''ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத் தீ அணையாது'' - மூத்த தலைவர் நல்லகண்ணு எச்சரிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 மே 2012 12:32

'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற பொருத்தமான தலைப்பைக் கொடுத்து இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள். பிரபாகரன் என்பவர் தமிழர்களின் எழுச்சியின் வடிவம் என்ற பொருத்தமான பொருளைத் தரும். காரணம் 21ஆம் நூற்றாண்டில் இரண்டாவது உலகப் போர் முடிந்த பிறகு இந்தியாவிலும் ஆசிய நாடுகளிலும் பல போராட்டங்கள் நடந்து வெற்றியும் பெற்றிருக்கின்றன.

அந்த ஒவ்வொரு போராட்டத்திலும் மீண்டும் ஒரு உலகப் போர் நடக்குமோ என்ற அச்சம் வந்த பிறகு அந்தப் போராட்டங்கள் வெற்றிபெற்றன. வியட்னாமிலும் சரி- பாலத்தீனத்திலும் சரி - கொரியாவிலும் சரி - கியூபாவிலும் சரி இந்த நாடுகள் எல்லாம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் போர் நடக்காமல் அந்தச் சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டின் வெற்றியை அவர்கள் ஏற்படுத்தினார்கள். பாலத்தீனம் கூட இன்னும் போராட்டத்தில் இருக்கிறது. இஸ்ரேல் என்று ஒரு நாடு தோன்றியது. தங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் எனக் கருதி அவர்களும் தங்களுக்கான நாட்டை உருவாக்கினார்கள்.


1981இல் தொடங்கி 21ஆம் நூற்றாண்டு வரை 2009 வரை ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் சாதாரணமானதல்ல. தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் தங்களுடைய இனம் அங்கேயே ஈடுபடவேண்டும் என்பதற்காகவும் நடந்த போராட்டம். இவ்வளவு நீண்ட நெடிய போராட்டம் நடந்து அது ஒடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இது தான் இவ்வளவு பெரிய நீண்ட நெடிய போராட்டம். இந்தியாவில் எவ்வளவு கோடி தமிழ் மக்கள் இருந்தாலும், உலக நாடுகளில் தமிழ் மக்கள் பரவி இருந்தாலும் அதற்குப் பிறகு சிங்கள இராணுவத்தால் பாதிக்கப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு நாடுகளுக்குப் போய் அடைக்கலம் தேடிப் புகுந்த பிறகுதான் உலகம் பூராவும் தமிழ் மக்கள் என்று ஒரு இனம் இருக்கிறது அவர்கள் விரட்டப்பட்டு இங்கே வந்திருக்கிறார்கள் என்று அறிந்தார்கள். அங்கே சென்ற மக்கள் தமிழ் மொழியையும் தமிழ் உணர்வுகளையும் பரப்பி வந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை. அதனால் தான் தமிழர் எழுச்சியின் ஒரு வடிவமாக இவர் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். மாவீரனாகவும் கருதுகிறோம் அதில் சந்தேகம் இல்லை.

பல தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நமது நெடுமாறன் அவர்களும் எழுதியிருக்கிறார். எவ்வளவு பெரிய போராட்டத்தில் தொடர்ந்து வந்த நெருக்கடியில் அவர் அவற்றைச் சமாளித்து உறுதியாக இருந்திருக்கிறார். நிச்சயமாக மனித உரிமை வெற்றி பெறும். மக்கள்தான் போராட்டத்தை நிர்ணயிக்கிறார்களே தவிர ஆட்சியில் உள்ளவர்கள் அல்ல. மக்கள்தான் போராட்டத்தை நிர்ணயிக் கிறார்கள். ஆயுதம் தாங்கிய போராட்டமா அமைதியான போராட்டமா அணுகுண்டு உபயோகித்த போராட்டமா என்பது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தேவையைப் பொறுத்துதான் ஆயுதம் வருகிறது. எதிரிகள் எப்படி இருக்கிறார்களோ அவர்களை எதிர்த்து நின்று போராடினால்தான் வாழமுடியும் என்பதால்தான் ஆயுதத்தை எடுக்கிறோம். ஆயுதம் தாங்கிய பிறகுதான் கொள்கை வேர்விட்டு வளரும் என்பது உலக வரலாறு. அந்த வகையில் தான் ஈழ மக்கள் விடுதலையும். அது அணைந்து விடாமல் மேலும்மேலும் துளிர் விட்டு வளரும். யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. அதுதான் வரலாறு. அந்த முறையில் தான் நாங்கள் பார்க்கிறோம். அதைத்தான் நம்முடைய நெடுமாறன் இவ்வளவு பெரிய நூலாக எழுதியிருக் கிறார்கள். அவர் எது எழுதினாலும் செம்மையாகச் செய்வார். எழுதுவார். அவரும் அதிகமாக ஓங்கிப் பேச மாட்டார். அவரிடம் நிதானமாக இருந்து பேசிக் கொண்டிருந்தால் தான் பல உண்மைகள் வெளிவரும். எழுத்திலும் அப்படித் தான். ஆனால் உறுதியானவர் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். 1978வது வருடத்திலேயே இந்திராகாந்தி அம்மையார் மதுரைக்கு வரும்போது தாக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து இந்திராகாந்தி அம்மையாரைப் பாதுகாத்த பெருமை நம் நெடுமாறனுக்கு உண்டு. அவர் அடிக்கப்பட்டார்; சித்தன் அடிக்கப் பட்டார் என்று தெரிந்து நானும் தோழர் நடனசாமியும் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கப் போனோம். சித்தனைச் சந்தித்தோம். சித்தனுக்கு கண்ணில் அடிபட்டு ஒரு கண் போய்விட்டது. இவருக்கு அடி பட்டிருந்தது. மருத்துவ மனையில் இருந்து போய்விட்டார்கள். வீட்டிற்குப் போய் பார்த்தோம். அப்பொழுதுதான் அவர் சொன்னார். கக்கன் மருத்துவமனையில் இருக்கிறார். அவரையும் பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்று சொன்னார்.

1983இல் சனநாயகப் பாதுகாப்பு அணி என்று ஒன்றை ஆரம்பித்தோம். அவர்தான் தலைவர். எங்கள் கட்சியின் செயலாளர் தோழர் மாணிக்கம். ரொம்பத் துணையாக இருந்தார்கள். இரண்டு பேரும் ரொம்ப ஓங்கிப் பேசாதவர்கள். கொள்கையில் உறுதியாக இருந்தவர்கள். தமிழகத்தில் சனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்கள். அது சீராக நடந்து வந்தது. பல பிரச்சினைகளைச் சந்தித்தோம். சனநாயகத்தைப் பாது காப்பது பற்றி பேசினோம். ஆனால் அது நீடிக்காமல் போய்விட்டது. யோசித்துப் பார்க்கையில் அவருடைய தலைமையில் அந்த சனநாயகப் பாதுகாப்பு அணி நீடித்திருந்தால் நாட்டில் சனநாயகம் எவ்வளவோ சாதகமான நிலையை உருவாக்கி யிருக்கும் என்று நாங்கள் அடிக்கடி பேசிக்கொண்டிருப்போம். அவர் என்ன எழுதினாலும் சீராக பிசிறில்லாமல் எழுதுவார். இப்பொழுதும் பல வரலாற்றுச் செய்திகள் தினமணியில் தொடர்ந்து வருகின்றன. நான் உடனுக்குடன் கட்டுரையைப் படிப்பேன். முந்தாநாள் கூட கட்டுரையைப் படித்து விட்டு அவருடன் பேசினேன். காலை 6 மணி.. அந்த அளவுக்கு நாங்கள் தொடர்பு வைத்துக் கொள்கிறோம். நூலை வேகமாகப் படித்தேன். பல வரலாற்று விஷயங்கள் உள்ளன. பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. ஒன்று விடாமல் வரலாற்று விஷயங்களை நாம் படிக்க முடிகிறது பல்வேறு சம்பவங்கள் உள்ளன.

இந்த ஈழப் பிரச்சினையில் கூட நாங்கள் பல வகையில் பல நேரங்களில் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் கூட ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் பேசுவோம். ஒருதடவை வைகோ அவர்களுடன் ஒரு போராட்டத்தின் போது நாங்கள் ஒன்றாக இருந்தோம். அப்போது நான் என் கருத்தை என்னுடைய தனிப்பட்ட கருத்தை அவருடன் வந்து விவாதித்தேன். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து நெடுமாறன் அவர்களிடம் வந்து விவாதித்தேன். அவ்வப்போது எங்கள் நிலையில் உள்ள மாற்றத்தை நாங்கள் விவாதிப்போம். ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். நாட்டில் பல நேரத்தில் பல பிரச்சினைகள் வருகின்றன. ஈழத்தில் நம்முடைய பிரபாகரனுக்கு ஈடு 21ஆம் நூற்றாண்டில் யாரும் இல்லை. தலைமைப் பண்பும் அவருக்கு இருக்கிறது என்பதிலும் எந்த வகையிலும் ஈடு சொல்ல முடியாத குறை சொல்ல முடியாத ஒரு வீர மாணிக்கம்.

மன்மோகன் சிங் யார் என்றால் உலக முதலாளிகளின் கையாள். மன்மோகன் சிங் தனி ஆள் அல்ல. உலக முதலாளிகளின் கையாள். சோனியாகாந்தி சாதாரண பெண்மணி. இலங்கை கஷ்டப்படுவதற்கு காரணம் உலகநாடுகளுக்கு மையமாக உள்ளது. திரிகோண மலையில் அமெரிக்காவே இறங்கி உள்ளது. இந்திய முதலாளி களும் பெருமுதலாளிகளும் அதில் பங்குகொள்ளப் பார்க்கிறார்கள். தமிழர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். சிங்களர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை. அந்த ஆதிக்கத்தில் பங்கு கொள்வோம் என்று நினைக்கிறார்கள் பெரு முதலாளிகள். உலகமுதலாளிகளின் சூழ்ச்சிக்கு மையமான இடமாக இருக்கிறது இது. அதனால்தான் இவ்வளவு வேதனைகள். அதோடு சிங்கள இனத்தில் நிலப்பிரபுக்களும் சூழ்ச்சி செய்கிறார்கள்.

பிரேமதாசாவானாலும் சரி, செயவர்த்தனாவானாலும் சரி பண்டார நாயகாவானாலும் சரி. பண்டார நாயகாவைக் கூட நாங்கள் சனநாயக வாதி என்று முதலில் நினைத்தோம். நேருவுக்குத் துணையாக இருக்கிறார் என்று நினைத்தோம். பண்டாரநாயகா ஒரு மதம் ஒரு மொழி, என்பதிலே தீவிரமாக இருந்தார். அவருடைய செயலைப் பார்த்து எங்களைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சி. இரண்டு மொழி என்றால் தான் நாடு. ஒரு மொழி ஒரு மதம் என்றால் இரண்டு நாடு ஆவதைத் தவிர ஒரே நாடாக இருக்க முடியாது. இந்த கருத்தைச் சொன்னவர் கொல்லப்பட்டார். இதெல்லாம் உண்டு நாட்டில். இரண்டு மொழி என்றால் ஒரு நாடாக இருக்கலாம். ஒரே மொழி என்றால் தமிழனுக்கு இடம் இல்லை. இரண்டு நாடாக வந்து விடும். எவ்வளவு சமரசம் செய்தாலும் முடியாது. நமக்குள்ள உரிமை அது. நமக்கு என ஒரு மாநிலச் சுயாட்சி உரிமை கூட வரவில்லை. நமக்குள்ள உரிமை மறுக்கப்பட்ட பிறகுதான் அங்கே ஆயுதம் தாங்குவது என்ற நிலை ஏற்பட்டது. அதனால் ஆயுதம் தாங்குவது தப்பல்ல. விடுதலைக்காகப் போராடியது தப்பல்ல. நாங்கள் அதைத் தான் சொல்கிறோம்.

அன்றைக்கு இந்தியப் படை போகும்போது எங்கள் தலைவர் இந்திரசித் குப்தா ஒரு நாட்டில் நடைபெறும் உள்நாட்டுப் பிரச்சினையில் இன்னொரு நாடு படையெடுத்துப் போகக்கூடாது. எவ்வளவு யோக்கியமானவனாக இருந்தாலும் கூட ஒரு படை ஊரை விட்டுப் போகும் போது அங்குள்ள மக்களை சிறுமையாகத் தான் நினைப்பார்கள். அந்தத் தவறு இந்திய இராணுவத்திற்கு வந்து விடக்கூடாது. அவர்கள் வெளியே போவதைத் திரும்பப் பெற வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் எங்கள் தலைவர் இந்திரசித் குப்தா. என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் பல பாரம்பரியமான விஷயங்களை இவர்கள் இரண்டு பேரும் பேசினதும் இன்னும் பலபேர் பேசினதும் பிரபாகரன் அவர்களும் குட்டிமணி அவர்களும் எல்லோரும் பலமுறை அலுவலகத்திற்கு வந்திருக் கிறார்கள். நாங்கள் பார்த்திருக்கிறோம். பாலசிங்கம் அவர்களுடன் எல்லாம் பேசியிருக்கிறோம். சிலநேரங்களில் வரும்போது அங்குள்ள தொலைக் கருவிகள் எல்லாம் மோகன்தாசு பிடுங்கிவிட்டபிறகு தோழர் கல்யாண சுந்தரம் ''நீங்கள் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவை வாபசு வாங்கிவிட்டீர்களா'' என்று கேட்டார். ''இல்லை'' என்று சொன்னார். ''அப்படியானால் அவர்களிட முள்ள தொலைத்தொடர்பு கருவிகளை பிடுங்குவது எப்படி நியாயம் என்று கேட்டார். இப்படி பல விஷயங்கள். அவை எல்லாம் தெரிந்தபிறகு தான் அவர்கள் கேட்பது பிரிவினை அல்ல. அது அவர்கள் உரிமை.. எனவே நாம் ஆதரிக்க வேண்டும் என்ற நிலை எடுத்தோம்.

இந்த நிகழ்ச்சியை இனப்படு கொலை என்று சொன்னவர் எங்கள் இந்திய கம்யூனிசுடு கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான ராசாதான் ராச்ய சபாவில் இக்கருத்தைச் சொன்னார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். சபாநாயகர் மறுத்தார். அது குறிப்பிலிருந்து இனப்படுகொலை என்ற சொல் எடுக்கப்பட்டது. அன்று அவர் அதைத் தொடர்ந்து சொன்னதால்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய பாரதிய சனதா கட்சியைப் பிடிக்கவில்லை. இந்திய கம்யூனிசுடு கட்சிக்கு இடம் இல்லை என்றார். நாங்களும் அங்கு போக விரும்பவில்லை. இப்படி பல வேலைகள் நடக்கின்றன. இந்த நிலையில்தான் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புவது வரலாறு என்பது பாடமாக இருக்க வேண்டும். இந்திய நாடும் பல வேதனைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அப்படி ஏற்படும்போது நாம் நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த முயற்சியும் நமக்குத் தேவை. அந்த நிலையில்தான் ஈழத்தில் நடப்பது மிகப் பெரிய போராட்டம்.

மனித சமுதாயத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் இன்று உலகப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது என்பதைப் பார்க்கும்போதுதான் ஈழத் தமிழர்கள் பிரச்சினை இன்று ஐநா சபைக்கு வந்திருக்கிறது. இது உலகத்தில் ஒரு நாட்டில் நடக்கிறது என்று சொன்னால் - இராசாசி கூட சொன்னார் - இந்த மாதிரி அடுத்த நாடு என்று விட்டுவிடக் கூடாது என்று - நேரு கூடச் சொன்னார் இராசாசியும் சொன்னார் - ஒரு நாலு சுவருக்குள் குடும்பம் நடக்கிறது: குடும்பச் சுவருக்குள் வைத்து நடந்தால் யாரும் தலையிட முடியாது. சுவரை விட்டு வெளியில் வந்து மனைவி தானே என்று அடித்தால் மற்றவர்கள் அதைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் அவர்கள் மனிதர்களாகக் கருதமுடியாது. ஒரு நாட்டில் என்று வரும்போது ஒரு நாட்டிலுள்ள மனிதர்கள் ஒருவருக் கொருவர் அடித்து கொல்லப்பட்டால் வெட்டிக் கொல்லப்பட்டால் நாம் தலையிட முடியாது. ஆனால் ஒரு இனத்தையே அழிக்கலாம் என்று இன்னொரு இனம் வந்தால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மனித இனம் அழிவதற்குக் காரணமாகவும் பாசிச நடவடிக்கை வளர்வதற்குக் காரணமாகவும் அமைந்து விடும் என்று இராசாசியே சொல்லியிருக்கிறார். நேருவும் பல இடங்களில் அப்படிச் சொல்லியிருக்கிறார். அதைப்போல இலங்கையில் நடப்பது இனப்படு கொலை. மனித உரிமை மறுப்பு. தமிழர்களை அழிப்பது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். அங்குள்ள கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் எல் லாருமே சூழ்ச்சி மிக்கவர்கள். அதுபோல பலவகையில் சூழ்சிசியானதுதான் செயவர்த்தனா-இராசீவ்காந்தி ஒப்பந்தம். பிரேமதாசா அந்த சூழ்ச்சிகளை எல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

நான் கடைசியில் சொல்ல விரும்புவது - நம்முடைய தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சொன்னார்கள் மணியரசன் அவர்கள் சொன்னார்கள் - அந்த கருத்துகளிலே வித்தியாசம் இருந்தாலும் நாம் ஈழத் தமிழர்களுடைய உரிமைப் பிரச்சினை. யார் மறுத்தாலும் அவர்களுடைய உரிமை வெற்றிபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதே நேரத்தில் இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரன் அவர்களுடைய ஆளுமை, அவர்களுடைய தலைமை, தியாகம், குடும்பத் தியாகம், அவருடைய தியாகம் அனைத்தையும் பார்க்க வேண்டும். கடைசியில் பிரேமதாசாவாகட்டும், செயவர்த்தனா ஆகட்டும், பண்டாரநாயகா ஆகட்டும், இப்போது இராசபக்சே ஆகட்டும் அவர்கள் எல்லாம் எப்படி சூழ்ச்சி செய்தார்கள்; அதில் நாம் எப்படித் தவறிவிட்டோம். என்பதையெல்லாம் தனியாக - பிரபாகரன் என்ற மாபெரும் வரலாறு என்று இல்லாமல் அடுத்த பகுதியாக அரசியலில் எல்லாத் தரப்பு சூழ்ச்சிகளையும் நாம் எப்படிப் புரியாமல் இருந்தோம் என்பதையெல்லாம் - எழுதினால் நமக்கு, தமிழ்நாட்டுக்கு பாடமாக அமையும் என்பது என் கருத்து. அந்த கருத்தை நெடுமாறன் அவர்களிடம் தெரிவிக்கிறேன் அவர் களுக்கு எல்லா விஷயமும் தெரியும். அதெல்லாம் நம் வரலாற்றில் நாம் அதை மறுபதிப்பாக வரும்போது அது போன்ற தவறுகள் மீண்டும் நமக்கு வராமல் இருப்பதற்கு, நாம் நம் தவறைத் திருத்திக் கொள்வதற்கு நமக்குப் பயன்படும் என்ற முறையில்தான் இந்தக் கருத்தைச் சொல்கிறேன். அதெல்லாம் நமக்குத் தேவையானது.

தனி மனிதர்கள் இவ்வளவு பெரிய சாதனையைச் சாதிக்கும்போது அரசியல் என்பது தலைவர் லெனின் அவர்கள் சொன்னது போல பெரிய நாலு வழிச்சாலை இல்லை. அரசியலில் சூழ்ச்சி பற்றி தெரிந்து கொண்டுதான் அரசியல் நடத்த வேண்டியிருக்கிறது. ஆதிக்கச் சக்திகள், சூழ்ச்சி நிறைந்த வர்கள். உண்மைக்கு மாறாக இருப்ப வர்கள். எல்லா வகையிலும் எல்லாத் துறையிலும் சூழ்ச்சி அதிகமாக இருக்கிறது. அந்த சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு அனைவரையும் இணைத்துக் கொண்டு காரியங்களைச் செய்தால் சூழ்ச்சிக்காரர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். தனிமைப்படுத்தலாம். அதிகார ஆணவம் உள்ளவர்களை ஒடுக்கலாம். இதிலே எங்கள் தரப்பைப் பொறுத்தவரை நாங்கள் அதைத்தான் இன்று வரை நினைக்கிறோம். இணைப் பதற்காக அன்றைக்கும் எங்களுக்குத் தெரியும். ஈழத்திலிருந்து வந்த அத்தனை நண்பர்களுடனும் நாங்கள் பேசினோம். எங்கள் தலைவர் கல்யாணசுந்தரம் பேசினார். தோழர் மாணிக்கம் பேசினார். இவ்வளவும் இந்த மண்ணில் வந்துகூட உணர்வுகளைத் தடுத்து நீங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று முயற்சி பண்ணினோம். அதிலே தோல்வி கண் டோம். நம் தமிழ்நாட்டில் அதுபோன்ற தவறுகள் வந்துவிடக்கூடாது என்ற முறையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நம் உரிமைகளைப் பாது காக்க வேண்டும். நம்முடைய உரிமை களைப் பாதுகாப்பதன் மூலம் ஈழத் தமிழர்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டும்

ஈழத்தமிழர்கள் 35 இலட்சம் 40 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இன்றைக்கு அங்கே 10இலட்சம் 15 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் உலக நாடுகள் அனைத்திலும் அவர்கள் பரவி இருக்கிறார்கள். அவர்கள் எல்லா இடங்களிலிருந்தும் குரல் கொடுக்கிறார்கள். எல்லோரையும் வாழவைக்கும் முறையில் நம் தமிழ்நாடு நல்ல முறையில் வாழ்ந்தால்தான் அவர்களையும் வாழவைக்க முடியும் என்று கருதித் தான் நான் இந்த கருத்தைச் சொன்னேன். இதைப் பாடமாகக் கொண்டு நம்மை எப்படி ஒற்றுமைப்படுத்துவது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டு அந்த அத்தியாயத்தையும் அடுத்து தனி நூலாக நெடுமாறன் அவர்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதனால் நம் குறைகளைச் சொல்வதாக ஆகாது. குறைகளை நீக்கித் தவறுகள் வராமல் பாதுகாப்பதற்கு மனிதவளத்தைப் பாதுகாப்பதற்கு நம்முடைய மக்களைப் பாதுகாப்பதற்கு, அந்த நடவடிக்கை, அந்த கருத்துகள் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு அருமையான நூலான இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பெரிய வரலாறு இது. சின்ன நாடாக இருந்தாலும் மனித இனத்தில் பெரிய பொறுப்பு இருக்கிறது. பல அறிஞர்கள் அங்கே இருக்கிறார்கள். நம்முடைய தாமிரபரணி அங்கேயும் இருக்கிறது. பல அறிஞர்கள் வழிகாட்டக் கூடியவர்கள் இன்றைக்கும் அங்கே இருக்கிறார்கள். அவர்களுக் குள்ள துயரம் நமக்குண்டு. நமக்குள்ள துயரம் அவர்களுக்கு உண்டு. இதைப் புரிந்துகொண்டு அவர்கள் பட்ட கஷ்டநஷ்டங்களில் இருந்து நாம் பாடம் கற்று ஒரு புதிய அத்தியாயத்தை இன்னொரு நூலை வெளியிட வேண்டும். என்று கேட்டுக் கொண்டு இந்த நல்ல நூலை படைத்துக் கொடுத்ததற்கு நெஞ்சார நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.