கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனடா தமக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த நாட்டின் தீர்மானத்தை மதிப்பதாக கமலேஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் ஏற்கனவே அறிவித்து வந்தார்.
இந்நிலையில் அவர் தமது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக கமலேஷ் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் குடும்பத்தில் கனடா ஏனைய நாடுகளை போன்று முக்கியமான நாடாகச் செயற்பட்டு வருகிறது.
இதேவேளை கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனடாவின் வெளியுறவு அமைச்சின் மனித உரிமைகள் விவகார செயலாளர் பங்கேற்பார் என்று பொதுநலவாய செயலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா துணைபோவதாக கனடா நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுநலவாயத்துக்கான கனடாவின் பிரதிநிதி ஹுக் சேகல் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கமலேஷ் சர்மா, இலங்கை அரசாங்கம் செய்கின்ற அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தும் வகையில் செயற்படுகிறார். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்கும் துணைபோவதாக சேகல் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய இராஜதந்திரியான கமலேஷ் சர்மா, இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டமை உட்பட்ட உரிமை மீறல்களை கண்டுகொள்ளவில்லை என்றும் சேகல் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை கனடாவின் தீர்மானத்தை மதிப்பதாக குறிப்பிட்டுள்ள பொதுநலவாய நாடுகளின் பேச்சாளர் ஒருவர், ஏனைய நாடுகள் 2009 ஆம் ஆண்டில் எடுத்த தீர்மானத்துக்கு அமையவே கொழும்பில் இந்த முறை மாநாடு நடத்தப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் பொதுநலவாயத்துக்கு நிதியளிப்பதில் பிரித்தானியாவுக்கு அடுத்ததாக கனடாவே இருந்து வருகிறது. கனடா, பொதுநலவாய அமைப்புக்கு வருடத்துக்கு 12 மில்லியன் டாலர்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் அந்த நிதியை இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய்வதாக கனேடிய பிரதமர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|