தொடர்ந்து போராடுவோம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 10:24

போர்க் களத்தில் வீரத்தை நிலை நிறுத்தி களத்தில் பட்டோருக்கு நடுகல் நட்டு வணங்குவது தமிழரின் தொன்று தொட்ட மரபாகும். அந்த மரபினை அடியொற்றி முள்ளிவாய்க்காலில் சிங்கள இன வெறியரால் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும், அந்த மக்களுக்கு நேர்ந்த கதியை எண்ணி மனம் பொறாமல் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் தீக்குளித்து மாண்டவர்களுக்கும் சிற்ப வடிவில் எழுப்பப்பட்ட நினைவிடம்தான் முள்ளிவாய்க்கால் முற்றமாகும்.

 

மேற்கண்டவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மடிந்த பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுக்கும் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் துறந்த தில்லையாடி வள்ளியம்மை, வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் போன்றவர்களுக்கும், மொழி காக்கும் போரில் உயிர்த்தியாகம் செய்த நடராசன், தாளமுத்து உள்ளிட்ட தீரர்களுக்கும், தமிழீழத்தில் மண் மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்துறந்த வீரர்களுக்கும், வாழ்நாளை தமிழ்த் தொண்டிற்காக அர்ப்பணித்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இசைவாணர்கள் போன்ற அனைவருக்குமான மாபெரும் நினைவுச் சின்னமாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எழுப்பப்பட்டுள்ளது.

இது யாருக்கும் எதிராக உருவாக்கப்பட்டது அல்ல. தமிழர்களின் தியாக வரலாற்றை சித்தரிக்கும் கலைக் கோயில் இது. தஞ்சையில் இராசராசசோழன் எழுப்பிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் அவனது புகழ் பரப்பி நிற்கிறது. அவனது வெற்றிப் பெருமிதத்தின் சின்னமாக இன்றளவும் இது திகழ்கிறது. ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களின் அவலத்தின் சின்னமாக உருவாக்கப்பட்டது. தமிழர்கள் சந்திக்க நேர்ந்த இந்த அவலங்களை எதிர்காலத்தில் சந்திக்கவே கூடாது என்ற உணர்வை ஊட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் அளித்த நிதியாலும் உதவியாலும் கூட்டு முயற்சியாலும் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க மக்களுக்காகவும் மக்களின் விருப்பத்திற்காகவும் அமைக்கப்பட்ட மக்கள் சொத்தாகும். காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் கண்டு மனம் உருகி யாருக்காக இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதோ அவர்களை வணங்கி புத்துணர்வுப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உன்னதமான நினைவுச் சின்னம் இது.

மூன்றாண்டு காலமாக நூற்றுக்கணக்கான சிற்பிகள், ஓவியர்கள், கட்டிடக் கலைஞர்கள் இணைந்து உணர்வோடு உழைத்து உருவாக்கிய இந்தச் சின்னத்தைக் கண்டு மனம் பொறாதவர்கள் இதை இழுத்து மூட சதி செய்தனர். இந்தச் சதியில் மத்திய-மாநில அரசுகளுக்கு கூட்டுப் பங்கு உண்டு. மத்திய அரசின் நெருக்குதலுக்கு மாநில அரசு அடி பணிந்து செயல்பட்டது.

திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இதற்கான அறிகுறிகள் தென்பட்டன. நிகழ்ச்சி நடத்துவதற்காக அமைக்கப்பட்டப் பெரும் பந்தலை உடனடியாகப் பிரித்தாக வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்தனர். தமிழகத்தின் 5 பகுதிகளிலிருந்து தீச்சுடர் ஏந்தி வழி நெடுக பிரச்சாரம் செய்து முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வந்து திறப்பு நிகழ்ச்சியின் போது அளிப்பதற்காக முற்பட்ட மாணவர்களைத் தடுத்துக் கைது செய்தது தமிழக அரசு. நிகழ்ச்சிக்காக ஒலி பெருக்கி வைக்கும் அனுமதி கேட்டு உரிய காலத்தில் காவல்துறைக்கு விண்ணப்பித்தப் போதிலும் அதை கடைசி வரை தராமல் அதிகாரிகள் செயல்பட்டனர். அதிகார வர்க்கத்தின் இந்த நடவடிக்கைகள் அவர்கள் செய்யப் போவது என்ன என்பதை தெளிவாக்கி விட்டது.

எனவே உடனடியாக நவம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என வாதாடிய அரசு வழக்கறிஞரின் கடும் எதிர்ப்பையும் மீறி நவம்பர் 5-ஆம் தேதி அன்று திறப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதோடு உரிய பாதுகாப்புத் தருமாறும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அந்தத் தீர்ப்புக்குத் தடை பெறுவதற்கான முயற்சிகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பிறகு மறுநாளே, அதாவது, நவம்பர் 6-ஆம் தேதியன்று முள்ளிவாய்க்கால் முற்றம் பத்திரிகையாளர்கள், பொது மக்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. ஆட்சியாளர்களின் சதி இதன் மூலம் முறியடிக்கப்பட்டது. ஆனாலும் ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி தோல்வி கண்டனர்.

திட்டமிட்டபடி நவம்பர் 8, 9, 10 ஆகிய நாட்களில் திறப்பு நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர். ஆட்சியாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சி நடைபெறவே கூடாது என நினைத்து செயல்பட்ட கட்சியினருக்கும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் மக்கள் அளித்தனர்.

அந்த மூன்று நாட்கள் மட்டுமல்ல அதைத் தொடர்ந்த மூன்று நாட்களும் சாரி சாரியாக மக்கள், குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுடன் முற்றத்திற்கு வந்து மனம் உருகி கண்ணீர் வடித்துச் சென்ற காட்சிகள் மறக்க முடியாத காட்சிகளாகும். இதைக் கண்டு பொறாத ஆட்சியாளர்கள் எதைச் செய்தாவது மக்களை மிரட்ட வேண்டும் என்பதற்காக முற்றத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த எழில்மிகு பூங்காவை முற்றிலும் பொய்யான காரணங்களைக் கூறி சிதைக்கத்திட்டமிட்டனர்.

பூங்கா அமைக்கப்பட்டிருந்த இடம் சாலை புறம்போக்காகும். அந்த இடத்தில் அரசின் அனுமதி பெற்று மிகுந்த பொருட் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. கல்லினால் ஆன அழகிய நீரூற்று நிறுவப்பட்டது. விளக்குக் கம்பங்களும் தானாகவே சுழன்றி நீரைத் தெளிக்கும் குழாய்களும் அமைக்கப்பட்டன. சீரான புல் தரையும் ஈச்ச மரங்களும், மலர்ச் செடிகளும் நடப்பட்டு வளர்க்கப்பட்டன. மூன்றாண்டு காலமாக நடைபெற்ற இந்த வேலைகள் பகிரங்கமாகவே செய்யப்பட்டன. பூங்காவைச் சுற்றிலும் எவர்சில்வர் குழாய்களைக் கொண்ட சுற்றுச் சுவர் பெரும் பொருட் செலவில் அமைக்கப்பட்டது. கருங்கல்லால் ஆன பெயர்ப்பலகையும் நிறுவப்பட்டது. ஆனால் நவம்பர் 13-ஆம் தேதியன்று இருட்டு நேரத்தில் திருட்டுத் தனமாக தமிழக அரசு இந்தப் பூங்காவை நாசப்படுத்தும் வேலையில் ஈடுபட்டது. அரசின் அனுமதிப் பெற்று அமைக்கப்பட்ட இந்தப் பூங்காவை சட்டப்படி முன்னறிவிப்புத் தராமல் திடீரென இடித்துத் தள்ளிய செயலைக் கண்டு சுற்று வட்டாரத்தில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக, பெண்கள் திரண்டு வந்து இந்த அநீதியைக் கண்டித்தனர். ஆனால் காவல்துறை அவர்களை தடியால் அடித்து விரட்டியது. அன்று உயரதிகாரிகள் உட்பட அனைவருமே வெறித்தனமாக நடந்து கொண்டனர். பூங்காவை அழித்து நாசப்படுத்தினர். நீரூற்றை இடித்துத் தள்ளினர். சுற்றுச் சுவர் முற்றிலுமாக இடித்துத் தகர்க்கப்பட்டு தயாராக கொண்டு வந்திருந்த கம்பங்களை நட்டு முள்வேலியிட்டனர்.

அழகிய இந்தப் பூங்காவை அரசு அப்படியே எடுத்துக் கொள்ள முன் வந்திருக்குமானால் நாங்களே அதை ஒப்படைத்திருப்போம். ஆனால் அவர்கள் நோக்கம் அதுவல்ல. பூங்காவை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர். இதைக் கண்டிக்க முற்பட்டவர்களைக் கைது செய்தனர். முற்றத்தின் பின்னாலிருந்த விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த தலைவர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்கள் மீது கலவர வழக்கு, கொலை மிரட்டல் வழக்குப் போன்றவை தொடுக்கப்பட்டன. பிணையில் வெளிவர முடியாத குற்றப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதியப் பட்டது. ஆனாலும் உயர்நீதிமன்றம் தலையிட்டு அவர்கள் அனைவரையும் சொந்த பிணையில் விடுதலை செய்தது.

அரசு அதிகாரிகள் நடத்திய இந்த வெறித்தாண்டவம் தமிழக மக்களை மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களைக் கொதிக்க வைத்தது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கைகள் மூலம் இக்கொடுஞ்செயலை கண்டித்தனர். பத்திரிகைகளும் கண்டித்தன. ஊடகங்கள் பூங்கா அழிக்கப்பட்டக் காட்சியை தொடர்ந்து ஒளிபரப்பின. ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்டனத்திற்கு அரசு ஆளானது.

மத்திய அரசின் நிர்ப்பந்தம் அல்லது அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டனர் என்ற காரணத்தைக் கூறி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தக் கொடிய நிகழ்ச்சி அவருக்குத் தெரியாமல் நடத்தப்பட முடியாது. அதிகாரிகள் தனக்குத் தெரியாமல் செய்து விட்டார்கள் என்றால் உடனடியாக அந்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதிலும் முதலமைச்சர் ஈடுபடவில்லை. ஈடுபடுவதற்கான அறிகுறியும் இல்லை.

இரண்டாண்டு காலத்திற்கு மேலாக சட்டமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர் நிறைவேற்றிய தீர்மானங்கள், அறிக்கைகள், பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் எல்லாமே ஒரு நாடகம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்றப் பூங்கா இடித்துத் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சி அம்பலப்படுத்தி விட்டது.

ஆக்கிரமிப்புகளை சட்ட முறைப்படி அகற்ற வேண்டுமென்றும் முன்னறிவிப்புக் கொடுத்து காரணம் கேட்டு உரிய உத்தரவின்படியே அகற்றப்பட வேண்டுமென நீதிநாயகம் பி. கே. மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டிருப்பதை நீதிநாயகம் கே. சந்துருஅவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால் முறைப்படி அரசிடம் அனுமதிப் பெற்று அமைக்கப்பட்டப் பூங்காவையும் அதில் இருந்த கட்டுமானங்களையும் அரசு அழித்ததை அடாத செயல் எனக் கண்டிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடுவோம். நீதியை நிலைநிறுத்துவோம். மீ்ண்டும் அதே இடத்தில் மக்கள் உதவியுடன் எழில் மிகு பூங்காவை உருவாக்கவோம். முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கட்டிக்காக்க எவ்வித தியாகத்தையும் செய்ய தயாராவோம்.

ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 12:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.