உலகத்தின் மூத்த மாந்தரினமான தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாறு காணாத அவலம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. வீரமே ஆரமாகவும் தியாகமே அணியாகவும் பூண்டு வரலாற்றில் தன்னிகரற்ற முத்திரை பொறித்த தமிழினம் இந்த அவலத்தின் போது அழுது புலம்பி நின்றது.
காலத்தை வென்ற செவ்விலக்கியங்களைப் படைத்து உலக இலக்கிய வரிசையில் முன்னிடம் பெற்று நிகரற்றுத் திகழ்ந்தனர் தமிழர்..
வடக்கே இமயம் வரையிலும் தெற்கே ஈழம் வரையிலும் கிழக்கே கடல்கடந்த நாடுகளிலும் பகைவர் அஞ்சி ஒடுங்கும் வகையில் அடலேறுகளாகத் திகழ்ந்தனர் தமிழர்.
ஆனால் பெருமைக்குரிய தமிழினம் இன்று தலை தாழ்ந்து தேம்பிக் கிடக்கும் நிலை உருவானது ஏன்? எதனால்?
தமிழர் வரலாற்றில் இதுவரை நடந்திராத வகையில் முள்ளிவாய்க் காலில் 1,40,000 தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
20 கல் தொலைவில் இக்கரையில் தமிழ்நாட்டில் ஏழரைக் கோடித் தமிழர்கள் வாழ்ந்தும் கூட நம்மால் அந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இவ்வளவு பெருந்தொகையினரானத் தமிழர்கள் மிக அருகில் வாழ்கிறார்கள். அவர்கள் கொதித்தெழுந்தால் நம்முடைய கதி என்னாகும் என்ற அச்சம் சிங்கள வெறியர்களுக்கு அறவே இல்லை.
தில்லியும் அதற்குத் துணை போன அரசும் தமிழகத்தில் இருந்தது என்பதுதான் இதற்கு காரணமாகும் எனக் கூறி நம்மை நாமே அமைதிப்படுத்திக் கொள்கிறோம். இது எந்த அளவுக்கு உண்மை?
இந்தப் படுகொலைகளை இந்தியாவோ உலக நாடுகளோ கண்டிக்க முன் வராத நிலையில் சிங்கள வெறியர்கள் மேலும் துணிவுப் பெற்று அடுத்தக் கட்ட அழிவில் ஈடுபட்டனர். நாகரிக நாடுகள் எதிலும் இதுவரை செய்யப்படாத ஒன்றினைத் துணிந்து செய்தார்கள். தமிழீழத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் நினைவு இல்லங்களை அடியோடு தகர்த்து, கல்லறைகளில் துயின்ற மாவீரர்களின் எலும்புகளைக் கூட விடாமல் தோண்டி எடுத்து அழித்தனர் சிங்கள வெறியர்கள்.
தமிழீழப் பகுதியில் தமிழர்களின் அடையாளங்களே இல்லாமல் செய்யும் முயற்சியில் அடுத்து ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள வெறியர்களின் மேற்கண்ட செயல்கள் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் என்றும் ஆறாத புண்களாகின. இந்தப் புண்களை ஆற்றும் முயற்சியாக எழுந்ததுதான் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாகும்.
தமிழீழத்தில் அழிக்கப்பட்டுவிட்டாலும் தமிழகத்திலேயாவது நினைவுச் சின்னம் நிறுவப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரமைப்பு முடிவு செய்தது.
தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் காலூன்ற ஆங்கிலேய வல்லாதிக்கம் முயன்ற காலத்தில் அதை எதிர்த்துத் துணிவுடன் போராடி மாண்டு மறைந்த மாவீரர்கள், அதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போரில் களத்தில் புகழை நிலைநிறுத்தி மண்ணில் வீழ்ந்து பட்ட மாவீரர்கள், தமிழ்நாட்டில் மொழி காக்கும் போரில் உயிர்த்தியாகம் செய்த மான மறவர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து தங்களை அழித்துக் கொண்ட தீரர்கள் ஆகிய அனைவரின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பப்பட்டுள்ளது.
சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் மாபெரும் கற்கோயில் ஒன்றை எழுப்பினான். இன்றளவும் அது கம்பீரமாக எழுந்து நின்று தமிழனின் சிற்பக் கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இராசராசன் எழுப்பிய கற்கோவிலுக்குப் பயன்படுத்திய அதே தரமும் உறுதியும் நிறைந்த கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் பொருட்செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டு அதே தஞ்சையில் இன்று மற்றொரு காவியம் கல்லில் படைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட நமது சகோதரத் தமிழர்களின் நினைவாகவும் அவர்களுக்காகத் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 20 இளம் தியாகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழக-தமிழீழ வரலாற்றில் தம்முயிர் ஈந்து புகழுடம்பு எய்திய மாவீரர்களின் வண்ண ஓவியங்களைக் கொண்ட ஓவிய மண்டபம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது.
மறைந்த தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் இசைவாணர்கள், நடிகர்கள், வட எல்லை, தென் எல்லைப் போராட்டத் தளபதிகள், தமிழ்த்தொண்டு புரிந்த சான்றோர் ஆகியோரின் உருவப்படங்களைத் தாங்கிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒலி, ஒளி குறும்படங்கள் திரையிட்டுக் காணும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு இயல், இசை அரங்குகள் நடத்த மேடையும் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப-ஓவிய நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இந்த வேலைகள் தொடங்கப்பட்டன. மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆந்திர மாநிலத்தின் குப்பம் ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பிகள் கடந்த இரண்டாண்டு காலத்திற்கும் மேலாக இரவு பகல் பார்க்காமல் சிற்பங்களைச் செதுக்கும் பணியில் ஈடுபட்டு 2013ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி நிறைவு செய்துள்ளனர்.
முத்துக்குமார் உட்பட 20 ஈகிகளுக்கும் முள்ளிவாய்க்கால் மக்களுக்கும் கையில் விளக்கு ஏந்தி தமிழ்ப்பாவை அஞ்சலி செலுத்துவது போன்று அமைக்கப்பட்டுள்ள சிற்பம் மிகப்பெரியது 60 டன் எடைக்கு மேல் உள்ள ஒரே கல்லில் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் 15 அடி உயரம் உள்ள எழில் மிக்க மேடையில் தூக்கி வைக்கப்பட்டு தொலை தூரத்தில் உள்ளவர்களையும் கவர்ந்து ஈர்க்கிறது.
பற்றி எரியும் நெருப்பில் கருகிய முத்துக்குமார் உட்பட 20 தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிற்பம் 55 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டதாகும். 3 அடி உயரம் உள்ள கருங்கல் மேடை மீது இந்தச் சிற்பம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. காண்போரின் கண்களைக் குளமாக்கும் வகையில் இந்த ஒப்பற்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
காண்போர் மனம் நெகிழும் வகையில் முள்ளிவாய்க்கால் அவலக்காட்சிகளை உயிரோட்டமுடன் விளக்கும் சிற்பம் 55 அடி நீளமும் 10 அடி உயரமும் உள்ளதாகும். 3 அடி உயரம உள்ள கருங்கல் மேடை மீது இந்த சிற்பம் நிறுத்தப்பட்டுள்ளது.
களத்தில் வீரத்தை நிலைநிறுத்தி மாண்ட மாவீரர்களுக்கான நெடுங்கல் ஒன்று தனியான மேடையின்மீது நாட்டப்பட்டுள்ளது.
வளாகம் முழுவதிலும் எழில் குலுங்கும் பூங்காவும் மனதைக் கவரும் நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இரவு நேரத்திலும் சிற்பங்களையும் ஓவியங்களையும் காண்பதற்கு விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உலகமெல்லாம் உள்ள தமிழர்கள் வந்து வழிபடும் புனித இடமாக இந்த கற்கோவில் உருவாகியுள்ளது. உலகத் தமிழர்கள் பலரும் தமிழகத் தமிழர்களும் வாரி வழங்கிய நிதியின் உதவிகொண்டு இந்த முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேலும் அழியாமல் நின்று முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தையும் முத்துக்குமார் போன்ற ஈகிகளின் உன்னதத் தியாகத்தையும் வருங்காலத் தலைமுறையினருக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கக்கூடிய இந்த நினைவு முற்றத்தை தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகள், ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் உருவாக்கித் தந்துள்ளனர். தமிழ்கூறும் நல்லுலகிற்கு அவர்கள் அளித்துள்ள உன்னதப் படைப்பாகும் இது.
தஞ்சையில் இராசராசப் பெருமன்னன் எழுப்பிய கற்கோவில் அவன் பெற்ற வெற்றிகளின் பெருமித வடிவமாகும். அதே தஞ்சையில் இன்று எழுந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த மறக்க முடியாத அவலத்தின அடையாளமாகும்.
காலம் காலமாக தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நினைவுச் சின்னமாக இந்த முற்றம் திகழுகிறது.
இம்முற்றத்தின் திறப்பு நிகழ்வு வருகிற நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறவிருக்கிறது. உலகத்தமிழர்களின் பிரதிநிதிகள், தமிழகத் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்பட அனைவரும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். இவ்விழாவில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையாகும். குறிப்பாக இளைய தலைமுறையினர் இதில் கலந்து கொள்வது மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்த ஒப்பற்ற நினைவுச் சின்னத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய கடமையும் அவர்களைச் சார்ந்ததாகும். எனவே, அணி அணியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறோம்.
|