ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மை யானவர். ஈழத்தில் இன அழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி,
மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், "விடுதலைப் புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இன அழிப்பு நடந்தது' என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்று சொல்லாமல், புளி இருக்கு என்று சொல்லும் வியா பாரத் தந்திரமே அவரிடம் இருக்கிறது. தமிழினப் பற்று கொஞ்சமும் இல்லை. அவர் சொல்லும் சகோதரச் சண்டையை யார் தொடங்கி வைத்தது! 1984ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இக் கருத்தினைச் செயல்படுத்துவதற்காக போராளி அமைப்புகளின் தலைவர் களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத் துப் போராளி இயக்கத் தலைவர்களுக் கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார்.
தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தச் செய்தியையும் தமிழகப் பத்திரி கைகள் பரபரப்புடன் வெளியிட்டன. உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமானால், எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளியானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை. போராளிகள் அமைப்புகளை ஒன்றுபடவிடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடக்கிவைத்தவரே கருணாநிதிதான். கருணாநிதியின் அழைப்பை டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈராஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன. ஆனால் முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து விடுதலைப் புலிகள் அவரைச் சந்தித்த னர். இந்தச் சந்திப்பின் விளைவாக புலிகள் இயக்கத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு ரூ.2 கோடி வழங்க அவர் முன்வந்தார். ஆனால் கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளி களோடு புகைப்படம் எடுத்து பத்திரிகை களில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்ட பணத்தில் சில ஆயிரம் ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர பெரிய அளவில் உதவுவதற்கு முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆ ரையும் சந்திக்க இயலாதபடி செய்தது தான் கருணாநிதியின் சாதனையாகும். 1985ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர் பத்மநாபா, ஈரோஸ் தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசி "ஈழ தேசிய விடுதலை முன்னணி'' என்னும் பெயரால் கூட்டமைப்பு ஒன்றினை நிறுவி சிங்கள இராணுவத்திற்கு எதிரான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது என முடிவு செய்து அறிக்கையும் வெளியிட்டனர். 1985ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நடைபெற்ற திம்பு மாநாடு வரை இந்த ஒற்றுமை நீடித்தது. திம்பு மாநாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு முன்வைத்த கோரிக்கைகளை இந்திய அரசு விரும்பவில்லை. எனவே போராளி இயக்கங்களை மிரட்டிப் பிளவுபடுத்தத் திட்டமிட்டது. இதற்கான சதித்திட்டத்தை "ரா'' உளவுத்துறை வகுத்தது. "ரா'' விரித்த வலையில் முதலில் டெலோ இயக்கமும் அதற்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல். எஃப். இயக்கமும் விழுந்தன. புலிகளுடன் மோதும்படி இந்த இயக்கங் களுக்கு "ரா'' உளவுத்துறை ஆயுதங் களை அளித்துத் தூண்டிவிட்டது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கேப்டன் லிங்கம் என்பவரை டெலோ இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து இறுதியில் டெலோவின் தலைவர் சிறீசபாரத்தினம் கொல்லப் பட்டார். அவருக்காக சென்னையில் இரங்கல் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். அதில் பேசும்படி என்னை அழைத்தபோது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கேப்டன் லிங்கத்திற்கும் சேர்த்து இரங்கல் கூட்டம் போடுமாறு நான் கூறியபோது அதை அவர் ஏற்க வில்லை, எனவே நான் அந்தக் கூட்டத் தில் கலந்துகொள்ள மறுத்தேன். கருணா நிதி போன்ற ஒரு தலைவர் போராளி இயக்கங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டபோது இருதரப்பையும் அழைத்துப் பேசி சுமூகமாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர் புலிகளுக்கு எதிராகவும் டெலோ இயக்கத்திற்கு ஆதரவாகவும் நடந்துகொண்டார். இரங்கல் கூட்டத் திலும் அதற்குப் பிறகும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டிப் பேசுவதற்கு அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. ராசீவ்-செயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி போராளிகள் ஆயுதங் களை ஒப்படைத்தனர். புலிகளும் ஓரளவு ஆயுதங்களை ஒப்படைத்தார் கள். ஆனால், பிற இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை "ரா'' உளவுத்துறை கொடுத்து நிராயுதபாணிகளாக நடமாடிய புலிகளை ஒழித்துக்கட்ட ஏவிவிட்டது. 22 புலிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். புலிகள் எடுத்த பதில் நடவடிக்கை யின் விளைவாக டெலோ, ஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்கங்கள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "ரா'' உளவுத்துறையின் சீர்குலைவு வேலைகள் வெற்றி பெறவில்லை. இந்திய அமைதிப்படையின் தளபதியான லெப். ஜெனரல் ஹர்கிரத் சிங் "ரா'' உளவுத்துறையின் சீர்குலைவு வேலைகளைச் சுட்டிக்காட்டி பின் வருமாறு கண்டித்துள்ளார். "1987ஆம் ஆண்டு ஆகஸ்டு 21ஆம் தேதிவரை புலிகள் சிறிதுசிறிதாக தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதே வேளையில் "ரா'' உளவுத்துறை மற்ற போராளி குழுக்களுக்கு ஆயுதங் களை அள்ளிக்கொடுத்தது. செயலற்றுக் கிடந்த இந்தக் குழுக்களுக்கு ஆயுதங் கள் வழங்கப்படுவது குறித்து இந்தியத் தூதுவருக்கு நான் தெரிவித்தேன். இந்த ஆயுதங்களில் இந்திய அரசின் சின்னங் கள் பொறிக்கப்பட்டு இருப்பதைப் படம் எடுத்து அதையும் அனுப்பிவைத்தேன்.
நிராயுதபாணிகளாக நடமாடிய விடுதலைப்புலிகள் பலரை மற்ற போராளி குழுக்கள் படுகொலை செய்தனர். இதன் விளைவாக மேலும் ஆயுதங்களை ஒப் படைப்பதை விடுதலைப் புலிகள் நிறுத்தி விட்டனர். இந்தியத் தூதுவர் தீட்சித் தின் சம்மதத்துடன்தான் "ரா'' உளவுத் துறை இவ்வாறு நடந்துகொண்டது. இதன் காரணமாக விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே நிலவிய நல்லுறவு சீர்கெட்டது.'' டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., பிளாட் ஆகிய இயக்கங்களிலிருந்து விலகியவர்களை ஒன்றுசேர்த்து ஈ.என்.டி.எல்.எஃப். என்ற ஒரு அமைப்பை "ரா'' உளவுத்துறை உருவாக் கியது. இதற்குத் தலைவராக பரந்தன் ராஜன் என்பவர் பொறுப்பேற்றார். இந்த அமைப்புக்கும் ஆயுதங்கள் வழங்கி தமிழீழப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்களை மிரட்டவும் படுகொலை செய்யவும் "ரா'' உளவுத்துறை பயன்படுத்தியது. அப்போது "ரா'' உளவுத்துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற் காலத்தில் சில உண்மைகளை வெளி யிட்டார். "கடந்த 20 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழர்களுக்கு உள்ள தலைமை பிரபாகரன் ஆவார். தமிழ் மக்கள் அவர்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாதது இந்தியா செய்த மாபெரும் தவறாகும்.
புலிகளுக்கு எதிரான போட்டிக் குழுக்களை ஊக்குவித்தது. இறுதியில் இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்திவிட்டது'' எனக் குற்றம் சாட்டியுள்ளார். "ரா'' உளவுத்துறையின் இந்த பிளவு வேலைகளை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே சட்டமன்றத்தில் பகிரங்கமாகக் கண்டித்தார். "ரா'' உளவுத் துறை போட்டிக்குழுக்களை ஊக்குவித்த தையும் சகோதர யுத்தத்தை தொடங்கி வைத்ததையும் குறித்து தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி மீது காங்கிரஸ் காரர்கள் குற்றம்சாட்டினர் அவர்களுக் குப் பதில் அளிக்கும் வகையில் கருணாநிதி பின்வருமாறு கூறினார்: "ரா'' உளவு நிறுவனம்தான் இந்த குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதலை உருவாக்குவதே "ரா''வின் நோக்கமாக இருக்கிறது. எனவே இதில் பிரதமர் வி.பி.சிங் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழ் குழுக்கள் இடையே கடந்த காலத்தில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு "ரா'' தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே செய்துகொண்டி ருக்கிறது'' என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். சட்டமன்ற பதிவேட்டில் இவைகள் பதிவாகியுள்ளன. ஆனால் இப்போது தான் கூறியதற்கு மாறாக சகோதர யுத்தத்தினால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு புலிகளே பொறுப்பு என்கிற வகையிலும் அடிக்கடி கருணாநிதி பேசிவருகிறார். 1991ஆம் ஆண்டில் இலங்கை யின் குடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையிலிருந்து இந்தியப்படைகள் வெளியேறவேண்டு மென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சு வார்த்தை தொடங்கினால் உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராசீவ்காந்தி பதை பதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார். பிரேம தாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால் அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ள வைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார். கருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப்பேசினார். அப்போது கூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன் படுத்திப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால் புலிகளுக்கு எதிரான உள்ளம்படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. மாறாக வரதராசபெருமாள் தலைமையில் உள்ள வட-கிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக் கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார்.
மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராச பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்க அவர் தயாரென்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்சி னையில் தன்னால் முடிந்ததை செய்தாகி விட்டது எனக்கூறி ஒதுங்கிக்கொண்டார். தொடர்ந்து புலிகளுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படுகாய மடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்றபிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளி களை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி. இதுகுறித்து பிரபாகரன் 19-3-1998ஆம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்: "எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்த வர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக் கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90ல் கலைஞரின் காருண் யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப் பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதி யான செயல்.'' இதற்கு முன்பாக 23-7-97 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத் தில், "மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 இலட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் போலிசாரிடம் பிடிபட்டுள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக்கஷ்டத்தின் மத்தியி லும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம் தமிழ், தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். "வீரம், ஆற்றல் உள்பட அனைத் திலும் யாருக்கும் சளைக்காதவர்களாக ஈழப்போராளிகள் இருந்தும் இறுதிப் போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந்தனர். இதற்குக் காரணம் ஈழப் போராளிகளி டையே ஒற்றுமை இல்லாததுதான்'' என 24-8-12 அன்று சென்னையில் நடை பெற்ற கூட்டத்தில் கருணாநிதி கூறியுள்ளார். 1987க்குப் பிறகு புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறிவிட்டன அல்லது சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள இராணு வத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசியிருக்கிறார்.
1990ல் இருந்து 2008ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடியிருக் கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள இராணுவத்துடன் புலிகள் நடத்திய போர்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அவை பின்வருமாறு: 1. கொக்காவில் முகாம் தகர்ப்பு (10-7-1990) 2. யாழ் கோட்டை கைப்பற்றல் (5-8-1990) 3. மாங்குளம் முகாம் தகர்ப்பு (24-11-1990) 4. சிலாவத்துறைப் போர் (16-03-1991) 5. கொக்குப்புடையான் முகாம் தகர்ப்பு (19-03-1991) 6. தாண்டிக்குளம் இராணுவ முகாம் தகர்ப்பு (24-03-1991) 7. மணலாற்றுப் போர் (29-10-1991) 8. சீனன் வளைகுடா விமானதளப் போர் (சனவரி 1992) 9. வண்ணான்குளம் முகாம் தகர்ப்பு (11-07-1992) 10. கட்டைக்காடு முகாம் தகர்ப்பு (02-10-1992) 11. காட்டுபொத்த முகாம் வீழ்ச்சி 12. மண்கிண்டிமலைப் போர் (01-07-1993) 13. ஓயாத அலைகள் - 1 (18-07-1996) 14. பரந்தன், கிளிநொச்சி முகாம்கள் மீது தாக்குதல் (26-09-1996) 15. கிளிநொச்சிப் போர் (26-09-1996) 16. ஓயாத அலைகள் - 2 (26-09-1998) 17. ஓயாத அலைகள் - 3 (02-11-1999) 18. புளியங்குளம், கனகராயன் குளம் இராணுவ முகாம்கள் அழிப்பு (06-11-1999) 19. வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கூட்டுத்தளம் அழிப்பு (08-11-1999) 20. மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று கூட்டுப் படைத்தளம் வீழ்ச்சி (29-03-2000) 21. ஆனையிறவு பெருவெற்றி (22-09-2000) 22. முகமாலை வெற்றி (22-04-2008) யாராலும் வெல்லப்பட முடியா தது எனக் கருதப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிகொடி நாட்டியவர்கள் புலிகள். ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் பின்னடைவிற்கு சகோதரச் சண்டை காரணமல்ல; மாறாக இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20க்கும் மேற் பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள இராணுவத்திற்குத் தேவையான இராணுவ உதவி உள்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா சிங்கள இராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கை யைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது.
இந்தக் காரணங் களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை. இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடிமறைப்பதற்காக சகோதர யுத்தத் தினால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்ட தாக முழுப்பொய்யை கூசாமல் கூறு கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடி மறைக்க முயற்சி செய்தாலும் அது ஒருபோதும் வெற்றிபெறப்போவதில்லை. புலிகளைக் குற்றம் சாட்டுவதற்கு அவருடைய குற்ற உணர்வே காரணம்! நன்றி : "ஜூனியர் விகடன்' 5-9-12
|