முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச் சுவர் இடிப்பு! பழ. நெடுமாறன் உள்பட 82 பேர் விடுதலை திருச்சியில் உற்சாக வரவேற்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 10:18

Viduthalaiமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் அமைந்திருந்த பூங்காவையும், சுற்றுச்சுவரையும், 13.11.2013 அன்று அதிகாலை சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியது தமிழக அரசு. தமிழக அரசின் இச்செயலை எதிர்த்த, பழ.நெடுமாறன் அவர்களை காவல்துறை கைது செய்தது.

பழ. நெடுமாறனோடு முற்றத்தில் இருந்த தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அயனாவரம் சி. முருகேசன், பொன்னிறைவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, திருச்சி மாநகர த.தே.பொ.க. செயலாளர் த.கவித்துவன், தமிழ்நாடு மள்ளர் களம் அமைப்பாளர் செந்தில் மள்ளர், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் விடுதலை தமிழ்ப் புலிகள் அமைப்பின் தோழர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு செயல்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைவர் மீதும் கொலை மிரட்டல், பொது சொத்துக்கு சேதம் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கிப் பொய் வழக்குப் புனைந்து திருச்சி நடுவண் சிறையில் அடைத்தது, தமிழகக் காவல்துறை.
சிறையிலிருந்த தோழர்களுக்கு தஞ்சை மாவட்ட நீதிமன்றம் பிணை மறுத்துவிட, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டு, அனைவருக்கும் 20.11.2013 அன்று எவ்வித நிபந்தனையும் இன்றி, நீதிமன்றப் பிணையாணைப் பெறப்பட்டது. மூத்த வழக்கறிஞர் தஞ்சை. அ. இராமமூர்த்தி, வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், வடிவேல், பானுமதி, முகுந்தன், கருணாநிதி, கேசவன் ஆகியோர் இதற்காக சீரிய முயற்சி எடுத்தனர்.
இதனையடுத்து, இன்று (22.11.2013) காலை திருச்சி நடுவண் சிறையிலிருந்து பழ.நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் விடுதலையாயினர். சிறை வாயிலில், முனைவர் ம. நடராசன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பாளர் குடந்தை அரசன், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திருஞானம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் தமிழ்நேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தோழர்களும் அவர்களை வரவேற்றனர்.

Viduthalai01
திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழிகளில், சிறை மீண்டத் தோழர்களை பல்வேறு அமைப்புகள் சார்பில் வரவேற்று ஆங்காங்கு சிறப்பு செய்யப்பட்டன.

காலை 10.30 மணியளவில், புதுக்குடி வந்தடைந்த பழ. நெடுமாறன் உள்ளிட்ட தோழர்களை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் காமராசு தலைமையிலான தோழர்கள் வரவேற்றனர்.

Viduthalai02
அதன்பின், செங்கிப்பட்டி வந்தடைந்த தோழர்களை, அதிர்வேட்டுகள் முழங்க, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, நடுவண் குழு உறுப்பினர் தோழர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த
தோழர்களும் திரளாகக் கூடி நின்று வரவேற்றனர். கூடி நின்றத் தோழர்களிடம், பழ.நெடுமாறன் அவர்கள் உரையாற்றினார்.

Viduthalai03
வல்லம் வந்தடைந்த தோழர்களை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.முருகையன் தலைமையிலான த.தே.பொ.க. தோழர்களும், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பிற அமைப்புத் தோழர்களும் வரவேற்றனர்.

Viduthalai04
நிறைவாக, தஞ்சை விளார் முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந்தடைந்த தோழர்கள் அனைவருக்கும் பாராட்டு செய்யப்பட்டது.

Viduthalai

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013 20:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.