண்ணீர் தராமல் கைவிரித்தது. அப்போது தஞ்சையார் தலைமையில் தீபம் நா. பார்த்தசாரதி, நாமக்கல் பி.ஏ. சித்திக் ஆகிய மூவரைக் கொண்ட ஒரு குழுவினை உண்மை நிலையை அறிந்து வருவதற்கு கர்நாடகத்திற்கு அனுப்பினோம். இக்குழுவினர் கர்நாடகத்தில் காவிரியிலும், அதன் துணை ஆறுகளிலும் கட்டப்பட்டிருந்த அணைகள் அனைத்திற்கும் சென்று அவற்றில் தேங்கியிருந்த நீர் அளவை கண்டறிந்தது. கர்நாடக அணைகளில் 65கோடி கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் 30கோடி கனஅடி நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என இக்குழு அறிவித்தபோது, கர்நாடக அரசும், கன்னட வெறியர்களும் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இக்குழுவினர் எப்படி அணை தோறும் சென்று உண்மை விவரத்தை அறிந்தனர் என்பதே அந்த அதிர்ச்சிக்குக் காரணமாகும்.

1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்கள் இயக்கம் போட்டியிட்ட போது, தஞ்சை நகரத் தொகுதியில் வேட்பாளராகத் தஞ்சையார் நிறுத்தப்பட்டார். ஆனால், சொற்ப வாக்குகள் வேறுபாட்டில் அவர் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரிட்டது. சிறந்த வாதாடும் திறமை நிறைந்த தஞ்சையார் சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தால் சிறந்ததொரு சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து தில்லியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் விளக்கிக் கூறி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு நானும், அவரும் அங்கு சென்று பலரையும் சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சனையை புரிய வைத்தோம். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய அவர், ஈழத் தமிழர்களுக்காக வாதாடுவதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார்.

தமிழகத்தில் உள்ள முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமையும் அவருக்கு உண்டு. இந்திய சோவியத் பண்பாட்டுக் கழகம், உலக சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் போன்றவற்றின் நடவடிக்கைகளிலும் உற்சாகமாகப் பங்கெடுத்துக்கொண்டார். இந்த அமைப்புகளின் சார்பில் சோவியத் ஒன்றியம், சீனா போன்ற நாடுகளுக்கு அவர் சென்று வந்து தான் கண்டு கேட்டவற்றையெல்லாம் தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்; எழுதினார்.

தோழர் தஞ்சையார் குறித்து எவ்வளவோ எழுதலாம். நானும், அவரும் மட்டுமல்ல, எங்களின் இரு குடும்பங்களும் நெருங்கிய உறவாடின. அவருடைய பிள்ளைகளின் திருமணம் போன்றவற்றில் எங்கள் குடும்பமும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டிருக்கிறது. பொடாச் சட்டத்தில் நான் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தபோது, அவரது வீட்டுத் திருமண விழா ஒன்றில் எனது துணைவியாரை அழைத்து விளக்கேற்ற வைத்தவர் அவர்.

கடந்த ஆண்டு ஒரு நாள் அவரது வீட்டில் அவரைச் சந்தித்த போது, திருநாவுக்கரசர் ஆய்வு மாலை என்றொரு நூலை என்னிடம் கொடுத்து “இந்நூலை படிப்பீர்களானால், புதிய கோணத்தில் ஒரு நூலை எழுதுவீர்கள்” என்று கூறிக் கொடுத்தார். பல அறிஞர்களின் கட்டுரைகள் அடங்கிய நூல் அது. அதை படித்தப் பிறகு பக்தி இலக்கியம் குறித்து ஆராய வேண்டும் என்ற சிந்தனை எனக்குப் பிறந்தது. கடந்த ஓராண்டுக் காலத்திற்கும் மேலாகப் பக்தி இலக்கியம் குறித்த ஆய்வு நூல் ஒன்றினை எழுதி வருகிறேன் என்பது அவருக்கும் தெரியும். எப்போது முடிக்கப் போகிறீர்கள்? என ஒருமுறை கேட்டார். ஆனால், அந்தப் பணியை நான் முடிப்பதற்குள் அவர் முடிவெய்திவிட்டதை நினைக்க நினைக்க நெஞ்சம் கசிந்து உருகுகிறது.

அவரது பிரிவினால் வருந்தும் அவரது துணைவியார் சரசுவதி அம்மையார் அவர்களுக்கும், பிள்ளைகள் அப்பு, அம்மு, மூத்த மருமகள் சுபாசினி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எப்படி ஆறுதல் கூறுவது என்பதை அறியாமல் தவிக்கிறேன். அவர்களின் துயரத்தினை நானும், எனது குடும்பத்தினரும் பகிர்ந்துகொள்கிறோம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.