தலையங்கம்-தொண்டு தொடர்கிறது PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00
உலகத் தமிழர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு 19-1-97 அன்று தொடங்கப்பட்ட தென்-செய்தி இதழ் 15-08-2002 வரை 6 ஆண்டு காலத்திற்கு மேலாக வெளிவந்து உலகத்தமிழர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது.

தமிழ்நாட்டு இதழ்கள் இருட்டடிப்புச் செய்த தமிழீழச் செய்திகளையும், உலகத்தமிழர் செய்திகளையும் துணிவாக வெளியிட்ட பெருமை தென் செய்தியையே சாரும்.

தமிழ்த்தேசிய இன உணர்வை வளர்த்தெடுப்பதில் தென்செய்தி ஆற்றிய தொண்டு முதன்மையானதாகும்.

சுருங்கக்கூறின் உலகத் தமிழர்களின் கேடயமாக, வாளாகத் தென்செய்தி திகழ்ந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

தமிழ்த்தேசிய உணர்வு வளர்வதைக்கண்டு அஞ்சிய தமிழக அரசு கொடிய பொடாச்சட்டத்தை ஏவி ஆசிரியர் பழ. நெடுமாறன் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆட்சியாளரின் அடக்குமுறை வெறி அத்துடன் ஓயவில்லை. தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர்கள் சுப. வீரபாண்டியன், கா. பரந்தாமன், மற்றும் பாவாணன், சாகுல் அமீது, தாயப்பன் ஆகியோர் மீதும் பொடாக்கணைகள் ஏவப்பட்டன.

இத்தனைக்கும் மேலாகத் தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டது. தென் செய்தி அலுவலகம் மூமூடப்பட்டு முத்திரையிடப்பட்டது.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக தென்செய்தி இதழ் வெளிவருவது தடைப்பட்டு விட்டது.

17 மாதங்களுக்குப் பின் பிணையில் வெளிவந்த பிறகு தென்செய்தி மீண்டும் எப்போது வரும் என்பதே தமிழர்களின் கேள்வியாக இருந்தது. ஆனாலும் உடனடியாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.

உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து தென்செய்தி அலுவலகத்தை மீண்டும் திறப்பதற்கான ஆணை பெறுவதற்குச் சிறிது காலமாயிற்று.

எனவே மீண்டும் தென்செய்தி இதழ் 01-10-04 முதல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கண்டு மகிழ்ந்த பல தோழர்கள் தாமாகவே முன் வந்து தென்செய்தியின் புரவலர் களாகவும், ஆண்டு உறுப்பினர்களாகவும் சேர்ந்தார்கள். இன்றும் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி என்றும் உரியது.

மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, தென்செய்தியின் பொறுப்பாசிரியர் பொறுப்பை நண்பர் பேரா. சுப. வீரபாண்டியன் ஏற்பதற்கு இசைந்துள்ளார்.

திரு பூங்குழலி துணையாசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தென் செய்தி இனி அதிகப்பக்கங்களுடனும், சிறப்புக் கட்டுரைகளுடனும் தொடர்ந்து வெளிவரும்.

தமிழ் மக்களின் பேராதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தென்செய்தி புதிய பொலிவுடன் மீண்டும் வெளிவருகிறது.
 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.