"புலிகளின் கடற்படையைத் தாக்கி அழித்தது இந்தியாதான்'' பா.ஜ.க. தலைவர் யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு! |
|
|
|
வியாழக்கிழமை, 21 மார்ச் 2013 10:44 |
"இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகளின் கடற்படையை (கடல்புலிகள்) தாக்கி அழித்தது இந்தியக் கடற்படைதான்'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பேசிய அவர், "இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம்
கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன. இலங்கை இராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும், அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதையும் பார்க்கும் காட்சிகள் அனைவரையும் உறையவைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்தப் படம் ஒன்றே சொல்லும். இலங்கை அண்டை நாடு. அதனால் மற்ற நாடுகளைப் போல இலங்கைப் பிரச்சினையைக் கையாள முடியாது. ஆனால் இலங்கையைக் கையாள்வது எளிதானதுதான். இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும். அதற்கு இந்த விவாதம் உதவ வேண்டும். 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே இலங்கையில் போர் முடிந்துவிட வேண்டும் என இந்தியா கருதியது. இந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தை இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டார். இதை பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தி வெற்றி பெற்றார். இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஈழப் போர் முடியும்வரை இந்தியாவும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை தாக்கி அழித்தது இந்தியக் கடற்படைதான். 2009-ம் ஆண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என பிரதமரிடம் பேசினேன். ஆனால் நட்பு நாடு என்பதால் தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர். இலங்கையில் போர் முடிந்த பின்னரும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடபகுதியில் இருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். 13-வது அரசியல் சாசன திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். "தெகுநெவிம' என்ற சட்டம் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைத்திருக்கிறது இலங்கை அரசு. இலங்கையின் தலைமை நீதிபதியையே பதவி நீக்கம் செய்திருக்கிறது இலங்கை அரசு. இது தொடர்பாக விசாரிக்க சென்ற சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்கவில்லை.
இலங்கை மீதான புகார்கள் தொடர்பாக இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றங்கள் செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும்'' என்றார்.
|