ஆணையர் அறிக்கை - ஐ.நா. செயல்படுமா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013 15:20

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 25ஆவது கூட்டம் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு முன்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளை இலங்கைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்துள்ளார்.


சிங்கள அரசு அமைத்திருந்த குழு அளித்திருந்த பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலைமையில் மேலும் 53 பரிந்துரைகளை நிறைவேற்றப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பரிந்துரைகள் எவை? எவை? என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் மூடுமந்திரமாக வைக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் வரவிருப்பதையொட்டி இத்தகைய அறிவிப்புகளை இலங்கை அரசு வெளியிட்டது. உலகத்திற்குப் போக்குக்காட்டவே என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில்கூற கடமைப்பட்ட சிங்கள
அரசு பிரச்சினையைத் திசை திருப்புவதற்கு முயற்சி செய்தது. ஐ.நா. மனித உரிமை ஆணையரின் வருகைக்கு எதிரான பிரச்சாரங்களும் போராட்டங்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தென்னாப்பிரிக்காத் தமிழர் வம்சா வழியைச் சேர்ந்த திருமதி. நவநீதம் பிள்ளையின் தமிழ்ப் பாரம்பரியம் குறித்து அபாண்டமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. விடுதலைப் புலிகளின் கையாள் என்றும் ஐ.நா.விலுள்ள தமிழ்ப் பெண் புலி என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. மூன்று அமைச்சர்கள் இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அடிதடி அமைச்சர் என பெயர் பெற்ற மேர்வின் டிசில்வா தரம் தாழ்ந்து பேசினார். நவநீதம் பிள்ளை விரும்பினால் அவரைத் திருமணம் செய்துகொண்டு இலங்கையின் வரலாற்றை அவருக்குப் புகட்டுவதற்கு தான் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
அமைச்சர்களே இத்தகைய எதிர்ப்பிரச்சாரத்தில் கூச்ச நாச்சமில்லாமல் ஈடுபட்டபோது சிங்கள இனவெறிக் கட்சிகளும், சிங்கள பெளத்த பிட்சுக்களும் தெருவில் இறங்கி நவநீதம் பிள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடு
பட்டனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகைக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர் கொழும்புக்கு வந்து சேர்ந்த வேளையில் நாட்டைவிட்டுப் புறப்பட்ட மகிந்த இராசபக்சே, பெலாரஸ் சென்று ஐ.நா.வுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தப் பரபரப்புக்கும் எதிர்ப்புக்கும் நடுவில் நவநீதம் பிள்ளை இலங்கையில் தனது பயணத்தைத் தொடங்கினார். ஒருவார காலம் இலங்கையின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து அரசு அமைச்சர்கள், அதிகாரிகள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், மனித உரிமை
அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரைச் சந்தித்துப்
பேசினார். அதன் பின் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகள் வருமாறு:
1. போர் முடிந்துவிட்டாலும் மக்களின் துயரத்திற்கு முடிவு ஏற்படவில்லை. போரில் மாண்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களை நான் சந்தித்தபோது அவர்களது அளவில்லாத துயரத்தைக் கண்டு நெகிழ்ந்துபோனேன். போரின் விளைவாக ஏற்பட்ட அழிவுகளை நான் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை மதித்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உண்மையான நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய அம்மக்களின் மனப்புண்கள் ஒருபோதும் ஆறாது. புனர்வாழ்வும் அளிக்கமுடியாது.
2. என்னுடைய சுற்றுப்பயணத்தின் நெடுகிலும் சகல மட்டங்களில் உள்ள அதிகாரிகள் மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல், புனர்நிர்மாணம் ஆகியவற்றில் குறுகிய காலத்தில் தங்களின் சாதனைகளை எடுத்துக்காட்டி என்னை திருப்தி செய்யவே முயன்றார்கள். மக்களுக்கு உண்மையான மறுவாழ்வு என்பதும் நிலையான
அமைதி என்பதும் அவர்களின் தன்மானத்தை மதிப்பதின் மூலமே ஏற்படும். இவற்றை ஏற்படுத்துவதற்கு ஐ.நா.வின் அமைப்புகள் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளன. சட்டத்தின் ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதும் தனிமனித சுதந்திரமும் மனித உரிமைகளும் மறுக்கப்பட்டிருப்பதும் போன்ற சூழ்நிலையில் மறுவாழ்வு என்பது அர்த்தமற்றது.
3. போர் முடிந்த பிறகு இலங்கையில் உண்மையான அமைதியும் மறுவாழ்வும் ஏற்படும் என நான் நம்பினேன். அரசு அமைத்த குழுவின் அறிக்கை இந்த திசையில் முக்கியமான நடவடிக்கை என கருதி வரவேற்றேன். இந்தப் போரின் போது ஏராளமான போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடைபெற்றது குறித்து வெளிப்படையான பாகுபாடற்ற விசாரணை வேண்டும் என்பது
புறக்கணிக்கப்பட்டது. எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சரியான விசாரணை வேண்டும். அரசுக் குழு நல்ல பரிந்துரைகளைக் கூறியபோதிலும் அவைகள் நிறைவேற்றப்படுவது குறித்து இதற்குப் பொறுப்பான அதிகாரியிடம் பேசினேன். குடியரசுத் தலைவரின் நிரந்தர செயலாளராகவும் அவர் இருக்கிறார். அரசுக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவது குறித்து எனது அலுவலகம் தொடர்ந்து கண்காணித்து வரும்.
4. கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற சிவில் நடவடிக்கைகளில் இராணுவம் தலையிட்டுக் கட்டுப்படுத்தி வருவது குறித்தும் நான் ஆராய்ந்தேன். இது குறித்து பல புகார்கள் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாம்கள் அமைப்பதற்குத் தனியார் நிலங்கள் கையகப்படுத்துவது குறித்து பல புகார்கள் என்னிடம் கூறப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் நிலப்பிரச்சினை என்பது தீர்க்கமுடியாத அளவுக்கு மேலும் சிக்கலாக்கப்பட்டிருக்கிறது. போர் முடிந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் சமுதாயத்தின் மீது இராணுவம் குறுக்கீடு செய்வது என்பது அதிகமாகிக்கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
ஆனால், பெரியதோர் இராணுவத்தை இரவோடு இரவாக அகற்றிவிட முடியாது என பாதுகாப்புத்துறைச் செயலாளர் என்னிடம் கூறினார். ஆனாலும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் உள்ள இராணுவத்தை அகற்றும் பிரச்சினையில் அரசு இன்னும் வேகமாக செயல்படவேண்டும் என நான் வற்புறுத்துகிறேன். அளவுக்கதிகமாக இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது என்பது ஒடுக்குமுறைகள் அதிகரிக்க வழிவகுத்துவிடும்.
5. பாலியல் வன்முறைக்கு பெண்களும் சிறுமிகளும் ஆளாக்கப்படுவது குறித்து நான் கேள்விப்பட்ட செய்திகள் என்னைக் கவலையடைய வைத்திருக்கின்றன. பல அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் இராணுவத்தில் உள்ள மூத்த தளபதிகள் ஆகியோரிடமும் பாதுகாப்புத்துறைச் செயலாளரிடமும் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினேன். பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அவர்களை வற்புறுத்தினேன்.
6. சிறைக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் நிலை குறித்து
அவர்களின் மீதான வழக்குகளில் விரைவில் முடிவு காணுமாறும் அரசை நான் வற்புறுத்தினேன். இத்தகையவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவேண்டும். அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும். நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
7. பெரிய அளவில் துன்பங்களைச் சந்தித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனோரீதியில் ஆறுதலும் ஆதரவும் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இத்துறையில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டை அதிகாரிகள் கட்டுப்படுத்தியிருப்பதாக அறிந்தேன். இவ்வாறு உதவமுன்வரும் அமைப்புகள் மீதான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திக்கொள்ள வேண்டும்.
8. பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்து கொண்டாடப்படும் சர்வதேச நாளில் இரண்டு முக்கியமான கூட்டங்களை நான் நடத்தினேன். அதில் காணாமல் போன மக்களின் நிலை குறித்து இன்னமும் நம்பிக்கையுடன் தேடிவரும் அவர்களின் அன்பான உறவினர்களை இக்கூட்டங்களில் நான் சந்தித்தேன். இப்பிரச்சினையை விரைவில் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்து அவர்கள் வற்புறுத்தினார்கள். காணாமல் போனவர்கள் குறித்து அரசு நியமித்த ஐந்து விசாரணைக் கமிசன்களினால் எந்தப் பயனும் விளையாத நிலையில் புதிய விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவாவது காணாமல் போனவர்கள் குறித்து மேலும் தகவல்களை அளிக்கும் என நம்புகிறேன். ஆனால், வடக்கு-கிழக்கு மாநிலங்களில் காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளை
மறைப்பதற்காகவே இந்தப் புதிய குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். கொழும்பிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் வெள்ளை வேன்களில் வந்து ஆட்களைக் கடத்துவோர் குறித்து இந்த விசாரணைக் குழு விசாரணை செய்யாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதே எனது ஏமாற்றத்திற்குக் காரணமாகும். இந்த விசாரணைக் குழுவின் அதிகாரத்தை விரிவுபடுத்த அரசு முன்வரவேண்டும். காணாமல் போனவர்கள் குறித்த பிரச்சினையில் இறுதித் தீர்வுகாண இந்தச் சந்தர்ப்பத்தை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிரிமினல் குற்றச் சட்டத்தின் கீழ் காணாமல் போனவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இது குறித்த சர்வதேச மாநாட்டின் முடிவுகளை ஏற்பதாக
அரசு அறிவிப்பதன் மூலம் உலகிற்கு நல்லதொரு சமிஞ்கையை அரசு செய்ய முடியும். காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை இலங்கைக்கு வருமாறு அரசு அழைக்க வேண்டும். மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் மனித உரிமை குழுவில் நான் அறிக்கை அளிப்பதற்கு முன் இதை இலங்கை அரசு செய்யவேண்டும்.
9. 2006ஆம் ஆண்டு திரிகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்கள் பிரச்சினையில் சிறப்பு காவல்படையைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு மறுவிசாரணை தொடங்கப்பட்டிருப்பது குறித்து நான் திருப்தியடைகிறேன். இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து. நான் கண்காணித்து வருவேன். அதைப் போலவே தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்குக் குறித்தும் சரியான நடவடிக்கையை இலங்கை அரசு எடுக்க வேண்டும்.
10. பொது மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணையில்லாமல் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றங்கள் குறித்து மேலும் அதிகமான தகவல்களை எனக்கு அளிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டிருக்கிறேன். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் அளிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு நம்பிக்கை அளிக்காது. கடந்த காலத்தில் இதுபோன்று அமைக்கப்பட்ட பல விசாரணைக் குழுக்களின் விளைவாக எந்தப் பயனும் விளையவில்லை. சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் ஒழிய இதுகுறித்து நம்பகத்தன்மை ஏற்படாது.
11. வெளிஓயாவில் நடைபெற்ற மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு போலிசுக்குத் துணையாக இராணுவம் அனுப்பப்பட்டதன் விளைவாக 3 பேர் கொல்லப்பட்டது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு அந்த விசாரணையின் முடிவுகள் பகிரங்கமாக வெளியிடப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளரிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்.
12. 2012ஆம் ஆண்டு வவுனியா மற்றும் வெளிக்கடைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பலர் கொல்லப்பட்டது குறித்து நடைபெற்ற விசாரணை சம்பந்தமான கோப்புகளின் மீது இன்னமும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதுகாப்புத்துறையிடம் உள்ள போலிஸ் அதிகாரங்களை சட்டம் ஒழுங்குக்கென
அமைக்கப்பட்டுள்ள அமைச்சுத்துறை கவனிக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த இரு துறைகளும் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவை சிவில் அமைச்சுத்துறை ஒன்றின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.
13. 2007ஆம் ஆண்டிலிருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள சாட்சிகள் மற்றும் பழிவாங்கப்பட்டவர்கள் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என இலங்கை அரசை நான் வற்புறுத்தியுள்ளேன்.
14. சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வெறுப்பும் வன்முறையும் தூண்டிவிடப்பட்டு அதன் விளைவாக தேவாலயங்களும் மசூதிகளும் தாக்கப்பட்டுள்ளன. இதைத் தடுத்து நிறுத்தவோ இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவோ அரசு தவறியுள்ளது. இந்தப் பிரச்சினையை முக்கியத்துவமற்றதாக ஆக்குவதற்கு அரசு முயல்வதைக் கண்டு நான் வியப்படைந்துள்ளேன். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மத சகிப்புத்தன்மை ஏற்பட உதவ வேண்டும் என்றும் நான் வற்புறுத்துகிறேன்.
15. மனித உரிமைப் போராளிகளுக்கு எதிராக மிரட்டலும் துன்புறுத்தலும் நடைபெறுவதை கண்டு நான் அதிர்வடைந்தேன். இரண்டு கிறிஸ்துவத் துறவிகள், பத்திரிகையாளர்கள், பல சாதாரண குடிமக்கள் ஆகியோர்
என்னைச் சந்தித்து இதுகுறித்து புகார் செய்தார்கள். நான் இங்கு வருவதற்கு முன்னும் பின்னும் முல்லைத் தீவில் உள்ள மக்களையும் போலிஸ் அல்லது இராணுவ அதிகாரிகள் சந்தித்து மிரட்டியது குறித்து எனக்குப் பல புகார்கள் வந்துள்ளன. திரிகோணமலையில் என்னைச் சந்தித்த பலரை போலிஸ்
அழைத்து விசாரணை நடத்தியது குறித்தும் என்னிடம் கூறப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையில் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் குரல்கள் நிரந்தரமாக ஒடுக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஐ.நா. மனிதஉரிமை ஆணையர் அங்கு வருகை தந்திருக்கும்போது இத்தகைய மிரட்டல்கள் நடைபெறுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். இது குறித்து ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்றால் ஐ.நா. அதிகாரிகளிடம் பேசியவர்களே மிரட்டப்படுவது என்பது மிகுந்த கவலைக்குரிய ஒன்றாகும். ஐ.நா. மனித உரிமைக் குழுவிற்கு இது குறித்து நான் தெரிவிப்பேன். 2005ஆம் ஆண்டி
லிருந்து 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கார்ட்டூன் ஓவியரான பிரகீத் எக் நெல்லிகோடா உள்பட பலர் காணாமல் போயிருக்
கிறார்கள். பலர் இலங்கையைவிட்டே தப்பி வெளியேறியிருக்கிறார்கள். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பலமுறை இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இதன் காரணமாக பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவதற்குப் பயப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் இலங்கையில் ஒடுக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அருகேயுள்ள சார்க் நாடுகளில் இருப்பதைப் போன்று செய்தியறியும் உரிமைக்கான சட்டம் இலங்கையிலும் கொண்டுவரப்படவேண்டும்.
16. போர் முடிந்துவிட்டது என்ற போதிலும் இலங்கையில் சனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் கடும் சேதம் அடைந்துள்ளன. தேர்தல் ஆணையம், மனித உரிமை ஆணையம் போன்ற சுதந்திரமான அமைப்புகளுக்கு ஆட்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றிருந்த அரசியல் சட்டக்குழு 18வது சட்டத்திருத்தத்தின் மூலம் ஒழிக்கப்பட்டுள்ளது. இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதும். மூத்த நீதிபதிகள் நியமனம் அரசியல் மயமாக்கப்பட்டிருப்பதும் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை ஆட்டம் காணச்செய்துள்ளன.
17. போரின் முடிவில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் புதிய அரசு உருவாவதற்குப் பதில் சர்வாதிகாரத் திசையில் செல்லும் அரசு உருவாகிக்கொண்டிருப்பதை நான் மிகுந்த கவலையுடன் பார்க்கிறேன்.
மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் திருமதி நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். ஆனால், ஐ.நா. மனித உரிமை குழுவிடம் அவர் அளிக்கப்போகும் அறிக்கை இன்னும் விரிவாக அமையும். இலங்கை அரசுமீது அவர் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகள் மிகமுக்கியமானவை. இதன்மீது மனித உரிமைக் குழு என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.
சூடானின் மேற்குப் பகுதியான டார்புரில் அரசுப் படைகளுக்கும் புரட்சிக் குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 3 இலட்சம் மக்கள் கொல்லப்
பட்டனர். 27 இலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். இந்தப் பிரச்சினையில் 2006ஆம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா. மனித உரிமைக் குழு தலையிட்டது. இதன் விளைவாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் சூடானுக்கு எதிராக ஆயுதத் தடையும் மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சூடானில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து அமைக்கப்பட்ட சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் நாட்டின் குடியரசுத் தலைவரான பிரிகேடியர் ஜெனரல் உமர் ஹாசன் அகமது
அல்பசீர் என்பவரைக் கைது செய்யும்படி ஆணையிட்டது.
அதைப் போல ருவாண்டா நாட்டில் மூண்டெழுந்த இனப்பிரச்சினையை ஒட்டி 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர். உடனடியாக ஐ.நா. பாதுகாப்புக் குழு பிரெஞ்சுப் படைகளை அங்கு அனுப்பி பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியது.
இனப்படுகொலைக் குற்றச்சாட்டின் கீழ் ருவாண்டா நாட்டின் பிரதமர் ஜீன்கம்பாண்டா என்பவருக்கு ஆயுள்கால சிறைத் தண்டனையை சர்வதேச நீதிமன்றம் விதித்தது.
பல்வேறு நாடுகளில் இதுபோன்ற சூழ்நிலைகளில் ஐ.நா. தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதைப்போல இப்போது இலங்கையில் அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுக் கதறிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும், இலங்கையில் போர்க் குற்றத்திலும் இனப்படுகொலையிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட இராசபக்சே கும்பல் மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தும் நடவடிக்கையையும் ஐ.நா. மேற்கொள்ள வேண்டும்.
டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் விரிவான விசாரணை நடத்தி இலங்கை அரசின் மீது போர்க் குற்றத்தையும் மனித உரிமை மீறல்கள் குற்றத்தையும் சுமத்தியுள்ளன. இப்போது ஐ.நா. மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளை இலங்கையில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் செய்து நேரில் விசாரணை நடத்தி பல உண்மைகளைக் கண்டறிந்து தெளிவான குற்றச்சாட்டுகளுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வளவுக்கும் பிறகாவது ஐ.நா. செயல்பட முன்வரவேண்டும்.
- நன்றி : தினமணி

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2013 12:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.