அனைத்துலக பொது மன்னிப்பகமும் மக்கள் சுதந்திரத்திற்கான ஒன்றியமும் இணைந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்து ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின் வருமாறு கூறியுள்ளன:
இந்தியச் சிறைச்சாலைகளில் சுமார் 400 பேர் மரண தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சுமார் 140 பேர்களாகும். இந்த மரண தண்ட னைகளில் மிகப் பெரும்பான்மை யானவை சூழ்நிலை சாட்சியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டவை.
1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை இந்திய உச்சநீதிமன்றம் பரிசீலித்து தீர்ப்புரைத்த மரணதண்டனை வழக்குகளை அனைத் துலக பொதுமன்னிப்பகம் ஆராய்ந்தது. அவற்றில் சுமார் 700க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆய்வு செய்யும்பொழுது சுமார் 100க்கும் அதிகமான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல்முறையீட்டில் இந்திய உச்சநீதிமன் றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பொய்யாகப் புனையப்பட்ட சாட்சி யம், தவறான புலனாய்வு, பொய்க்குற்றச் சாட்டு மற்றும் குற்றவழக்கிடல் காரண மாக அப்பாவி மக்கள் பலர் மரண தண்டனை பெற்றுள்ளனர் என்றும் மரண தண்டனை விதித்தலிருந்து உலக நாடுகள் மெல்ல மெல்ல விலகி வருவ தால் வழக்கொழிந்துவிட்ட மரணதண்ட னையை ஒழிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வேளை வந்து விட்டது என்றும் அந்த ஆய்வறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் மனித உரிமை அமைப்புகள் பல மரண தண்டனைக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் 1998ஆம் ஆண்டில் இராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் ஒட்டுமொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இந்தியா வில் மட்டுமல்ல உலகெங்கும் அதிர் வலைகள் எழுந்தன. ஒரு கொலை வழக்கில் இவ்வளவு அதிகமான பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது உலக நாடுகள் எதிலும் அது வரை நிகழாத ஒன்றாகும். அதிலும் ஐந்து பெண்களுக்கும் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்டது இதுவரை நிகழாத கொடுமையாகும். இதையொட்டி மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் தீவிரம் அடைந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 தமிழர்களின் வழக் கினை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக என்னுடைய தலைமையில் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் கொண்ட "26 தமி ழர்கள் உயிர் காப்பு வழக்கு நிதிக் குழு" ஒன்று அமைக்கப்பட்டது. இதன் சார்பில் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டது.
இராஜீவ் கொலையை ஒட்டி தமிழ கத்தில் மிகக் கடுமையான ஒடுக்குமுறை கள் ஏவிவிடப்பட்டிருந்தன. மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஊட கங்கள் இக்கொலை பற்றியும் கொலை யாளிகள் குறித்தும் பிரச்சாரம் செய்தன. தமிழ் தமிழர் என்ற உணர்வின் அடிப் படையில் யாரும் வாய் திறக்கக்கூடாது என்பதற்கான மிரட்டல் தொடர்ந்தது. இதற்கு நடுவேதான் தூக்கு மேடையின் நிழலில் நிறுத்தப்பட்டிருந்த 26 தமிழர் களின் உயிரை மீட்க இலட்சிய வேட்கை யும் துணிவையும் துணையாகக் கொண்டு மிகமிக எளியவர்களான நாங்கள் எங் களது முயற்சியைத் தொடங்கினோம். பொங்கி ஓடும் பெருவெள்ளத்தை எதிர்த்து நீச்சல் போடுவது போன்ற முயற்சி எங்களது முயற்சி என்பது தெரிந்துதான் இந்த முயற்சியில் நாங்கள் இறங்கினோம்.
மிட்டா மிராசுகள், பெரும் வணி கர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் எங்களது முயற்சிக்கு துணைபுரிவார்கள் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவு மில்லை. அவர்களை அணுகவுமில்லை. சாதாரண ஏழை, எளிய மக்களை நம்பித் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டோம். மக்கள் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. மக்கள் மனம் உவந்து அள்ளித்தந்த சிறு தொகைகள் பல்கிப் பெருகி பெருநிதியாகக் குவிந்தது.
இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறி ஞர்களில் ஒருவரை 26 தமிழர்களின் சார் பில் வாதாட அமர்த்துவது என முடிவு செய்தோம். தமிழீழப் பிரச்சினையில் உண்மையான ஈடுபாடுகொண்டவரும் பதவியில் இருந்தபோதும் பதவியில் இல்லாதபோதும் அதற்குத் துணையாக நின்றவருமான நண்பர் ஜார்ஜ் பெர்னான் டஸ் அவர்களைத் தில்லியில் சந்தித்த போது இப்பிரச்சினையில் உதவுவதற்கு முன்வந்தார். உச்சநீதிமன்றத்தில் உள்ள மனித உரிமை வழக்கறிஞர்கள் சிலரை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறிய அவருடைய உதவிக்கு நன்றிகூறிவிட்டு சென்னை திரும்பி வழக்கு குழுவினரிடம் ஆலோசித்து பதில் கூறுவதாக சொல்லிவிட்டு வந்தேன். ஆனாலும் வடஇந்தியா வைச் சேர்ந்த வழக்கறிஞர்களைவிட தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் களாக இருப்பது நல்லது என முடிவு செய்தோம். அதற்கிணங்க எனது நீண்ட நாள் நண்பரும் மிக மூத்த வழக்கறிஞரு மான திரு. என். நடராசன் அவர்களை அணுகி வழக்கை நடத்தித் தருமாறு கேட்டோம். அப்போது அவர் மும்பை வெடிகுண்டு வழக்கில் சி.பி.ஐ. நிறுவனத் தின் சார்பில் வழக்கறிஞராக இருந்தார். ஆனால் எங்கள் வழக்கோ சிபிஐ-யை எதிர்ப்பது ஆகும். அவருக்கு தர்மசங்க டமான சூழ்நிலை ஆனாலும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்து விட்டு பதில் கூறுகிறேன் என்று அவர் சொன்னார். ஆனாலும் நான் விட வில்லை. எது எப்படியானாலும் நீங்கள் தான் இந்த வழக்கை நடத்தித் தரவேண் டும் என்று உறுதியாகக் கூறிவிட்டு வந்தேன்.
எதிர்பார்த்ததைப் போல சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தங்கள் ஆட் சேபணையைத் தெரிவித்தபோது அதை அவர் ஏற்க மறுத்தார். ஏற்க மறுத்து விட்டு எங்கள் வழக்கை எடுத்து நடத்த முன்வந்தார்.
27-02-98 அன்று உச்சநீதிமன்றத் தில் 26 தமிழர்கள் சார்பில் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 24-08-98 அன்று இந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதியரசர்கள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, அப்துல்காதர் குவாத்ரி ஆகிய மூவர் கொண்ட ஆயம் நியமிக்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் நடராசன் அவர்களுக்கு துணைபுரிய கீழ்நீதிமன்றத் தில் ஏற்கனவே வாதாடிய வழக்கறிஞர் கள் என். சந்திரசேகர், எஸ். துரைசாமி, டி. இராம்தாஸ், பி.கோபிகிருஷ்ணா,
வி. இளங்கோவன் மற்றும் சுந்தர் மோகன், ஆர். ஜெயசீலன் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள்.
உச்சநீதிமன்றத்தில் 23-09-98 அன்று தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை 15-01-99 வரை தொடர்ந்து நடந்தது. மூத்த வழக்கறிஞர் நடராசன் மிகத் திறமையாக இந்த வழக்கில் வாதாடினார். இறுதியாக 11-05-99ல் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.
நளினி, முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகிய நால்வரின் மரண தண் டனை உறுதிசெய்யப்பட்டது. மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
தூக்குத் தண்டனை பெற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 19 பேர்கள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்ச்சி நாடெங்கும் மக்கள் மத்தியில் பெரும் வினாக்குறியை எழுப்பியது. "இராஜீவ் கொலையாளிகள் என சி.பி.ஐ.யினால் குற்றம் சாட்டப்பட்டு கீழ் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்றம் அற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது எப்படி? குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படாமல் போயிருக்குமானால் இந்த 19 பேரும் அல்லவா மரண தண்டனைக்கு உள்ளாகியிருப்பார்கள். அப்படியானால் இந்த நீதி பிழைப்பட்ட நீதியல்லவா?" என மக்கள் கேட்டனர்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினையும் இந்த வழக்குப் பற்றிய அனைத்து உண்மைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மரண தண்டனை ஒழிப்புப் பிரச்சார பயணம் ஒன்றை நடத்துவது என நாங்கள் முடிவு செய்தோம். மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் நான்கு பேரின் உயிர்களை எப்படியும் காப்பாற்றியே ஆகவேண்டும் என உறுதிபூண்டோம். இதற்காக 22-06-99 அன்று மரண தண் டனை ஒழிப்புப் பிரச்சார பயணத்தினை சென்னையில் இருந்து தொடங்கினோம். 7-7-99 அன்று குமரி முனையில் அதை முடிப்பது என்றும் முடிவு செய்திருந் தோம். ஆனால் பயணம் தொடங்கிய அன்றே எங்கள் பயணத்திற்கு முதலமைச்சர் கருணாநிதியின் அரசு தடை விதித்தது. மரண தண்டனை ஒழிப்புப் பிரச்சாரப் பயணம் நடத்துவது சனநாயக உரிமைகளுக்கு உட்பட்டதே ஆகும். ஆனாலும் அதை ஏன் கருணா நிதி தடுப்பதற்கு முற்பட்டார் என்ற கேள்வி எங்கள் உள்ளங்களை குடைந் தது. உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 19 பேர்களையும் எங்கள் பயணத்தில் அழைத்துச் சென்று மக்களி டம் உண்மைகளைப் பேசவைப்பதை கருணாநிதி விரும்பவில்லை என அவ ருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனாலும் நாங்கள் சோர்ந்து விடவில்லை. உடனடியாக உயர் நீதிமன்றத்தில் இத்தடைக்கு எதிரான மனுவை மூத்த வழக்கறிஞர் திரு. சந்துரு அவர்கள் மூலம் தாக்கல் செய்து அந்தத் தடையை தகர்த்தும் நீதிமன்ற ஆணையைப் பெற்றோம். அதன்பிறகு எங்கள் பயணம் எத்தகைய தடையும் இல்லாமல் தொடர்ந்தது. சென்ற இட மெல்லாம் மக்கள் வெள்ளம் போல் திரண்டார்கள். விடுதலை செய்யப்பட்ட 19 பேர்களின் பேச்சுக்களைக் கேட்டு மனம் கலங்கினார்கள். அப்பட்டமான பொய் வழக்கைத் தொடுத்து ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே மிரட்டு வதற்கு சி.பி.ஐ. செய்த சதி இது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்தார்கள்.
இத்துடன் நாங்கள் நிற்கவில்லை. 19-10-99 அன்று தமிழகம் எங்கும் நான்கு தமிழர்களின் மரண தண்டனையை இரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பட்டினிப் போராட்டங்களை நடத்தினோம். மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது. மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த பலரும் இதற்காக எங்களைப் பாராட்டினார்கள். இந்தியாவி லேயே மரண தண்டனை ஒழிப்பு இயக் கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றதற்காகவே இந்தப் பாராட்டாகும்.
மரண தண்டனைக்கு எதிராக மாணவர்கள் மாநாடு, வழக்கறிஞர்கள் மாநாடு போன்ற பல மாநாடுகள் நடத்தப் பட்டன. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் முன்னாள் நீதியரசர்கள் நெட்டு சீனிவாசராவ், டேவிட் அன்னுசாமி, சுரேஷ் பி.டி. ஜானகி அம்மாள், பி. சந்திரசேகர மேனன், பி.பி. உமர்கோயா, எஸ்.ஆர். சந்திரன் போன்றவர்களும் முன்னாள் டி.ஜி.பி.யான வி.ஆர். லட்சுமிநாராயணன், பொருளாதார அறிஞர்களான டாக்டர் ஏ. வைத்திய நாதன், டாக்டர் சி.டி. குரியன், முன்னாள் துணைவேந்தர்களான டாக்டர் ஜி. வசந்திதேவி, கே.எம். வகாயுதீன், டாக்டர் எம்.ஏ. கரீம் போன்றவர்களும் மற்றும் ஏராளமான பல்கலைக் கழகப் பேராசிரி யர்களும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் நால்வரின் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தன(ர்).
பிறமாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களான பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி, டாக்டர் சுனித் குமார் சட்டர்ஜி, சிம்ரஞ்சித்சிங் மான், ஜெயா ஜெட்லீ, தீ.பி. உமர்கோயா, மோகினி கிரி, டாக்டர் ஜெயச்சந்திரன் போன்றவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். அனைத் துலக பொதுமன்னிப்புச் சபை நால்வர் தூக்குத் தண்டனைக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தது.
நாடெங்கும் மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவானதைக் கண்ட முதல மைச்சர் கருணாநிதி வேறுவழியில்லாமல் அவரும் அதற்காக குரல் கொடுக்க முன்வந்தார். 1999ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாரத்தில் செய்தியாளர் களிடம் அவர் பின்வருமாறு கூறினார்: "தூக்குத் தண்டனை தேவையற்றது என்பதே எனது கருத்தாகும். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினால் குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தும் வாய்ப்புண்டு. உலக அளவிலேயே தற்போது தூக்குத் தண்டனை தேவையற்றது என்ற கருத்து நிலவி வருகிறது. இராஜீவ் கொலை வழக்கிற்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்" எனக் கூறினார்.
நான்கு மாதங்களுக்கு முன்பாக மரண தண்டனை ஒழிப்புப் பிரச்சாரப் பய ணத்திற்கு யார் தடை விதித்தார்களோ அவரே மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ந்தோம். அவருக்கு நன்றியும் தெரிவித்தோம்.
நால்வரின் மரண தண்டனையை நீக்கவேண்டும் என்பதற்காக மக்களிடம் கையெழுத்துகள் பெறும் இயக்கத்தைத் தொடங்கினோம். ஏறத்தாழ 12 இலட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார்கள். 30-11-99ல் 50 ஆயிரம் பேர்கொண்ட மாபெரும் ஊர்வலத்துடன் சென்று மக்களின் விண்ணப்பத்தை முதலமைச்சர் கருணாநிதியிடம் நேரில் அளித்தோம். நால்வரின் மரண தண்டனையைக் குறைக்க ஆவன செய்வதாக அவர் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி செய்யவில்லை.
17-10-99 அன்று தமிழக ஆளுநர் திருமதி பாத்திமா பீவி அவர்களிடம் நால் வரின் கருணை மனுக்கள் அளிக்கப் பட்டன. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார். அந்தச் செய்தி கிடைத்ததும். உடனடியாக கொச்சியில் இருந்த முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினோம். அப்போது அவர் "எதைக் குறித்தும் கவலைப்படவேண்டாம். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தாமும் மற்றொரு நீதிபதியுமாக உட்கார்ந்து இத்தகைய கருணை மனுக்களை தன்னிச் சையாக முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ இல்லை என்றும். மாநில அமைச்சரவையும், மத்திய அமைச்சர வையும் அளிக்கும் பரிந்துரைகளை ஏற்று அவர்கள் செயல்படவேண்டும் என்று தீர்ப்பும் வழங்கியிருப்பதாக" அவர் கூறினார். அந்தத் தீர்ப்பின் அடிப்ப டையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்படியும் அறிவுறுத்தினார். அதற்கிணங்க மூத்த வழக்கறிஞர் திரு. சந்துரு அவர்கள் மூலம் நால்வரின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆளுநரின் ஆணைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றமும் அந்த வழக்கில் 25-11-99 அன்று தீர்ப்பளித்தது. அமைச்சர வையின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர் செயல்படத் தவறியிருப்பதாகக் கூறி அவரது ஆணையை இரத்து செய்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 52 ஆண்டுகாலமாக ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் அமைச்சர வையின் ஆலோசனைகளைப் பெறாமல் செயல்பட்டு வந்ததற்கு இந்தத் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய நீதி வரலாற்றில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். நான்கு தமிழர்கள் தொடர்பான வழக்கின் இத்தகைய சிறப்பான தீர்ப்பைப் பெற்று அமைச்சர வையின் அதிகாரத்தை மீட்டு நாங்கள் கொடுத்தோம். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நால்வர் மற்றும் மரண தண்டனை பெற்ற அனைவரின் தண்ட னையைக் குறைக்கவேண்டிய முதல் அமைச்சர் கருணாநிதி அதைச் செய்ய முன்வரவில்லை. மரண தண்டனைக்கு எதிராக நீட்டி முழக்கியவர் அவர் கையில் அதிகாரம் இருந்தும் அதைச் செய்வதற்கு முன்வரவில்லை.
முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர்களின் மருமகளும் மனித உரிமை ஆர்வலருமான மோகினி கிரி அம்மையார் அவர்களை கருத்தரங்கு ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திருமதி சோனியாவுக்கு அவர் மிக நெருங்கிய தோழி என்பதை நான் அறிந்துகொண்டேன். எனவே அவரிடம் இந்த நால்வரின் மரண தண்டனை தொடர்பாகப் பேசினேன். அதன் விளைவாக அவர் இந்த நால் வரையும் சிறையில் சந்திக்க விரும்பி னார். வழக்கறிஞர் கோபியுடன் அவரை வேலூர் சிறைக்கு அனுப்பிவைத்தேன். இந்த நால்வரையும் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற மூவரையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்த அவர் பெரிதும் நெகிழ்ந்து போயிருந்தார். அதிலும் கற்றறிந்த நளினியின் சந்திப்பு அவர் உள்ளத்தை மிகவும் தொட்டிருந் தது. என்னிடம் அவர்களைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார். திருமதி சோனியா அவர்களிடம் இது குறித்துப் பேசுவதாகக் கூறினார். அதன்படியே பேசி திருமதி சோனியா அவர்களும் இந்த நால்வருக்கும் கருணை காட்டவேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினார்.
இந்த நால்வரின் சார்பில் குடிய ரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தோம். மேலும் டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாய் உட்பட அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து முறையிடுவது என முடிவுசெய்தோம். அதற்கிணங்க மணியரசன், தியாகு, கார்முகில் ஆகியோருடன் நானும் டெல்லி சென்று நண்பர் வைகோ அவர்களின் உதவியுடன் பிரதமர் வாஜ் பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, இராணுவத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராம்ஜெத்மலானி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்து மனுக்களை அளித்தோம்.
சட்டத்துறை அமைச்சர் ஜெத் மலானியைச் சந்தித்தபோது அவர் எங்களிடம் "ஏன் உங்கள் முதலமைச்சரே செய்யலாமே" என்று கூறினார். என்ன காரணத்தினாலேயோ அவர் தயங்குவ தாக நாங்கள் தெரிவித்தபோது முதல மைச்சரின் தொலைபேசி எண்ணை கேட்டு வாங்கிக்கொண்டார். அவரே உடனடியாக அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிது நேரத்தில் முதல மைச்சர் கருணாநிதி அவரிடம் பேசினார்.
"எதற்காக தயங்குகிறீர்கள்" தைரிய மாக செய்யுங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன், என்று ஜெத்மலானி கூறினார். ஆனால் அவர் நீங்களே செய் யுங்கள் என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
திருமதி சோனியா காந்தி அவர்கள் நால்வருக்கும் கருணை காட்டவேண்டும் என்றும் கடிதம் எழுதிய செய்திக்குப் பிறகு நளினியின் தண்ட னையை மட்டும் குறைக்க கருணாநிதி முன்வந்தாரே தவிர மற்றவர்களின் தண்டனையைக் குறைக்கவோ, மரண தண்டனையை ஒழிக்கவோ முன்வரவில்லை.
மரண தண்டனைக்கு எதிராக முழங்கியவர் கருணாநிதி. ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது அதைக் கண்டித்தவர் கருணாநிதி. பாகிஸ் தான் சிறையில் வாடும் சரன்தீப்சிங் தூக்குத் தண்டனையை குறைக்க உலக நாடுகள் குரல் எழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சிறந்த மனித நேயராக தன்னைக் காட்டிக்கொண்டவர் கருணாநிதி.
அண்மையில் சென்னையில் மரண தண்டனைக்கு எதிரான கருத்தரங் கில் கலந்துகொண்ட முதலமைச்சரின் மகள் திருமதி கனிமொழி அவர்கள் தூக்குமேடையின் நிழலில் நிற்கும் பேரறிவாளனின் நூலை வெளியிட்டு மரண தண்டனைக்கு எதிரான கருத்துக் களை கூறினார். இதன் மூலம் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் புதிய நம்பிக்கை பெற்றார்கள். அண்ணா நூற்றாண்டில் தமிழ்நாட்டில் மரண தண்டனை பெற்றவர்கள் அனை வருக்கும் விடிவு காலம் பிறக்கும் என நம்பினார்கள். ஆனால் அந்த நம்பிக்கை அடியோடு தொலைந்துவிட்டது.
உலகளவில் மதிக்கப்படும் முன்னாள் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் அண்ணா நூற்றாண்டில் பேரரறிவாளன் உட்பட மூவருக்கும் கருணை காட்டவேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அந்தக் கடிதத்துக்கும் அவர் மதிப்புத் தரவில்லை.
17 ஆண்டுகாலத்திற்கு மேலாக சிறையில் வாடும் நளினியை விடுதலை செய்யவேண்டு மென எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் கையெழுத் திட்ட வேண்டு கோள் மனுவினை திரு. தியாகு மற்றும் அவரது துணைவியார் திருமதி. தாமரை ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துக் கொடுத்தபோது. தான் எதுவும் செய்வதற்கு இல்லை; டெல்லிதான் முடிவு செய்யவேண்டும் என்று கூறி அனுப்பி விட்டார். எல்லோரிடமும் இவ்வாறே கூறுகிறார்.
இது உண்மையா? இந்த கூற்றில் கொஞ்சமும் உண்மை கிடையாது. கிரிமினல் சட்ட விதிகள் மத்திய மாநில அரசுகளுக்கு பொதுவான பட்டியலில் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிப்பது குறித்த சட்டத்தை தமிழக சட்டமன்றமே இயற்ற முடியும். இதுதான் சட்டம் அறிந்த வல்லுநர்களின் கருத்தாகும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சருக்கு துணிவுமில்லை. மனமுமில்லை. நால்வரின் கருணை மனுவை அன்றைய ஆளுநர் தள்ளுபடி செய்தபோது உயர்நீதிமன்றம் அந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்து கருணை மனுக்கள் மீது முடிவு செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கே உண்டு என்று கூறியும் அந்த அதிகாரத்தைப் பயன் படுத்த முதலமைச்சர் கருணாநிதி முன் வரவில்லை. அதைத் தட்டிக்கழித்தார். அண்ணா நூற்றாண்டு விழாவிலும் அதேதான் செய்கிறார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரான லீலாவதியை பட்டப்பகலில் நட்ட நடுவீதியில் படுகொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற தி.மு.க. வினரை 7 ஆண்டுகளில் விடுதலை செய்ய அவரால் முடிகிறது. இவர்களுக் காக ஆயுள் தண்டனை பெற்ற அனை வருமே 7 ஆண்டுகளில் விடுதலை பெற்றுவிட்டார்கள். தனது கட்சிக்காரர் களுக்காக சட்டத்தையே வளைக்கும் திறமை வாய்ந்த முதலமைச்சருக்கு நியாயத்தின் அடிப்படையில் கூட மரண தண்டனையை ஒழிக்க மனமில்லை.
வாய்ச்சொல் வீரராக சந்தர்ப்பங் களுக்கு ஏற்ப மக்களை ஏமாற்றுபவராக விளங்கும் ஒருவரால் மனித நேயத்தோடு ஒருபோதும் செயல்பட முடியாது என்ப தைத்தான் அவர் நிரூபித்திருக்கிறார்.
|