நாங்கள் நம்புகிறோம் - தமிழீழம் பிறக்குமென்று - அரு கரு ஆனந்தன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 10:19

Ananthan01கண்ணீர்த்துளி வடிவில் ஒர் தேசம்
தமிழனின் கண்ணீருக்கான தேசம்
தந்தை செல்வா காலம் தொடங்கி
இன்றுவரை தமிழினம் கிடக்கிறது முடங்கி
ஆயுதம் தாங்கிய மறப்போரை மறுத்து
அறவழியில் போராடும் அறப்போரை அமைத்து
தமிழர் உரிமைக்குப் போராடினார் தந்தை செல்வா

சிங்களத்தின் முகத்தை மறந்து
அறப்போருக்கு அழைத்தது விந்தை அல்லவா
ஆடு மாடுகளைப் புசிப்போர்க்கு மத்தியில்
தமிழனைப் புசிக்கும் புத்தனின் பூமியில்
எத்தனை காலம் அடிமையாய் வாழ்வது?
பித்தனைப் போல புலம்பிச் சாவது
வீருகொண்டெழுந்தது இளைஞர் படை
அவர்களின் எழுச்சியைத் தடுத்தது
தந்தை செல்வாவின் தடை
தரப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து
தந்தை செல்வாவின் பின்னே திரண்டது கூட்டம்
மிரண்டுபோய் சிங்களர் ஆடினர் வெறியாட்டம்
தமிழர் கடைகளை உடைமைகளை எரித்தது
பச்சிளம் குழந்தையின் கழுத்தையும் நெறித்தது
தமிழர்களைக் கொன்று குவித்தது
சிங்கள அரசோ வேடிக்கை பார்த்தது
மாற்று வழி காண தமிழர் கூட்டம் வட்டுக்கோட்டையில்
தந்தை செல்வாவின் தலைமையில்
பிரகடனம் செய்தனர்
தமிழர் உரிமை பெற முடியாது
இந்த சிங்களத் தலைமையில்
தமிழீழமே தீர்வு அது இளையோர் கையில்'
ஆர்ப்பரித்தது இளையோர் படை
அங்குதான் பிறந்தது புலிகள் படை
எதிரியின் பலத்தில் எலிகள் எல்லாம் மிரண்டு ஓட
புலிகள் மட்டுமே திமிர்ந்து எழுந்தனர்
அடிமையாய் இருந்த தமிழர்கள் கூன்நிமிர்ந்தனர்
புலிகளை வீழ்த்த எலிகளை இந்தியா தூண்டியது
தமிழர் நிலத்தில் வெறி கொண்டாடியது
தமிழர்களைக் கொன்று குவித்தும்
தமிழ்ப் பெண்களின் கற்பை அழித்தும்
புத்தனின் பூமியில் காந்தி தேசத்தின் விளையாட்டு
புறமுதுகிட்டது அமைதிப்படை
வென்று காட்டியது புலிகள் படை
உலகு வியக்கும் போர்கள் புரிந்தனர்
தமிழர் நிலத்தின் எல்லை விரித்தனர்
தமிழீழத்தில் அரசை அமைத்தனர்
புலிகள் வளர்ச்சியில் உலகு வியந்தது
புலிகள் ஆட்சியில் சிங்களம் பயந்தது
தமிழர் நாடு அமையாதிருக்க
சதிகள் தீட்டியது இந்தியம்
தேசிய இனத்தின் உரிமை மறுக்க
செத்துப் போனது காந்தியம்
வல்லரசுகள் ஒன்றாய் சேர்ந்தன
வல்லாதிக்க வெறியில் நின்றன
புலிகள் மீது போர் தொடுக்க
சிங்களன் எல்லாம் தருவித்தான்
ஈழம் மீது போரை அறிவித்தான்
உலகம் தடைசெய்த ஆயுதங்களை
எம் இனத்தின் மீது வீசினான்
உண்மைச் செய்திகள் வராமலிருக்க
உலக ஊடகங்களை விலை பேசினான்
கொத்துக் குண்டுகள் வீசிட
செத்து விழுந்தன சின்னப் பூக்கள்
பெத்த வயிறு பற்றி எரிந்தது
தரையில் விழுந்து புரண்டு அழுதது
சிங்களம் அவர்கள் மீதும் குண்டை எரிந்தது
மரண ஓலம் எங்கும் விரிந்தது
நின்று அழ நேரமில்லை
சென்றுவிடத் தோணவில்லை
பெற்ற பிள்ளை பிணமாய்க் கிடக்க
வேண்டுமே நாமும் உயிர் பிழைக்க
ஆளோடு சேர்ந்து நடைப் பிணமாய் நடக்க
உலகின் மனிதம் வேடிக்கை பார்க்க
உயிர் பிழைக்க ஓடினோம்
இரவினில் ஓர் இடத்தில் கூடினோம்
விடியும் முன்னே மீண்டும் பயணம் தொடங்கினோம்
பிடித்து நடந்த கைகள்
ஒருநாள் தனியே கிடக்கும்
தூக்கிச் சுமந்த தோள்கள்
ஒரு நாளில் சிதைந்து கிடக்கும்
இவற்றினூடேதான் எங்கள் பயணம்
மரணம் நோக்கிய இறுதிப் பயணம்
வீதியெங்கும் பிணக்காடாய்க் கிடக்க
வீசும் காற்றில் பிணவாசம் கலக்க
உயிர் பிழைக்க கூட்டம் கூட்டமாய் ஓடினோம்
எமைக் காக்க புலிகளைத்தான் நாடினோம்
கூட்டத்தின் மீதுதான் குண்டு விழுந்தது
இந்தியத்தின் ராடார்தானே காட்டிக் கொடுத்தது
இரவுகளில் காடுகளே எமக்கு தஞ்சம் ஆனது
இயற்கை கூட எமக்கெதிராய் சதி செய்தது
நின்று அடித்தது மழை பேயாட்டம்
மழையில் நனைந்தே நின்று போனது
பாதி உயிரோட்டம்
பூச்சிகளின் விஷக் கடியில்
செத்து விழுந்தோம் தெரு நாயாட்டம்
தொடர்ந்து விழுந்தன குண்டுகள்
பிழைத்தவர்கள் பயணம் தொடர்ந்தது
ஈழமே மயானம் ஆகிக் கிடந்தது
மொத்தமாய் கூடினோம்
முள்ளி வாய்க்காலில் அன்று
தெரியாது இதுதான் எமக்கான
பிணவாய்க்கால் என்று
உலக நாடுகள் இதையும் வேடிக்கைதான் பார்த்தது
ஐ.நா.வின் ஆண்மைக் கோவணம் கிழிந்தது
மொத்தமாய் முள்ளிவாய்க்காலில்
தமிழர் உயிர் பிரிந்தது
நந்திக் கடலில் ஓர் உருவம் கிடந்தது
அதுதான் உன் தலைவனென்று
சிங்களம் கொன்னது
களத்தில் நின்ற போராளிக்குத்தான் தெரியும்
களத்தில் இறந்தது யாரென்று
களத்தில் நின்ற போராளிதான் சொன்னார்
உன் தலைவன் இருக்கிறானென்று
நாங்கள் நம்புகிறோம்
தலைவர் இருக்கிறாரென்று
நாங்கள் நம்புகிறோம்
தமிழீழம் பிறக்குமென்று
நாங்கள் நம்புகிறோம்
தலைவனால்தான் தமிழீழம் பிறக்குமென்று
முள்ளி வாய்க்கால்
ஓர் இனத்தின் அவல சாட்சியாய்
சிங்களம் வைத்திருக்கிறது
அதை போரின் காட்சியாய்
தமிழருக்கு நேர்ந்த இந்த அவலத்தை
தமிழ்த் தலைமுறைக்கு உணர்த்த
தஞ்சையில் எழும்பியது
முள்ளிவாய்க்கால் முற்றம்
இந்த அவலங்கள் எல்லாம் இந்தியத்தின் குற்றம்
நடந்த போரை சிற்பமாய் செதுக்கியது
இரக்கமில்லா சிங்களத்தின் முகத்தைக் காட்டியது
பாலகன் பாலச்சந்திரனையும்கூட
சிங்களம் சுட்டுக்கொன்றது
அவனின் அந்தப் பார்வைதானே
மாணவர் போரை மூட்டியது
தோட்டா துளைத்த அந்த
புலிப்பிள்ளையும் சிலையாய் இங்குண்டு
எம் இன எதிரியை தோட்டாவாய் துளைத்த
முத்துக்குமாரும் நெருப்பாய் இங்குண்டு
துவண்டு கிடந்த எம் இனத்தை எழுப்ப
முத்துக்குமார் நெருப்பில் எரிந்தான்
இந்தியம் நடத்திய போரை எதிர்த்து
இளைஞர்கள் போர் செய்தனர் களத்தில் குதித்து
முத்துக்குமாரை நெஞ்சில் ஏந்தினர்
இந்தியத்தின முகமூடி கிழிக்க
மேலும் பலர் தீயில் எரிந்தனர்
இளம் தலைமுறையைத் தட்டி எழுப்ப
அத்தனை பேரும் இங்கு நெருப்பாய், சிலையாய்...
முள்ளி வாய்க்காலில் பலியான
மக்களின் நினைவை ஏந்தி
பதினாறடியில் நிற்கிறாள்
ஒரு பாவையும் விளக்கேந்தி
போர்கள் பல புரிந்த மன்னர்களும்
வீரம் படைத்த புலி வீரர்களும்
சுதந்திரம் வேண்டி போராடிய தீரர்களும்
அலங்கரிக்கிறார்கள் வண்ண ஓவியமாய்
இது என்றும் வரலாற்றில் நிற்கும் காவியமாய்!

ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 12:03 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.