13ம் திருத்தச் சட்டம் சிறீலங்கா அரசால் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமையானது, பிராந்திய ரீதியாக இந்தியாவின் செல்வாக்கு குறைந்து வருவதையே உணர்த்துவதாக
இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கேணல் ஹரிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். சிறீலங்காவுடன் இந்தியா செய்து கொண்ட ராசீவ் - ஜே.ஆர். உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைய வுள்ளதையொட்டி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றிலேயே மேற்படி சுட்டிக்காட்டியுள்ளார். ராசீவ்காந்தி - ஜெயவர்த்தன உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப் பட்டு 25 வருடங்கள் கடந்த பின்னரும், அதனால் அடையப்பட்ட இலக்குகள் எவையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளவை பின்வருமாறு: 1987ஆம் ஆண்டு சூலை மாதம், 29ஆம் திகதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த உடன்படிக்கையின் ஊடாகவே சிறீலங்காவின் அரசியல் யாப்பில் 13ம் திருத்தச் சட்டம் என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஊடாக மாகாணங்களுக்கான அதிகார பகிர்வு, சிறுபான்மையினருக்கான தீர்வுகள் போன்ற பல்வேறு விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், 13ம் திருத்தச் சட்டத்தின் சரத்துக்கள் அமுலாக்கப்படாமல் இருப்பதும், அதில் வலியுறுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் புறக்கணிக்கப்படுவதும், இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதன் இலக்கை அடையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அதேநேரம், இந்தியா இந்த உடன்படிக்கையில் தீவிரம் காட்டுகின்ற போதும், இந்தியாவின் பிராந்தியத்தில் உள்ள சிறீலங்கா அதனை அமுலாக்க மறுத்து வருகின்றமையானது. பிராந்திய ரீதியாக இந்தியாவின் செல்வாக்கு குறைந்து வருகிறது என்பதை சுட்டிநிற்கிறது. எனவே இந்திய - சிறீலங்கா உடன்படிக்கையினால் இலங்கையில் தீர்வும் கிடைக்கவில்லை என்பதுடன் இந்தியாவின் எந்த இலக்கும் நிறைவேற்றிக் கொள்ளப்படவில்லை எனவும் ஹரிஹரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த கர்னல் ஹரிஹரன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் தாக்குதல் நடத்தச்சென்ற இந்திய அமைதிப்படைக்கு தலைமை தாங்கியவராவார். இலங்கை தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பெருமளவில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வருகின்றன. நன்றி : ஈழமுரசு
|