தாய்த்தமிழ் வளர்க்கும் புலம்பெயர் தமிழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 செப்டம்பர் 2013 14:42

1983-சூலையில் தமிழர்க்கெதிராக இலங்கையில் சிங்களர் நடத்திய இனக் கலவரம் உலக வரலாற்றில் வேறு எங்கும் காணாததாகும். அந்தக் கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து, ஏதிலியராக, உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வாழத் தொடங்கினர்.
தாய்த் தமிழைக் கற்பிக்க...


மேற்கில் அமெரிக்கா, கனடாவிலும் கிழக்கில் ஆத்திரேலியாவிலும்
அய்ரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நாடுகளிலும் ஏறத்தாழப் பத்து இலக்கம் ஈழத்தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். தமிழ் அல்லாத பிற மொழி பேசுவோரிடையே வாழ்ந்தாலும், ஈழத்தமிழர்கள் தாய்த் தமிழை மறந்துவிடவில்லை. அயலகங்களில் பிறந்து வளர்கின்ற இளந்தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்த் தமிழை முறையாகக் கற்பிக்கும் முயற்சிகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

Arivar

தேசியத் தலைவரின் விருப்பம்
1980-களில் பிரான்சில் குடியேறி வாழ்ந்து வருகின்ற நகுலேசுவரி - அரியரத்தினம் இணையர், 2004-ஆம் ஆண்டு ஈழம் சென்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைக் கண்டு கலந்துரையாடினர். அப்போது, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பிக்கத் தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டுமென்றும், அனைத்துப் பள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் "தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை' என்னும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவிச் செயற்படவேண்டும் என்றும் தலைவர் தம் விருப்பத்தை வெளியிட்டார்.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை
தேசியத் தலைவரின் விருப்பத்தைத் தமக்கிட்ட கட்டளையாக ஏற்றுக் கொண்ட அந்த அம்மையார், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களுடன் தொடர்பு கொண்டார். தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன. பாரிசு நகரைத் தலைமை இடமாகக் கொண்டு "தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை' அம்மையார் தலைமையில் செயற்படத் தொடங்கியது.
ஆத்திரேலியா, நியுசிலாந்து, கனடா, இங்கிலாந்து, பெல்ஜியம், டென்மார்க், பிரான்சு, செருமனி, இத்தாலி (ஜெனோவா), இத்தாலி (பாலர்மோ), நெதர்லாந்து, நார்வே, சுவீடன், சுவித்சர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் அந்தந்த நாட்டு அரசின் இசைவுடன் நிறுவப்பட்டுள்ளன.
தமிழ்ச்சோலை, திலீபன் தமிழ்ச்சோலை, திருவள்ளுவர் தமிழ்க் கல்விக் கலைக்கழகம், மாவீரர் மாலதி தமிழ்க் கலைக்கூடம், தமிழாலயம், அன்னை பூபதி தமிழ்ப்பள்ளி முதலான பெயர்களில் தமிழ்ப் பள்ளிகள் இயக்கப்படுகின்றன.
ஆங்கில வழிக்கல்வி கிடையாது
பல்வேறு நாடுகளில் பிறந்து வளர்கின்ற தமிழ்ப் பிள்ளைகள், அந்தந்த நாட்டின் மொழி வழியாகப் படிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள், காரிக் கிழமை (சனி) தோறும் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று தமிழ் மொழியைக் கற்கிறார்கள். இங்கிலாந்து அல்லாத எந்த அய்ரோப்பிய நாட்டிலும் ஆங்கில வழிக்கல்வி கிடையாது என்பது தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும். சில நாடுகளில் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
காரிக்கிழமைகளில் தமிழ்ப் பள்ளிகளுக்குச் செல்லும் தமிழ்ப் பிள்ளைகளுக்குச் சிறப்புப் பாடமாகத் தமிழ் கற்பிக்கப் படுகிறது. பாரிசு நகரிலிருந்து இயக்கப்படுகின்ற தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினர் மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக ஆண்டுதோறும் தமிழ்பாட நூல்களை அச்சிட்டு வெளியிடுகின்றனர். கட்டணம் இன்றித் தமிழ் கற்க வருகின்ற பிள்ளைகளுக்குப் பல நூறு தமிழர்கள் ஊதியம் பெறாமல் தமிழைக் கற்பிக்கின்றனர். இளம் தமிழ்ப் பிள்ளைகளின் உள்ளத்தில் தமிழ் இன உணர்வை ஊட்டத்தக்க கட்டுரைகளும் கவிதைகளும் தமிழ்ப் பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்ப்பாட நூல்களின் தகைமை
ஆறாம் வகுப்புக்கான தமிழ்ப்பாட நூலில் தமிழர் பண்பாடு, மன்னன் எல்லாளன், தமிழீழ நாடும் விடுதலைப் போராட்டமும் என்னும் தலைப்புக்களில் ஆக்கப்பட்ட கட்டுரைகளும் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' எனத் தொடங்கும் பாவேந்தரின் தமிழிசைப் பாடலும்.. "பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்' எனத் தொடங்கும் உணர்ச்சிக் கவிஞரின் இன எழுச்சிப் பாடலும் இடம் பெற்றுள்ளன.
ஏழாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் தமிழிசை, கயிலை வன்னியன், வீரம் செறிந்த வன்னி மண்ணும் தமிழ் அரசுகளும், இலங்கையில் தமிழர் ஆட்சியும் மாட்சியும் (தி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை) என்னும் தலைப்புக்களில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
எட்டாம் ஆண்டுக்கான தமிழ்ப்பாட நூலில் தமிழ் இலக்கிய வளம், பண்டார வன்னியன், இலங்கைத் தீவில் தமிழர் ஆட்சியும் மாட்சியும் (தி.பி. 8 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை) முதலான இன உணர்வூட்டும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்
ஒன்பதாம் வகுப்புக்கான தமிழ்ப் பாடநூலில் இலங்கையின் முதற்குடிகள், மகாவம்சம் வரலாற்று நூல் அன்று, தமிழின் காவலர் தனிநாயக அடிகள் முதலான கட்டுரைகளும், பத்தாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் இலங்கைத் தீவின் விடுதலையும் ஈழத்தமிழர் வாழ்வும், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலிய கட்டுரைகளும் இடம்பெற்று வரலாற்றுச் செய்திகளை வகுத்துரைக்கின்றன.
புலவர் குழந்தையின் இராவணகாவியம்
பதினொன்றாம் ஆண்டுக்கான தமிழ்ப்பாட நூலில் புலவர் குழந்தையின் இராவணகாவியம் குறித்து விரிவான கட்டுரை இடம்பெற்றுள்ளது. "அறிந்து கொள்வோம்' என்னும் தலைப்பில் தை முதல் மார்கழி ஈறாக உள்ள 12 மாதங்களின் வடமொழிப் பெயர்களுக்கு நிகராகச் சுறவம்’முதல் சிலை’ஈறான தமிழ்ப் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேதி அல்லது திகதி என்பது வடசொல் எனவும், திகதியைக் குறிக்கும் சொல்லாகப் ‘பக்கல்’ என்றே பழந்தமிழ் காட்டுகிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழர் வாழ்வியலில் ஆரியம் ஊடுருவல்
பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பாடநூலில் ஒழுக்கம் உடைமை, தமிழர் வீரம், தமிழர் வாழ்வியலில் ஆரியம் ஊடுருவல் முதலான கட்டுரைகள் இடம்பெற்று, இளந்தமிழ்ப் பிள்ளைகளின் உள்ளத்தில் எழுச்சியை ஏற்படுத்துகின்றன.
அனைத்துத் தமிழ்ப்பாட நூல்களிலும் முகப்பு அட்டையில் தமிழ்மொழி என்றும் வளர்தமிழ்-1, வளர்தமிழ் - 2, வளர்தமிழ் 12 என்றும் வரையப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு பாட நூலிலும் "தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு' என்ற உணர்ச்சியூட்டும் தொடர் இடம்பெற்று மொழிப் பற்றை முன் நிறுத்துகிறது.
பாரிசுக்கு அழைப்பு
புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இன உணர்ச்சியுடன் தமிழ் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சார்பில்,
அதன் தலைமைப் பொறுப்பாளர் திருவாட்டி நகுலேசுவரி அரியரத்தினம் அவர்கள் என்னைப் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசுக்கு வருக என அழைத்தார்கள். தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கின்ற பேரவையின் பணிகளில் நான் பங்கேற்க வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தார்கள்.
அவர்கள் விருப்பத்தை ஏற்றுக் கடந்த சூலை 13-ஆம் நாள் காலை சென்னையிலிருந்து பாரிசு நோக்கி வானூர்தியில் படர்ந்தேன். தில்லியைத் தொட்டுச் சென்ற "ஏர் இந்தியா' விண்ணுந்து, இரவு 7 மணியளவில் பாரிசு சென்றடைந்தது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சார்பில் திரு. அரியரத்தினம் அவர்கள் என்னை வரவேற்றுப் பாரிசின் புறநகர்ப் பகுதியான "மிட்ரிமோரி' என்னுமிடத்தில் அமைந்துள்ள பேரவை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். பேரவைத் தலைவர் திருவாட்டி நகுலேசுவரி அரியரத்தினம் அவர்களும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த ஆசிரியப் பெருமக்களும் என்னை அன்புடன் வரவேற்றனர்.
சூலை 15-ஆம் நாள் முதல் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டனர். முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் அனைத்துலகத் தமிழ்த் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. எழுத்துத் தேர்வுக்கு 70 புள்ளிகளும் வாய்மொழித் தேர்வுக்கு 30 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. ஆண்டு இறுதியில் நடைபெறும் எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னரோ பின்னரோ வாய்மொழித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்க் கல்விச் சான்றிதழ்
பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்த் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. உயர்கல்வி பெறுவதற்கான தெரிவுகளில் தாய்மொழியில் படித்துச் சான்றிதழ் பெற்றுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் செருமனியில் நடைபெற்ற வேலை வாய்ப்புக்கான நேர்காணலில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பெற்றனர். பேரவை வழங்கிய தமிழ்க் கல்விச் சான்றிதழ் இருந்தமையால் நேர்காணலில் கூடுதல் புள்ளிகள் பெற்று, ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் வேலை வாய்ப்புப் பெற்றார். அந்த அடிப்படையில் பிரான்சிலும் சில தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். தாய்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் அந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது என்பது அறியத்தக்கதாகும்.
தமிழ்ப் பாட நூல்கள்
விடைத்தாள் மதிப்பிடும் பணி ஏழு நாட்கள் நடைபெற்றன. அந்த நாட்களில், பேரவை வெளியிட்ட தமிழ்ப் பாட நூல்களைப் பார்வையிட்டேன். தாய்மொழிப் பற்றையும் இன உணர்வையும் ஊட்டுகின்ற பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகளும் கவிதைகளும் இடம் பெற்றிருந்ததைக் கண்டு கழிபேருவகை எய்தினேன். தாய்த் தமிழகத்தில் தமிழ்ப் பாட நூல்கள் அந்த வகையில் அமையாததையும் அதற்கான சூழல் இல்லாததையும் எண்ணி மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
தமிழ்மொழியின் சிறப்பு
அடுத்தடுத்த நாட்களில், பல்வேறு நாடுகளிலிருந்து ஆசிரியப் பெருமக்கள் பலர் வந்து சேர்ந்தனர். சூலை 22-ஆம் நாள் காலை 9 மணியளவில் அந்த ஆசிரியர்கள் மாணவர்களாகி அமர்ந்திருந்த வகுப்பறையினுள் நுழைந்தேன். அனைவரும் மலர்ந்த முகத்துடன் என்னை வணங்கி வரவேற்றனர். அகவணக்கமும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலும் நிறைவு பெற்றபின் பேரவைப் பொறுப்பாளர் என்னை அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நான் தமிழ் மொழியின் சிறப்புக் குறித்து உரையாற்றினேன்.
அடுத்த நாள், திருக்குறளின் சிறப்பை எடுத்துரைத்தேன். தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் இடம் பெற்றுள்ள ஒழுக்கம் உடைமை, மானம் என்ற அதிகாரங்களில் அமைந்துள்ள குறட்பாக்களை விளக்கி உரைத்தேன்.
இராவண காவியத்தின் ஏற்றம்
மூன்றாம் நாள், புலவர் குழந்தையின் இராவண காவியத்தின் சிறப்புக் குறித்து விரிவுரையாற்றினேன். பழந்தமிழகப் பரப்பினுள் நுழைந்து, தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் வகையில் ஆரிய வழக்காறுகளைத் திணிக்கும் முயற்சிகளில் ஆரிய முனிவர்கள் ஈடுபட்டிருந்தனர். தமிழர் தலைவனாக விளங்கிய இராவணன் ஆரியர்களின் அடாத செயல்களைத் தடுத்து நிறுத்தினான். தமிழர் நிலத்தில் ஆரியர்கள் நுழைய இராவணன் தடையாக இருந்தான் என்பதால் மட்டுமே, இராமன் தமிழகத்தினுள் நுழைந்து, வஞ்சகர்களின் துணையால் இராவணனை வீழ்த்தினான். வால்மீகி வடமொழியில் எழுதிய இராமாயணம் சொல்லும் உண்மை இதுதான் என்பதை விளக்கினேன். வால்மீகியைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இராமன் கதையைக் காப்பியமாக்கிய பலரும் இராமனையே காப்பியத் தலைவ
னாகக் காட்டியுள்ளனர். இராவணனைக் காப்பியத் தலைவனாகவும் இராமனை எதிர்த் தலைவனாகவும் கொண்டு படைக்கப்பட்ட ஒரே காப்பியம் இராவண காவியம் மட்டுமே என்பதை விளக்கினேன்.
உணர்ச்சிக் கவிஞர்
அடுத்த நாள், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைக் குறித்தும், இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்த அவர்தம் கவிதைகளின் ஏற்றம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தேன். "கன்னி அருந் தமிழணங்கு, கையிரண்டில் விலங்குடையாள் கண்ணீர் கண்டும் செந்நெருப்பு விழி கொண்டு சீறி எழ மாட்டாமல்... வானில் புண்ணிருந்தால் போலிருக்கும் நிலாவினையும் காதலையும் புனைகின்றீரே... என்ன கவி எழுதுகிறீர் பாவலரே! போலிகளாய் இருக்கின்றீர்கள்' என்று சொல்லித் தமிழ் உணர்வின்றித் திரியும் சிலர் மீது காசி ஆனந்தன்
அவர்கள் அறச்சீற்றம் கொண்டதை விளக்கியுரைத்தேன். கவிஞரும் அவருடைய பெற்றோரும் உடன்பிறப்புகளும் ஈழ விடுதலைப் போர்க்களத்தில் செய்த ஈகங்களை எடுத்துரைத்தேன்.
இலக்கணப் பயிற்சி
அடுத்த சில நாட்கள் தமிழ் இலக்கணம் தொடர்பாகப் பயிற்சியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்தேன்; ஐயப்பாடுகளை அகற்றினேன். யாப்பிலக்கணம் கற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றினேன்.
பாரிசு நகரில் பார்த்தவை
பாரிசு நகரில் பதினெட்டு நாட்கள் தங்கியிருந்தேன். நான் அந்த நகரையும் நாட்டையும் சுற்றிப் பார்க்கும் விருப்புடன் அங்கு செல்லவில்லை. ஆனாலும்
அன்பர் திரு. அரியரத்தினம் அவர்கள், பாரிசு நகரின் சில பகுதிகளுக்கு என்னை அழைத்துச் சென்றார்.
செய்ன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நாடாளுமன்றம், ஈஃபில் கோபுரம் ஆகியவற்றைக் கண்டேன். தமிழர்களின் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள லாசேப்பல் பகுதியில் அமைந்துள்ள "ஈழமுரசு' அலுவலகம் சென்றேன். பாண்டின் என்னுமிடத்தில் உள்ள மாநகராட்சித் திடலில், பிரான்சு தமிழர் விளையாட்டுக் கழகத்தினர் பங்கு பெற்ற 20-ஆவது தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு மெய்வல்லுநர் போட்டிகளையும், ஒன்பது நாடுகளைச் சேர்ந்த தமிழர் விளையாட்டுக் கழகத்தினர் பங்கு பற்றிய உதை பந்தாட்டப் போட்டிகளையும் கண்டு வியந்தேன். தமிழீழத்தின் மூதூரில் பிரான்சின் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிச் சிங்களப் படையி
னரால் படுகொலை செய்யப்பட்ட பதினேழு தொண்டர்களின் நினைவாகக் கிளிச்சிப் பகுதியில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண், லூகர்னோவில் சு.ப. தமிழ்ச்செல்வன் சிலை, உபவில்லியேவில் அமைக்கப்பட்டுள்ள கப்டன் கஜன், லெப் கேணல் நாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக இருந்த தளபதி பரிதி ஆகியோரின் கல்லறைகளைக் கண்டு அந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செய்தேன்.
ஈழத் தமிழ் உறவுகளைக் கண்டேன்
நான் கிளிநொச்சியில் இரண்டாண்டுகள் தங்கித் தமிழ்ப் பணியாற்றிய காலத்தில், என்னைத் தம் குடும்பத்தில் ஒருவராகக் கருதி அன்புடன் பேணிக் காத்த ஒரு குடும்பத்தினரை, அவர்கள் இல்லத்தில் கண்டு உள்ளம் கலந்து உரையாடினேன். சிங்களக் கொடியவர்கள் நடத்திய இனப்படுகொலைகளால் சிதைந்து சீரிழந்து நிற்கின்ற ஈழத் தமிழ் உறவுகளின் கோரிக்கைகளை
வலியுறுத்திப் பாரிசிலிருந்து செனிவா வரை நடைப்படர்ச்சியை மேற்கொண்ட தம்பி கயன், அவர் மகன் சிறுவன் எல்லாளனுடனும் துணைவியாருடனும் வந்து என்னைக் கண்டு அளவளாவிச் சென்றார்.
1985-ஆம் ஆண்டில், ஈழவிடுதலைப் பரப்புரைப் பணிகளுக்காக வந்து வேறு சில போராளிகளுடன் என் இல்லத்தில் சில மாதங்கள் தங்கியிருந்த ஒரு தம்பியைப் பாரிசு நகரின் செவ்றோன் பகுதியில் அவர் இல்லத்தில் கண்டு மகிழ்ந்தேன்.
அவரும் அவருடைய துணைவியார், மூன்று பெண் மக்கள் ஆகியோரும் என்னிடம் காட்டிய அன்பில் நெகிழ்ந்தேன்.
சிறப்புச் செவ்விகள்
தமிழீழ விடுதலைக்கான செயற்பாடுகளுக்குத் துணையாகப் பணியாற்றுகின்ற பல்வேறு அமைப்புக்களின் தலைமைப் பொறுப்பாளர்கள் பலரைக் கண்டு கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழர் தொலைக்காட்சி நிலையத்தார் என்னுடன் நேர்காணல் நிகழ்த்திப் பதிவு செய்தனர். "ஈழமுரசு' ஏட்டில் எனது சிறப்புச் செவ்வி வெளியிடப்பட்டது.
மனநிறைவைத் தெரிவித்தனர்
சூலை 31-ஆம் நாள் அன்று இரவு 10 மணியளவில் பாரிசிலிருந்து தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டேன். பேரவை அலுவலகத்தில் தமிழ் அன்பர்கள் பலர் கூடி என்னை வாழ்த்தி வழியனுப்பினர். தமிழ்த் தேசிய உணர்வுடனும் தமிழீழத்தில் தங்கியிருந்தபோது பெற்ற பட்டறிவின் துணையுடனும் தமிழ்ப் பயிற்சியளித்தமை தங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்ததாகக் கூறிப் பயிற்சி பெற்ற ஆசிரியப் பெருமக்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
விடைபெற்றுத் திரும்பினேன்
தமிழ்நாட்டில் காண முடியாத அளவில் தமிழ் உணர்ச்சியை - தாயக விடுதலை வேட்கையைத் தமிழ் மொழியைக் காத்து வளர்க்க வேண்டும் என்னும் கடமை உணர்வை - இளந்தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தாய்த் தமிழின் சிறப்பை உணர்த்தவும், அவர்களுக்குத் தமிழைக் கற்பிக்கவும் புலம்பெயர் தமிழர்கள் காட்டுகின்ற ஆர்வத்தை - அக்கறையுடன் கூடிய செயற்பாடுகளை அறிந்து மகிழ்வதாகவும், மனநிறைவு கொள்வதாகவும் கூறித் தமிழ் அன்பர்களிடமிருந்து விடைபெற்றேன்.
தலைவர் சொன்ன உண்மை
ஐம்பது ஆண்டுகளில் அழிந்து விடும் நிலையில் உள்ள மொழிகளின் வரிசையில் ஐ.நா. அமைப்பு ஒன்று தமிழையும் இடம்பெறச் செய்திருந்ததைக் குறித்துத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, தலைவர் சொன்னார்: ""ஐயா, தமிழ் விரைவில் அழியும் என்பது தவறான கணிப்பு. ஆங்கில மொழியிடம் கொண்டுள்ள அளவற்ற வேட்கையால் தமிழ் நாட்டார் தமிழைக் காக்கத் தவறினாலும் தமிழீழத்தார் தாய்த்தமிழைக் காப்போம்; வளர்ப்போம்'' என்று தலைவர் உறுதிபடச் சொன்னார். புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழீழ உறவுகளின் உறுதியான செயற்பாடுகளைக் கண்டபோது, தலைவர் சொன்னது உண்மை என்பதை உணர்ந்தேன்.
வாழ்க தமிழீழ உறவுகள்... வெல்க தமிழீழ விடுதலை!

சனிக்கிழமை, 07 செப்டம்பர் 2013 14:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.