எதையும் சாதிக்காதவர் அரசு மீதான நம்பகத்தன்மை குறைவதற்குப் பொறுப்பானவர் பணவீக்கம், ஊழல்களால் மக்களின் அதிருப்திக்குள்ளானவர் ரூபாய் மதிப்புக் குறைவுக்குக் காரணமானவர்
அமைச்சர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர். திசை தெரியாமல் தடுமாறும் பொருளாதாரத்தை நெறிப்படுத்த முடியாதவர். 100 கோடி மக்களுக்கு மேல் வாழும் இந்தியாவின் பிரதமருக்கு உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டைம் இதழ் சூட்டிய புகழ்மாலைகள்தான் மேற்கண்டவையாகும். இந்தியாவின் பிரதமராக இருந்த யாரும் இத்தகைய இகழ்ச்சிக்கு ஆளானதில்லை. அளவுகடந்த பொறுமை, சொந்த வாழ்க்கையில் நேர்மை ஆகியவற்றால் அனைவரின் நன்மதிப்புக்கும் ஆளான வரும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது பொருளாதார தொலை நோக்குத் திட்டங்களின் மூலம் இந்திய நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவரும், 1990களில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை கொண்டுவந்து நாட்டை வேகமான வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் எனப் பாராட்டப்பட்டவருமான மன்மோகன்சிங் நகைப்பிற்கிடமான இந்த நிலைக்கு ஆளானது ஏன்? இந்தக் கேள்விக்குரிய விடையை டைம் இதழே வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவரான சோனி யாவுடன் அதிகாரப் பற்றற்ற முறையில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் அவர் இருப்பதால் அவரது கரங்கள் கட்டுண்டு கிடக்கின்றன. எனவே தன்னிச்சையாகச் செயல்படமுடியாத பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளார். அதற்கு சீரிய எடுத்துக்காட்டு இதுதான். சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழலான 2ஜி அலைக்கற்றை ஊழலை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த இராசா கையாண்ட வழிமுறை களின் விளைவாக அரசாங்கத்திற்கு 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டதை பொதுகணக்குத்துறை சுட்டி காட்டிய போதும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பி நாடாளுமன்றத்தையே முடக்கியபிறகும் அசைந்துகொடுக்க மன்மோகன்சிங் மறுத்தார். இறுதியாக உச்சநீதிமன்றம் இப்பிரச்சினையைத் தனது கையில் எடுத்துக்கொண்டு பின் வருமாறு கடும் கண்டனம் தெரிவித்தது. "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதை சில நாட்களுக்கு ஒத்தி வைக்குமாறு அமைச்சர் இராசாவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை இராசா அலட்சியப்படுத்தியதோடு, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையையும் பெறவேண்டும் என்ற சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்து தொடர்பாக பிரதமருக்கு இராசா எழுதிய கடிதத்தில் நியாயமற்றது, பாரபட்சமானது, தன்னிச் சையானது என்ற தகாத வார்த்தை களைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்திப் பிரதமருக்குக் கடிதம் எழுதியதன் மூலம் பிரதமரையே அவர் அவமதித் திருக்கிறார்'' என்று உச்சநீதிமன்றம் பகிரங்கமாகக் கண்டித்தது. ஆனால், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட இராசா மீது எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள் ளாமல் பிரதமர் பதுங்கிக்கொண்டது ஏன்? பிரதமருக்கு மேலான சக்திகள் இராசாவுக்கு ஆதரவாகத் தலை யிட்டனவா? பிரதமரையே அலட்சியம் செய்யும் துணிவு இராசாவுக்கு வந்த பின்னணி என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இராசா அமைச்சர் பதவியில் தொடர்வதை உச்சநீதிமன்றம் மிகக்கடுமையாக கண்டித்த பிறகே அவரை பதவிவிலக பிரதமர் அனுமதித்தார் என்பது பிரதமருக்கு மட்டும் இழிவு அல்ல; நாட்டிற்கே இழிவாகும். அதைப் போல காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடு களில் நடைபெற்ற பெரும் ஊழல். கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங் களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதிக்குழுவில் நடைபெற்ற ஊழல்கள், இந்திய பிரிமியர் லீக் சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற பெருமளவு ஊழல்கள் போன்ற அடுக்கடுக்கான பல ஊழல்கள் அம்பலமானபோதெல்லாம் இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் காங் கிரஸ் கட்சியின் பெருந்தலைகளாக இருந்த காரணத்தினால் மன்மோகன்சிங் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஊமையிலும் ஊமையாகச் செயலற்றுக் கிடந்தார். தனது சொந்த வாழ்வில் நேர்மை மிக்கவராகவும் கறைபடியாத கரங்களுக் குச் சொந்தக்காரராக இருப்பவருமான மன்மோகன் சிங் தன்னை மையமாக வைத்து நடைபெற்ற ஊழல்களைத் தடுக்கவும், ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்கியதன் மூலம் அந்த ஊழல்களுக்கு அவர் மெளனசாட்சியாக இருந்தார் என்பதுதான் பொருளாகும். அவர் ஆட்சியில் நடைபெற்ற பெரும் ஊழல்களில் அமைச்சர்கள் மட்டுமல்ல அதிகாரிகளும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி கரமான உண்மையாகும். இந்த நிலைமை உருவானதற்கு இராசா போன்றவர்களின் துணிவு மட்டும் காரணமல்ல, மன் மோகன்சிங்கின் பலவீனமான தலை மையும் காரணமாகும். தனது அறிவு ரையை மீறி செயல்பட துணிந்த இரா சாவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரதமர் நீக்கியிருந்திருப்பாரே யானால் அந்த ஊழலைத் தடுத்திருக்க முடியும். அதில் அதிகாரிகளும் அரசி யல்வாதிகளும் பங்குபெறும் துணிவே வந்திருக்காது. "நாடாளுமன்ற சனநாயகத்தில் நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக் கும் பதில் கூறவேண்டிய பொறுப்பில் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அமைச் சர்களின் அதிகாரத்தின் கீழ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அதிகாரவர்க்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அமைச் சர்களே பொறுப்பாவார்கள். அதன்மூலம் நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக் கும் பதில்சொல்லவேண்டிய கடமை அமைச்சர்களுக்கு உண்டு. நமது நாடாளுமன்ற சனநாயக அரசின் மிக முக்கியமான அம்சம் இதுவாகும். நிர் வாகத்தில் ஏதேனும் தவறு நடந்து விடுமானால் அதற்குரிய சூழ்நிலைகளை யும் அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதையும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவேண்டிய கடமை அமைச் சருக்கு உண்டு. சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அமைச்சர்களே கண்டனத்திற் குரியவர்கள் ஆவார்கள்'' என நாடாளு மன்றமும் அரசும் என்ற நூலில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் சட்ட அறிஞரான ஹெர்பர்ட் மாரீசன் கூறியுள்ளார். அரசியல் சட்ட முறையின் படியோ அல்லது சட்டப் பூர்வமாகவோ மட்டும் தனது துறையின்மீது அமைச்சர் முழுமையான அதிகாரம் பெறுவ தில்லை. அரசியலில் அவருக்குள்ள செல்வாக்கின் அடிப்படையிலும் அவர் அந்த அதிகாரத்தைப் பெறுகிறார். தனது கட்சியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராகவும் வலிமை வாய்ந்தவராக வும் விளங்கும் பிரதமர் தனது அமைச் சரவை சகாக்களுக்கு முழுமையான ஆதரவு கொடுப்பாரேயானால் அவரு டைய அமைச்சர்கள் அதிகாரிகளைச் சிறந்தமுறையில் கட்டுப்படுத்துவார்கள். எனவே, அதேவேளையில் பல்வேறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியின் தலைவராக பிரதமர் விளங்குவாரே யானால், கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து செல்ல வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படுகிறது. எனவே அவரால் அரசை திறமையாக வழிநடத்த முடியாமல் போகிறது. இத்தகைய சூழலில் அதிகார வர்க்கத்தின் மீது உள்ள அரசியல் கட்டுப்பாடு பலவீனமடைகிறது. பல்வேறு கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆளாகவேண்டிய பிரதமர் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே பெரும்பாடு படவேண்டிய நிலைமை உருவாகிறது. இந்தச் சூழ்நிலையில் நிர்வாகத்திற்குத் திறமையான தலை மையை அவரால் அளிக்க முடியாது. அதிகாரவர்க்கத்தின் மீது வலுவான அரசியல் கட்டுப்பாடு இருந்தாலொழிய நாடாளுமன்ற ஜனநாயக முறையில் அமைந்த அரசு வெற்றிகரமாக இயங்க முடியாது. கூட்டணிக் கட்சிகள் ஒரு புறமும், சோனியாவின் தலைமை மறுபுறமும் ஆட்டிப் படைக்கும்போது அவரால் என்ன செய்ய முடியும்? அரசியல் ரீதியாக வலிமைவாய்ந்த பிரதமர் ஒருவர் மட்டுமே தனது அமைச்சர்களுக்கு உதவும் வலிமை வாய்ந்த சக்தியாகத் திகழ்வார். அதைப்போல பிரதமருக்கும் அமைச்சர் ஒருவருக்கும் இடையே உள்ள உறவும் கட்சியில் அவருக்குள்ள பொறுப்பும் அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்தும் திறமையை அவருக்கு அளிக்கும். அத்தகைய அமைச்சர் திறமையாகச் செயல்பட முடியும். அதிகாரிகள் தங்கள் அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையே நிலவும் உறவு பற்றியும் கட்சியில் அவருக்கு உள்ள இடம் குறித்தும் நன்கு அறிவார்கள். எனவே அரசியல் ரீதியாக முக்கியமற்ற அமைச்சரால் அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்த இயலாது. ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற தலைவர் அல்லர். காங்கிரஸ் கட்சிக்கும் அவர் புதியவர். கட்சியில் அவருடைய செல்வாக்கு என்பது மிகமிகக்குறைவு. அவரது அமைச்சரவையிலும் உள்ள பல அமைச்சர்களின் நிலையும் இது தான். யாரும் மக்கள் மத்தியில் செல் வாக்குப் பெற்றவர்களுமல்லர். கட்சி யிலும் மதிப்புபெற்றவர்களும் அல்லர். தங்களுக்குள்ள மக்கள் செல்வாக்காலோ, நிர்வாகத் திறமையினாலோ பதவிக்கு வரவில்லை. சோனியாவின் தயவினால் மட்டுமே பதவியைப் பெற்றவர்கள். இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்ட அதிகாரவர்க்கம் பிரதமரையும் அமைச் சர்களையும் மதிக்க மறுக்கிறது. ஊழல் செய்யும் அமைச்சர்களுக்கு உடந்தை யாக இருந்து ஊழல் பணத்தில் பங்கு பெறுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் அமைச்சர் மட்டுமல்ல பெரும் அதிகாரிகளும் ஈடுபட்டுக் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்ச்சி இதை உறுதி செய்கிறது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பி.ஜே. தாமசை நியமிக்க வேண்டிய பரிதாபத்திற்கு பிரதமர் ஆளானது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எதிர்த்தும் கூட அதை அலட்சியம் செய்துவிட்டு நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு யாரால் ஏற்படுத் தப்பட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்டு அந்த நியமனத்தை ரத்து செய்தது பிரதமர் முகத்தில் பூசிய கரி அல்லவா? மன்மோகன்சிங் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவே முழுமுதற் காரணமாவார். எனவே பிரதமர் அவரைச் சார்ந்து நிற்கவேண்டிய அவலத்திற்கு ஆளாகியிருக்கிறார். காங்கிரஸ் தலைவியான சோனியாவோ மூத்த அதிகாரிகளின் ஆலோசனையை எதிர்பார்த்து இருக்கிறார். எனவே அதிகாரிகள் நேரடியாக சோனியாவுடன் தொடர்பு கொண்டு முக்கியமான பிரச்சினைகளில் முடிவெடுக்கிறார்கள். ஈழத்தமிழர் பிரச்சினையில் வெளியுறவுத்துறை செயலாளர்களாக இருந்த சிவசங்கரமேனனும் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணனும் முக்கிய மான முடிவுகளை எடுத்தார்கள். 2009ஆம் ஆண்டில் போர் நெருக் கடியான கட்டத்தை அடைந்தபோது இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப் படும் அபாயத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஆனால் போரை இறுதி வரை தொடர்ந்து நடத்தவும் அதற்குத் தேவையான இராணுவ ரீதியான உதவிகள் அனைத்தையும் அளிப்பது எனவும் இந்திய உயர் அதிகாரிகள் முடிவெடுத்தார்கள். சோனியாவின் சம்மதத்துடன் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் அதற்கு ஒப்புதல் தருவதைத் தவிர வேறுவழி பிரதமருக்கு இல்லை. சிவன் கழுத்திலிருக்கும் பாம்புக் குக் கருடன் அஞ்சவேண்டிய நிலை இருந்த கதையை அப்போதைய தமிழக முதல்வரான கருணாநிதி அறிவார். எனவே உயர் அதிகாரிகள் எடுத்த இந்த முடிவை எதிர்ப்பதற்கு அவர் துணிய வில்லை. இதன் விளைவாக ஒரு இலட் சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பதைக்கப் பதைக்க படுகொலைக்கு ஆளானார்கள் என்பது வரலாறு ஆகும். இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க டைம் பத்திரிகை இந்தியப் பிரதமர் குறித்து ஏளனம் செய்ததில் வியப் பில்லை. இவ்வளவுக்கும் அமெரிக்கா வின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய ஒரு வராகத் திகழும் மன்மோகன் சிங்கிற்கே இந்தக் கதியென்றால் மற்றவர்களின் நிலை என்ன? அமெரிக்காவில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இந்தியப் பிரதமரின் நிலை நகைப்பிற்கிடமாகத் திகழுகிறது. நேரு, இந்திரா போன்றவர்கள் பிரதமர் களாக இருந்த காலங்களில் உலகத் தலைமை அவர்களை நாடி வந்தது. ஆனால் இன்று அண்டை நாடுகள் கூட இந்தியப் பிரதமரை மதிக்க மறுக்கின்றன. இந்தியாவின் தயவுக்காகக் காத்துக் கிடந்த சின்னஞ்சிறிய நாடான இலங்கையின் தயவுக்காக ஏங்கி நிற்கும் நாடாக இந்தியா காட்சி தருகிறது. எப்பேர்ப்பட்ட சரிவு?! உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்? உண்மையான அதிகாரம் படைத்த சோனியாவா? அல்லது அவரைத் தவறாக வழி நடத்தும் அதிகாரிகளா? எது எப்படி இருப்பினும் அவப்பெயர் மன்மோகனுக்கு. நன்றி : தினமணி
|