நவநீதம் பிள்ளையை ஏமாற்றும் நாடகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 செப்டம்பர் 2013 14:38

காலத்திற்குக் காலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற விசாரணைக் குழுக்களை அமைக்கும் சிறீலங்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இவ்வார இறுதியில் இலங்கை வரவுள்ள நிலையில் இன்னொரு விசாரணைக் குழுவைப் புதிதாக அமைத்து அவரை ஏமாற்ற முனைந்துள்ளது.


"யுத்தத்தின் போதும், யுத்த நிறைவின் பின்னரும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்துள்ள இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை, என்று சர்வதேச மன்னிப்புச் சபை உடனடியாகவே இதனை நிராகரித்துள்ளது.
இலங்கையின் இறுதிப்போரில் நடந்தவை குறித்து விசாரிப்பதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை மகிந்த அரசு அமைத்து விசாரணைகளை மேற்கொண்டது. கொலையாளிகளே தாங்கள் செய்த கொலைகள் குறித்து விசாரிப்பதுபோல், இனப்படுகொலைகளில் ஈடுபட்ட முப்படைகளினதும் தளபதியான மகிந்த ராஜபக்சவினால் இந்த ஆணைக்குழு
அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவின் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட்ட சர்வதேச நாடுகள், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை நிறைவேற்றுமாறு மகிந்த அரசை வலியுறுத்தின. இதற்கு ஒருபடி மேலே சென்ற அமெரிக்கா, "இதனை நிறைவேற்ற வேண்டும்' என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால், இன்றுவரை அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்ட எதனையும் நிறைவேற்ற சிறீலங்கா அரசு முனையவில்லை.
இப்போது இன்னொரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக மகிந்த அரசு அறிவித்துள்ளது. போர் நடைபெற்ற காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல்போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போன தங்கள் உறவுகள் குறித்து கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் குரலெழுப்பி வருகின்றார்கள். சந்திரிகாவின் ஆட்சியில் தொடங்கி இப்போது மகிந்தவின் ஆட்சி வரை பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் மட்டுமன்றி இலங்கைத்தீவு முழுவதிலும் இருந்து கடத்தப்பட்டு காணாமல் போயிருக்
கின்றார்கள்.
இவ்வாறு காணாமல் போனவர்களில் பலர் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோதும், சிங்களப் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்
பட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி மற்றும் அவரது உறவி
னர்கள் இருவரது மரணங்களே அங்கு உறுதிப்படுத்தப்பட்டதன்றி, ஏனையவை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், ஆங்காங்கே உடலங்களாகவும், எலும்புக்கூடுகளாகவும் காணாமல்போன சிலர் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ஏனையவர்கள் குறித்து இன்றுவரை எந்தவொரு தகவலும் இல்லை. இந்த நிலையில்தான் கடந்த வாரம் யாழ்.வடமராட்சியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற இடத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களுடையவையாக இருக்குமோ என்ற பேரச்சம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள
ஏனைய கிணறுகளுக்குள்ளும் சடலங்கள் போடப்பட்டிருக்கலாம் என்று எதிர்
கூறப்பட்ட நிலையில், சுதாரித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவம் அவற்றை
மறைப்பதற்காக, விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று காணி உரிமையாளர்களுக்கு தடை உத்தரவைப் போட்டுள்ளதுடன், ஏனைய கிணறுகளை படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
யாரும் கடத்தப்பட்டு காணாமல் போகவில்லை என்று சிறீலங்கா மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறிவரும் நிலையிலேயே இந்த எலும்புக்கூடுகள் இராணுவப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றமை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாத சிறீலங்கா அரசு, காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களது உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் தனது இராணுவக் கரம்கொண்டு அடக்கி ஒடுக்கியே வருகின்றது. எதிர்வரும் 27ம் திகதியும் காணாமல் போனவர்கள் தொடர்பாக யாழில் கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
காணாமல் போனோரைக் கண்டறியும் குழு, காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு ஆகியன உட்பட மேலும் சில சிவில் அமைப்புகள் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையையொட்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்துக்கு முன்பாக இப்போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதனையும் அச்சுறுத்தித் தடுக்கவே சிறீலங்கா அரசு முனையும். இறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்து வரும் சிறீலங்கா அரசு, இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சில குழுக்களினால் முன்வைக்கப்பட்டுவருவதனால் அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவே மூவர் கொண்ட ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஒருவருமே காணாமல் போகவில்லை எனக் கூறிவரும் சிறீலங்கா
அரசு, ஆணைக்குழுவை அமைத்து எதனையாவது கண்டுபிடித்துவிடும் என எதிர் பார்க்கமுடியாது. எனவே, இந்த விசாரணைக்குழு, இலங்கை வரும் நவநீதம்பிள்ளையின் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அரங்கேற்றப் பட்டுள்ள ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. இதனை நவநீதம்பிள்ளை அம்மையார் நிச்சயமாக உணர்ந்துகொள்வார். உணர்ந்து கொள்ளவேண்டும்.
இதேவேளை, இலங்கை வரும் ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை "சிறீலங்கா தொடர்பில் நடுநிலை மற்றும் நியாயமான அறிக்கையை முன்வைப்பார்' என மகிந்த அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. ஆனால், அவர் நீதியின் பக்கம் நின்று உண்மைகளைக் கண்டறிந்து அதனை இந்த உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி: ஈழமுரசு

சனிக்கிழமை, 07 செப்டம்பர் 2013 14:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.