ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழும் கட்டங்களில் அவற்றைத் திசை திருப்ப சாதி ரீதியான மோதல்கள் தூண்டிவிடப்படுகின்றன. இதை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வியாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் கையாளப்பட்ட அதே பிரித்தாளும் சூழ்ச்சியை இந்திய உளவுத்துறை கடைப்பிடித்து சாதிய மோதல்களுக்கு பின்னணியில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று சொல்லிவிட முடியாது.
தமிழ், தமிழருக்கு எதிரான சக்திகளும் ஊடகங்களும், சாதிக் கலவரங்களை விசிறி கொழுந்துவிட்டு எரியச் செய்கின்றன. தமிழகமோ அல்லது இந்திய அரசோ சற்றும் எதிர்பார்க்காத வகையில் மாணவர்களின் போராட்டம் எரிமலை வெடித்தது போல திடீரென வெடித்தது. அது திசை தடுமாறாமல் சரியான இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அத்தனை கல்லூரி மாணவர்களும் அந்தப் போராட்டத்தில் உணர்வுப் பூர்வமாகவும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். யாரும் அவர்களைத் தூண்டிவிடவில்லை. அல்லது யாரும் அவர்களுக்குப் பின்னணியிலும் இல்லை. போராட்டக் குழுவுக்கு "தமிழீழ விடுதலை ஆதரவு மாணவர் கூட்டியக்கம்' என்ற பெயரைச் சூட்டியதிலிருந்து போராட்ட நோக்கங்கள் வரை சரியாகத் திட்டமிட்டு அவர்கள் நடத்தியவிதம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. ஒரு கோடிக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தபோதிலும் எந்த ஒரு இடத்திலும் சிறு வன்முறையோ வேண்டாத நிகழ்ச்சியோ இல்லாமல் கட்டுக்கோப்புடன் அவர்கள் நடத்திய விதம் மக்களிடம் மாணவர் போராட்டத்திற்குப் பெருமதிப்பைப் பெற்றுக்கொடுத்தது. மாணவர் போராட்டத்திற்குள் ஊடுருவி அதற்கு கட்சி சாயம் பூசுவதற்கும் அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் முயன்றவர்கள் மூக்குடைபட்டதுதான் மிச்சம். மாணவர் போராட்டத்தின் பெருவீச்சின் விளைவு தில்லி நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அதுவரை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து பேசாத கட்சித் தலைவர்களை எல்லாம் பேசவைத்தது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்றுப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட வேளையிலும்கூட பதவியைவிட்டு விலகிவரத் தயங்கியவர்களை மாணவர்களின் போராட்டம் விலக வைத்தது. என்னென்ன கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராடினார்களோ அதே கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் அவற்றுக்குத் தீர்மான வடிவம் கொடுத்து சட்ட மன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றினார். மாணவர்கள் மூட்டிய பெருந்தீயை திசைதிருப்ப திடீரென சாதிக் கலவரம் தூண்டிவிடப்பட்டது. சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் தமிழரே என்ற உணர்வு மேலோங்கிய வேளையில் அதை பின்னோக்கிச் செலுத்துவதற்கு இந்த முயற்சி செய்யப்பட்டது. யார் செய்தார்கள் என்பதைவிட எதற்காகச் செய்தார்கள் என்பது மிகமிக முக்கியமானதாகும். இலங்கை, பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயூனியன், பிஜி போன்ற பல நாடுகளுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட பல இலட்சம் தமிழர்களில் மிகப்பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பல நூற்றாண்டு காலமாக தாய்த் தமிழகத்துடன் தொடர்பு அற்றுப்போன அவர்கள் சாதிகளை மறந்து தமிழர்கள் என்ற உணர்வு மேலோங்க ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் திருமணங்கள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு அடியோடு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தாங்கள் இன்ன சாதி என்பதே தெரியாமல் இளைய தலைமுறையினர் வாழ்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால் தமிழ்நாட்டில் வள்ளலார் காலத்திலிருந்து பெரியார் காலம் வரை சாதியத் தீமைகளுக்கு எதிராக எவ்வளவோ பேசியும், எழுதியும், இயக்கங்களை நடத்தியும் இன்னமும் சாதியக் கொடுமைகள் தலைதூக்குகின்றன என்றால் அதற்கு யார் பொறுப்பு? இந்தத் தீமையை அடியோடு ஒழித்துக்கட்டி அனைவரும் தமிழர்களாகக் கைகோர்த்து நிமிர்ந்து நடப்பது எப்போது? சாதிய விலங்குகளை நம் கரங்களில் இருந்து தகர்த்தெறியாதவரை நம்மால் எதுவும் செய்யவோ சாதிக்கவோ இயலாது. இதை நாம் எவ்வளவு விரைவாக உணர்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. சாதி அல்லது மத பேதங்களுக்கு இரையாகிப் போன இனங்கள் இன்னமும் முன்னேற முடியவில்லை. இந்தியாவிலேயே அதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு. வெள்ளையர் ஆட்சியில் ஒன்றுபட்ட வங்காளத்தை மத அடிப்படையில் பிரித்து. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட மாகாணம் ஒன்றையும், இந்துக்கள் பெரும்பான்மையாக கொண்ட மற்றொரு மாகாணத்தையும் அமைப்பது என முடிவுசெய்யப்பட்டபோது அதற்கு எதிராக இந்தியா முழுவதும் பெரும் கொதிப்பு ஏற்பட்டது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழகத்தில் வ.உ.சி.யும், சிவாவும், பாரதியும் எதிர்த்துப் போராடினார்கள். அதைப் போலவே மற்ற மாகாணங்களிலும் போராட்டங்கள் மூண்டெழுந்தன. ஆனால், அதே வங்காளம் பிற்காலத்தில் மதவெறிக்கு இரையாகி, முஸ்லிம்கள் நிறைந்த கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடனும், மேற்கு வங்காளம் இந்தியாவுடனும் இணைய நேர்ந்தது. மேற்கு வங்கம், வங்காளதேசம் ஆகியவற்றில் இன்றைய மக்கள் தொகை 17 கோடி. இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 16 கோடிதான். வங்கம் மதரீதியாக பிளவுபடாமல் இருந்திருக்குமானால் இந்திய அரசியலில் வங்காளிகளின் கை ஓங்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வங்காளிகள் மதத்தால் பிளவுபட்டுப்போனதின் விளைவாக ஒட்டுமொத்தமாக வங்க தேசிய இனத்தின் வலிமை குன்றியது. ஒரே மொழி பேசும் தேசிய இனத்தைச் சேர்ந்த வங்க மக்கள் மதத்தால் வேறுபட்டு இருநாடுகளாகப் பிரிந்துபோனதின் விளைவை இன்னமும் அனுபவிக்கின்றனர். இராஜாராம் மோகன்ராய், சி.ஆர். தாஸ், பிபின் சந்திரபால், சரத் சந்திரபோஸ், சுபாஷ் சந்திரபோஸ், அபுல் கலாம் ஆசாத், பசுல் ஹக், சுராவர்த்தி போன்ற அரசியல் தலைவர்களும், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் போன்ற துறவிகளும், இரவிந்திரநாத் தாகூர், பக்கிம் சந்திரர் போன்ற இலக்கியவாதிகளும், ஜெகதீச சந்திரபோஸ் போன்ற விஞ்ஞானிகளும் வங்கத்தில் பிறந்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார்கள். இத்தகைய அறிஞர்களைப் பெற்றெடுத்த வங்க இனம் இந்து, முஸ்லிம் எனப் பிரிந்து மோதிக் கொண்டதின் விளைவாக எல்லாத் துறைகளிலும் பின்தங்கி இருக்கக்கூடிய நிலைமையைப் பார்க்கிறோம். பஞ்சநதிகள் பாய்ந்து வளம் கொழிக்கச் செய்யும் பஞ்சாப் மாகாணம் வெள்ளைக்காரர்கள் காலத்தில் வலிமை வாய்ந்த மாகாணமாக திகழ்ந்தது. மகாராஜா ரஞ்சித்சிங் தலைமையில் ஆங்கிலேயப் படைகளை ஓடஓட விரட்டியடித்த பெருமை பஞ்சாப் மக்களுக்கு உண்டு. லாலா லஜபதிராய், பகத்சிங், ஒன்றுபட்ட பஞ்சாபின் முதலமைச்சராக இருந்த சிக்கந்தர் ஹையத்கான் போன்ற மிகச்சிறந்த தியாகத் தலைவர்களை பெற்றெடுத்த மாநிலம் பஞ்சாப் ஆகும். ஆனால், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என மதத்தால் வேறுபட்டாலும் மொழியின் அடிப்படையிலே பஞ்சாபியர்களாக விளங்கிய அவர்கள் பிற்காலத்தில் மத வழியே பிரிந்தபோது வலிமை குன்றினார்கள். முஸ்லிம்கள் நிறைந்த மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானுடன் இணைந்தது. எஞ்சிய இந்துக்கள் நிறைந்த பஞ்சாப், ஹரியானா மாநிலமாகவும், சீக்கியர்கள் நிறைந்தது பஞ்சாப் மாநிலமாகவும், மலைப்பகுதி, இமாச்சலப் பிரதேசமாகவும் ஆக 4 மாநிலங்களாக ஒன்றுப்பட்ட பஞ்சாப் பிரிக்கப்பட்டது. இதன் விளைவாக பஞ்சாபிய இனம் அடைந்திருக்கும் சரிவிலிருந்து இன்னமும் மீளமுடியாமல் தவிக்கிறது. "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்றும் "வள்ளுவன் தனை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றும் பாடி நெஞ்சு நிமிர்ந்து நின்ற பாரதி உலவிய மண் சாதியச் சண்டைகளால் சீரழிவதைப் பார்க்க நல்ல வேளையாக அவர் இன்று இல்லை. குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக சாதி வெறித் தீயை மூட்டி அதில் குளிர் காய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களின் பகைவர்கள். அத்தகையவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டியது தமிழர்களின் கடமை. இந்தக் காலக் கட்டத்தில் தமிழினம் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அண்டையில் உள்ள இலங்கையில் தமிழினம் பேரழிவுக்கு உள்ளாகி சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. எஞ்சியுள்ள தமிழர்களைக் காக்க வேண்டிய மாபெரும் கடமை தாய்த் தமிழகத்திற்கு உண்டு. ஆனால், காக்க வேண்டிய கரங்கள் சாதி உணர்வினால் உந்தப்பட்டு ஒன்றைஒன்று வெட்டிச்சாய்க்க முற்படுமேயானால், அதன் விளைவாக ஒட்டுமொத்த தமிழினமே அழிந்துபோகும் என்பதை மறக்கக்கூடாது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நேரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. தாய்த் தமிழகம் தான் ஆற்றவேண்டிய கடமையை மறந்து சாதி உணர்வால் பிளவுபட்டு மோதிக்கொண்ட காரணத்தினால் பிற நாடுகளில் உள்ள தமிழர்களும் அழிந்து போனார்கள் என்ற மாறாத பழி நம் மீது வந்து சேரும். ஒன்றுபட்ட பஞ்சாபும், வங்காளமும் மதச் சண்டையினால் பிரிந்து இன்று அந்த இரு இனங்களும் வலிமையற்று கிடப்பதைப்போன்ற நிலை தமிழினத்திற்கு வந்துவிடக்கூடாது. தங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் தமிழின எழுச்சிக்கு புத்துயிர் தந்த மாணவ மணிகள் தொடர்ந்து சாதி, சமய வேறுபாடுகளிலிருந்தும் தமிழ்ச் சமுதாயத்தை மீட்டெடுக்க முனைய வேண்டும். காலம் அவர்களுக்குப் பிறப்பித்திருக்கும் கட்டளை இதுவாகும். நன்றி : ஜூனியர் விகடன்
|