நெஞ்சினிலே தீக்கொழுந்து - சா.சு. கவிதா PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 10:20

Kavitha01முள்ளி வாய்க்கால் மண் எடுத்து
முதல் வணக்கம் செய்ய வைத்த
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்
முன் முயன்று கட்டி வைத்த
எங்கள் ஐயாவிற்கு முதல் வணக்கம்
மார்க்சியத்தில் மண் எடுத்து
தேசியத்தில் நீர் குழைத்து

விடுதலையை சமைக்க வந்த
விடுதலைப் போர்க் குயவன்
இன்குலாப்பிற்கு இனிய வணக்கம்
நான் ஒருத்தி பெண்பால்
இருப்பது எல்லாம் ஆண்பால்
விடுதலையின் அன்பால்
வந்த தோழர்களுக்கு வணக்கம் வைக்கிறேன் உம்பால்
இன இருள் விரட்ட
நெஞ்சுக்குள் நெருப்பெடுத்து வந்திருக்கும்
நேச தோழமைகளுக்கு
நேய வணக்கம்
நெஞ்சினிலே தீக்கொழுந்து
எதைச் சொல்வேன் உட்செறிந்து
ஒரு குவளை நீருக்கும்
ஒரு கவளம் சோற்றுக்கும்
கையேந்தி நிற்கும் அவலம்
துயரங்கள் சூழ்ந்த மரணவெளியில்
பலியாடாய் இங்கிருக்கிறோம்
வீரம் விளைந்த மண்ணில் ஈரமில்லா நிலத்தில்
கிழித்தெறியப்பட்ட பிணங்களை நிரப்பிய தெருவில்
சுமைதாங்கிகளாகிவிட்ட சொந்தங்களுடன்...
ஒவ்வொரு பொழுதும்
அடுத்தவர்களால் சிதைக்கப்படுகிறோம்
அவன் இச்சைக்கு விருந்தாகிறோம்
சிங்களனா? சீனனா? இந்தியனா? வேறு எவனோ?
உருத் தெரியாமல் கரு சுமக்கிறோம் # இந்த
சரீரம் எம்முடையதுதானா என சந்தேகிக்கிறோம்
போரற்ற காலத்திலும் விசாரணைகளால்
இருட்டாக்கப்பட்டிருக்கிறது எம் நாட்கள்
கண்போன கால்போன காயங்களைவிட
மலம் போவதையும் கண்காணிப்பதுதான்
வலிக்கிறது அதிகமாய்...
அடிமையாய் இருப்பதா அகதியாய் இருப்பதா?
சிலந்தி வலையில் வாழ்க்கை...!
வீரம் விளைந்ததாக நம்பப்படும் நிலத்தில்
வன்மத்தின் ஊனம் மூச்சையற்றிருக்கிறது!
வைக்கமுடியவில்லை ஒப்பாரிகூட
சுற்றி வளைத்திருப்பது முள்வேலி அல்ல
அவமானமும் தோல்வியும்...
எதைத்தான் இழக்கவில்லை என எண்ணி
மூட மறுக்கின்றன இமைகள்
இங்கும் நிற்க முடியவில்லை
இரத்த சூட்டில் இதயமே கொதிக்கிறது
எங்கும் ரத்த வீச்சத்தைவிட
துரோகத்தின் நாற்றம் தூக்கலாய் உள்ளது
முகமூடி போட்டுக் கொண்டால் எப்படி தெரியும்
ரத்த வாடையும் சவ நாற்றமும்?
விரிகின்ற மலராக எம் மண்ணில் மலர்ந்தீர்
விடை ஒன்றும் தெரியாமல் முள்வேலியில் புதைந்தீர்
சொல்ல முடியா கோலம்
வெல்ல முடியா காலம்
விடுதலைக் கனவு
ஒவ்வொரு வீட்டிலும்
மரணத்தைத் தந்தது
முள்ளி வாய்க்கால் முற்றமல்ல
இது முள்ளி வாய்க்காலின் குற்றம்
உயிர் ஓவியங்கள் உயிருடன் சிதைக்கப்பட்டன அங்கு
கல் ஓவியங்கள் உயிர்ப்பாய் செதுக்கப்பட்டன இங்கு
இன அழிப்பை ஏந்தி நிற்கிறது
இந்த நினைவு முற்றம்
தமிழனின் இயலாமையை
கூறி நிற்கிறது இந்த முற்றம்
இந்த தென்கிழக்கு முற்றத்திலிருந்து
வடமேற்கே வணங்குவோம்
அங்கேயும் நமக்கொரு
நினைவு முற்றம் இருக்கிறது
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வைத்தது.
அது முண்டங்களை புதைத்து வைத்த இடமல்ல
எதிரிக்கு பிண்டம் வைத்த இடம்
வரைமுறை இல்லா வன்முறையின்
முடிவன்றோ முள்ளி வாய்க்கால்...
நாலாம் கட்ட போர்கூட
நாலாவது அலைவரிசையினால்தான்
நம்பப்பட்டது
வெடியோசையின் அதிர்வில்
ஜனநாயகம் மாண்டது
எந்தமிழனின் கல்லறைகளும்
கொல்லப்பட்டன.
கிழக்கு வெளுக்கிறதா என
ஈழநாட்டைத்தான் பார்ப்பேன்
எனக்கு கிழக்கு அதுதான்
மேற்கு அஸ்தமிக்கிறதா என
தில்லியைத்தான் பார்ப்பேன்
எனக்கு மேற்கு அதுதான்
அந்த நாளை நோக்கி நகர்வோம்
நமது தேசம் பெறுவோம்
உலக அரங்கமே வேடிக்கை பார்த்த
இனவெறிக் கொடுமைக்கு முடிவுரை எழுதிட..
பேனாக்களையும் ஆயுதங்களாய் மாற்றுவோம்...
இயற்கையாய் இறப்பதற்கு முன்
சதிகாரர்களால் சாகடிக்கப்படவா பிறந்தோம்?
தமிழனின் உயிர்கள் மட்டும் கொத்துக் கொத்தாய்
மதுரையில் கழுவிலேற்றியது சமயத்தால்
வெண்மணியில் கொளுத்தியது சாதியத்தால்
திட்டமிட்டோ தற்கொலையோ...
தண்டவாளங்களிலும் தமிழனின் தலைகளே!
இந்துக் கடலிலும் தமிழின முண்டங்களே!
சாதியத்தைக் கைவிட்டால்
சாதிக்கும் தமிழ்த் தேசம்!
சாதியத்தைக் கைவிட்டால்
சாதிக்கும் தமிழ்த் தேசம்!
கசந்து போன நம்பிக்கைகள்
கசங்கிப் போன வாழ்க்கை
உள்ளுக்குள் ஊமையாய் உறங்கிக் கிடந்த வலியை
உங்களிடம் கொட்டிவிட்டேன்.
சுதந்திரமே!
மீண்டும் எங்கள் மண்ணில் எப்போது பிறப்பாய்?
காலங்கள் கடந்து கல்லறைகள் மறைந்தாலும்
தீபமாய் நினைவில் நிற்கும் தியாகிகளே!
எமக்கு இன்னும் விடியவில்லை.
பயணம் இன்னும் முடியவில்லை
விடுதலைக் காலம் தொலைவில் இல்லை
முடிவற்ற வரலாற்றின் தொடக்கமாய்...

ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 19:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.