தமிழ் வளர்ந்ததும், தென்றல் பிறப்பதும் சந்தனப் பொதிகையில் ஆகும். தொன்றுதொட்டு தமிழோடு இணைத்துப் பேசப்படும் மலை பொதிகை மலை ஆகும்.
இம்மலையின் சிறப்பினை சங்ககாலம் முதல் இன்றுவரை தோன்றிய இலக்கியங்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன. மதுரைக் காஞ்சி, பரிபாடல், குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங் களிலும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், இராமா யணம், பாரதம் போன்ற புராண இதிகாச இலக்கியங்களிலும் மூவர் தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகளிலும் திருப்புகழ் போன்ற அருட்பாடல்களிலும் பொதிகை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. தென்பொதிகையில்தான் தண்பொருனை பிறக்கிறது. பொதிகையில் தமிழ் பிறந்தது என்று வில்லிபாரதம் கூறுகிறது. "பொருப்பிலே பிறந்து' தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்(து) இருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை, நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்தோர் என மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள். (வி.பா.) பெருமை மிக்க பொதிகையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களின் வழியாக 120 கி.மீ. தூரத்திற்கு ஓடி வங்கக்கடலில் கலக்கிறது பொருநை என்னும் தாமிரவருணி ஆகும். தமிழ் நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ் நாட்டிற்குள்ளேயே ஓடிக் கடலில் கடக்கும் ஒரே நதி பொருநை மட்டுமே. பொதிகை மலைத் தொடரில் பாபநாசம் என்னும் அழகிய சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. பொதிகை மலைக் காடுகள் அடர்த்தியானவை; அழகானவை. பல்வேறு விலங்கினங்கள் அங்கே வாழ்கின்றன. பாபநாசம் ஊரிலிருந்து மலை மேல் 40 கி.மீ. தொலைவில் வானதீர்த்தம் என்னும் பாணதீர்த்தம் அமைந்துள்ளது. பாபநாச அணை நீர்த்தேக்கத்தைப் படகில் கடந்து இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அருவி 122 அடி உயரத்திலிருந்து விழுவது இனிமையான காட்சியாகும். அதற்குக் கீழே கலியாணத் தீர்த்தம் என்னும் அருவி உள்ளது. 162 அடி உயரத்திலிருந்து இது விழுகிறது. யாரும் குளிக்க இயலாது. அருவித் தண்ணீர் தேங்கி நிற்கும் குளமே குளிப்பதற்குரிய இடமாகும். அதிலிருந்து கீழே சற்றுத் தூரத்தில் பல கிளைகளாக விழும் அழகான அகத்தியர் அருவி உள்ளது. 40 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் மக்கள் விரும்பிக் குளிக் கிறார்கள். அதற்குக் கீழே ஆறு தரை யில் இறங்கும் இடத்தில் தலையணை என்ற ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மேல் வழிந்து விழும் அருவி யிலும் மக்கள் விரும்பிக் குளிக்கிறார்கள். நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடுக் முண்டந்துறை, பகுதி முழுவதும் புலிகளின் சரணாலயமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த சரணாலயப் பகுதியில் திருக்குறுங்குடி, திருமலைக்கோவில், பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில், கோரக்கநாதர் கோயில், அகத்தியர் கோயில், வனப்பேச்சியம்மன் கோயில் போன்ற வழிபடு தலங்களும் அமைந் துள்ளன. பல ஆயிரம் ஆண்டுக் கால மாகவே இக்கோயில்களுக்குச் சென்றும் இங்குள்ள அருவிகளில் நீராடி மகிழ்ந் தும் வருவது மக்களுக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் இப்போது புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணி கள் நுழைவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண் டும் என்பதற்காக கடந்த சூலை 25ஆம் தேதி உச்சநீதிமன்றம் இத்தகைய இடைக்காலத் தடையை விதித்துள்ளது. பாபநாசம் மற்றும் கோயில் களுக்கும் பொதிகை மலையில் உள்ள அருவிகளுக்கும் சாதாரண ஏழை எளிய மக்களும் மத்திய தர வர்க்க மக்களும் சென்று மகிழ்ந்து வருகிறார்கள். ஆனால் இப்போது இந்தத் தடையின் விளைவாக இந்த மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது. இத்தனை காலமாக புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்று வந்ததனால் புலிகளுக்கு எத்தகைய இடையூறும் ஏற்பட்டதில்லை. புலிகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை. தாமிரவருணி ஆற்றிலும் அதன் கிளை நதியான சேர்வலாறு ஆற்றிலும் பல அணைகள் அமைக்கப்பட்டுள்ளன. அகத்தியர் அருவிக்கு அருகே பாபநாசம் புனல் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. அதன் அலுவலர்களின் குடியிருப்பு அதற்குமேலே உள்ள ஒட்டன் தலம் என்ற இடத்தில் அமைந்து பல ஆயிரக்கணக்கான குடும் பங்கள் அங்கே வாழ்ந்து வருகின்றன. மற்ற அணைப் பகுதிகளிலும் சம்பந்தப் பட்ட அலுவலர்கள் வாழ்கிறார்கள். இதைத் தவிர இந்த மலைமேல் பல இடங்களில் மலைவாசி மக்களின் குடியிருப்புகள் பல நூற்றாண்டு காலமாக இருந்து வருகின்றன. இப்போது விதிக்கப்பட்டுள்ள தடையின் விளைவாக மலைவாசி மக்கள் மட்டுமல்ல புனல் மின் நிலையக் குடியிருப்பு மற்றும் அணைகளில் வேலை பார்க்கும் அலுவலர்களின் குடியிருப்புகள் அத்தனையும் அகற்றப்படவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இத்தனை ஆண்டு காலமாக மக்கள் வாழ்ந்தும் புலிகளுக்கோ மற்ற விலங்குகளுக்கே எத்தகைய ஊறும் விளைந்து விடவில்லை. இந்த உண்மைகளை உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு முறையிட்டு இந்தத் தடையை விலக்குவதற்கும் சாதாரண மக்களின் மகிழ்விடமாகத் திகழும் அகத்தியர் அருவி போன் றவற்றில் குளிப்பதற்கும் அனுமதியைப் பெற்றுத் தரவேண்டும். இளைய தலைமுறைக்கு மறைமலையடிகளார் வரலாறு தெரியவேண்டும் திரு. பழ. நெடுமாறன் அவர்களின் "காலம் தந்த தலைவர் மறைமலையடிகள்' என்னும் சிலை திறப்புச் சிறப்புரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு சிறந்த படைப்பாகும். அடிகளாரின் சிலையைத் திறந்து வைக்கும் பேறு கிடைத்தமை பெருமைக்குரியதாகும். இந் நல்லுரையில் பல கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. தமிழின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அதன் நிலைப்பாட்டிற்கே பல்வேறு பக்கங்களிலிருந்தும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ் வழிக்கல்வி குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவது ஆண்டு வரையிலாவது கற்றுத் தரப்படவேண்டும். ஆனால் தற்பொழுது மாநகராட்சிப் பள்ளிகளிலும்கூட ஆங்கில வழிக்கல்வி காலெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. புற்றீசல்கள் போல் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் தமிழ் வழிக்கல்வி அளிப்பது இல்லை என்பதோடு தமிழை ஒரு பாட மொழியாகக் கூட செயல்படுத்துவதில்லை. ஆங்கிலத்தை ஒரு பாட மொழியாகவும், மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழ் மூலமாக கற்பித்தலே சாலச் சிறந்ததாகும். அவ்வாறு கற்றவர்கள் 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து இன்றுவரை சிறந்த வல்லுநர்களாக ஆகி இருக்கிறார்கள். அதனை விடுத்துச் செயல்படுவது தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் அன்று குரல் கொடுத்த மறைமலை அடிகளுக்கும் அவர் காட்டிய வழியின் அவரின் சிலையைத் திறந்து வைத்த பழ.நெடுமாறன் அவர்களுக்குச் மற்றும் தமிழ்க் கல்வியை வலியுறத்தும் சமச்சீர்கல்வியை உருவாக்கிய முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் போன்றவர்களின் கருத்துக்களுக்கும் மாறுபாடானது, தமிழருக்கே ஊறுவிளைவிக்கும் செயலாகும். முனைவர் தமிழண்ணல் போன்றவர்கள் தமிழ்வழிக் கவி அழிந்து போகாமல் இருப்பதற்கு அரும்பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். அண்ணல் அவர்கள் தனது வாழ்நாட்களை இதற்காக அர்ப்பணித்திருக்கிறார். இந்த கால கட்டத்தில் மறைமலையடிகள் பற்றிய உரை மனதை உருக்குகிறது. தமிழின் - தமிழர்களின் பெருமைகளைப் பறைசாற்றுகிறது. தமிழர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட திருக்குறளைப் பற்றி கூறப்பட்டுள்ளது. எக்காலத்திற்கும் பொருந்தினாலும் தற்காலத்திற்கு மிகவும் அவசியம் என்பது தெளிவாகிறது. சிலப்பதிகாரச் செய்தி அதன்பால் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. உரையாசிரியர்களான இளம்பூரணார், சேனாவரையர், நச்சினார்க்கினியர் பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் ஆகியோரது மகத்தான பங்களிப்பைப் பற்றி உரையில் கூறப்பட்டிருப்பது தமிழர்களுக்கு தங்கள் மொழியின் பால் ஒரு உந்துதலை ஏற்படுத்தும். தமிழில் ஆராய்ச்சி பெருகும். மறைமலை அடிகளாரின் தன்னலமற்ற பணிகளும் தமிழைக்காக்க அவரும் அவரது குடும்பத்தினரும் ஆற்றிய பணிகளும் மனதைத் தொடச் செய்கின்றன. அடிகளார் அருளிய திருவள்ளுவராண்டு, திருவள்ளுவர் திருநாள் போன்றவைகளின் பொன்போல் பொதிந்துவைத்து செயல்படுத்த வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை ஆகும். சிலையைத் திறந்து வைத்து சிறந்த சிறப்புரை ஆற்றிய உலகத் தமிழர் பேரவைத் தலைவர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்கு முத்திரை வைத்தாற்போல் உள்ளது. இவ்வுரை சிறிய நூலாக ஆக்கப்பட்டு பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டிய உரை. பல்மொழி அறிஞர், தமிழ்க்கடல் என்று கூறப்படும் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்கு மறைமலை அடிகள் தமிழ் நற்சான்றிதழ் அளித்தது. தெ.பொ.மீ. அவர்களை நாடு தழுவிய அளவில் உலக அளவிலும் கூட தெரிவதற்கு உதவியாக இருந்தது என்பது பலரும் அறியாதது. தெ.பொ.மீ. அவர்களை மாணவர்களுக்கும் மற்றும் இன்றுள்ள இளைய சமுதாயத்தினருக்கும் தெரிய வைத்தது மிகவும் பொருத்தமானதாகும். முனைவர் கு. வேலன் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவர் (பணிநிறைவு) மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
|