நேரு ஒப்புக்கொண்ட "பொதுவாக்கெடுப்பு'' - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 12:26
இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து அங்கு வாழும் தமிழர்களிடமும் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தும் தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் களும் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சல்மான் குர்ஷித் பேசுகை யில் "தமிழீழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.வில் இந்திய அரசு தீர்மானம் கொண்டு வராது. அது மட்டு மல்ல, இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்கும் கேள்விக்கே இடமில்லை'' என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் பேசும்போது தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் போல ஐ.நா.வில் கொண்டு வர முடியாது. கொண்டு வந்தாலும் அது வெற்றி பெறாது. இந்தத் தீர்மானம் வெற்றுவேட்டுத் தீர்மானம்'' எனப் பேசுகிறார்கள்.
மத்திய அமைச்சரானாலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆனாலும் ஐ.நா.வின் வரலாற்றையோ அல்லது உலக வரலாற்றையோ குறைந்த அளவு இந்தியாவின் வரலாற்றையோ அறியாதவர்களாக இருப்பது பரிதாபத்திற்குரியதாகும்.
யூகோஸ்லாவியாலிருந்து மாண்டிநீக்ரோ பிரிந்து தனிநாடாவதற் குரிய பொது வாக்கெடுப்பு 2006ஆம் ஆண்டில் ஐ.நா.வால் நடத்தப்பட்டு 55.5 சதவிகித வாக்குகள் அளிக்கப்பெற்று அதே ஆண்டு சூன் 3ஆம் தேதி மாண்டிநீக்ரோ சுதந்திர நாடாகத் தன்னை பிரகடனம் செய்து கொண்டது.
சூடானிலிருந்து தெற்குச் சூடான் தனிநாடாக வேண்டும் என்ற கோரிக் கையை ஏற்று ஐ.நா. பேரவை அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தியது. 98.83 சதவிகித வாக்குகள் ஆதரவாகக் கிடைக்கப் பெற்றதால் தெற்குச் சூடான் 2011ஆம் ஆண்டு சூலை 9ஆம் தேதி சுதந்திர நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துகொண்டது.
யூகோஸ்லாவியாவிலிருந்து ஸ்லோவேனியா பிரிந்து தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஐ.நா. பேரவை நடத்திய பொது வாக்கெடுப் பின்படி 88.5 சதவிகித வாக்குகளைப் பெற்று 1990ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி தன்னை தனிநாடாக அறிவித்துக் கொண்டது.
யூகோஸ்லாவியாவிலிருந்து, குரோசியா பிரிந்து தனி நாடாக வேண்டும் என்பதற்கான பொது வாக் கெடுப்பை ஐ.நா. 1991ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி நடத்தியது. 94.17% சதவிகித வாக்குகள் தனி நாடாவதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டதின் காரணமாக குரோசியா 1991ஆம் ஆண்டு சூன் 25ஆம் தேதி தனி நாடானது.
1975ஆம் ஆண்டு போர்ச்சுக
லின் ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற கிழக்கு திமோர் நாட்டின் மீது இந்தோனேசியா படை யெடுத்து அதை தனது 27ஆவது மாநிலமாக ஆக்கிக் கொண்டது. ஆனால், ஐ.நா. பட்டயத்தில் குறிப் பிட்டுள்ளபடி சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்தி கிழக்குத் திமோர் 1999ஆம் ஆண்டு உரிமை கொண்டாடியது. அதை ஐ.நா. ஏற்றுக் கொண்டதின் விளைவாக 2002ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி கிழக்குத் திமோர் தனி நாடானது.
எத்தியோப்பியா கூட்டாட்சியில் ஒரு பகுதியாக விளங்கிய எரித்திரியா சுதந்திர நாடாவதற்காக போராடியது. ஐ.நா. தலையீட்டின் பேரில் 1991ஆம் ஆண்டில் எரித்திரியா சுதந்திர நாடானது.
உலகெங்கும் ஐ.நா.வின் துணையு டன் பொது வாக்கெடுப்புகள் நடத்தப் பட்டு தனி நாடுகள் உருவான வர லாற்றை அறியாதவர்களாக மத்திய அமைச்சர்களும் அவரது கட்சியினரும் இருப்பதைக் குறித்து வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவர்களுக்கு இந்திய நாட்டின் வரலாறும் காங்கிரஸ் கட்சியின் வரலாறுமே தெரியாமல் இருப்பதுதான் வேடிக்கையானதாகும். அவற்றை அவர்களுக்குக் கற்பிப்பதற்கு உலக வரலாறு எழுதிய நேருவும் இன்றில்லை.
இந்திய துணைக் கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்படுவது குறித்து காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர் களிடையே ஆங்கிலேய அரசின் பிரதிநிதியான வைசிராய் மவுண்ட் பேட்டன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்கள்
மீது முஸ்லிம் லீக் உரிமை கொண்டாடி முழுமையாக அந்த மாகாணங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், காங்கிரஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத அடிப் படையில் பஞ்சாபையும், வங்காளத்தை யும் இரண்டிரண்டாகப் பிரிக்க வேண்டும் என கூறியது. அதாவது இந்துக்களும், சீக்கியர்களும் பெரும்பான்மையினராக வாழும் கிழக்கு பஞ்சாப் இந்தியாவு டனும், முஸ்லிம்கள் பெரும்பான்மையி னராக வாழும் மேற்கு பஞ்சாப் பாகிஸ் தானுடனும் சேர்க்கப்பட வேண்டும். அதைப் போல முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக வாழும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடனும், இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் மேற்கு வங்காளம் இந்தியாவுடனும் இணைக்கப் பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. பல கட்டப் பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு இந்தக் கோரிக்கை களுக்கு முஸ்லிம் லீக் இணக்கம் தெரிவித்தது.
ஆனால் பட்டாணி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடமேற்கு எல்லைப் புற மாகாணம் குறித்துப் புதிய பிரச்சினை எழுந்தது. அங்கு 1946ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சட்டமன்றத் தேர்தலில் எல்லை காந்தி அப்துல் கபார்கான் அவரது சகோதரர் கான் சாகிப் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் பெரு வெற்றிபெற்று அமைச் சரவை அமைத்திருந்தது. ஆனால், அந்த மாகாணத்தை பாகிஸ்தானுடன் சேர்த்தே ஆக வேண்டும் என முஸ்
லிம் லீக் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பிரச்சினை முற்றியது.
இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ் தானுடன் இணைவதா என்பது குறித்து அம்மாகாணத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட நேரு, படேல் ஆகியோர் இதை ஏற்றுக் கொண்டனர். ஆனால், கான் அப்துல் கபார்கான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பொது வாக் கெடுப்பு நடத்துவதாயின் இந்தியாவுடன் இணைவதா? பாகிஸ்தானுடன் இணை வதா? தனி பக்டூஸ்தான் அமைப்பதா? என மூன்று கோரிக்கைகளை முன் வைத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஆனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்டதை மீறுவ தற்கு நேருவும் படேலும் இசைய வில்லை.
கான் அப்துல் கபார்கானும் அவருடைய ஆதரவாளர்களும் பொது வாக்கெடுப்பைப் புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.
எல்லைப்புற மாகாண ஆளு நராக இருந்த ஒலாப் கரோர் என்ற ஆங்கிலேயர் முஸ்லிம் லீக் ஆதரவாள ராகச் செயல்படுகிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியதின் பேரில் அவர் உடனடியாக மாற்றப்பட்டு சர் ராப் லோக் கார்ட் என்பவர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பதிவான வாக்குகள் 2,89,244 ஆகும். இந்தியாவுக்கு ஆதர வாகப் பதிவான வாக்குகள் 2,874 மட்டுமே ஆகும். இந்த பொது வாக் கெடுப்புக்கிணங்கவும், மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்ளவும் காங்கிரசுக் கட்சி முன்வந்தது. எல்லைப் புற மாகாணம் பாகிஸ்தானுடன் இணைக் கப்பட்டது.
உலகத்தின் பிற நாடுகளில் நடைபெற்ற பொது வாக்கெடுப்புகளை மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தோ அல்லது மற்ற காங்கிரஸ் தலைவர்களோ அறியாமல் இருப்பது தவறல்ல. ஆனால் இந்தியாவில் நடைபெற்ற பொதுவாக் கெடுப்பைக் கூட அறியாதவர்களாக இருப்பது வரலாறு அறியாமையின் உச்சக்கட்டமாகும்.
காங்கிரஸ் கட்சியின் மிக உயர்ந்த தலைவர்களாக மட்டுமல்ல நாட்டு மக்களின் நன்மதிப்புக்கு உரியவர் களாகவும் திகழ்ந்த பெருமைக்குரிய வர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோர் ஆவர். அவர்களே மகாத்மா காந்தி அவர்களின் ஒப்புத லோடு எல்லைப் புற மாநிலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்துக்கேற்ப முடிவு செய்வது எனத் தீர்மானித்தார்கள். ஜனநாயக ரீதியாக நடந்து கொள்ள அவர்கள் அவ்விதம் முடிவு செய்திருக்காவிட்டால் தேச சுதந்திரம் பெறுவது என்பது பல்வேறு சிக்கலுக்கு உள்ளாகி இருந்திருக்கும். தொலை நோக்குப் பார்வையுடன் அவர்கள் யோசித்துத்தான் இத்தகைய முடிவினை எடுக்க நேர்ந்தது. இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அவர்கள் இருவரையும் விட அறிவாற்றல், திறமை ஆகியவற்றில் மிஞ்சியவர்கள் அல்லர். அவர்களோடு ஒப்பிடும் போது இவர்கள் மிகமிக சாமானியர்கள்.
வடமேற்கு எல்லைப்புற மாநில மக்கள் பொது வாக்கெடுப்பில் அளித்த தீர்ப்பு இந்த மாபெரும் தலைவர்கள் வரப் போவதை முன்கூட்டியே அறிந் திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அதைப் போன்ற உரிமை யைத்தான் ஈழத் தமிழர்கள் வேண்டு கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஆதரவாக தமிழக சட்டமன்றம் ஒரே மனதாக தீர்மானம் நிறைவேற்றி அங்கீகாரம் அளித்துள்ளது. மக்களின் விருப்பத்தை மதிக்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்பது உறுதியாகும்.
நன்றி : தினமணி
புதன்கிழமை, 24 ஜூலை 2013 16:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.