தீயில் வெந்த வீரத்தமிழ் மகன் செந்தில்குமரனுக்கு வீரவணக்கம்! |
|
|
|
திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013 15:10 |
இலங்கை அரசாங்கம் சிறுபான்மைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் அல்லலுறும் தமிழ் மக்களின் துயரம் தாங்கமுடியாமலும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தமிழின அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் தமிழ் மக்களின் சுய உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவு
தெரிவித்தும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகமாக ஐ.நா திடல் முன்பாக தீக்குளித்து தனது இன்னுயிரை அர்ப்பணித்த வீரத் தமிழ் மகன் சுவிஸ் வாழ் தமிழன் இரத்தினசிங்கம் செந்தில்குமரனுக்கு சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் சார்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளை சார்பிலும் புரட்சிகரமான வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம். உலகத் தமிழின வரலாற்றில் செந்தில்குமரனின் பெயரும் நிரந்தரமான ஒரு இடத்தைப் பெற்று நிற்கும். ஈழத் தமிழர்களின் விடியலுக்காக ஈடு இணையற்ற உயிர்த் தியாகங்கள் பல இடம்பெற்றுள்ளன. இவர்களில் முஸ்லீம் தமிழ் மகன் அப்துல் ரவூப், தொப்புள்கொடி உறவுகள் முத்துக்குமார் மற்றும் வீரத் திருமகள் செங்கொடி, புலம்பெயர் தமிழன் ஈகைப்பேரொளி முருகதாசன்; இன்று வெந்த வீரத் தமிழ் மகன் செந்தில்குமரன் வரை 25 தியாகிகள் சிங்கள இனவாத அரசின் பிடிகளில் சிக்கித்தவிக்கும் தமிழ் உறவுகளின் நிரந்தரமான நிம்மதியான வாழ்விற்காகத் தீக்குளித்துத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
மண்ணின் விடுதலையைக் காக்க, தமிழீழ தேசத்தைக் கட்டியெழுப்ப உலகம் இதுவரையும் கண்டும் கேட்டிராத தியாகங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள். வாழவேண்டிய வயதில் தங்கள் உயிர்களை விடுதலைக்காக அள்ளிக்கொடுத்த தியாகத்தால் உலகம் எல்லாம் வாழுகின்ற தன்மானத் தமிழரின் நெஞ்சம் வேதனைத் தணலில் வெந்துகொண்டிருக்கின்றது. தாயக உறவுகளிற்காக எந்த தியாகத்தையும் எந்த நேரத்திலும் தருவதற்கு தயாராக இருப்பவர்கள் தமிழர்கள். ஆனாலும் தற்கால அரசியல் செயற்பாடுகளில் நாம் உலக நாடுகளின் தலையீடுகளையே அதிகமாக நம்பி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே துயரங்கள் நிறைந்த மோசமான எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாமென அனைத்துத் தமிழர்களிடத்திலும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நீண்ட வரலாற்றையும் காலத்திற்குக் காலம் எழுச்சிகொள்ள வேண்டிய தேவையையும் கொண்ட இனமாக தமிழினம் இருக்கின்றது. உலகத்தில் எங்கும் நடத்தப்படாத கொடுமைகள் தமிழினத்துக்கு நடந்தன. முள்ளிவாய்க்காலில் மெளனிக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்தைத் தொடர்ந்து தற்போது முன்னர் எப்போதும் நடந்திராத பல்வேறு அவலங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தமிழினம் தத்தளித்து நிற்கின்றது. எனினும், எம் தமிழ் உறவுகளின் துன்பத்தைத் துடைப்பதற்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம். எந்த நோக்கத்திற்காக தம்பி செந்தில்குமரன் தன் உடலிற்கு தீ மூட்டினானோ அந்த நோக்கத்திற்காக நாம் போராடுவோம். இந்த விடுதலைப்போர் வரலாற்றில் தமிழருக்கு ஒரு விடியல் வரும். விதைக்கப்பட்ட தியாகங்கள், சிந்தப்பட்ட இரத்தங்கள், கொடுக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் வீண்போகாது. தமிழர் என்கிற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவிக்கும் இவ்வேளையில் தமிழர் விடிவினை உறுதியான இலட்சியமாக, வாழ்நாள் இலட்சியமாக வாழ்ந்து தீயில் வெந்த வீரத் தமிழ்மகன் செந்தில்குமரனின் தியாகத்திற்கு மதிப்பளித்து 09.09.2013 திங்கட்கிழமை அன்று மாலை 14:30 மணிதொடக்கம் 17:00 மணிவரை ஜ.நா மனித உரிமைகள் அமைப்பு அமைந்துள்ள முருகதாசன் திடலில் வணக்க ஒன்று கூடலிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இன உணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் வீரவணக்கம் செலுத்தவேண்டிய நேரம். எனவே அனைத்து தமிழர்களையும் இவ் வணக்க ஒன்று கூடலிற்கு தவறாது கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளை அறிக்கை வெளியிட்டுள்ளது.
|
சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2013 15:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |