பிரதமர் மன்மோகன் அவர்களுக்கு, இந்தியாவை ஆண்ட கடைசி முகலாய மன்னரான பாதுஷா பகதூர் ஷா எழுதிய கடிதம். அசோகச் சக்கர வர்த்தியோ அல்லது அக்பர் சக்கர வர்த்தியோகூட இந்தியா முழுமையும் செங்கோல் செலுத்தியதில்லை.
ஆனால் காந்தியடிகளின் தலைமையில் நடை பெற்ற சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக அந்நிய ஆட்சி அகற்றப் பட்டு முதன் முதலாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியா ஒரே குடையின்கீழ் வந்தது. முதலாவது பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு உண்மையில் முடிசூடாத மன்னராக மக்களால் போற்றப்பட்டார். அவர் அமர்ந்த நாற்காலியில் அமர்ந் திருக்கிற தங்களிடமும் அவரிடம் குடி கொண்டிருந்த நாட்டுப்பற்று, ஏகாதி பத்திய எதிர்ப்பு, சமதர்மச் சிந்தனை போன்ற பண்புகள் நிறைந்திருக்கும் என நான் நம்பினேன். ஆனால், எனது நம்பிக்கை அடியோடு தகர்ந்து போய்விட்டது. சுயதேவை பூர்த்தியின் மூலம் மட்டுமே நமது நாடு முன்னேற முடியும் என நம்பிக்கை கொண்ட நேரு மூலாதாரப் பெருந்தொழில்களை அரசுத் துறையில் அமைத்தார். ரெயில்வே, விமானப் போக்குவரத்து, பொதுக்காப் பீட்டுக் கழகம், சுரங்கங்கள், பெட்ரோலியப் பொருட்கள் எடுத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை அரசுடைமை ஆயின. அப்போது விட் டுப்போன வங்கிகள் தேசிய மயம் போன்றவற்றை அவரது மகள் இந்திரா நிறைவேற்றினார். அவர்கள் இருவர் காலத்தில் நாட்டில் பொதுத்துறை செழித்து வளர்ந்தது. அதனால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டது. இதன் விளைவுகள் குறித்து சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் 2008ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவ் வளவாக இந்தியாவைப் பாதிக்காமல் போனதற்கு பொதுத்துறை, நிதித்துறை நிறுவனங்கள் அரசுடைமையாக இருந் ததே காரணமாக அமைந்தது என்பதை சிறந்த பொருளாதார நிபுணரான நீங்கள் அறிந்திருந்தும் உங்கள் ஆட்சியில் இலாபம் ஈட்டி வருகின்ற நவரத்தினா பொதுத்துறைப் பங்குகளை விற்கவும் அவற்றில் 49% அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் முடிவு எடுத்தது எதனால்? 1991இல் இந்திய நிதியமைச்சராக நீங்கள் பொறுப்பேற்று புதிய பொருளா தாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி 20 ஆண்டு காலத்திற்கு மேலாகிவிட்டது. இப்போது நீங்கள் சகல அதிகாரமும் படைத்த பிரதமர் பதவியிலும் இருந்து வருகிறீர்கள். உங்களது பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இந்திய மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளதா? - என்ற கேள்விக்கு உரிய விடையை மனசாட்சியைத் தொட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள் நலிந்து தேய்ந்து போனதின் விளைவாக இந்த 20 ஆண்டு காலத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதுதானே உண்மை. எனக்குக் கிடைத்துவரும் செய்தி கள் என்னை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. உலகளாவிய ரீதியில் நேரடி அந்நிய முதலீட்டிற்கான சிறந்த நாடு களில் இரண்டாம் இடத்தை இந்தியா வகிக்கிறது என ஐ.நா. வணிக மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு அதனுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதைப்போல ஜப்பானிய வங்கியும் கூறியுள்ளது. 2012-2014 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க வணிகத் தொழில் முதலீடு களுக்கு ஏற்ற மூன்று நாடுகளில் இந்தி யாவும் ஒன்று என லீட்ஸ் பல்கலைக் கழக வணிகப் பள்ளி குறிப்பிட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில் இந்தியா வில் 8% இருந்த கனடிய நிறுவனங் களின் முதலீடு 2010இல் 13.4% உயர்ந் துள்ளது. 2010இல் இந்தியாவில் அமெரிக்கா 2014 மில்லியன் டாலர் களை முதலீடு செய்தது. இந்தப் பட்டியல் இன்னமும் நீளுகிறது. அந்நிய நிறுவனங்கள் நமது நாட்டைச் சுரண்டு வதற்கு எந்த அளவு நீங்கள் அனுமதித் திருக்கிறீர்கள் என்பதை மேற்கண்ட விவரங்கள் அப்பட்டமாகத் தெரிவிக் கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய தொடர் சங்கிலி நிறுவனங்களான வால்மார்ட், செயின்ட்ஸ்பெரி, டெஸ்கோ ஆகியவை இந்தியாவில் தங்கள் கிளை களைத் திறக்க அனுமதி அளித்ததின் மூலம் சிறு சிறு தொழில் அதிபர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர்களின் வாழ்க்கையை அடியோடு அழித்துவிட கங்கணம் கட்டியிருக்கிற நீங்கள் ஏழை மக்களுக்காக அளிக்கப்பட்டு வரும் மானியங்களைக் குறைத்துவிடவும் முடிவுசெய்திருக்கிறீர்கள். விவசாயி களுக்கு அளிக்கப்படும் டீசல், இரசாயன, உரம் ஆகியவற்றுக்கான மானியம், மக்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள், சர்க்கரை, மண்ணெண் ணெய் போன்றவைகளுக்கு அளிக்கப் படும் மானியம் ஆண்டிற்கு 3.25 இலட் சம் கோடி ரூபாய்களாகும். இந்த இழப்பை எப்படி அரசினால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியும் என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1.76 இலட்சம் கோடி ரூபாய்களாகும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு 1.86 இலட்சம் கோடியாகும். ஆக மொத்தம் 3.62 இலட்சம் கோடி அரசுக்கு வர வேண்டிய பணம் சூறையாடப்பட்டுள் ளது. இந்த ஊழல்களை மட்டுமல்ல, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் போன்ற பலவேறு ஊழல் களையும் அரசு தடுத்து நிறுத்துமானால், அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டே, மக்களுக்குத் தேவையான வற்றை மானியவிலையில் அளிக்க முடியும். புள்ளிவிவரங்களை மேலும் அடுக்கிக்கொண்டே போக நான் விரும்பவில்லை. அந்நிய நிறுவனங் களின் வரவு நமது நாட்டின் சுதந்திரத் திற்கே ஆபத்தாக முடியும் என்பதை உணராமல் செயற்படுகிறீர்கள். மறக்கப் பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளை உங் களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகெங்கிலுமுள்ள பின்தங்கிய நாடுகளின் மீது திரும்பியது. அந்த நாடுகளில் வாழும் மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிப்பது, தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பதற்குரிய சந்தையாக அந்த நாடு களை மாற்றுவது என முடிவு செய்தன. அந்நியர் காலடி படாத நம் மண்மீது அந்நியர்கள் வரிசையாகக் கால் பதித்தார்கள். கி.பி. 1500இல் கோழிக் கோட்டிலும், கி.பி.1506இல் கோவாவிலும் போர்த்துகீசிய வணிகர்கள், ஜமோரின் மன்னனின் அனுமதியைப் பெற்று வணிகக் கோட்டைகளை அமைத்துக் கொண்டார்கள். கி.பி. 1600இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும், கி.பி.1602இல் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரிலும், கி.பி.1661இல் பிரெஞ்சு இந்தியக் கம்பெனி என்ற பெயரிலும் இந்திய மண்ணில் வர்த்தகம் செய்வதற்காக இந்நாடுகள் வந்திறங்கின. தென்னாட்டில் ஆற்காடு நவா பின் முன் மண்டியிட்டு அனுமதி பெற்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர் களும் வணிகம் புரியத் தொடங்கினார் கள். வங்காளத்தில் நவாப் நசீம் முன் மண்டியிட்டு வணிக அனுமதி பெற்றனர். எனது மூதாதையும் புகழ்பெற்ற முகலாய மன்னருமான ஜஹாங்கீரின் முன் கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற ஆங்கிலேயர் 1609இல் மண்டி யிட்டு வணிகத்திற்கான அனுமதி கோரி னார். ஆனால், 1611ஆம் ஆண்டு வரை ஜஹாங்கீர் அனுமதி தரவில்லை. 1611இல் சூரத் நகரில் கிழக்கிந்திய கம் பெனியின் கிட்டங்கியைத் திறப்பதற்கு ஜஹாங்கீர் அனுமதி கொடுத்தார். இதற்குக் காரணம் சர். தாமஸ் ரோ என்னும் ஆங்கிலேய பிரமுகரும், கேப்டன் மிடில்டன் என்ற ஆங்கிலேய தளபதியும் ஆவார். இதற்குப் பிறகு கல்கத்தாவிலும், சென்னையிலும் அவர்கள் வணிகக் கோட்டைகள் கட்டிக் கொள்ள முகலாய மன்னர் அனுமதித்தார். எனது மூதாதையரான ஜஹாங்கீர் மன்னர் செய்த இந்தத் தவறு இந்தியா வின் எதிர்காலத்தையே பாழாக்கி விட்டது. வணிகம் செய்ய வந்த ஆங்கி லேயர் படிப்படியாக ஆட்சியைக் கைப் பற்றி இறுதியில் இந்தியாவில் தங்களது ஆட்சியை நிறுவி 300 ஆண்டுகள் ஆண்டபோது அவர்களை வெளியேற்ற நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு போராட வேண்டியிருந்தது. அளப்பரிய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது என்பதை அடியோடு மறந்து நாட்டை மீண்டும் அந்நியரிடம் அடிமைப் படுத்தும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தென்னாட்டில் ஆற்காடு நவா பின் அனுமதியைப் பெற்று தங்களின் வணிகத்தைத் தொடங்கிய ஆங்கிலேயர் கள் நாளடைவில் பல்வேறு பகுதிகளில் சுதந்திரமாக ஆண்ட சிற்றரசர்களை ஒடுக்கத் தொடங்கினார்கள். அவர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஈவுஇரக்கமின்றி அழித்தார்கள். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், இராணி வேலுநாச்சியார், திப்பு சுல்தான் போன்ற வீரமிக்க மன்னர்கள் ஆங்கி லேய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி இறுதியாக தூக்குக் கயிற்றில் தொங் கினார்கள். திப்புவின் புதல்வர்களும் அவரது படைவீரர்களும் கைது செய் யப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்கள். 1906ஆம் ஆண்டில் வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சி ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்பட்டது. அதன் பின் தென்னாடு ஆங்கிலேயர் வசமாயிற்று. வங்காள நவாபான சிராஜ் உத்தவ்லாவுக்கு எதிராக அவருடைய படைத் தளபதி மீர் ஜாபரை தங்கள் வசமாக்கிக் கொண்டு ஆங்கிலேயர்கள் அவரைத் தோற்கடித்தனர். அதன் பின் வங்காளம், பீகார், ஒரிசா, ஆகியவை அவர்கள் வசமாயின. இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஆண்ட மன்னர்களை ஒழித் துக்கட்டி நாட்டைக் கைப்பற்றினார்கள். இந்த வரலாற்று உண்மைகளை மன்மோகன் அவர்களே மறந்துவிடாமல் எண்ணிப் பாருங்கள். எங்கள் மூதாதையரான ஜஹாங்கீர் முன் மண்டியிட்டு வணங்கி வணிகத்திற்கு அனுமதி பெற்ற ஆங்கி லேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங் களின் வஞ்சகக் குணத்தை வெளிப் படுத்தத் தொடங்கினார்கள். மாட்சிமை தங்கிய முகலாயச் சக்கரவர்த்தியின் விசுவாசமிக்க ஊழியன் என அவருக்கும் அவருக்குப்பின் அரியணை ஏறிய அனைவருக்கும் பணிவாகக் கடிதம் எழுதியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினார்கள். ஆண்டு தோறும் சக்கரவர்த்திக்கு அளித்து வந்த கப்பத்தை நிறுத்தினார்கள். அவருக்குக் கீழிருந்த சிற்றரசர்களை சுதந்திர மன்னர்களாக ஆகும்படி தூண்டி விட்டனர். 1835ஆம் ஆண்டு முகலாயச் சக்கரவர்த்தியின் படமோ பெயரோ இல்லாத நாணயங்களை கம்பெனியின் பெயரில் வெளியிட்டார்கள். இதன் மூலம் ஆட்சி அதிகாரம் தங்களிடமே இருக் கிறது என்பதை மக்களுக்கு மறைமுக மாக உணர்த்தினார்கள். நீதிமன்றங் களிலும் அரசு அலுவலகங்களிலும், பாரசீக மொழிக்குப் பதில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கினார்கள். அடுத்த தாக நாடெங்கும் இருந்த சுதேச மன்னர் கள் வாரிசு இல்லாமல் இறந்துபோனால் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஆங்கிலேய ஆட்சியுடன் இணைக்கப்படும் என வைசிராயாக இருந்த டல்ஹவுசி அறிவித்தார். முகலாய பாதுஷாவாக நான் பொறுப்பேற்றபோது மராட்டிய பேஷ்வா, ஐதராபாத் நிஜாம், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆகியவற்றின் மீதுள்ள மேலாதிக்கத்தை என்னிட மிருந்து ஆங்கிலேயர்கள் பறித்தார்கள். தங்களின் சம்மதம் பெறாமல் எனது படையில் யாரையும் சேர்க்கக்கூடாது என கூறினார்கள். தில்லியில் என்னைக் கண்காணிப்பதற்காக ரெசிடன்ட் என்ற பெயரில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். பெயரளவில் மட்டுமே நான் சக்கரவர்த்தியாக இருந்தேன். உண்மையைச் சொல்லப் போனால் செங்கோட்டையில் நான் ஒரு கைதிபோல மட்டுமே வாழ முடிந்தது. எனக்கு மாதம் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே உதவித்தொகை அளித்தார்கள். அரண்மனையைத் தாண்டி யார் மீதும் எத்தகைய அதிகாரத்தையும் செலுத்த இயலாதவனாக நான் ஆக்கப்பட்டேன். இந்தச் சூழ்நிலையில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக பெரும் புரட்சி 1857ஆம் ஆண்டு வெடித்தது. புரட்சி யில் ஈடுபட்ட வீரர்கள் டில்லியைக் கைப்பற்றியதோடு செங்கோட்டையைச் சூழ்ந்துகொண்டு தங்களுக்குத் தலைமை வகிக்கும்படி என்னை வேண்டிக் கொண்டார்கள். அந்தச் சூழ்நிலையில் நானும் அதை ஏற்றுக்கொண்டேன். இப்புரட்சியில் ஜான்சி ராணி இலட்சுமி பாய், தந்தியாதோபி, நானாசாகிப் பேஷ்வா, துன்வர்சிங், பேகம் ஹசரத் மஹால் போன்ற பலரும் சேர்ந்து கொண்டனர். ஆனால், ஆங்கிலேயரின் படைவலிமைக்கு முன்னால் தொடர்ந்து போராட முடியவில்லை. புரட்சி தோல்வி யுற்றதும் முகலாய மன்னரான என்னை ஆங்கிலேயர் கைது செய்து நீதி விசாரணை என்ற பெயரில் போலியான விசாரணை நடத்தி பர்மாவில் உள்ள மாண்டேலேவுக்குக் கொண்டு சென்று சிறை வைத்தார்கள். மீண்டும் எனது தாய்மண்ணையும் எனது மக்களையும் பார்க்காமலேயே அந்தச் சிறையிலேயே 1862ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி மண்ணுலக வாழ்வை நான் நீத்தேன். அங்கேயே எனக்குக் கல்லறை கட்டப்பட்டது. நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் இந்திய தேசிய இராணு வம் அமைக்கப்பட்டு பர்மா வழியாக அவர்கள் இந்தியாவை நோக்கி முன் னேறி வந்த காலக் கட்டத்தில் 1944ஆம் ஆண்டு சூலை 11இல் எனது கல்ல றையில் மலர் வளையம் வைத்து வீர வணக்கத்தை நேத்தாஜி செலுத்திய போது எனது ஆன்மா குளிர்ந்தது. வீர சீக்கிய குலத்தில் தோன்றிய உங்களுக்கு உங்களுடைய மூதாதை யரான மகாராஜா ரஞ்சித் சிங் வெள்ளை யருக்கு எப்படி சிம்மசொப்பனமாக விளங்கினார் என்ற வரலாறு தெரிந்திருக் கும் என நம்புகிறேன். இந்தியாவின் பிறபகுதிகளில் எல்லாம் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கி லேயர் பாஞ்சாலத்தைக் கொண்டுவர முடியாமல் தவித்தார்கள். ஆனாலும் ரஞ்சித்சிங்கை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இந்தியா வின் மீது இரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவிய காலத்தில் ஆங்கிலேயர் ரஞ்சித்சிங்கை பகைத்துக் கொள்ள துணியவில்லை. ரஷ்யாவை எதிர்த்து நிற்க அவரோடு உடன்பாடு செய்துகொண்டார்கள். கி.பி. 1839இல் மகாராசா ரஞ்சித் சிங் மாண்டபிறகே அவர்களால் பாஞ்சாலத்தில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. தனது மண்ணில் ஆங்கிலேயரின் ஆதிக்கக் காலடி பதிய அனுமதிக்காத பாஞ்சால சிங்கம் ரஞ்சித் சிங்கின் வழிவந்த நீங்கள் இன்றைக்கு பாஞ்சாலம் உட்பட இந்திய நாடு முழுமையிலுமே ஆங்கிலேயர் மற்றும் அந்நியர்களின் ஆதிக்கம் படர வழிவகுத்துவிட்டீர்கள் என்பதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனது மூதாதையர்கள் வணிகம் செய்ய ஒரேயொரு கிழக்கிந்திய கம்பெனியை அனுமதித்தார்கள். அதன் விளைவாக நாட்டையே இழந்தார்கள். ஆனால், நீங்களோ ஆயிரக்கணக்கான அந்நிய நிறுவனங்களுக்கு நமது நாட்டின் கதவுகளைத் திறந்துவிட்டீர்கள். பொருளாதார ரீதியில் இந்திய நாடு அந்நியருக்கு அடிமைப்படுவதோடு அரசியல் ரீதியிலும் அடிமைப்படப் போகும் நாள் அதிகத்தூரத்தில் இல்லை என நான் எச்சரிக்கிறேன். இறுதியாக ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஆங்கிலேயரை விரட்டியடிக்க தீரமுடன் போராடி துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் ஏற்றும் தூக்குக் கயிற்றை முத்தமிட்டும் மாண்டு மடிந்துபோன நம்முடைய மூதாதையர் களின் கல்லறைகளைத் தோண்டி அவர்களின் எலும்புகளை எடுத்து ஆழ்கடலில் அமிழ்த்துங்கள். வணிகம், தொழில் என்ற பெயரில் அந்நியர்கள் படைபடையாகக் குவிந்து சுரண்டும் இந்த மண்ணின் கல்லறையில்கூட வாழ அவர்கள் விரும்பமாட்டார்கள். நல்ல வேளையாக என்னை அந்நிய மண்ணில் புதைத்தார்களே என நான் மகிழ்ச்சியடைகிறேன். - அன்புள்ள பாதுஷா பகதூர் ஷா நன்றி : தினமணி 25-10-12
|