பொடா சிறப்பு நீதிமன்றத்தில் பழ. நெடுமாறன் அவர்கள் அளித்த வாக்குமூலம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:38
தமிழக அரசால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்தியச் சிறையில் இருக்கும் பழ. நெடுமாறன் அவர்கள், பூவிருந்தவல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்திற்கு 29-08-2002 அன்று அழைத்து வரப்பட்டபோது, நீதியரசர் இராசேந்திரன் முன்னிலையில் அளித்த வாக்குமூலம்:

"விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினோம் எனவும், தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள சகல மாநிலங்களுக்கும் சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவேண்டும் என வற்புறுத்தினோம் எனவும் குற்றம் சாட்டி என்னையும் எங்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் சுப.வீரபாண்டியன் அவர்களையும் கொடிய பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்ததோடு எங்களது தமிழர் தேசிய இயக்கத்தையும் தமிழக அர தடை செய்துள்ளது.

இதையொட்டி கீழ்க்கண்ட கருத்துக்களைக் கூற அனுமதிக்கும்படி மாண்புமிக்க நீதிபதி அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மொழி, பண்பாடு, வரலாறு போன்ற பலவற்றால் தமிழ்நாட்டு மக்களோடு பிணைக்கப்பட்டவர்கள். இருநாட்டுத்தமிழர்களின் உறவு தொப்புள்கொடி உறவாகும். அந்த வகையில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது தமிழர்களின் அனைவரின் நீங்காக் கடமையாகும். அந்தக் கடமையைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்.

ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் போராடி வருகிற அமைப்பு விடுதலைப்புலிகளின் அமைப்பாகும். ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை அரசும் உலகநாடுகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் இயங்காத ஒரு அமைப்பிற்கு இந்திய அரசு தடை விதித்ததைக் கண்டிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்குத் தடைவிதிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து தற்போதைய இந்தியப் பிரதமர் உட்பட பல தலைவர்கள் தேசமெங்கும் கூட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அதே சனநாயக உரிமை எங்களுக்கு மறுக்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மிசோராம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் இந்திய அரசின் பிரதிநிதிகள் இப்போதும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஆதரவு தெரிவித்து நாங்கள் கடந்த காலத்தில் நடத்தவிருந்த மாநாடுகளை விடுதலைப்புலிகள் ஆதரவு மாநாடுகள் எனக் குற்றம் சாட்டி தமிழக அரசு தடைசெய்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தில் நாங்கள் முறையிட்டோம்.

உயர்நீதிமன்றம் மூன்று முறை தலையிட்டு எங்கள் உரிமைகளைப் பாதுகாத்து மாநாடுகள் நடத்த அனுமதி அளித்தது என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1979-ஆம் ஆண்டு எங்கள் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் நடத்திய பல மாநாடுகளிலும் இதை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கத்தக்க புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கு வெளியுறவு, பாதுகாப்பு, போக்குவரத்து, நாணயம் அச்சிடுதல் போன்றதுறைகள் மட்டுமே ஒதுக்கப்படவேண்டும். மீதமுள்ள அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள சகல தேசிய இனமக்களும் உண்மையான ஒற்றுமையுடன் வாழ இது வழி வகுக்கும் என நாங்கள் கூறுகிறோம்.

எங்களுக்கு முன்பாக இதே கருத்தை பல பெருந்தலைவர்கள் வற்புறுத்தியுள்ளார்கள்.

அகில இந்திய காங்கிரசுத் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத் அவர்கள் 1946-ஆம் ஆண்டு இதே திட்டத்தை பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழுவினரிடம் அளித்தார். இத்திட்டத்திற்குத் தேசத்தந்தை காந்தியடிகளும் அகில இந்திய காங்கிரசுக் கமிட்டியும் ஒப்புதல் அளித்துப் பாராட்டின.

ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோசி அவர்கள் மாநிலங்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும் என்ற கருத்தை 1946-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தினார்.

மேற்கண்ட பெருந்தலைவர்கள் கூறியதை, நாங்கள் வலியுறுத்தும் போது பிரிவினைவாதிகள் என குற்றம் சாட்டப்படுகிறோம்.

தேசிய இனங்களுக்கு சுய நிர்ணய உரிமையை, ஐ.நா. பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எங்கள் இயக்கம் ஒரு போதும் வன்முறையில் ஈடுபட்டதில்லை. வன்முறையில் நம்பிக்கை இல்லாத சனநாயக இயக்கமாகும்.

1981-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் அப்பாவி விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அங்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு நிலவுவது சமூக-பொருளாதார பிரச்னை என்பதைக் கண்டறிந்து அப்போதைய முதல்வர் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்களிடம் எடுத்துக் கூறி அங்கு அமைதி நிலவ வழி வகுத்தேன்.

1982-ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது இலங்கை சென்று உண்மை நிலவரங்களை அறிந்து வந்து முதலமைச்சரிடம் தெரிவித்து அவர் தலைமையில் சர்வக்கட்சி தூதுக்குழு சென்று பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அவர்களைச் சந்தித்து முறையிடவேண்டும் என ஆலோசனை கூறி அதை நிறைவேற்றக் காரணமாக இருந்தேன்.

1983-ஆம் ஆண்டு சூலை மாதம், இலங்கையில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது மதுரையிலிருந்து இராமேசுவரம் வரை ்தமிழர் தியாகப்பயணம்” என்ற பெயரில் ஐயாயிரம் தொண்டர்களுடன் அறநெறிப் பயணம் நடத்தினேன்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரில் காயமடைந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தல், சிறப்பு முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவுதல் போன்ற மனித நேயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

மனித நேயப் பணிகளில் ஈடுபட்ட என்னை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிறப்பு நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது.

1998-ஆம் ஆண்டு மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்கி பொதுமக்களின் ஆதரவைத் திரட்டி தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பலரின் உயிர்களை காப்பாற்ற வழிவகுத்தேன்.

2000-ஆம் ஆண்டு சூலை மாதம் 30-ஆம் நாள் கன்னட நடிகர் திரு. இராசகுமார் திரு. வீரப்பனால் கடத்தப்பட்டபோது தமிழ்நாடு, கர்நாடக அரசுகளின் வேண்டுகோளை ஏற்று தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று திரு. வீரப்பனிடம் பேசி நடிகர் திரு. இராசகுமாரைப் பத்திரமாக மீட்டு வந்தேன். இதன் மூலம் இரு மாநிலங்களிலும் மூளவிருந்த இனக்கலவரங்கள் தடுக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர், உடைமைகள் காக்கப்பட்டன.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு என்ற பெயரால் 80-க்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறேன். அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களை பொதுக் கூட்டங்கள் வாயிலாக அம்பலப்படுத்தியது இந்த அமைப்பேயாகும்.

மைசூர் சிறையில் விசாரணை எதுவுமின்றி 8 ஆண்டுகளாக அடைபட்டு கிடந்த 121 பேர்களின் வழக்குகளை நடத்தி அவர்களின் விடுதலைக்கு வழிவகுத்தோம்.

இங்ஙனம் தொடர்ந்து காவல் துறையின் தவறுகளுக்கு எதிராகப் போராடி வருவதால் எங்கள் மீதும் எங்கள் தமிழர் தேசிய இயக்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

எங்களைப் பொறுத்தவரையில் சட்டவரம்பிற்குட்பட்டு சனநாயகரீதியில் தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறோம் என்பதையும், எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறேன் என்பதையும் தங்கள் முன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
திங்கட்கிழமை, 07 மே 2012 20:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.