தமிழ் - செம்மொழி - சில வினாக்கள் --பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00
2004-10-01 கி. பி. 1897ல் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் - உயர்தனிச் செம்மொழியாவதற்கான அத்தனை தகுதிகளும் தமிழுக்கு உண்டு. எனவே அதை ஏற்குமாறு வேண்டு கோள் விடுத்த நாளிலிருந்து இன்று வரை எண்ணற்ற தமிழறிஞர் களும், பல்கலைக்கழகங்களும், தமிழ்அமைப்புகளும், கட்சிகளும், தலைவர் களும் இடைவிடாது நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள் ளது கண்டு மகிழ்கிறோம். இதற்குக் காரணமான அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றியறிதலைத் தெரிவித் துக் கொள்கிறோம்.

ஆனால் செம்மொழி பற்றிய அரசின் அறிவிப்புப் பல குழப்பங்களுக்கு இடமளித்துவிட்டது. பலர் உள்ளங்களைக் கீழ்க்கண்ட ஐயங் கள் குடைந்து கொண்டிருக்கின்றன.

1.
ஆங்கிலேய அரசின் காலத்தில் இருந்து இன்றுவரை அங்கீகரிக்கப்பட்ட செம்மொழி களான வடமொழி, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் கொண்ட பட்டிய லில் தமிழை இணைக்காமல் தனிப் பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் தமிழ் சேர்க்கப்பட்டிருப்பது ஏன்? தமிழுக்கு இரண்டாம் நிலைத் தகுதியா?

2.
பழைய செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளுக்கு இந்திய அரசு வழங்கிவரும் தகுதி, ஆதரவு, நிதியுதவி, அறிஞர்களுக்கு விருது போன்றவை தனிப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் தமிழுக்கும் வழங்கப்படுமா?

3.
செம்மொழிக்கான கால வரம்பை ஆயிரமாண்டுக் காலமாகக் குறுக்கியதன் நோக்கம் என்ன?

4.
வடமொழிக்குச் சமமான தகுதியைத் தமிழுக்கு வழங்கிவிடக் கூடாது என்ற எண்ணமா?

5.
ஆயிரமாண்டுகளாகக் குறுக்கி மேலும் பல மொழிகளைச் செம்மொழிப்பட்டியலில் சேர்த்துத், தமிழுக்குக் கிடைக்கவிருக்கும் தகுதி, நிதி ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் திட்டமா?

6.
செம்மொழியாகத் தமிழை அறிவிப்பது குறித்து முடிவு செய்த அறிஞர் குழுவில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்கள் இடம் பெற்றார்களா?

7.
காலத்தினால் தொன்மை, இலக்கியத்தால் வளமை, தாய்மைத் தன்மை உட்படப் பல தகுதிகள் செம்மொழிக்கு இருக்க வேண்டும் என மொழியியல் அறிஞர்கள் தீர் மானித்து இருக்கும் போது அதற்கு மாறாக புதிய குழுவை நியமித்து புதிய தகுதிகளை உருவாக்க வேண்டிய இன்றியமையாமை என்ன?

8.
மொழியியல் அறிஞர்கள் கூடி முடிவெடுக்க வேண்டிய பிரச்னையை சாகித்திய அகாதமி உறுப்பினர்கள் முடிவுக்கு விட்ட பிழை திட்டமிட்டுச் செய்யப் பட்டதா? அல்லது அறியாமையால் செய்யப்பட்டதா? இதற்கும் பொறுப் பாளி யார்?

9.
தமிழ் - செம்மொழிசிக்கல் உணர்வுப்பூர்வமான சிக்கல் மட்டுமன்று. தமிழர்களின் வாழ்வாதாரமான பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஏனோதானோ என்ற வகையில் அறிவித்தது எப்படி?

10.
இந்திய மொழிகளில் தமிழ் ஒன்று மட்டுமே பல நாடுகளில் பேசப்படும் மொழி என்ற தகுதியைப் பெற்றிருக்கும் உண்மையை உணர்ந்து செயல்படாதது ஏன்?

தமிழறிஞர்கள் மற்றும் உணர் வாளர்களின் நியாயமான இந்தக் வினாக்களுக்குரிய விடையைத் தொடர்புடைய துறையைச் சேர்ந்த அமைச்சரோ அல்லது உயர் அதிகாரியோ கூறியிருக்கவேண்டும். ஆனால் இத்துறைக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராசா அவர்கள் பதிலளிக்க முயன்றுள்ளார்.

்வடமொழி, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் செம்மொழிகள் என மரபுவழியில் கொண்டாடப் பட்டாலும் இதுவரை இந்திய அரசு அம்மொழி களைச் செம்மொழி என அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வில்லை, உண்மையில் இப்போது தான் முதன்முறையாகச் செம்மொழிக் கான தகுதிப்பாடுகளும், நிபந்தனைக ளும் இந்திய அரசால் முதல்நிலை மதிப்பீடாக ஏற்பாடு செய்யப்பட்டுத், தமிழ் செம்மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகுதிப்பாடுகளைச் செம்மைப்படுத்தித், தகுதியற்ற எந்த மொழியும் வெறும் அரசியல் அனு கூலங்களுக்காகச் செம்மொழித் தகுதி பெற்றுவிடாமல் இருக்க இந்திய அரசின் குழு அமைக்கவும், அமைச் சரவை பரிந்துரை செய்துள்ளது. சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி செம்மொழியாக்கப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் வடமொழியும், பாலியும், பாரசீகமும், அரேபியமும் அதிகாரப்பூர்வமான அரசு ஆணை யுடன் கூடிய செம்மொழித் தகுதி யைப் பெறுகின்றன என்பது தான் உண்மையும் நடப்பும் ஆகும்எனக் கூறியுள்ளார்.

அமைச்சரின் பதில் நமது ஐயங்களைத் தீர்ப்பதற்குப்பதில் மேலும் புதிய ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளது. அமைச்சர் கூறுகிற படி வடமொழி, பாரசீகம், பாலி, அரபு ஆகியவை அதிகாரப்பூர்வமாகச் செம் மொழியாக அறிவிக்கப்படாத நிலை யில் அவற்றுக்கு இத்தனை ஆண்டு காலமாக அளிக்கப்பட்ட சலுகைகள் சட்ட விரோதமானவை என்பது தெரிகிறது. இதற்குப் பொறுப்பான வர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.

முதன்முதலாகத் தமிழுக்குச் செம்மொழி தகுதி அதிகாரப் பூர்வமாக வழங்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் வடமொழி உட்பட மொழிகள் அரசு ஆணையுடன் கூடிய செம்மொழித் தகுதியைப் பெறுகின்றன என்ற அமைச்சர் கூற்றுப்படி அந்த ஆணை வெளியிடப் பட்டுவிட்டதா இல்லையா என்பது தெளி வில்லாமல் உள்ளது.

அரசு ஆணைகளில் மூமூடு மந்திரம் ஏன்? செம்மொழி பற்றிய அரசு ஆணைகளை உடனடியாக வெளியிடுவதன் மூலம் குழப்பங்களைப் போக்க வேண்டும்.

தமிழைச் செம்மொழியாக அறிவித்ததோடு எல்லாமே கிடைத்து விடாது, செம்மொழி அறிவிப்பு முதல் கட்டமே அடுத்து பல கட்டங்கள் உள்ளன. முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடக்கூடாது.

மிகமிக நீண்ட காலத்திற்குப் பிறகு காலங்கடந்து தழிழைச் செம்மொழியாக்குவதற்கான முயற்சி தொடங்கப் பட்டிருக்கிறது. முழுமையாகவும், செம்மையாகவும் இந்த முயற்சி நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அங்கீகரிக் கப்பட்ட பிறகு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மோரிசியஸ் போன்று தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவு வாழும் நாடுகளின் அரசுகளையும் அவ்வாறே அங்கீகரிக்க வைக்க வேண்டும். மூன்றுக்கு மேற் பட்ட நாடுகள் தமிழைச் செம்மொழியாக அறிவிக்குமானால் அதன் அடிப்படையில் யுனெஸ்கோ நிறுவனத்தை அவ்வாறு செய்யுமாறு வேண்டிக் கொள்ளலாம். யுனெஸ்கோ அதை ஏற்குமானால் தமிழுக்கு உலகளாவிய மதிப்பு அதிகாரப் பூர்வமாக ஏற்பட்டுவிடும். யுனெஸ்கோ உதவி மட்டுமன்று பல நாடுகளின் அரசுகளும், பல்கலைக்கழகங்களும் தமிழ் வளர்ச்சிக்கும், ஆராய்ச்சிக்கும் உதவ முன்வரும்.

எனவே தமிழ் - செம்மொழி அறிவிப்புச் சிக்கலில் கவனமுடன் ஈடுபட்டு வெற்றி தேடித்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழர்களுக்கும் உண்டு என்றாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள், நடுவண் அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச் சர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதை அவர்கள் செய்ய வேண்டும் எனச் செம்மொழிக்காக உயிர்துறந்த முனைவர் சாலினி அம்மையாரின் பெயரால் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழ் செம்மொழியானதால் ஏற்படும் நன்மைகள்

1.
தமிழுக்குரிய நியாயமான இடம் உலக அரங்கில் கிடைக்கும்.

2. இந்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுத் தமிழ்ப் பேராசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள்.

3. பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பித்தலும் தமிழ் ஆய்வும் நடைபெற வழி வகுக்கப்படும்.

4. ஏற்கனவே தமிழ் ஆய்வு நடைபெற்று வந்து நிதிப்பற்றாக்குறையினால் நிறுத்தப்பட்டுவிட்ட பிற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு தொடர்ந்து நடைபெற உதவி கிடைக்கும்.

5. இந்தியாவின் செம்மொழி ஒன்றே ஒன்றுதான் என்ற நிலை மாறும். வடமொழியைப் பற்றி ஆராய்ச்சி செய்வோர் இனித் தமிழையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வர்.

6. இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் பண்பாடுகளில் தமிழின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பது நிலைநாட்டப்படும்.

7. செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வடமொழியின் வளர்ச்சிக்கு மைய அரசு அளிக்கும் அத்தனை உதவிகளும் தமிழுக்கும் கிடைக்கும்.

8. இப்போது பிற இந்திய மொழிகளில் ஒன்றாக மட்டுமே தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் வடமொழிக்குக் கிடைக்கும் அளவுக்குத் தமிழுக்கு உதவி கிடைப்பது இல்லை.

9. கலைக்களஞ்சியம், அகராதி போன்றவற்றைத் தமிழில் வெளியிடுவதற்கு மைய அரசின் உதவி கிடைக்கும்.

10. தமிழின் பழமை நிலை பற்றிய ஆராய்ச்சி, அதன் தொல்நூல்களைத் தேடிப்பிடிப்பது, அகழ்வாராய்ச்சி ஆகியவை பெருகும்.

11. சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பண்டைய இலக்கண, இலக்கியங்கள் உலகமொழிகளில் பெயர்க்கும் வாய்ப்பு ஏற்படும்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.