"இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் முதல்வர்கள் மாநாடு தில்லியில் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற போது அதில் கலந்து கொள்ளப் போவதில்லை'' என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதற்கு முன்பு நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டின்போது தனது பேச்சிற்கு இடையே பிரதமர் குறுக்கிட்டு மணியடித்துப் பேச்சை முடிக்குமாறு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது நடைபெற்ற மாநாட்டிலும் தான் கலந்து கொள்ளாமல் மூத்த அமைச்சர்களில் ஒருவரான முனுசாமியை அனுப்பி வைத்தார். இந்திய அரசியலில் புதிய சிக்கல் ஒன்றினை இந்நிகழ்ச்சி தோற்றுவித்திருக்கிறது. பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தப் போகிறது என்பதில் ஐயமில்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராசர் பிரதமர் நேருவின் மறைவிற்குப் பிறகு சனநாயக ரீதியில் அடுத்தடுத்து இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுத்த போது அவரின் இணையற்ற இராசதந்திரத்தை உலகமே பாராட்டியது. அப்போது அவர் புதிய ஆனால் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத முன்மாதிரி ஒன்றினைத் தோற்றுவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் மாநில முதல்வர்களும் பெரும் பங்கு வகிக்க வேண்டும். மாநிலங்கள் இல்லையேல் இந்தியாவும் இல்லை என்ற உண்மையை முதன் முதலாக அனைவருக்கும் உணர்த்தி மாநில முதல்வர்களின் துணையோடு இரண்டு பிரதமர்களை வெற்றிகரமாக உருவாக்கிக் காட்டினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிரதமர் யார் என்பது குறித்து எவ்விதச் சர்ச்சையும் எழவில்லை. நேரு, வல்லபாய் படேல், இராசேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆசாத் போன்ற பல மூத்த தலைவர்கள் அந்தப் பதவிக்குத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், தேசத் தந்தையான காந்தியடிகள் தனது வாரிசாக நேருவை அறிவித்ததின் மூலம் முதல் பிரதமர் யார் என்பதை நாட்டிற்குச் சுட்டிக்காட்டிவிட்டார். நேருவைவிட மேலே குறிப்பிடப்பட்ட பல தலைவர்கள் வயதாலும் அனுபவத்தாலும் மூத்தவர்கள். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்பவர் குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து அந்தப் பதவியை வகித்தால்தான் நிர்வாகத்தில் சிக்கல் இல்லாமலும் வளர்ச்சித் திட்டங்கள் தங்குதடையில்லாமல் நிறைவேறுவதற்கும் வழி ஏற்படும் என்ற காரணத்தினாலும் மற்றும் பல முக்கியக் காரணங்களாலும் மேற்கண்ட தலைவர்களில் இளையவரான நேருவை காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். தொலைநோக்குடன் அவர் மேற்கொண்ட அந்தச் செயலின் விளைவாக 17 ஆண்டுகாலம் நேரு பிரதமராகத் தொடர்ந்து பதவி வகித்து 3 ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி நாடு வளமான பாதையில் அடியெடுத்து வைக்க உதவினார். மற்ற தலைவர்கள் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புத் தந்தனர். 600க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து மாபெரும் சாதனை புரிந்தார் வல்லபாய் படேல். அரசியல் நிர்ணய சபையின் தலைவராகவும் பின்னர் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்று அப்பதவிகளுக்கு பெருமை தேடித் தந்தார் இராசேந்திர பிரசாத். அந்நிய கல்வி முறையில் சிக்குண்டு கிடந்த நாட்டை அதிலிருந்து மீட்டு நமது நாட்டிற்கு ஏற்ற கல்வி முறையைக் கொண்டு வருவதில் ஆசாத் வகித்த பாத்திரம் சிறப்பானது. அதைப் போலவே மாநிலங்களின் முதல்வர்களாகப் பதவிவகித்த மூத்த தலைவர்களும் நேருவின் பல திட்டங்கள் நிறைவேறப் பேருதவியாக இருந்தார்கள். மொழிவழியாக மாநிலங்கள் அப்போது பிரிக்கப்படவில்லை. பல மொழி மாநிலங்களை உள்ளடக்கிய பெரும் மாகாணங்கள் இருந்தன. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இராஜாஜி, மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பி.சி. இராய். பம்பாய் மாநிலத்தின் முதலமைச்சராக பி.ஜி.கேர், ஐக்கிய மாகாண முதலமைச்சராக பண்டித கோவிந்த வல்லப பந்த் போன்ற மூத்த தலைவர்கள் பதவி வகித்தனர். அவர்களின் ஆலோசனைகளை நேரு பெரிதும் மதித்தார். நாடு பிரிவினை ஆகும்போது 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள். இவர்களின் மறுவாழ்வு என்பது மாபெரும் பிரச்சினையாக வடிவெடுத்தது. ஆனால், மாநில முதல்வர்களின் உதவியுடன் 1950ஆம் ஆண்டிற்குள் இப்பிரச்சினைக்கு பிரதமர் நேரு தீர்வு கண்டார். இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானில் இன்னமும் அகதிகள் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. 1950இல் இந்தியா குடியரசான பிறகு 1952ஆம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தலைச் சந்தித்தது. உலகத்திலேயே மிகப்பெரிய சனநாயகப் பரிசோதனை நடந்தது. வயது வந்தவர்கள் யாராக இருந்தாலும் படித்தவர்கள் ஆனாலும் படிக்காதவர்கள் ஆனாலும் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டபோது இது வெற்றிபெறுமா என்ற சந்தேகத்தை பலர் எழுப்பினார்கள். ஆனால், அந்த சனநாயகப் பரிசோதனை மாபெரும் வெற்றிபெற்றது. நாட்டில் சனநாயகம் வேரூன்றுவதற்கு அது வழிவகுத்தது. இதற்கெல்லாம் காரணம் மாநில நிர்வாகங்கள் அளித்த பரிபூரண ஒத்துழைப்பு என்பதை யாரும் மறந்துவிட முடியாது. எனவேதான் பிரதமர் நேரு மாநில முதல்வர்களை அடிக்கடி கூட்டி கலந்து ஆலோசனை நடத்தும் முறையைக் கொண்டுவந்தார். அந்தக் கூட்டங்களில் அந்தந்த மாநிலங்களின் பிரச்சினைகளை மட்டுமல்ல தேசத்தின் பொதுவான பிரச்சினைகள் குறித்தும் முதல்வர்களின் கருத்தினை பிரதமர் நேரு அறிந்துகொண்டார். அதைப்போல சர்வதேச அரங்கில் இந்தியா எடுத்துள்ள பல்வேறு நிலைப்பாடுகள் குறித்தும் மாநில முதல்வர்களுக்கு நேரு விளக்கினார். மாநில முதல்வர்களின் கூட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு சர்வதேச, தேசப் பிரச்சினைகள் குறித்து கடிதங்கள் எழுத நேரு தவறவில்லை. "வலிமையான மத்திய அரசு அமைய வேண்டும் என்று சொன்னால் வலிமையற்ற மாநிலங்கள் இருக்க வேண்டும் என்று கருதுவது தவறானது' என நேரு ஒருமுறை சுட்டிக்காட்டினார். மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நேரு ஏற்க மறுத்தார். ஆனால், மக்கள் போராட்டங்கள் அதற்கு ஆதரவாக வெடித்த பிறகு சனநாயக ரீதியில் அதை ஏற்றுக்கொண்டு மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைக்க அவர் முன்வந்தார். அவரின் இறுதிக் காலத்தில் அந்தக் கடமையையும் அவர் நிறைவேற்றினார். மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்னால் 1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அதற்குப் பொருந்துவதற்கு மறுக்கிறது. பலமான மத்திய அரசு என்ற கோட்பாட்டில் வகுக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அரசிடமே குவித்துள்ளது. ஆனால், நேருவிற்குப் பிறகு பிரதமர் பதவியை ஏற்றவர்கள் இந்த உண்மையை உணரவில்லை. நேரு அமர்ந்திருந்த பிரதமர் நாற்காலியில் அமர்ந்து விட்டதனாலேயே தங்களையும் அவருக்குச் சமமாக மதித்துக்கொள்கிறார்கள். மொழிவழியாக நாடு பிரிக்கப்பட்ட பிறகு மொழிவழி மாநிலங்களுக்கு அளிக்கப்படவேண்டிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டாக வேண்டும். மாநிலங்களின் இறைமை துச்சமாக மதிக்கப்படுகிறது. ஒரு நாடு பெற்றிருக்கும் ஆணையிடும் அதிகாரமே இறைமை எனப்படும்.கூட்டாட்சி நாட்டின் இறைமை அதிகாரங்கள் நாட்டில் உள்ள மாநிலங்களில் வாழும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்தியா அரைகுறையான ஒரு கூட்டாட்சி நாடு. இறைமை அதிகாரங்கள் முழுவதும் மத்திய அரசிடமே குவிந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. மொழிவழியாக அமைக்கப்பட்டுள்ள மாநிலங்கள் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையானதைச் செய்வதற்கு கூடுதல் அதிகாரங்களை எதிர்பார்த்துப் போராடுகிறார்கள்; குரல் கொடுக்கிறார்கள். அதை மதிக்க மத்திய அரசு மறுக்கும்போது மத்திய - மாநில மோதல்கள் மூளுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும்போது இடைமறிக்கப்பட்டு தொடர்ந்து பேச விடாமல் தடுக்கப்பட்ட நிகழ்ச்சி மாநிலங்களின் இறைமைக்கு விடப்பட்ட அறைகூவலாகும். ஏற்கனவே அதிக அதிகாரங்கள் கேட்டு பல்வேறு மாநிலங்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றின் மூலம் மாநில அரசுகளுக்கு இறைமை இல்லை என்பது இறுதியாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேற்கு வங்க மாநிலத்தின் நிலக்கரிச் சுரங்கங்களை கையகப்படுத்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 1957ஆம் ஆண்டில் ஒரு சட்டம் கொண்டுவந்தபோது அதை மாநில அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 1962ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அமர்ந்து அளித்த தீர்ப்பின் மூலம் மாநில அரசுகளுக்கு இறைமை இல்லை என்பது தெளிவுப்படுத்தப்பட்டு மாநில அரசின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதியரசர் சுப்பாராவ் அவர்கள் மட்டும் அளித்த தனித் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கு இறைமை உண்டு என்று சுட்டிக்காட்டினார். 1962ஆம் ஆண்டு வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான்... மொழிவழியாக நாடு பிரிக்கப்பட்டது என்ற உண்மையை கருத்தில் எடுத்துக்கொண்டு இப்பிரச்சினையை அணுகினால் உச்ச நீதிமன்றம் அளித்த அந்தத் தீர்ப்பு தற்போது யதார்த்த சூழ்நிலைக்கும் உண்மைக்கும் பொருந்தாது என்பது தெளிவாகும். எனவே இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். மாநிலங்களின் இறைமை ஏற்கப்படா விட்டால் நாட்டின் எதிர்காலம் இருள்சூழ்ந்து விடும் என்பதில் ஐயமில்லை. நாட்டு மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அவர்களால் உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் தலைவராக இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அவரிடம் உண்மையில் எந்த அதிகாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்தி அமர்ந்திருக்கிறார். மத்திய அமைச்சர்கள் பிரதமரின் ஆணையை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. மாறாக சோனியா காந்தியின் உத்தரவுகளை நிறைவேற்றக் காத்திருக்கிறார்கள். 2ஜி ஊழல் போன்ற மிகப்பெரிய ஊழல்களைச் செய்த மத்திய அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து நீக்குவதற்கு மன்மோகன் சிங்கினால் முடியவில்லை. ஊழல் அமைச்சர்களுக்கு யார் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதை நாடு அறியும். ஆனால் நல்ல வேளையாக உச்சநீதிமன்றம் தலையிட்டு ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தது. இதற்கிடையில் சோனியாவிற்கும் மன்மோகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. இரண்டு அதிகார மையங்கள் செயல்படுவதால் நிர்வாகமும் சீர்கேடடைந்துள்ளது. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளன. கிராமப்புற பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தங்களுக்கு நம்பகமான ஒரு மாணவனை சட்டாம் பிள்ளையாக நியமித்து தாங்கள் இல்லாத நேரங்களில் பிற மாணவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளச் செய்வார்கள். உண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் வெறும் சட்டாம்பிள்ளையாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சொந்த மாநிலமான பஞ்சாபிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலைமையில் உள்ள அவர் பெருவாரியான மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்களை அவமதிப்பதும், அடக்கி வைக்க முற்படுவதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் உணரவேண்டும். நன்றி : "தினமணி'
|