ஈ.வெ.கி. சம்பத் - தொலைநோக்குப் பார்வையின் வெற்றி! - பழ. நெடுமாறன் திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா காணும் இக்காலக்கட்டத்தில், "ஈ.வெ.
கி. சம்பத்தும் - திராவிட இயக்கமும்' என்னும் நூல் வெளிவந்திருப்பது மிகப்பொருத்தமானது ஆகும். தினமணி நாளேட்டின் ஞாயிறு மலரில் தொடர்ந்து வெளிவந்து தமிழ் மக்களின் பாராட்டைப் பெற்றது. இந்நூலை விரிவாகவும் முழுமையாகவும் இனியன் சம்பத் வெளியிட்டுள்ளார். ஈ.வெ.கி.சம்பத்தும் - திராவிட இயக்கமும் என்னும் இந்த நூல் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான காலக் கட்டத்தில் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பல உண்மையான விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் பங்களிப்புக் குறித்து இந்நூல் விளக்குகிறது. ஈரோட்டில் உள்ள பெரியாரின் மாளிகையில் எம்.என்.ராய் போன்ற உலகப் புகழ்ப்பெற்ற தலைவர்கள் வந்து தங்கி பெரியாருடன் பேசி மகிழ்ந்தது உண்டு. அதைப் போல அகில இந்திய, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் பெரியாரைக் கண்டு பேச ஈரோடு வந்து செல்வது உண்டு. அந்தத் தலைவர்கள் அனைவரின் அன்பையும் மதிப்பையும் இளைஞராக இருந்த ஈ.வெ.கி. சம்பத் பெற்றார். அவரின் படிப்படியான வளர்ச்சி இயக்கத் தோழர்களின் மத்தியில் பெரியாருக்குப் பிறகு எதிர்காலத்தில் தங்களை வழிநடத்தப் போகும் தலைவராக அவரைப் பார்க்க வைத்தது. பெரியாருக்கும் இயக்கத்தின் மற்ற தலைவர்களும் இடையே அடிக்கடி மனத்தாங்கல்கள் ஏற்படும் போது அவற்றைத் தீர்த்து வைப்பவர் சம்பத் அவர்களே ஆவார். பெரியார் அவர்களும் சம்பத் குறித்து பெருமிதமும் பெருநம்பிக்கையும் கொண்டிருந்தார். இயக்கத்தின் மூத்த தலைவர்களும் அவ்வாறே சம்பத் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அனை வரின் செல்லப்பிள்ளையாக மட்டுமல்ல, எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் பெரியாரின் வாரிசாகவும் அவர் உருவாகி வந்தார். அதை விவரமாக இந்த நூல் பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா அவர்களுக்கும் பெரியா ருக்கும் இடையே மனவேறுபாடுகள் முளைத்தன. அவை நாளுக்கு நாள் வளர்ந்தனவே தவிர குறையவில்லை. ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்தே ஒதுங்கிச் செல்ல அண்ணா அவர்கள் முடிவெடுத்தார். ஆனால் அவரை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியவர் சம்பத் அவர்களே ஆவார். அண்ணாவுடன் மிகநெருக்கமாக சம்பத் பழகுவது பெரியார் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அண்ணா - சம்பத் நட்புறவுக்கு எந்தப் பங்கமும் நேரவில்லை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட மனத்தாங்கலைப் போக்குவதற்கு சம்பத் பெருமுயற்சி செய்தார். ஆனாலும் அவரால் அதில் வெற்றிபெற முடியாதது ஏன் என்பதை இந்த நூல் விவரமாகக் கூறுகிறது. அண்ணாவின் மீது பெரியாருக்கு இருந்த கோபம் சம்பத் அவர்களின் மீதும் திரும்பியது. இதன் விளைவாக அவர் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற நினைப்புடன் மணியம்மையார் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இதைப் பற்றிய முழு விவரங்களையும் இந்த நூல் கூறுகிறது. பெரியாரின் இந்த முடிவைத் தொடர்ந்து இயக்கத்திற்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெரியாரின் உண்மையான வாரிசான சம்பத் இருக்கும் போது இன்னொரு வாரிசு எதற்காக? - என்ற கேள்வி இயக்கத் தோழர்கள் அத்தனை பேரின் உள்ளங்களையும் குடைந்தது. பெரியாரை எதிர்த்துத் தனியான அமைப்பு ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று இயக்கத்தின் மூத்த தலைவர்களும் மற்றும் தோழர்களும் அண்ணா அவர்களை வலியுறுத்தி னார்கள். ஆனால் பெரியாரை எதிர்த்து அரசியல் நடத்த அவர் விரும்பவில்லை. பெரும் மனப்போராட்டத்தில் அவர் ஆழ்ந்தார். அந்த வேளையில் பெரி யாரின் அரசியலுக்கு மட்டுமல்ல சொத்துக்கும் வாரிசாக விளங்க வேண்டிய ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் அண்ணாவைச் சந்தித்து அவருடைய சோர்வைப் போக்கி புதிய அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு முன்வருமாறு அவரை வற்புறுத்தினார். ஆனாலும் அண்ணா தயங்கினார். தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம் செய்து இயக்கத் தோழர் களும் மக்களும் என்ன நினைக்கிறார் கள் என்பதை அறிந்து வருமாறு சம்பத்திடம் அண்ணா கூறினார். அதைப் போல அவரும் சுற்றுப்பயணம் செய்து அனைவரையும் சந்தித்துப் பேசி ஆதரவான சூழ்நிலையை உருவாக்கி னார். அண்ணாவிடம் மக்களின் மன நிலையை எடுத்துரைத்தார். தன்னோடு தோள்கொடுத்து துணை நிற்க சம்பத் முன்வந்த காரணத்தினால்தான் அண்ணா துணிந்து தி.மு.க. என்னும் அமைப்பைத் தொடங்குவதற்கு முன் வந்தார் என்ற வரலாற்றுப்பூர்வமான உண்மையை இந்த நூல் மிக விரிவாக வும் ஆதாரப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளது. அண்ணா - சம்பத் ஆகியோரின் முன் முயற்சியுடனும் மற்றும் தோழர் களின் ஆதரவுடனும் தொடங்கப்பட்ட தி.மு.க.வின் தொடக்கக் கட்டத்திலிருந்து அதை தேசிய இன விடுதலை இயக்க மாக வளர்ப்பதற்கு சம்பத் பெருமுயற்சி செய்தார். ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்குப் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. ஆனாலும் அவற்றை யெல்லாம் வெற்றிகரமாகத் தாண்டி இயக் கத்திற்கு அரசியல் வடிவம் கொடுத்த பெருமை அவரை மட்டுமே சாரும். 1957ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சம்பத் நாடாளு மன்றத்திற்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணா சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு முதல் தடவையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். நாடாளுமன்றத்தில் மிகக் குறுகிய காலத்தில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை சம்பத் பெற்றார். இந்திக்கு எதிராக அவர் நாடாளுமன்றத்தில் தமிழில் முழங்கிய போது, நாடாளுமன்றமே அதிர்ந்தது. ஐந்தாண்டுத் திட்டங்களில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டிக் கண்டித்ததோடு நிற்கவில்லை. மாறாக கழகத்தின் சார்பில் வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்து ஐந்தாண்டுத் திட்டக் கண்டனக் கூட்டங்களை நாடெங்கும் தி.மு.க. நடத்துவதற்குக் காரணமாக இருந்தார். தி.க., தி.மு.க. போன்ற இயக்கங்கள் மட்டுமே இந்தியை எதிர்க்கின்றன என்ற தோற்றத்தை மாற்றவேண்டுமானால் இந்தியை எதிர்க்கின்ற அனைத்துத் தலைவர்களும் ஒன்றாக அணிதிரளவேண்டும் என சம்பத் கூறிய யோசனையின் அடிப்படையில் 28-1-1956ஆம் ஆண்டு பெரியார், இராஜாஜி, அண்ணா, பி. இராமமூர்த்தி, ஜீவானந்தம், ஏ. இராமசாமி முதலியார், ம.பொ.சி., வி.கே.இராமசாமி முதலியார் மற்றும் பலர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பைக் கண்டித்து ஏக மனதாகத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்திப் பேசாத மக்கள் விரும்பும் காலம் வரையிலும் ஆங்கிலம் இணை யாட்சி மொழியாக நீடிக்கும் இந்தி ஒரு போதும் மற்றவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மொழி உரிமை சாசனத்தை தனது வாதாடும் திறமையால் மட்டும் பெற்றுத் தந்தவர் ஈ.வெ.கி. சம்பத் ஆவார். இந்தி பேசாத மாநிலங்களில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழித் திணிப்புக்கு எதிரான பாதுகாப்புக் கேடயமாக அந்த உறுதிமொழிதான் இன்றுவரை திகழ்கிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்துப் பேசி அவர்களையும் மத்திய அரசுக்கு எதிராக அணி திரட்டுவதற்கான முயற்சிகளையும் சம்பத் மேற்கொண்டார். பஞ்சாப் அகாலி தளத் தலைவர் மாஸ்டர் தாராசிங்கை சந்தித்துப் பேசினார். 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் அவர் கலந்து கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசினார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியப் பிரதமர் நேரு அவர்களையும் அண்ணா அவர்களையும் சந்தித்துப் பேச வைக்க சம்பத் பெரு முயற்சி மேற் கொண்டார். அந்த சந்திப்பின் மூலம் தி.மு.க.வைப் பற்றி நேருவுக்குப் புரிய வைக்க முடியும் என்று சம்பத் நம்பினார். ஆனால் நேருவைச் சந்திப்பதில் அண்ணா தயக்கம் காட்டினார். ஆனாலும் இடைவிடாமல் சம்பத் செய்த முயற்சியின் விளைவாக நேருவை இரண்டு முறை சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி பெற்று அண்ணாவையும் தில்லிக்கு அழைத்துச் சென்றார் சம்பத். ஆனாலும் கடைசி நேரத்தில் அண்ணா வின் குடும்பத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியைக் காரணமாகக் காட்டி நேருவைச் சந்திக்காமலேயே அண்ணா திரும்பியபோது சம்பத் மட்டுமல்ல தி.மு.க.வினர் அனைவருமே ஏமாற்றம் அடைந்தனர். தி.மு.க.வை படிப்படியாக அரசியல் மயப்படுத்த சம்பத் எடுத்துக் கொண்ட முயற்சிகளை கழகத்தின் மேல் மட்டத்தில் இருந்த பல தலைவர்கள் விரும்பவில்லை. மேனாமினுக்கி அரசியலிலும், ஆரவாரப் பேச்சிலும் மட்டுமே நம்பிக்கைகொண்டிருந்த அந்தத் தலைவர்கள் தியாகம் செறிந்த போராட்ட வாழ்க்கைக்குத் தயாராக இல்லை. இந்த நூல் அதை நல்ல முறையில் பதிவு செய்திருக்கிறது. தி.மு.க. ஒரு விடுதலை இயக்கம் என்பதை மறந்துவிட்டு தீவிரமான நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு திரைப்படக் கவர்ச்சியை அடிப்படை யாக வைத்து மக்களைத் திரட்டி அவர்களைத் தங்களுக்குத் துதிபாடும் கூட்டமாக மாற்றி அதன் மூலம் தங்கள் தலைமையைத் தக்கவைத்துக் கொள்ளவே பலர் விரும்பினார்கள். கூட்டத்தின் மூலம் வாக்குகளைப் பெற்று பதவி நாற்காலிகளில் அமர்ந்து சுகபோக வாழ்க்கையை நடத்த விரும்பினார்களே தவிர அடக்குமுறைகளையோ சிறைக் கொடுமைகளையோ சந்திக்க அத் தலைவர்கள் தயாராக இல்லை. எனவே 1959ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்குழுக்கூட்டத்தில் கழகத்தின் அடிப்படை இலட்சியமான திராவிட நாடு குறித்து பெரும் கேள்வியை சம்பத் எழுப்பினார். "திராவிட நாடு பேசுகிற நாம் திராவிடத் தின் பிற பகுதிகளில் மக்களைத் திரட்டவும் கருத்தைப் பரப்பவும் எதுவும் செய்யாததை சுட்டிக்காட்டிக் கண்டித் தார். இதைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டு சூலையில் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் மற்றொரு புரட்சிகரமான தீர்மானத்தை சம்பத் முன்மொழிந்தார். சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர் பதவிகள் வகிப்பவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக் குப் போட்டியிட முடியாது என்பதுதான் அதுவாகும். பொதுக் குழு உறுப்பினர்கள் நடுவில் இதற்குப் பேராதரவு இருந்தது. ஆனால் அண்ணா அவர்கள் அதை மிகத் தந்திரமாக அடுத்த பொதுக்குழு விற்குத் தள்ளிப்போட்டார். சோவியத் ஒன்றியத்தில் ஈ.வெ.கி. சம்பத் மேற்கொண்ட சுற்றுப்பயணம் அவரது அரசியல் பார்வையை விரிவாக்கிற்று சோவியத் ஒன்றியத்தில் பல்வேறு தேசிய இன மக்களும் சம உரிமையுடனும் கூட்டாட்சித் தத்து வத்தை மதித்துப் போற்றுபவர்களாகவும் வாழ்ந்த விதம் அவரை மிகவும் கவர்ந் தது. சோவியத் நாட்டின் சுற்றுப்பயணத்தி லிருந்து அவர் திரும்பியவுடன் "திராவிட நாடு பிரிவினை என்பது இனி சாத்திய மற்ற ஒன்று, எனவே சோவியத் பாணி யில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழகத்திற்காகப் போராடுவது தான் சாத்தியமான ஒன்று' என அண்ணா அவர்களிடமும் பிற தலைவர் களுடனும் வாதாடிப் பார்த்தார். ஆனால் அவரை மறுக்காமல் சற்றுப் பொறுத்துக் கொள்ளும்படியும் உரிய காலக்கட்டத்தில் திராவிட நாடு பிரிவினையைக் கைவிடும் தீர்மானத்தை' தாமே முன்மொழிவதாகவும் வாக்குறுதி தந்தார் அண்ணா. ஆனால் திண்ணையில் படுத்துக்கொண்டாவது திராவிட நாடு கேட்பேன் என அவர் பேசத் தொடங்கியபோது அவரின் உண்மை வேடத்தை சம்பத் உணர்ந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. வன் முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சம்பத்தையும் அவரது தோழர்களையும் கழகத்திலிருந்து வெளியேற்றுவதில் அண்ணாவின் தம்பிகள் மும்முரமாக ஈடுபட்டனர். திராவிட தேசியம் என்பது முற்றிலும் கற்பனையானது. என்றைக்கும் உருவாக முடியாதது. மொழிவழித் தேசியம் ஒன்றுதான் இயற்கை வழி பட்டது என்ற சம்பத்தின் வாதத்தை ஏற்க மறுத்து "அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு'' என வீர முழக்கமிட்டவர்கள் பிரிவினைத் தடைச் சட்டம் வரப்போகிறது என்ற செய்தி யைக் கேள்விப்பட்டவுடன் அவசரக் கோலத்தில் திராவிட நாடு கோரிக்கை யைக் கைவிட்ட கோழைத்தனத்தையும் கண்டு நாடு நகைத்தது. அதைப்போல இந்தியத் தேசியம் என்பது ஒருபோதும் உருவாகவில்லை. இந்தியத் துணைக் கண்டத்தை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராட இந்தியாவில் உள்ள சகல தேசிய இன மக்களும் இணைந்து முன்வந்தனர். இந்த ஆங்கிலேய எதிர்ப்புணர்வு இந்திய தேசியமாக ஒருபோதும் உருவாக முடியவில்லை. இந்தியத் தேசியமே மிகப் போலியானது என்னும் போது இல்லாத திராவிட தேசியம் எப்படி நடைமுறைக்கு சாத்தியம் என்பதை தி.மு.க. தலைமை உணர மறுத்தது. 1960ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் தி.மு.க. பொதுக்குழு உறுப் பினர்களுக்கு சம்பத் கையெழுத்திட்ட இரகசியச் சுற்றறிக்கை ஒன்றை அனுப் பினார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகப் படித்துக்கொண்டிருந்த நானும் என்னு டைய தோழர்களும் அந்தச் சுற்றறிக்கை யைப் படித்துப் பார்த்தோம். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் எங்களை ஈர்த்தன. எனவே சம்பத் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு கடிதத்தை நாங்கள் அனுப்பினோம். தி.மு.க. வரலாற்றில் இந்தச் சுற்றறிக்கை மிகமுக்கியமான ஆவண மாகும். அதில் சம்பத் எழுப்பியிருந்த பல வினாக்கள் கழகத் தோழர்களின் உள்ளங்களில் அலைமோதிக் கொண்டி ருந்த வினாக்களேயாகும். இந்தச் சுற்றறிக்கையை அபாயகரமான ஒன்றாக கழகத் தலைவர்கள் பலர் கருதினார்கள். சம்பத்துக்கு எதிராக அணி திரண்டார் கள். அவர்கள் வலையில் அண்ணாவும் வீழ்ந்தார். அதையொட்டி நடைபெற்ற அத்தனை நிகழ்ச்சிகளையும் இந்த நூல் விளக்கமாக எடுத்துக்கூறுகிறது. கொள்கைப் பாசறையாக தி.மு.க.வை மாற்றுவதற்கு சம்பத் மேற்கொண்ட உண்மையான முயற்சி களுக்கு எதிராக அணி திரண்டவர்கள் அண்ணாவுக்கு எதிராக சம்பத் தலைமை யைக் கைப்பற்ற முயலுகிறார் என பொய் யான குற்றம் சாட்டித் தொண்டர் களைக் குழப்பினார்கள். உண்மையில் கொள்கையற்ற கோமாளிகளின் கூடார மாக தி.மு.க.வை இந்தத் தலைவர்கள் தான் மாற்றினார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. சம்பத் எழுப்பிய அரசியல் ரீதியான வினாக்களுக்கு பதிலளிக்க முடியாதவர்கள் அவருக்கு எதிராக வன்முறையைத் தூண்டி விட்டார்கள். சனநாயக மன்றமாக விளங்க வேண்டிய தி.மு.க. ஃபாசிச அமைப்பாக உருவெடுத் தது. இதன் விளைவாக சம்பத்தும் அவரது தோழர்களும் தி.மு.க.வை விட்டு வெளியேற நேர்ந்தது. தி.மு.க. என்னும் இயக்கம் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திலிருந்து முற்றிலுமாக விலகி பதவிகளுக்காகப் பேரம் பேசும் கட்சியாகவும், பதவியில் அமர்ந்து பணம் புரட்டும் கட்சியாகவும் உருமாறி விட்டது. சிந்திக்கத் தெரிந்த செயல் வீரர்கள் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் அக்கட்சியிலிருந்து வெளியேறியபோதே தி.மு.க. தனது இலட்சிய வலிமையை அடியோடு இழந்துவிட்டது. இலட்சிய மில்லாத வெறும் கூடாக மாற்றப்பட்ட தி.மு.க. இறுதியில் கருணாநிதியின் குடும்பக் கட்சியாக மாறிப்போனதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஈ.வெ.கி. சம்பத் தூக்கிப்பிடித்த தமிழ்த்தேசியப் பதாகையை இன்றைக்கு மேலும் மேலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயர்த்திப் பிடித்துள்ளனர். அவர் மூட்டிய இலட்சியத் தீ தமிழகம் எங்கும் விரைவாகப் பரவி வருகிறது. இந்திய தேசிய மாயையும் திராவிடத் தேசியப் பித்தலாட்டமும் அந்தத் தீயில் கருகிச் சாம்பலாகும் என்பதில் ஐய மில்லை. தமிழ்த் தேசியம் பேருருவாக எழுந்து நிற்கப் போகும் காலம் அதிகத் தூரத்தில் இல்லை. ஈ.வெ.கி. சம்பத் மறைந்து விட்டாலும் அவரால் முன்னெடுக்கப் பட்ட தமிழ்த் தேசியம் இன்று ஒளிவிட்டு மின்னுகிறது. அவரது தொலைநோக்குப் பார்வை வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு அரசியல் தலைவரின் வெற்றி தோல்வி பற்றி மதிப்பிடும் போது அவருடைய சாதனைகளையும் வகித்த பதவிகளை யும் மட்டுமே வைத்து மதிப்பிடு வதில்லை. தன்னுடைய வாழ்நாளில் சம்பத் அரசுப் பதவிகள் எதிலும் அமர வில்லை. ஆனால் அவருடைய மறை வுக்குப் பின்னால் அவரால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட தமிழ்த் தேசியம் வெற் றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக் கிறது. என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்த் தேசியம் வெற்றி பெறப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அந்த வெற்றிப் பதாகையில் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் பெயரும் பொறிக்கப்பட்டு மின்னும். திராவிட இயக்க வரலாற்றில் ஈ.வெ.கி. சம்பத் ஆற்றிய தொண்டுகள் குறித்த இந்த நூலை மறைந்த நண்பர் விவேகானந்தன், கல்பனாதாசன், தம்பி இனியன்சம்பத் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். திட்டமிட்டு மறைக் கப்பட்ட வரலாற்றுப் பகுதி மீது இந்நூல் மூலம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி பல அரிய உண்மைகளையும் தமிழகம் அறியச் செய்த அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். இந்த நூலைக் குறிப்பாக தமிழக இளைஞர்கள் படித்துப் பயன் பெறுவார்களாக. வெளியீடு : இனியன் சம்பத் பதிப்பகம் 3/643 குப்பம் சாலை, காவேரிநகர், கொட்டிவாக்கம், சென்னை-600 041. விலை ரூ.300/-
|