இட்லரின் மறுபதிப்பு இராசபக்சே - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2012 12:30
உலகத் தமிழர் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் நினைவு என்பது இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அழியாமல் பதிந்திருக்கும். தமிழர் வரலாற்றில் இத்தகைய வெங்கொடுமைக்கு என்றும் தமிழினம் ஆளானதேயில்லை.

உலக வரலாற்றில் இரண்டாம் உலகப்போரின் போது யூத இனம் இத்தகைய திட்டமிட்ட இனப்படு கொலைக்கு ஆளாயிற்று. அதையடுத்து, தமிழினம் இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்கிறது.

ஜெர்மனியின் ஆட்சி பீடத்தில் இட்லர் ஏறிய பிறகு என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டாரோ அதே வழிமுறைகளை இலங்கையில் இராசபக்சேயும் கையாண்டு, தமிழி னத்தை அடியோடு ஒழித்துக்கட்ட என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தார். இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்.

1933ஆம் ஆண்டு இட்லர் ஜெர் மனியில் அதிகாரத்தைக் கைப்பற்றினார். ஜெர்மன் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே இட்லர் அரசுக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, சனநாயகத்தைப் படு கொலை செய்யும் முயற்சியில் இட்லர் ஈடுபட்டார். முதலாவதாக கம்யூனிஸ்டு கள் ஒழித்துக்கட்டப்பட்டனர். சோசியல் டெமாக்ரடிக் கட்சி அடுத்து பலியானது. தொழிற்சங்கங்கள் அடியோடு ஒழித்துக் கட்டப்பட்டன. மக்கள் கட்சி, பவேரியன் மக்கள் கட்சி போன்ற கட்சித் தலைவர் கள் மிரண்டு போய் தாங்களாகவே தங்கள் கட்சிகளைக் கலைத்தார்கள்.

1935ஆம் ஆண்டு யூதர்களுக்கு எதிரான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத் தின் அடிப்படையில் ஜெர்மனியிலிருந்து வெளியேறும்படி யூதர்களுக்கு ஆணையிடப்பட்டது.

எதிர்க்கட்சிகளே இல்லாமல் ஒழித்துக்கட்டிய இட்லர் அடுத்து தனது சொந்த நாஜிக்கட்சியில் தனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்களை ஒவ்வொருவராகத் தீர்த்துக்கட்டினார். அந்தக் கட்சியில் இட்லருக்கு அடுத்த படி செல்வாக்குடன் இருந்த கிரிகோர் ஸ்ட்ரசர், ரோம் ஆகியோர் மீது பொய் யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பத்திரிகை சுதந்திரம் அடியோடு பறிக்கப்பட்டது. எதிர்க்குரலுக்கு நாட்டில் இடமில்லாத சூழல் நிலவியது. இறுதி யாக நாடாளுமன்றத்தை பொம்மை மன்றமாக இட்லர் மாற்றினார். சனநாயகம் கேலிக்கூத்தானது.

முதல் உலகப் போரின் முடிவில் செய்யப்பட்ட வெர்சைல்ஸ் உடன் பாட்டின்படி ஜெர்மனி மீண்டும் ஆயுதம் தரிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் 1934ஆம் தொடங்கி 1939ஆம் ஆண்டுவரை இட்லர் இத்தடையை மீறி ஜெர்மனியை இராணுவரீதியில் வலிமைப்படுத்தினார். ஆனால், பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

1930 முதல் 1940 வரை ஜெர்மனியிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் வாழ்ந்த யூதர்களைத் திட்ட மிட்டு இனப்படுகொலை செய்வதை தனது அரசாங்கத்தின் கொள்கையாக இட்லர் ஏற்றுக்கொண்டிருந்தார். இதன் விளைவாக ஒருகோடியே 20 இலட்சம் யூதர்கள் மற்றும் ஸ்லாவ் இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையிலும் இதே இட்லரிச நடவடிக்கைகளை இராசபக்சே மேற் கொண்டார். அதிபராகப் பதவி ஏற்றதும் சகல அதிகாரங்களையும் இராசபக்சே தனது கையில் எடுத்துக்கொண்டார்.

விடுதலைப் புலிகளின் ஆதர வாளர்கள் வெள்ளை வேன்களில் கடத் தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி... செயல்பட முடியாமல் முடக்கப் பட்டது. தனது சொந்தக் கட்சியில் முன்னாள் குடியரசுத் தலைவராகவும் கட்சித் தலைவராகவும் இருந்த சந்திரிகா மிரட்டப்பட்டு நாட்டைவிட்டு வெளி யேறும்படி செய்தார். இராசபக்சே ஆட்சிபீடம் ஏறுவதற்கு துணை நின்ற ஜே.வி.பி. இயக்கத்தை இரண்டாக உடைத்து ஒரு பிரிவினரை தனக்கு ஆதரவாக மாற்றினார்.

புலிகளுடன் நடைபெற்ற போரின் போது இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த பொன் சேகாவின் செல்வாக்கு மக்களிடையே வளர்ந்து வருவதைக் கண்ட இராசபக்சே அவர்மீது பொய்யான குற்றச்சாட்டு களைச் சுமத்தி சிறையில் அடைத்தார். அவருக்கு ஆதரவான மற்ற தளபதி களை வெளிநாட்டுத் தூதர்களாக நியமித்து நாட்டைவிட்டே அகற்றினார்.

போருக்கு முன்னதாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்தார்.

நடுநிலையான சிங்களப் பத்திரி கையாளர்கள் தனக்கு எதிராகச் செய்தி களை வெளியிடுகிறார்கள் என்பதினால் நாற்பதுக்கு மேற்பட்டவர்களைப் படுகொலை செய்தார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். எஞ்சியவர்கள் உலக நாடுகளுக்குத் தப்பியோடினார்கள்.

சர்வதேச ஊடகவியலாளர் அனைவரையும் இலங்கையில் இருந்து இராசபக்சே வெளியேற்றினார். தொண்டு நிறுவனங்களான சர்வதேச செஞ் சிலுவைச் சங்கம், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறு வனங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப் பட்டனர்.

சிங்கள இராணுவத்தைக் கொலை வெறி இராணுவமாக மாற்றி அவர் களைத் தமிழர்களுக்கு எதிராக எது வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை கொடுத்து ஏவிவிட்டார். பாலியல் வன்முறை, படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தங்கு தடையின்றி நடத்தப்பட்டன.

தமிழர்களுக்கு எதிரான துரோகக் குழுக்களின் அட்டூழியங்கள் இராணுவ உதவியுடன் நடந்தன.

சர்வதேசச் சட்டங்கள், ஐ.நா. ஜெனிவா மாநாட்டு முடிவுகள், ஐ.நா. பட்டயம் ஆகிய எதையுமே இராசபக்சே மதிக்க மறுத்தார். இதையேதான் இட்ல ரும் செய்தார். அப்போது மேற்கு நாடுகள் அவரைத் தட்டிக்கேட்கவில்லை. இப்போதும் இராசபக்சேயைத் தட்டிக்கேட்க இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முன்வரவில்லை.

இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளில் 3 இலட்சத்திற்கு மேற் பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். 15 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். உள்நாட்டிலேயே சுமார் 5 இலட்சம் தமிழர்கள் எல்லா வற்றையும் இழந்த நிலையில் இன்னமும் அகதிகளாக வாழ்கிறார்கள். இந்தக் கொடுமைகளில் பெரும் பகுதி இராச பக்சேயின் காலத்தில் நடத்தப்பட்டது.

ஈழத் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்குப் பகுதியில் ஏறத்தாழ 2,60,000 வீடுகள் அடியோடு சேத மடைந்ததாக சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. அதாவது ஒரு வீட்டில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் என வைத்துக் கொண்டாலும் சுமார் 13 இலட்சம் தமிழர்கள் வீடிழந்து தவிக்கிறார்கள்.

இலங்கை முழுவதும் சிங்களர் களுக்குச் சொந்தமான நாடு, இங்கு தமிழர்களுக்கு இடமில்லை என பகிரங்கமாக அறிவித்தார் இராசபக்சே. இந்தக் கொள்கையின் அடிப்படையில் தமிழர்கள் தாமாக வெளியேறாமல் பிடிவாதமாக எதிர்த்துப் போராடியபோது அவர்களை அடியோடு அழிப்பது என முடிவு செய்து இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். எஞ்சியுள்ள தமிழர்களும் பசியும் பட்டினியுமாகக் கிடந்து அவர்களாகவே சாகவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி யிருக்கிறார்.

இட்லருக்கும் இராசபக்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இட்லரின் மறுபதிப்பு இராசபக்சே ஆவார்.

அன்றைக்கு இருந்த சர்வதேச சபை இட்லரின் அத்துமீறிய நடவடிக் கைகளைத் தட்டிக் கேட்கத் தயங்கியது. இன்றைக்கு அதற்குப் பதிலாக இருக்கும் ஐ.நா. பேரவை இராசபக்சே மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.

இட்லர் தனது நாட்டில் சனநாய கத்தை அழித்தபோதும், யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையைத் தொடர்ந்து நடத்தியபோதும் ஏன் என்று கேட்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வரவில்லை. இந்த நாடுகளிலிருந்த வலதுசாரிகள் இட்லருக்கு ஆதரவாக இருந்தது இதற்குக் காரணமாகும்.

அதைப்போல இப்போது இலங் கையில் இராசபக்சே மேற்கொண்டுவரும் சனநாயக விரோத நடவடிக்கைகளை யும், தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலையையும் கண்டிக்க இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கண்டிக்க முன்வராத தோடு மட்டுமல்ல, இராசபக்சேவுக்கு துணை நின்று இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வேண்டிய உதவிகளைச் செய்தன; செய்துகொண் டிருக்கின்றன. இதற்கு இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியும், அதனுடைய கூட்டணிக் கட்சிகளுமே காரணமாகும்.

அன்று இட்லரை மேற்கு நாடுகள் தட்டிக்கேட்காததன் விளைவு அவர் அண்டை ஐரோப்பிய நாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக ஆக்கிரமித்தார். இறுதியாக பிரான்சு மீதும் பிரிட்டன் மீதும் படையெடுத்துத் தாக்கிய போதுதான் இந்த நாடுகளுக்கு ஞானம் பிறந்தது. ஆனால் அதற்குள் இட்லர் வலிமை பெற்றுவிட்டார். இதன் விளைவாக இரண்டாவது உலகப் போர் மூண்டது. பல இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். ஐரோப்பாவே சுடுகாடானது.

அதைப்போல இப்போதும் தென்னாசியப் பகுதியில் ஒரு இட்லராக இராசபக்சே உருவெடுத்திருக்கிறார். இலங்கையில் உள்ள தமிழர்களை கொன்று குவிப்பதோடு, தமிழ்நாட்டு மீனவர்களையும் நரவேட்டையாடி வருகிறார். அது மட்டுமல்ல, இராணுவ ரீதியில் இராசபக்சே வலிமை பெறுவ தற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகள் உதவியிருக்கின்றன. எதிர் காலத்தில் இராசபக்சே தனது இராணுவ வலிமையை குறிப்பாக இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தினால் அதைத் தடுத்து நிறுத்தும் வேலை அவ்வளவு எளிதானதல்ல. வரப்போகிற அபா யத்தை எண்ணிப் பார்க்காமல் இந்த நாடுகள் ஒரு கொடிய பூதத்தை வளர்த்து விட்டிருக்கின்றன.

இந்தப் பேரபாயத்திலிருந்து தென்னாசியாவைப் பாதுகாக்க வேண்டி யது ஒருபக்கம் இருந்தாலும், இந்தக் கொடுங்கோலனின் பிடியில் சிக்கித் தவிக்கும் எஞ்சிய தமிழர்களையாவது காப்பதற்கு உலகம் முன்வருகிறதோ இல்லையோ, ஆனால் உலகத் தமிழர் களாகிய நாம் அதற்கான உறுதியைப் பூண வேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இந்த உறுதியை ஒவ்வொரு தமிழனும் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி : 'தேவி' வார இதழ்
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.