ஈழவிடுதலைப் போரின் நாயகரான மாவீரன் பிரபாகரனின் வீரவரலாற்றை மிக விரிவாக, பல்வேறு சான்றுகளுடன் மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
இந்திய அரசியல் தலைவர்கள் போட்ட இரட்டை வேடங்கள் துகிலுரித்துக் காட்டப் பட்டுள்ளன. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல் மாவீரன் பிரபாகரன் இந்தியத் தமிழர்களை நம்பி ஏமாந்த வரலாறு நூலாக மலர்ந்துள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் போது ஈழப்போரை எதிர்ப்பதும் எதிர்க்கட்சியாகும்போது ஈழத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதுமான தமிழக அரசியல்வாதிகளின் இரட்டை வேடம் இந்நூல் வழி நன்கு புலனாகின்றது. இவர்களுக்கு நடுவில் தொடக்க முதல் இதுநாள்வரை, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக பலமுறை ஈழப்போருக் காக ஐம்பதுமுறை சிறைசென்ற தாங்கள் அன்றுமுதல் இன்றுவரை ஒரே நிலை யில் இருப்பது வியப்பைத் தருகிறது. செய்தித்தாள்களில் படித்ததையும் ஊடகங்களில் பார்த்ததையும் வைத்துக் கொண்டு, கடந்த ஈழப்போர் வரலாற் றைப் பலர் எழுதிக்கொண்டிருக்கும் சூழலில் போராளிகளுடனும் மாவீரன் பிரபாகரனுடனும் ஒன்றாகப் பழகி, உடனிருந்து, உண்டு, உறங்கி, அவர் களின் உண்மையான உணர்வுகளை நூலில் பதிவு செய்துள்ளீர்கள். இதை இப்படியே ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும். தங்கள் கடின உழைப்புக்குப் பாராட்டுதல்கள். இரா. முத்துக்குமாரசாமி மேலாண்மை இயக்குநர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தலைவர் பிரபாகரன் குறித்த தகவல்கள் அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கின்றன. எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ்ச் சொந்தங்களுக்கு நிறைய தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள். ஒவ்வொரு மானமுள்ள தமிழனும் இதனை வாங்கி வாசிக்க வேண்டும். பெற்ற தாய் பிள்ளையைப் பேணிக் காப்பதுபோல, இந்த நூலைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினர் உண்மைகளைத் தெரிந்து கொள்ள உதவ வேண்டும். க. பிச்சைமுகம்மது, விழுப்புரம். தமிழமல்லன் திறனாய்வு இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூல். திருக்குறள் இருப்பது போல் இந்நூலும் தமிழர் இல்லங்களில் கட்டாயம் இருக்க வேண்டும். நாள்தோறும் சில பக்கங்களைப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஈழ விடுதலை இயக்கத்தின் முழு வரலாற்றை நன்கு தெரிந்தவர் இந்நூலைக் கடுமை யாக உழைத்து எழுதியிருக்கிறார். ஆசிரியரின் பட்டறிவும் உலக அரசியல் வரலாற்றுப் புலமையும் தமிழ் இன விடுதலைப் பற்றும் இந்நூலைச் சிறப் பாக உருவாக்கத் துணை செய்துள்ளன. தமிழ் ஈழ விடுதலைப் போரின் நயன்மை, அதன் தலைவர் பிரபாகரனின் மறம், நேர்மை, தன்னலமற்ற துணிவு முதலியவற்றைத் தகுந்த சான்றுகளோடு ஆசிரியர் எழுதியுள்ளார். அரசு சார்ந்த அலுவலர்கள் வெங்கடேசுவரன், தீட்சித் போன்றோரின் சொற்களால் ஆவணப்படுத்தியிருப்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பிரபாகரன் அமைதிப் படையை முறியடித்த முறையும் புலிகளின் கட்டுக் கோப்பும் பகைவர்களால் பாராட்டப்பட்ட நிகழ்வுகளை இந்நூல் கோவைப் படுத்திச் சுவையாகத் தருகிறது. பல கமுக்கங்களை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது. பழ. நெடுமாறன் தமிழ்நாட்டில் தம் தோழர்களின் உதவி யோடு விடுதலைப் புலிகளுக்குத் துணை செய்தமுறைகளை அவர் சொல்வது துணிச்சலைக் காட்டுகிறது. படைக் கருவிகளை ஒளித்து வைக்க உதவி செய்ததை அஞ்சாமல் எழுதியி ருக்கிறார். திலீபன் உண்ணாநோன்பு மேடையில் இருந்த நிகழ்வு, இந்திய அமைதிப்படை நிகழ்த்திய கொடுமை கள் முதலியவற்றைத் தவறாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார். ம.கோ.இரா. (எம்.சி.ஆர்.) மன உறுதியோடு புலிகளுக்கு உதவி செய்ததை விளக்கமாக இந்நூல் தருகிறது. இந்திய அரசின் தலைவர் இராசீவ் தன் அரசியல் நரித்தந்திர முயற்சியில் இரண்டுமுறை எடுத்த முடிவு மக்களிடத்தில் இன்னும் சரியாகச் சொல்லப்படவில்லை. பிரேமதாசாவின் வருகை அவரைப் பதற்றமடைய வைத்த நிலையைப் படிப்பவர்களுக்குக் கட்டாயம் அவரைப் பற்றிய உண்மை விளங்கும். பிரேமதாசா புலிகளைத் தம் பக்கம் ஈர்ப்பதை விரும்பாத இராசீவ் பிரபாகரன் சுதந்திரத் தமிழ்ஈழம் அறிவிக்க வேண்டும் என்று தூண்டினார் என்பதும் அவர் ஒப்பாதபோது வரதராசப் பெருமாளிடம் அதேபோல் செய்யச் சொன்னார் என்பதும் கவனிக்க வேண்டிய செய்திகளாகும். இராசீவ் விடுதலைப் புலிகளின் சிக்கலை விடுவிக்க இயலாமற்போனது ஏன் என்பதற்கு ஆசிரியர் அளித்துள்ள விடை மிக நுணுக்கமானதாகும். புலிகள் போரிடுவதில் மட்டுமன்று போர்க்கருவிகளைச் செய்வதிலும் வல்லவர்கள் என்பதற்கான சுவையான செய்திகள் நூலில் இருக்கின்றன. 1208 பக்கங்கள் கொண்ட இந் நூலில் அரிய ஆவணங்களும் ஒளிப் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நூற் செய்திகளை விளக்க அவை பயன் பட்டுள்ளன. ஓர் ஆய்வுநூலுக்குரிய சான்றுகள் போல் இந்நூலுக்குப் பல நூல்கள் துணை செய்துள்ளன. குறிப்பாக பாலசிங்கமும் அவரின் துணைவியாரும் எழுதியுள்ள நூல்கள் மிகுந்த துணை செய்துள்ளன. செய்தித்தாள்கள், நேர்காணல்கள் எனப் பல சான்றுகள் இதில் உள்ளன. பிரபாகரன் எழுத்தின் அழகைக் காட்டும் அவரின் மடலைக் காத்து வெளியிட்ட நெடுமாறன் ஈடுபாடு வியப்பானது. சிங்களப் படைகளுடன் இராசீவை ஏன் துமுக்கி (துப்பாக்கி)க் கட்டையால் அடித்தான்? ம.கோ. இரா. தன் வெளி நாட்டுப் பயணத்தை ஏன் தள்ளி வைத்தார்? கலைஞர் பாலசிங்கத்தை ஏன் கண்டு பேசினார்? பிரபாகரனை இராசீவ் எப்படி நடத்தினார்? - போன்ற வினாக் களுக்கு இந்நூல் விடையளித்துள்ளது. வரலாற்று நூலுக்குக் காலக்குறிப்பு இன்றியமையாதது. அது இந்நூ லில் சரியாகத் தரப்பட்டுள்ளது. புலிகள் நடத்திய தாக்குதல்களின் நாள் இடம் கூட இதில் தவறாமல் கூறப்பட்டுள்ளன. அடிபட்டு உயிருக்குப் போராடும் நிலையில் புலிகள் மதுரைக்கு வருவதும் அவர்களுக்கு எதையும் பொருட் படுத்தாமல் மருத்துவம் பார்த்து உதவி செய்வதும் எளிமையான செயல்களா? நெடுமாறன் அவ்வகையிலும் உயர்ந்த வர் என்பதற்கு இந்நூல் சிறந்த சான்று. வெல்லும் தூயதமிழ், அக்டோபர் 2012
|