வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:13 |
திண்டுக்கல் தி. அழகிரிசாமி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் இடியாய் இறங்கியது. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருக்க, இரக்கமற்ற சாவுக்கு என்ன அவசரம் அந்த இணையற்ற செயல்வீரனை அழைத்துச்செல்ல?
அழகிரியை நான் சந்தித்தது 1957ம் ஆண்டு. அவர் தமிழ் படிக்கவும் நான் ஆங்கிலம் படிக்கவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தபோது, வரும் போதே புயலாக வந்தார் அழகிரிசாமி. மேடைப் பேச்சில் இணையற்றவர் என்ற பெயரை ஆசிரியர், மாணவர் அனைவரிடமும் ஒருங்கே பெற்றார். அவர் கோகலே மண்டபத்தில் பேசுகிறார் என்றால் மாணவர் கூட்டம் திரண்டிருக்கும். எதிர்க்கட்சி என்று காட்டிக்கொண்டாலே சட்டமும் நிர்வாகமும் பாய்ந்து குதறும் காலம் அது. அந்தக் காலத்தில்கூட "அறிஞர், நாவலர், நம்நாடு' என்று சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்தி தான் கூற விரும்பியதைக் கூறிவிடுவார். பேச்சாளராக மட்டுமல்ல, சிறந்த செயல் வீரராகவும் அவர் திகழ்ந்தார். பழ. நெடுமாறன் அவர்கள் மாணவர் விடுதிச் செயலாளர் பதவிக்கு நின்றபோது கடுமையாக உழைத்து அவருக்கு வெற்றி திரட்டித் தந்தார். வெற்றி ஊர்வலத்தில் அவர் ஆடிய ஆனந்தக் களியாட்டம் இருக்கிறதே, அது இன்னும் என் கண்முன் நிற்கிறது. நெடுமாறன் அவர்கள் மட்டுமல்ல, ஆறு. அழகப்பன், பண்ருட்டி இராமச்சந்திரன், சா.பெ. மலைச்சாமி என்று பல தோழர்கள் பல்கலைக் கழகப் பொறுப்புகளுக்காகப் போட்டியிட்டபோது சொல்லாலும் செயலாலும் அவர்களின் வெற்றிக்காக உழைத்தவர் அழகிரிசாமி. அறிஞர் அண்ணா அவர்களின் "ஹோம்லண்ட்' இதழுக்காக அவருடைய "சந்திரமோகன்' நாடகத்தை நடத்தி ரூ.10,000 நிதி மாணவர் சார்பாகத் திரட்டித் தந்தோம். நாடகத்திற்கான சில பாத்திரங்களின் பாடங்களை முன்கூட்டியே அனுப்பி மாணவர்களையே நடிக்கச் சொல்லிவிட்டார்கள். அழகிரிசாமி நாடகத்தின் முக்கியப் பாத்திரமான "மோரோபந்த்' என்ற அமைச்சராகத் தோன்றி அண்ணாவின் பாராட்டைப் பெற்றார். அந்த வட்டாரத்து மக்களின் இல்லங்களில் திருமணங்களோ, திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளோ நடைபெற்றால் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களை அழைத்து நடத்திக் கொள்ளும் நடைமுறை அந்த நாள்களில் இருந்தது. அப்படி எத்தனை நிகழ்ச்சிகளுக்கு அவரும் நானும் சேர்ந்து சென்று கலந்துகொண்டிருக்கிறோம். அவை ஒவ்வொன்றும் மறக்கவொண்ணாத அனுபவங்கள். இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருமே ஒரே குழுவாகத்தான் எங்கு சென்றாலும் போவோம்; வருவோம். எங்கள் அனைவரையும்விட அதிகமாகவே நெடுமாறன் அவர்களிடம் அன்பு காட்டிப் பழகியவர் அழகிரிசாமி. அவரது அன்பில் ஒருவிதமான பக்தியும் கலந்திருந்தது. நெடுமாறன் அவர்களை "அண்ணே' என்று அழைத்தாரே தவிர, ஒரு தடவைகூட அவரைப் பெயர் சொல்லி அழைத்து நான் பார்த்ததில்லை. அன்றைக்கே அவர் மேற்கொண்ட செயல்களிலெல்லாம் அழகிரிசாமி நிழலாகத் தொடர்ந்து உதவுவார். அந்தப் பழக்கம் அவர் வாழ்க்கையின் இறுதிவரை நீடித்தது. உலகத் தமிழ் பேரமைப்புக்கு அவரது பங்களிப்பு இணையற்றது. அதன் செயல்கள் அனைத்திலும் அழகிரிசாமியின் பங்களிப்பு இருக்கும். வருவாய் ஈட்டிக் கொடுத்த விளைநிலத்தை விடுதலைப் புலிகளின் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அளித்தது எத்தனை பெரிய தியாகம். அதைத் தன் கடமை எனக் கருதி மனதாரச் செய்தார். அதுதான் அழகிரிசாமி. நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அதனைப்பற்றி அவர் எழுதிய நூலுக்கு நான் "தென்செய்தி' இதழில் எழுதிய மதிப்புரையை மனதாரப் பாராட்டினார். பேரமைப்பின் மாநாடுகளில் சந்தித்துக்கொண்ட போதெல்லாம் பழைய நட்புணர்வுடனேயே கலகலப்பாகப் பேசி என்னைப் பாராட்டுவார். நல்ல உள்ளமும், சமூக உணர்வும், தமிழ்ப் பற்றும், செயல் திறனும், சொல்லாற்றலும், தன்னலமற்ற தியாக மனப்பான்மையும் கொண்ட தி. அழகிரிசாமியின் மறைவு ஈடுசெய்ய இயலாதது என்பதில் ஐயமில்லை. என்ன செய்வது? காலம் அந்தக் கணக்கை எல்லாம் பார்ப்பதில்லையே. - பேரா. அ. அய்யாசாமி
|
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |