உலகத்தின் கவனத்தினை ஈர்த்த 1983 ஜூலை தமிழின அழிப்பை நினைவுகூரும் நினைவேந்தல் நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 21-07-2012 அன்று 6. 30 மணிக்கு மெல்பேர்ணிலுள்ள சென் யூட்ஸ் மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், ஆஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசியக்கொடி ஏற்றல், பொதுச்சுடர் ஏற்றுதல், அகவணக்கத்துடன் நினைவேந்தல் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.
விடுதலைக்காக போராடிவரும் குர்திஸ் சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்குகொண்டு, தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஜூலைப் படுகொலையின் நிகழ்வுகளை இளையோர் செயற்பாட்டாளரான சிறிராம் அவர்கள் காணொளி தொகுப்பு மூலம் காட்சிப்படுத்தி விளக்கினார். மூத்த செயற்பாட்டாளரான வைத்தியக் கலாநிதி ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை அவர்கள், 1983 ஜூலையில் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பானது எவ்வாறு திட்டமிடப்பட்டு தமிழர்களை அழிக்கும் நோக்கோடு செயற்படுத்தப்பட்டது என்பதை தனது தனிப்பட்ட அனுபவத்தின் ஊடாக நினைவுகூர்ந்தார். நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய ஆஸ்திரேலிய குர்திஸ் சமூகத்தின் பிரதிநிதியான ரொட் மெகே அவர்கள் உரையாற்றுகையில், தமிழ் மக்களுக்கு எவ்வாறு அநீதி இழைக்கப்பட்டதோ அதே வகையில்தான் தமது தேசமும் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை நினைவுபடுத்தினார். விடுதலைக்காக போராடிவரும் தேசங்கள் சனநாயகப் பண்புகள் நிறைந்த முன்னேறிய நாடுகளில்கூட, பாரிய சவால்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டினார். தொடரும் காலத்தில் தமிழ் மக்களோடு இணைந்து செயற்படுவதற்கான தமது ஆவலையும் வெளிப்படுத்தினார். தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக சட்டரீதியான உதவிகளை மேற்கொண்டுவரும் றொபேட் ஸ்ராறி இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டார். அவர் தனதுரையில், ஆஸ்திரேலியாவில் தமிழ் மக்களும் குர்திஸ் மக்களும் தமது தாயகத்திற்கான உதவிகளை மேற்கொள்வதில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை சுட்டிக்காட்டி நீதிக்காக தொடர்ந்தும் உழைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரு சட்டவாளராக இலங்கையில் தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை தாம் ஆதரிப்பதாகவும் தமிழ்மக்களுக்கு அங்கு உரிமைகள் மறுக்கப்பட்டதன் சம்பவங்களையும் எடுத்துக்கூறினார். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அடக்குவதற்கு சிறிலங்கா அரசு எவ்வாறு வெளிநாடுகளை பயன்படுத்துகின்றது என்பதையும், அவற்றில் எவ்வாறு வெளிநாட்டு அரசுகள் கடந்த காலங்களில் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன என்பதையும் தான் கையாண்ட வழக்கு விசாரணைகளின் அனுபவத்தின் ஊடாக குறிப்பிட்டார். தமிழ் மக்களின் வலிமிகுந்த உணர்வுகளை புரிந்துகொண்ட ஆஸ்திரேலிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான பென் சோலோவின் பேச்சும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது. இவர் உலகெங்கும் இடம்பெறும் மனிதப் படுகொலைகள் குறித்து தனது சித்திரங்களின் ஊடாக பல்லின மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டுசெல்லும் இளம் செயற்பாட்டாளர் ஆவார். இவர் தனது பேச்சின்போது சிறிலங்கா அரசு எந்த ஆதாரமும் இன்றி மேற்கொண்ட அப்பட்டமான மனிதப்படுகொலைக்கு சர்வதேச சமூகம் மெளனம் காத்தமை குறித்த கவலையையும் கண்டனத்தையும் முன்வைத்து பேசினார். இறுதி நிகழ்வாக பழ. நெடுமாறன் அவர்களினால் எழுதப்பட்ட "பிரபாகரன் தமிழர்எழுச்சியின் வடிவம்' என்ற நூலை மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. வெளியிட்டுப் பேசினார். இரவு 8.30 மணிவரை உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வு கொடியிறக்கத்தை தொடர்ந்து "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்' என்ற உறுதியேற்றலுடன் நிறைவடைந்தது
|