புத்துணர்வு பெற்ற பத்து நாட்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012 15:07
திங்கள்முடி சூடுமலை, தென்றல் விளையாடு மலை
தங்குமுகில் சூழுமலை, தமிழ்முனிவன் வாழும் மலை,
அங்கயற்கண் அம்மை திருவருள்சுரந்து பொழிவதெனப்
பொங்கருவி தூங்கமலை பொதியமலை என்மலையே
(மீனாட்சி அம்மை குறம்)
என குமரகுருபரர் பொதிகை மலையின் அழகை வருணிக்கிறார். இத்தகைய எழில்மிக்க பொதிகைச் சிகரத்தை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் சிவசைலம் என்னும் சிற்றூரில் அமைந்திருப்பதுதான் உலக நல்வாழ்வு ஆசிரமம் ஆகும்.
இங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிலையம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் முதல் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானியான மூதறிஞர்
மூ. இராமகிருட்டிணன் அவர்கள் இந்த ஆசிரமத்தை நிறுவியவர் ஆவார். இவர் தமிழாய்ந்த பேரறிஞர். மிகச் சிறந்த சிந்தனையாளர். சிந்தனையை எழுத்தில் வடித்த சிறந்த எழுத்தாளர். அற்புதமான சொற்பொழிவாளர்.
முதலில் தோன்றிய மூத்த இனத்தவர் தமிழர். முதன் முதல் தோன்றிய மொழி தமிழ் என்பதற்கான சான்றுகளோடு ஆய்வுக்கட்டுரை எழுதி நிலை நிறுத்தியவர். தமிழாசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் திருவொற்றியூர் தியாகி ம.கி. பாண்டுரங்கனார் அவர்களிடமிருந்து இயற்கை உணவின் சிறப்பு, இயற்கை வாழ்வியல் கருத்துக்களைக் கற்றறிந்தார். தமிழ்த்தொண்டு செய்வதோடு இயற்கை வாழ்வியல் தொண்டினைச் செய்வது இன்னும் சிறப்பாக அமையும் என்பதை உணர்ந்து தமிழாசிரியர் பதவியிலிருந்து விலகி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சிவசைலம் என்னும் சிற்றூரில் 33 ஏக்கர் நிலப்பரப்பில் நல்வாழ்வு ஆசிரமத்தை நிறுவினார். ஆசிரமத்திற்கு வருவோர் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகத் தங்கவைத்து இயற்கை உணவின் மகிமை மற்றும் இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பிய தியாக சீலர் ஆவார்.
உலகில் இதுவரை வெளிவந்த அனைத்து இயற்கை மருத்துவ ஆங்கில நூல்களையும் வாங்கிக் கற்றுத் தேர்ந்து தெளிவுகண்டவர்.
இவ்வாசிரமம் அமைந்திருக்கும் நிலத்தை பூத்துக்குலுங்கும் பசுஞ்சோலையாக இவரும் இவருடைய துணைவியார் ஆழ்வார் அம்மாளும் தங்களுடைய கடும் உழைப்பினால் மாற்றினார்கள். இங்கு வானுயர ஓங்கி வளர்ந்திருக்கும் ஒவ்வோரு மரமும் அவர்களின் பெயர்களைச் சொல்லும்.
காந்தியடிகள், இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோரைப் போல இல்லறத்தில் பிரம்மச்சரியத்தை இத்தம்பதிகள் கடைப்பிடித்தனர். ஆனாலும் தனக்குப் பின்னாலும் இயற்கை வாழ்வியலைப் பரப்புவதற்கு மகன் ஒருவன் இருப்பது நல்லது என நினைத்து ஒரு மகனைப் பெற்றெடுத்து நல்வாழ்வு என்று ஆசிரமத்தின் பெயரையே சூட்டி தங்களது வழியிலேயே வளர்த்து ஆளாக்கினர். மகனும் தந்தையிடம் அனுபவ மருத்துவம் கற்றதோடு இயற்கை மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார்.
இயற்கை மருத்துவத்தின் சிறப்புகளை எனக்கு சென்னையில் எனது நண்பர் சடகோபன் உணர்த்தி என்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணவாளனிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் சிலகாலம் நான் சிகிச்சைப் பெற்றுக்கொண்டேன். பிறகு அவர் சிவசைலம் ஆசிரமத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறி 10 நாள்களாவது அங்கு இருந்துவிட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பிவைத்தார். என்னுடன் எனது துணைவியார் பார்வதி, மகள் பூங்குழலி ஆகியோரும் வந்தனர்.
10-09-12 அன்று இரவு 9 மணி வாக்கில் நல்வாழ்வு ஆசிரமத்தை அடைந்தோம். மருத்துவர் இரா. நல்வாழ்வு அவர்களும் அவரது துணைவியார் திருமதி. கலா அவர்களும் எங்களை அன்புடன் வரவேற்றுத் தங்கவைத்தனர்.
11-09-12 முதல் 21-09-12 வரை 10 நாள்கள் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தோம். உண்மையிலேயே அந்நாட்கள் மிகச்சிறந்த நாட்களாகும். சோலைவனமாகத் திகழும் அந்த இடத்தில் இயற்கை உணவை உண்டு, இயற்கை வழி சிகிச்சை பெற்று நாங்கள் தங்கியிருந்த நாட்கள் என்றும் மறக்கமுடியாதவையாகும்.
மறுநாள் காலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எனது நண்பர் திலக்ராஜ் அவர்களை அங்கு சந்தித்தபோது அளவுகடந்த வியப்புக்கு ஆளானேன். என்னைப் போலவே இயற்கை மருத்துவம் பெறுவதற்காக அங்கு வந்திருந்தார். அவர் மட்டுமல்ல, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இருவரும் அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் அங்கு தங்கி இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்துவதைப் பார்த்து மகிழ்ந்தேன். மருத்துவர் நல்வாழ்வு அவர்கள் ஒவ்வொருவரையும் நன்கு பரிசோதித்து அவரவர் உடலுக்கு ஏற்ற உணவு மற்றும் மருந்து அளிக்கிறார்.
பறவைகளின் இனிய கானம் காலை 5 மணிக்கே நம்மை எழுப்பிவிடுகிறது. மயில்கள் அங்கும் இங்கும் திரிந்து அகவும் காட்சி உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. காலைக் கடன்களை முடித்த பிறகு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். பிறகு 6.30 மணி முதல் 8.30 மணிவரை யோகாசனங்கள் செய்வதற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8.30 மணிக்கு மூலிகைச் சாறு அளிக்கிறார்கள். பிறகு மல்லாந்து படுக்கவைத்து வயிற்றின் மீது மண் பட்டியிடுகிறார்கள். அரை மணி நேரம் கழித்து அது அகற்றப்படுகிறது. 9 மணி முதல் 11 மணிவரை இயற்கை மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவரவர்களுக்கு ஏற்ற வகையில் நீர் சிகிச்சைகளான நீராவிக் குளியல், இடுப்புக்குளியல், முதுகந்தண்டு குளியல், முழுக்குளியல், சேற்றுக்குளியல், பாத, உள்ளங்கைக் குளியல், ஈரத்துணி பட்டிகள், ஐஸ், வெந்நீர் ஒத்தடங்கள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. சிலருக்கு சூரிய ஒளியில் வாழை இலைக் குளியல் அளிக்கப்படுகிறது. மசாஜ் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதைத் தவிர காந்த சிசிச்சை, அக்குபங்சர் சிகிச்சையும் உண்டு. சிலருக்கு முக அழகு சிகிச்சைகள், தோல் மெருகேற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
11 முதல் 11.30 மணிக்குள் பகல் உணவு அளிக்கப்படுகிறது. பலவகை கனிகள், பச்சைக் காய்கறி கலவைகள், முளைவிட்ட தானியங்கள், தேங்காய் அவல் உணவுகள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள் வழங்கப்படுகின்றன. இரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை உரமிட்டு அந்தச் சோலையிலேயே வளர்க்கப்பட்ட மரங்களின் கனிகள், காய்கறிகள் ஆகியவை மட்டுமே ஆசிரமவாசிகளுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. பிற்பகலில் இயற்கை மருத்துவம், வாழ்வியல் குறித்த நூல்களைப் படிக்கலாம். ஓய்வு எடுக்கலாம். தொடர்ந்து மூலிகைச் சாறு, கனிகளின் சாறு அளிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மூலிகைப் பானம், 4.30 மணிக்கு எளிய உடற்பயிற்சிகள், சிறப்பு யோகா மூச்சுப் பயிற்சிகள், தியானம் ஆகியவைகள் அளிக்கப்படுகின்றன. 5.30 மணிக்கு நெல்லிச்சாறு வழங்கப்படுகிறது. 5.30 முதல் 6.30 மணிவரை நடைப் பயிற்சி செய்ய வேண்டும். இரவு 7 மணிக்கு இரவு இயற்கை உணவு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு தூங்கலாம்.
சகல வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள், பலவேறு சிகிச்சைகளுக்கும் உரிய நவீன சாதனங்கள், அவற்றை இயக்க ஆண், பெண் ஊழியர்கள் நிறைந்த நவீன இயற்கை மருத்துவமனையாக அது திகழ்கிறது.
ஆசிரமவாசிகள் அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறைகளில் தங்களின் வாழ்க்கை முறையைச் சார்ந்த வசதிகளுடனும் சுதந்திரமாகவும் இருக்கலாம்.
ஆசிரமவாசிகள் அனைவரும் பொதுவாக அமர்ந்து உண்ணுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இரண்டறக் கலந்து ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்து இயற்கை உணவை உண்ணும் காட்சி மறக்க முடியாததாகும். இது நல்வாழ்வு ஆசிரமம் மட்டுமல்ல சமதர்ம ஆசிரமமும் ஆகும்.
ஆசிரமத்தில் எவ்விதமான பாகுபாடுமின்றி அனைவருக்கும் ஒரேவிதமான உணவு, ஒரேவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டுக்கு அங்கு இடமில்லை. அனைவரும் ஒன்றா கக்கூடி பலதரப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தும் உறவாடியும் ஆசிரமத்தின் ஓர் அங்கமாக மாறுகிறார்கள். சிகிச்சை முடிந்து பிரிந்து செல்லும் நேரத்தில் மனம் நெகிழ்ந்து ஆசிரமவாசிகள் ஒருவருக்கொருவர் பிரியாவிடை தரும் காட்சி மனதை உருக்கும் காட்சியாகும்.
செயற்கை அருவி ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் அதில் குளித்து மகிழலாம். நடைப்பயிற்சிக்காக வெளியே செல்ல வேண்டியதில்லை. உள்ளே இருக்கும் பூங்காவிலேயே நடைப்பயிற்சி செய்யலாம். இயற்கை உணவு, மருத்துவம் ஆகியவற்றைவிட அந்தச் சோலையில் மாசு மருவின்றிக் கிடைக்கும் பிராணவாயு அற்புதமானது. மாசுபடிந்த நகரங்களில் வாழ்ந்து அசுத்தமான காற்றையே சுவாசித்துப் பழகிய நமக்கு அங்கு கிடைக்கும் காற்று நமது சுவாசத்தை மட்டுமல்ல. உடல் முழுவதற்குமே வலுவூட்டுகிறது.
உடலின் பல்வேறு பகுதிகளிலும், குருதியிலும் பலகாலமாக சேர்ந்து தங்கிக் கிடக்கும் நச்சுச் சத்துக்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு உடலின் சகல உறுப்புகளும் புத்துணர்வுடன் இயங்கத் தொடங்குகின்றன. இந்த நச்சுச் சத்துக்கள் (பர்ஷ்ண்ய்ள்) நம்மை அறியாமலேயே உடலுக்குள் புகுந்து முக்கிய உறுப்புகளான ஈரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றைப் பாதித்து சரிவர இயங்க முடியாத நிலையை ஏற்படுத்திவிடக்கூடும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள், பயிர்க்காப்புக்கான கொல்லிகள், வாசனைத் திரவியங்கள், ஷாம்புகள், முடிக்குப் பயன்படுத்தும் தைலங்கள், உட்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றின் மூலம் உடலுக்குள் புகுந்து விடுகின்றன. நச்சுச் சத்துக்களை உடலிலிருந்து பிரித்து வெளியேற்றும் வகையில் நமது உடல் உறுப்புகள் செயல்படுகின்றன என்ற போதிலும், அந்த உறுப்புகள் பல மடங்கு சுமையைச் சுமந்து தமது பணியினைச் செய்வதால் பழுதடையும் அபாயத்திற்கு உள்ளாகின்றன. எனவேதான் இந்த ஆசிரமத்தில் அவற்றை முழுமையாக நீக்குவதற்கு ஏற்ற மூலிகைச் சாறுகளை அளிக்கிறார்கள்.
பரபரப்பான வாழ்க்கைக்குப் பழகிப்போனவர்களுக்கு அமைதிபூக்கும் ஆசிரம வாழ்வு உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் பண்படுத்துகிறது. நகரங்களில் வாழ்பவர்கள் மன அழுத்தம் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். அந்தக் கொடிய மன அழுத்தத்திலிருந்து முழுமையான விடுதலையை ஆசிரம வாழ்வு நமக்கு அளிக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
சோரியாசிஸ் போன்ற கொடிய நோய்க்கு ஆளான மலையாள இளைஞர் ஒருவர் இங்கு தங்கி முழுமையாக குணமடைந்ததைப் பார்த்து வியந்தோம். ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பேர் போன கேரள நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த மருத்துவத்திற்குப் பதில் இயற்கை மருத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்து சிகிச்சை பெற்று முழுமையாக நலமடைந்து மகிழ்வுடன் திரும்பிச் சென்ற காட்சி இனிய காட்சியே.
ஜெர்மனி நாடு ஹோமியோபதி மருத்துவம் பிறந்த நாடாகும். அதையோ அல்லது அலோபதி மருத்துவத் தையோ சார்ந்து நிற்காமல் ஜெர்மன் தம்பதியினர் இயற்கை மருத்துவத்தை நாடி வந்த காட்சி வியப்பை ஊட்டியது.
இயற்கை உணவு உண்டு பழகிய பிறகு சமைத்த உணவைவிட அது எவ்வளவு மேலானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறோம். ஆசிரமத்தின் முகப்பில் ஆசிரம நிறுவனர் கூறிய வாசகங்கள் கொட்டை எழுத்தில் மின்னுகின்றன.
சமைத்து உண்பது தற்கொலைச் செயலே!
தேங்காய், வாழைப்பழம் சிறந்த மனித உணவு!
கனிகளே உண்டு, பிணியின்றி வாழ்வோம்!
வெயிலில் தோய்க! மழையில் நனைக!!
காற்று மிகச் சிறந்த நுண் உணவு!
ஒருவேளை ஒரு வகைக் கனியே உயர்வு!
உண்ணா நோன்பு உயரிய மருந்து!
மருந்துகள் யாவும் நச்சுப் பொருட்களே!
உப்பு ஒரு கூட்டு நஞ்சு!
புலால் ஒரு நச்சுப் பிணம்! சோறு அரிசியின் பிணம்!!
அவை எவ்வளவு சிறந்த உண்மையென்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம். இயற்கையோடு ஒன்றி வாழும் விலங்குகளும், பறவைகளும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் சுற்றித் திரிகின்றன. ஆனால் இயற்கையை விட்டு விலகிச்செல்வதால்தான் மனித குலத்தை மட்டும் அடுக்கடுக்கான நோய்கள் தாக்குகின்றன.
ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரையும் மருத்துவர் நல்வாழ்வு அவர்கள் தினமும் பரிசோதித்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி, மூலிகைச் சாறு ஆகியவற்றைக் குறித்து தனது உதவியாளர்களுக்கு வழிகாட்டுகிறார். ஆசிரம நிர்வாகியாக விளங்கும் அவருடைய துணைவியார் திருமதி. கலா அவர்கள் ஆசிரமவாசிகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக்கொள்கிறார். தம்பதிகள் இருவரும் இணைந்து ஆசிரமவாசிகளுக்கு ஆற்றி வரும் தொண்டு பாராட்டத்தக்கதாகும்.
காதல் மனையாளும் காதலனும் மாறுஇன்றித்
தீதில் ஒருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
- நன்னெறி : 6.
இரண்டு கண்களும் ஒருபொருளையே நோக்குவதுபோல் கணவன் மனைவி இருவரும் ஒருமித்தக் கருத்து உடையவர்களாக இணைந்து தொண்டாற்றுகிறார்கள். இவர்கள் இருவரையும் குறிப்பதற்காகவே சிவப்பிரகாச சுவாமிகள் மேற்கண்ட பாடலை நன்னெறியில் பாடியுள்ளதாகத் தோன்றுகிறது.
ஆசிரமத்தில் பணியாற்றும் உதவியாளர்கள் அனைவரும் சிறந்த முறையில் அன்பு மணம் கமழத் தொண்டாற்றுகிறார்கள்.
இயற்கை மருத்துவ முறையோடு அலோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகளும் அவசியம் ஆயின் நோயின் தீவிரத்திற்கு ஏற்ப தாங்கள் பயன்படுத்திய மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் நோயாளிகள் அனுமதிக்கப்படு கின்றனர். ஆனால், ஒவ்வொருவரையும் நன்கு பரிசோதித்த பிறகே உட்கொள்ள வேண்டிய மருந்தின் அளவை மரு. நல்வாழ்வு முடிவுசெய்கிறார். மற்ற மருத்துவ முறைகளை அனுமதிப்பதால் எவ்விதப் பக்க விளைவும் ஏற்படுத்தாது காப்பது சிறப்பான ஒன்றாகும்.
இந்த ஆசிரமத்தை நாடிவருபவர்களுக்கு இயற்கை மருத்துவச் சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல, இந்த முறையை தமிழகம் எங்கும் பரப்புவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயற்கை மருத்துவம், யோகா, இயற்கைச் சுற்றுலா, மலையேற்றம், இயற்கை வேளாண்மை ஆகியவை இணைந்த முகாம்களையும் அந்தந்தப் பகுதி மக்களின் துணையுடன் நடத்தி மக்களுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் மேன்மை குறித்து உணர வைக்கின்றனர்.
இயற்கைச் சிகிச்சைக்குச் செலவும் அதிகமில்லை. எனக்கிருந்த கோளாறுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. என் துணைவியாருக்கும் அவ்வாறே.
நானும் எனது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தபோது மருத்துவர் நல்வாழ்வு அவர்களும் அவரது துணைவியார் கலா அவர்களும் எங்களிடம் காட்டிய கனிவும் அன்பும் என்றும் மறக்க முடியாதது ஆகும். மருத்துவரின் குழந்தைகளான ராகவி, ராகுல் ஆகியோர் அந்தச் சோலையில் மான்குட்டிகள் போல ஓடித் திரிந்து விளையாடிய காட்சிகள் எங்கள் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அங்கிருந்து வந்த பிறகுகூட ஆசிரமத்தின் இனிய நினைவுகள் எங்களைச் சுற்றிச் சுழன்றுகொண்டே உள்ளன.

சிவசைலம் ஆசிரமத்தின் முகவரி
மரு. இரா. நல்வாழ்வு
உலக நல்வாழ்வு ஆசிரமம்,
சிவசைலம்-627 412. ஆழ்வார்குறிச்சி (வழி)
திருநெல்வேலி மாவட்டம்
தொலைப்பேசி : 04634 - 283484, 94430 43074 / 93608 69867
இணையதளம் : www.goodlifeashram.com
மின்னஞ்சல் : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.